நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 09, 2015

அஞ்சலி

ஒரே நாளில் இரு துயரச் செய்திகள்..

ஒன்று இயல் முரசு!.. மற்றொன்று இசை முரசு!..

ஒலித்தது போதும் - என ஓய்வெடுத்துக் கொண்டன..


தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர் -

திரு. ஜெயகாந்தன் அவர்கள் (8/4/2015) காலமானார்.

இறைவன் திருவடி நிழலில் கலந்து விட்டார்.

எழுத்துலகில் மாபெரும் சாதனைகளைப் படைத்தவர்.


இவரால் - பத்மபூஷன்(2009), ஞானபீட விருது(2002) மற்றும் சாகித்ய அகாடமி விருதுகள் பெருமை பெற்றன.

இத்தனைக்கும் முறையான கல்வி பயிலாதவர்.

எண்ணையும் எழுத்தையும் அறிதல் - படிப்பு.

அது ஐந்தாம் வகுப்புடன் நின்றது.

மனித மனங்களின் எண்ணங்களை அறியும் ஆற்றலால் - எழுத்துக்கள் இவரை அறிந்து கொண்டன.

எழுபதுகளில் தான் இவரை நான் அறிந்தேன்.

இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்.

எழுத்துலகில் - தனக்கென தனி முத்திரை பதித்தவர்.


அக்கினிப் பிரவேசம் எனும் சிறுகதையின் தொடர்ச்சியாக -

சில நேரங்களில் சில மனிதர்கள்..

இந்த நாவல் சாகித்ய அகாடமியின் விருது பெற்றது.

அதன் தொடர்ச்சியாக - கங்கை எங்கே போகிறாள்?..

கங்காவையும் பிரபுவையும் யாரால் தான் மறக்க இயலும்..


ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துகளுக்குள் நான் மூழ்கியது - ஒருபிடி சோறு எனும் சிறுகதைத் தொகுப்பினை வாசித்ததில் இருந்து.

ஜெய ஜெய சங்கர, சினிமாவுக்குப் போன சித்தாளு,
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் -

இன்னும் எத்தனையோ - பட்டியல் நீளும். அத்தனையையும் அறிந்ததில்லை.

ஜே.கே. என்றால் அப்படியொரு ஆனந்த அதிர்வுகள் மனதிற்குள்!..

மனதை ஆட்கொள்ளும் எழுத்தாற்றல்!..

அருகிருந்து பார்ப்பதைப் போல..

சம்பவத்திற்குள்ளேயே - சங்கமமாகி விடும் மனம்!..

நன்றி - விகடன்
நினைக்க நினைக்க - நெஞ்சம் கலங்குகின்றது..

திரு. ஜெயகாந்தன் அவர்களின் ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..

* * *

என் தந்தை அரசுப் பணியில் இருந்ததால் - 1966 முதல் 1971 வரை இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்த ஒரு கிராமம் - எங்கள் வாழ்வின் அங்கமாகியது.

பள்ளியில் - அன்பான தோழர்கள் பலர்.. 

அவர்கள் தம் இல்லங்களில் ஓடி விளையாடியதெல்லாம் இன்னும் பசுமையான நினைவுகளாய்!..

அவ்வப்போது நண்பர்களின் இல்லங்களில் நிக்காஹ் நிகழ்வுகள்!..

முஸ்தபா சவுண்ட் சர்வீஸ்!.. 
அது தான் பத்து மைல் சுற்றளவிற்குப் புகழும் பெயரும் பெற்றிருந்தது.

திருமண வீடுகளில் - கிராமபோன் இசைத்தட்டுகளின் வழி - ஒலிபரப்படும் பாடல்கள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கப் பாடல்களே!..

இப்படியொரு கணீர் குரல் - யாருடையது?..

தோழர்கள் சொன்னார்கள் - இ.எம். ஹனீபா!..


மதங்களைக் கடந்து - மக்களைக் கட்டிப் போட்ட வசீகரக் குரலுக்கு உரியவர்.

இசை முரசு நாகூர் இ.எம். ஹனீபா!..

பள்ளிகள் பல இருந்தும் 
பாங்கோசை கேட்ட பின்பும் 
பள்ளி செல்ல மனமில்லையோ
படைத்தவன் நினைவில்லையோ!...

- எனும் பாடல் விடியற்காலைப் பொழுதுகளில் ஒலிக்கும் போது எத்தகைய சோம்பேறிக்கும் இறை வழிபாட்டில் ஆசை பிறக்கும்.

தீன் குலப் பெண்ணு.. எங்கள் திருமறைக் கண்ணு.. - எனும் பாடலில்,

கடல் கிழித்துக் கதிரவன் தான் 
உதிக்கும் முன்னாலே - தன்
உடல் குளித்து ஒது எடுத்து
சுபுஹூ தொழுகுவாள்..

மடல்தாழைக் கரங்களிலே 
மறையை ஏந்துவாள் - தன்
மனமும் வாக்கும் இணைந்திருக்க
இறையை வேண்டுவாள்!..

என்ற வரிகளைக் கேட்கும் போது - நல்லறம் நாடும் நங்கையர் அனைவருக்கும் உரித்தானவை என்று மனம் மகிழ்ச்சி கொள்ளும். 

குறித்திருக்கும் பாடல் வரிகளை - வார்த்துக் கொடுத்த கவிஞர் எவரோ!..

அந்த வரிகள் - நெஞ்சின் ஆழத்தில் பதிந்திருப்பதற்குக் காரணம் - இசைமுரசு.

1940 முதல் 2006 வரை ஹனீபா அவர்கள் பாடியதாக செய்திகள் கூறுகின்றன.


இறைவனிடம் கையேந்துங்கள்!.. 

- என்ற பாடல் இசை முரசு அவர்களின் குரல் வழியாகக் காற்றில் கலந்தபோது உருகாத நெஞ்சங்களே இல்லை!..

இத்தனைக்கும் திரு. ஹனீபா அவர்கள் முறையாக இசை பயின்றதில்லை.

ஆயினும் - 

திரு. ஹனீபா அவர்களின் குரல் கடல் கடந்த நாடுகளிலும் ஒலித்தது.

இந்தி எதிர்ப்பு போராட்ட வீரராக அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது.

இசை முரசு ஹனீபா அவர்களின் கணீர் என்ற குரலுடன் தான் - கழகத்தின் விழாக்கள் தொடங்கின!..

அரசியல் மேடையில் அவரது குரல் ஒலித்த - அதே வேளையில் 

இஸ்லாமிய சமயப் பாடல்கள் அழகு தமிழில் பட்டி தொட்டிகளில் பரவின..

முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமண விழாவில் அவரது இசை நிகழ்ச்சியைக் கேட்டிருக்கின்றேன்.

இசை முரசு அவர்களின் பாடல்களை - இசைக் கலைஞரான என் தந்தை மிகவும் விரும்பிக் கேட்பார்.


ஜனாப். நாகூர் இ.எம் ஹனீபா அவர்களின் இசைப் பயணம் ஓய்ந்தது.

இசை முரசு - இறைவனிடம் அடைக்கலமாகி விட்டது.

மண்ணுலகில் பாடியது போதும் என -
பொன்னுலகில் இறைவன் புகழ் பாடுதற்குச் சென்று விட்டார்.

இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன் 
இல்லையென்று சொல்லுவதில்லை!..
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் - அவன் 
பொக்கிஷத்தை மூடுவதில்லை!..

- எனும் பாடல் சமயங்களைக் கடந்து விளங்குதற்கு
இதோ இந்த காணொளியே சான்று!..


நாம சங்கீர்த்தனம் 
குருஜி விட்டல் மகராஜ் அவர்களின் குரல் வழி - 
நல்லோர் தம் நோக்கம் இதுவே!..

இயல் முரசு திரு. ஜெயகாந்தன் அவர்களும்
இசை முரசு திரு. ஹனீபா அவர்களும் 
மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்திருப்பர்!..


அவர் தமக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகின்றேன்.. 
* * *

22 கருத்துகள்:

  1. ஆழ்ந்த அஞ்சலிகள் ..இருவருமே நம் மனதில் என்றும் நிலைத்து நிற்பர் ..

    பதிலளிநீக்கு
  2. இயல் முரசு, இசை முரசு இருவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிார்த்திப்போம்.

    நண்பரே இந்தக்காணொளியை நான் பதிவுக்காக இன்றுதான் தயார் செய்தேன் அதற்க்குள் தாங்கள் முந்தி விட்டீர்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இரு பிரபலங்களின் திடீர் மறைவு மிகவும் வேதனை அளிப்பதாகவே உள்ளன.

    இன்று அவர்கள் மறைந்தாலும் அவர்களின் புகழ் என்றும் மறையவே மறையாது.

    அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  4. காணொளி மிகவும் அருமை. இதை இப்போதுதான் என்னால் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. உள்ளத்தை உருக்கும் உயர்ந்த பதிவு அய்யா!
    மனிதனும் தெய்வமாகலாம்!
    பதிவால் அது நடந்தேறி உள்ளது.
    குழலின்னிசை துயரத்தில் பங்கேற்கிறது.
    வாருங்கள் இவர்களுக்கு குழலின்னிசை செலுத்திய
    கண்ணீர் அஞ்சலி பதிவை காண்பதற்கு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. மனித மனங்கள் அறியும் ஆற்றலால் எழுத்துக்கள் இவரை அறிந்து கொண்டன, மண்ணுலகில் பாடியது போதும் என, விண்ணுலகில் பாட சென்றுவிட்டார், அருமை, ஆழ்ந்த இரங்கல்,

    பதிலளிநீக்கு
  7. ஐயா ஒரு உண்மையை உங்களுடன் பகிர்கிறேன் யாருடைய மறைவும் மனதில் சஞ்சலம் ஏற்படுத்துவதில்லை. பிறந்தவர் இறக்கத்தானே வேண்டும் இப்படி இறப்பவரால் நாம் பாதிக்கப் படவேண்டுமென்றால் அவரால் நமக்கு ஏதோ நன்மையோ தீமையோ விளைந்திருக்க வேண்டும் கதைகளை வாசிக்கும்போதும் இசையைக் கேட்கும்போதும் இந்த இரு இழப்புகளும் அவர்களை நினைவு கூற வைக்கலாம் என்னுடைய இந்த down to earth comment சிலரது நெற்றியைச் சுருங்க வைக்கலாம் ஆனால் இதுதான் நிஜம் என்று நான் நம்புவதால் இந்தப் பின்னூட்டம்

    பதிலளிநீக்கு
  8. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  9. ஜெயகாந்தனின் கதைகளை நானும் விரும்பி வாசிப்பேன். நீங்கள் சொன்னது போல் கங்கா கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. அந்தப் பாத்திரத்தை கங்கே எங்கே போகிறாள் என்ற கதையில் கொன்ற போது அளவிலாத் துக்கம் ஏற்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் இலக்கியத்தின் மிக உயரிய விருதான ஞான பீடம் வாங்கியது வியப்பு தான். இவரால் தமிழுக்குப் பெருமை. தமிழிலக்கியத்தில் இவருக்கு மிக முக்கிய இடமுண்டு. நாகூர் ஹனிபா என்றாலே எனக்கு இறைவனிடன் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்வதில்லை என்ற பாட்டு தான் நினைவுக்கு வரும். இருவரின் சிறப்புக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியது மிகவும் சிறப்பு. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..