நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 17, 2015

மார்கழித் தென்றல் - 01

குறளமுதம்

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
*** 


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின்
சேவடி செவ்வித் திருக்காப்பு..

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!..
-: பெரியாழ்வார் :-

மாதங்களில் நான் மார்கழி!..

- என்றுரைக்கின்றான் - ஸ்ரீகிருஷ்ணன்..

அந்த அளவுக்கு மங்கலகரமானது மார்கழி..

தேவர்களுக்கு வைகறைப் பொழுது - என்பர் ஆன்றோர்.. 

தெருவெங்கும் எங்கெங்கும் எழில் மிகும் கோலங்கள்!.. 
வண்ண வண்ணப் பூக்கள்!. . சுடர் விடும் அகல் விளக்குகள்!..

ஆலயங்கள் தோறும் திருப்பள்ளி எழுச்சி!.. தனுர் மாத வழிபாடுகள்!.. 


மங்கலம் சிறக்க வேண்டும்!.. மனையறம் செழிக்க வேண்டும்!..
மதிநலம் விளைய வேண்டும்!... மண் பயனுற வேண்டும்!.. 

இவை யாவும் எங்கிருந்து தோன்றும் ?.. 

நல்ல மனங்களின் உள்ளிருந்து தோன்றும் ஒளியால்!.. 

அப்படி ஒரு ஒளி - அதுவும் பேரொளி - 

ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் - 

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருத்துழாய் வனத்தில் உதித்த கோதை நாச்சியார் தம் திருஉள்ளத்தில் தோன்றியது!..  

அதன் பெயர் தான் -  திருப்பாவை!..

திருப்பாவை என்பது ஒரு நூல் அல்ல!.. 

நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வாழ்வியல் நெறி.

மீண்டும் - 
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகிய தெய்வப் பனுவல்களின் திருப்பாடல் பதிவுகளை வழங்குவதற்குப் பெரும்பேறு பெற்றேன்..

மங்கலகரமான மார்கழி முழுதும் நம்மை வழிப்படுத்துகின்றாள்  - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்!..

நம்மை அவள் அழைக்கின்றாள் - மார்கழி நீராடலுக்கு!.. 
வாருங்கள் - அவள் துணையுடனே செல்வோம்!..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 
திருப்பாடல் - 01


திவ்ய தேசம் - ஸ்ரீவில்லிபுத்தூர்

எம்பெருமான் - வடபத்ரசாயி
தாயார் - சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
உற்சவர் - ரங்கமன்னார்

ஸ்ரீ ஸம்சன விமானம்
புஜங்க சயனம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

மங்களாசாசனம்
பெரியாழ்வார், கோதை நாச்சியார்

நிலமங்கையாகிய ஸ்ரீ கோதை நாச்சியார்
ஆழ்வாராகத் திகழும் திருத்தலம்..

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்குப் பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..
 ***

சிவ தரிசனம்

திருத்தலம் - தில்லை திருச்சிற்றம்பலம்



இறைவன் - ஆனந்தக்கூத்தன்
அம்பிகை - சிவகாமசுந்தரி
தீர்த்தம் - சிவகங்கை
தலவிருட்சம் - தில்லை
- - -

அங்கே அரங்கம்!..
வைணவத்தில் கோயில் எனில் - திருஅரங்கம்.
அரிதுயில் கோலத்தில் அரங்க நாதன்.. 

இங்கே அம்பலம்!..
சைவத்தில் கோயில் எனில் - தில்லைத் திருச்சிற்றம்பலம்!..
ஆனந்தக் கூத்தனாக அம்பலவாணன்..

ஐயன் அம்பிகையுடன் ஆனந்தத் திருநடனம் நிகழ்த்தும் திருத்தலம்...

பாடிப் பரவியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், மாணிக்கவாசகர்..
மற்றும் பல உத்தம அடியார்கள்..
* * *

ஐயன் நடமிடும் அம்பலங்கள் ஐந்தனுள் - பொன் அம்பலம்.

எதிர்வரும் டிசம்பர் 26 அன்று மார்கழித் திருஆதிரை ..

தில்லை திருச்சிற்றம்பலத்தில் பெருந்திருவிழா..

தேவாரமும் திருவாசகமும் சிவனடியார்களுக்கு இரு கண்கள். 

சிவகாமசுந்தரி உடனாகிய ஸ்ரீ நடராஜப் பெருமானை வணங்கித் தொழுது -
திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை மற்றும் தேவாரத் திருப்பாடல்களுடன் தொடர்கின்றேன்.

இன்று முதல் நமது தளத்தில் - 
நான்காவது ஆண்டாக மார்கழிப் பதிவுகள்..

இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் - என் முன்னோர்கள் செய்த தவம்!.. 

அதுவன்றி வேறெதுவும் அல்ல!..

பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரமன்
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச் செய்த
தேவாரம்
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என்நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!.. (6/95)
* * *


ஸ்ரீ மாணிக்க வாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பள்ளி எழுச்சி
முதற் திருப்பாடல்

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள்மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் என்னை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

திருவெம்பாவை
(01 - 02)

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க்கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!..

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போதிப்போது போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார்யாம் ஆரேலோர்!..
* * *

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
***

16 கருத்துகள்:

  1. மார்கழி மாதம் முதல் நாளான இன்று தங்களின் இந்தப்பதிவு என் மனதை மிகவும் குளிரச்செய்கிறது. படங்களும், பாடல்களும், மற்ற விளக்கங்களும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான மாதத்தில்
    சீரான பதிவுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ம்ம் அருமை அருமை,

    மாதங்களில் நான் மார்கழி,,,,

    படங்கள் விளக்கம் அருமை, நான்காவது ஆண்டாக மார்கழி பதிவுகள், வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. மார்கழி மாதம் என்றாலேயே திருப்பாவை திருவெம்பாவை நினைவுக்கு வந்துவிடும் வலைத் தளத்தில் எழுதுவோருக்கு ஒரு வரப்பிரசாதம்ஒரு ஆலோசனை ஒவ்வொரு நாளும் எழுதும் திருப்பாவைப் பாடலை ஏன் ஒளிபரப்பாக ஆக்கக் கூடாது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தாங்கள் வழங்கிய ஆலோசனை நன்று.. சென்ற ஆண்டிலேயே நான் இப்படி நினைத்திருந்தேன்..

      ஒலிப்பதிவுகளாக - இசைக்கலைஞர்கள் பலரும் வழங்கியிருக்கின்றார்கள். அவை காப்புரிமை பெற்றவைகளாக இருக்கக்கூடும்..

      வேறொரு யோசனையும் உண்டு.. நிறைவேறுவதற்கு ஆண்டாள் துணையிருப்பாளாக..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. Podcast முயற்சி செய்து பாருங்கள் சார்.

      நீக்கு
    3. அன்புடையீர்..
      இங்கு அதற்கான சூழ்நிலை இல்லை..
      தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. வணக்கம் ஜி
    மார்கழியின் பதிவு மிகவும் நன்று தென்றலாய் தீண்டியதே...

    பதிலளிநீக்கு
  6. பதிவல் தினமும் ஒரு பாசுரம் படிக்கக் கிடைக்கிறது. படிப்பதால் புண்ணியம் கிடைக்கிறதே. மிக்க நன்றி பகிர்வதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  7. மார்கழி என்றாலே ஊரில் நடக்கும் பஜனைகள், கோலங்கள், திருப்பாவை, திருவெம்பாவை, கோயில் பிரசாதம் எல்லாம் நினைவுக்கு வந்து விடும்...தொடர்கின்றோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மார்கழி மாத விசேஷங்கள் எங்கள் ஊர் பக்கம் மிகவும் கலகலப்பாக இருக்கும்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  8. மார்கழி மாதம் - சிறப்புடன் தொடங்கியிருக்கிறது உங்கள் பக்கத்திலும்.....

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..