நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வெள்ளி, ஏப்ரல் 17, 2015

தஞ்சையில் திருத்தேர்

தஞ்சை பெரிய கோயில்!..

தமிழரின் தன்னிகரற்ற கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!..

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலை உலக பாரம்பர்யச் சின்னங்களுள் ஒன்றாக அறிவித்து பெருமை கொண்டது -  யுனெஸ்கோ.


இத்திருக்கோயிலைத் தரிசித்து மகிழ்வதற்கென - ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் - தமிழகத்திலிருந்தும் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

மாமன்னன் ராஜராஜன் - தான் எழுப்பிய இத்திருக்கோயிலில் - நாளும் பொழுதும் சிறப்புடன் வழிபாடுகள் நிகழ்வதற்கு ஏற்படுத்திய நிவந்தங்களைப் பற்றிய தகவல்கள் திருக்கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.


இத்திருக்கோயிலுக்காக - அரச குடும்பத்தினர் தொட்டு குடிமக்கள் வரை அளித்த காணிக்கைகள் கல்வெட்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.

திருக்கோயிலின் பராமரிப்பில் அனைவருடைய பங்களிப்பும் உறுதிப் படுத்தப்பட்டிருந்தது - மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில்!..

மாமன்னன் சிவகதி எய்திய பிறகு - சோழப்பேரரசின் தலைநகர் -
புதிதாக உருவாக்கப்பட்ட - கங்கை கொண்ட சோழபுரம் என்றானது.

பின்னும் காலங்கள் உருண்டோட - தஞ்சை தன் பொலிவினை இழந்தது. புறக்கணிக்கப்பட்ட - தலைப் பிள்ளை போலானது!..

கேட்கவா வேண்டும்!..

கொள்ளை போன பொருட்களுக்கு அளவேயில்லை..

தெற்கே இருந்து சுந்தர பாண்டியன் - படை நடத்தி வந்தான்.

கை விடப்பட்டிருந்த தஞ்சை மாநகரைச் சூறையாடினான்.

கண்களில் பட்ட இடங்களைத் தீயிட்டுக் கொளுத்தினான்.
பொன்னேர் பூட்டி - உழப்பட்ட கழனிகளில் கழுதைகளைக் கட்டி உழுதான்..
பொன் விளைந்த பூமியில் - பேய்க்கடுகை விதைத்தான்.

வெறி பிடித்தவனாக - எக்காளமிட்டான்.

சோழரை நிர்மூலமாக்கி - மீண்டும் வெற்றி கொண்டோம்!.. என்று..

ஆனால் - சுந்தர பாண்டியனின் மகிழ்ச்சி நீடித்து நிலைக்கவில்லை. காரணம்
அவனுக்கு எமனை அவனே அழைத்திருந்தான். அவன் - மாலிக்காபூர்.

கொடூரன் மாலிக்காபூர் சுந்தர பாண்டியனை அழித்ததோடு கலைச் செல்வங்களையும் கொள்ளையடித்தான்.

அவனால் களவாடப்பட்ட - பொக்கிஷங்கள் கணக்கற்றவை..

கேட்பாரற்றுக் கிடந்த தஞ்சை வளநாட்டின் சிம்மாசனத்தைத் தேடி நாயக்கர்களும் மராட்டியர்களும் வந்தனர்.

நாயக்கர்களாலும் மராட்டியர்களாலும் தஞ்சை மீண்டும் பொலிவு பெற்றது.

ஆலயங்கள் திருப்பணி கண்டன. மீண்டும் திருவிழாக்கள்.. தேரோட்டங்கள்!..  மக்களின் மகிழ்ச்சி ஆரவாரங்கள் - எட்டுத் திக்கிலும் எதிரொலித்தன.

ஆனால் - மீண்டும் சோதனை!..

வணிகம் என்ற போர்வையுடன் வந்து புகுந்தவர்களால் - நாட்டின் கலையும் கலாச்சாரமும் கருத்தழிக்கப்பட்ட கால கட்டத்தில் -

பற்பல திருக்கோயில்கள் மீண்டும் பாதிக்கப்பட்டன.

அவற்றுள் ஒன்று - தஞ்சை பெரிய கோயில்!..

இன்றும் தஞ்சை பெரிய கோயிலில் பற்பல சிற்பங்களும் மிகக் கொடூரமாக சிதைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

திருமாளிகைப் பத்தியிலுள்ள அஷ்டதிக்குப் பாலகர் சந்நிதிகளில் வாயு தேவன், ஈசான்ய மூர்த்தி மற்றும் நாககன்னியர் திருமேனிகள் குறிப்பிடத் தக்கன.

கலைக்கோயிலாக விளங்கும் கந்த கோட்டத்தில் - துவாரபாலகர் திருமேனிகளும் கந்த புராண கதைத் தொகுப்பும் சிதைக்கப்பட்டவற்றுள் அடங்கும்.

பிரதோஷ விழா
பெரிய கோயிலின் திருவிழாவையும் தேரோட்டத்தையும் - கால வெள்ளம் புரட்டிப் போட்டது.

ஆயிற்று அதுவும் - நூறாண்டு!..

அங்கும் இங்குமாக திருத்தலங்களில் தேரோட்டம் நிகழும் போது - தஞ்சை மக்களின் மனமும் ஏங்கித் தவித்தது.

நம்மூரிலும் தேர் ஓடாதா!..

2013 ஏப்ரல் மாதம் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது - தஞ்சை பெரிய கோயிலுக்கு தேர் அமைத்துத் தரவேண்டும் என்று!..

அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர் திருப்பணிக்காக 50 லட்ச ரூபாயினை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார்.

கடந்த 2013 செப்டம்பரில் - பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த ஸ்தபதி திரு. சி. வரதராஜன் தனது சகோதரர் சி. சிவதுரை மற்றும் தமது குழுவினருடன் திருப்பணிகளைத் துவக்கினார்.

திருத்தேர் திருப்பணிகளைப் பற்றிய முந்தைய பதிவு.

ஸ்ரீகொங்கணேஸ்வரர் திருக்கோயில் வளாகத்திலும் பின்னர் ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலின் எதிரிலுமாக திருப்பணிகள் மும்முரமாக நடந்தன.

தேர் தற்போது முழுமை பெற்று கம்பீரமாக நிற்கின்றது.


தேர் - ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது.
அழகிய சிற்பங்கள் இலுப்பை மற்றும் தேக்கு மரத்தில் கடையப் பெற்றுள்ளன.

தேர் சிற்பங்களுக்கான இலுப்பை மரங்கள் - பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

திருத்தேர் மூன்று அடுக்குகளுடன் விளங்குகின்றது.

பூமியிலிருந்து பலகை மட்டம் வரை 12¼ அடி உயரம். தேவ ஆசனம் 2½ அடி.  சிம்மாசனம் 2 அடி என மேலும் இரண்டு அடுக்குகள். ஆக கூடுதல் 16¾  அடி உயரம்.

இதற்கு மேல் ஐந்து அல்லது ஏழடுக்கு கோபுரப் பந்தல், திருக்குடம், கலசம் என அமையும்.

தேரின் அகலம் 13½ அடி.

தேரின் முன்பக்கம் ஐந்தரை அடி உயரத்தில் திருக்கயிலாயக் காட்சியும் பின் புறம் அதே அளவில் பெரிய கோயிலின் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன.


தேரின் முதல் அடுக்கில் - ஒன்றரை அடி உயரமுடைய 72 சிற்பங்களும்
இரண்டாவது அடுக்கில் - இரண்டே கால் அடி உயரமுடைய 65  சிற்பங்களும்
மூன்றாவது அடுக்கில் - ஒன்றரை அடி உயரமுடைய 64 சிற்பங்களும் - சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன

மேலும் தேர் முழுதும் 225 போதியல் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேரின் நான்கு மூலைகளிலும் - யாளி, குதிரை மற்றும் முடுக்குச் சிற்பங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.


தேரின் அச்சுகள் ஒவ்வொன்று 2 டன் எடையில் அமைந்துள்ளன. தேருக்காக திருச்சி BHEL  வடிவமைத்து வழங்கிய சக்கரங்கள் ஒவ்வொன்றும்  6½ அடி உயரமும் ஒரு டன் எடையும் உடையன.

தேர் சக்கரங்கள் நான்கும் - கிரேன் உதவியுடன் சில தினங்களுக்கு முன் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன.


துவார பாலகர், விநாயகர், முருகன், அம்பாள், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு, சிவபெருமான் திருக்கோலங்களான - கல்யாண சுந்தரர், திரிபுராந்தகர், கஜசம்ஹாரர், பிட்சாடனர், வீரபத்ரர், ரிஷபாரூடர், ஏகபாத மூர்த்தி, சரப மூர்த்தி, அகத்தியர், ஆதிசேஷன், ரதி மன்மதன், சிவபுராணக் காட்சிகள், கண்ணப்பர் கதை, வேடன் சிவபூஜை, அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் - என, 360 சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் குறிப்புகள் கூறுகின்றன.

தேரினைச் சுற்றி -  பக்கவாட்டில் 160 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தேரின் மொத்த எடை 52 டன் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் -

சில தினங்களுக்கு முன் தஞ்சை மேல ராஜ வீதியில் உள்ள தேர் நிலையடி திருமண்டபம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.

அப்போது - நூற்றாண்டுகளுக்கு முன் மண்ணுள் புதையுண்டு போன எட்டு சக்கரங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

நூற்றாண்டுகளைக் கடந்தும் சக்கரங்கள் மண்ணுள் மக்கி விடாமல் - பொலிவுடன் திகழ்வதைக் கண்டு அன்பர்கள் பரவசமாகியுள்ளனர்.

பழைய தேருக்குரிய சக்கரங்களான - இவை தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தேரோட்டத்திற்கு இடையூறுகள் ஏற்படாவண்ணம் - ராஜவீதிகள் நான்கிலும் ஆக்ரமிப்புகளும் - விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் அகற்றப்பட்டு உள்ளன.

சாலையோர மரங்களின் கிளைகளும் வெட்டப்பட்டுள்ளன.

ஐந்து தேர்களுடன் நடந்த தேரோட்டம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்துடன் நின்று போனதாக அறியப்படுகின்றது.

நூற்றாண்டுகளுக்குப் பின் நிகழ இருக்கும் தேரோட்டத்தில் - வடம் பிடிக்க மக்கள் காத்திருக்கும் வேளையில் -


கடந்த புதன் (15/4) அன்று, பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ந்தது.

அதிகாலையில் - ஸ்ரீசந்திரசேகரர் எழுந்தருளினார்.
பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர்.

தொடர்ந்து 2/5 வரை நிகழும் திருவிழாவில் காலையில் ஸ்ரீசந்திரசேகரர் பல்லக்கில் திருவீதி எழுந்தருள்வார்.

இரண்டாம் திருநாளன்று சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் விநாயகப் பெருமான் மூன்றாம் நாளன்று மூஷிக வாகனத்தில் வலம் வருகின்றார்.

நான்காம் நாள் காலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு.
அன்று மாலை - ஸ்ரீசுப்ரமணியர் மேஷ வாகனத்தில் வீதி வலம் வருகின்றார்.

ஐந்தாம் நாள் காலையில் சுப்ரமணியர் பல்லக்கு.
மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.

ஆறாம் நாள் காலையில் வள்ளி மணவாளனுக்கு சந்தனக்காப்பு.
மாலையில் சைவ சமயாச்சார்யார் நால்வர் திருவீதி உலா..

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சந்தனக்காப்பு, வெண்ணெய்த் தாழி, பல்லக்கில் எழுந்தருளல்.

சிறிய ரிஷப வாகனம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை, மான் வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், பெரிய ரிஷப வாகனம், முத்துப் பல்லக்கு - என திருவீதி உலா சிறப்பாக நிகழ இருக்கின்றது.

இதனிடையே -

22/4 அன்று காலையில் சந்திரசேகரர் பல்லக்கில் எழுந்தருளல்.
மாலையில் - சந்திர பிரபையில் திருவீதி உலா.

23/4 அன்று அஷ்ட திக்கு துவஜாரோகணம். அன்று இரவு ஸ்வாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளல். செங்கோல் வைபவம்.

25/4 அன்று காலையில் பல்லக்கு.
மாலையில் பூத வாகனத்தில் ஸ்வாமி அம்பாள் திருவீதி எழுந்தருளல்..

சித்திரைத் திருவிழாவின் பதினைந்தாம் நாளான - ஏப்ரல் 29 புதன் அன்று காலை (6.00 - 6.45) மகத்தான தேரோட்டம்.

30/4 அன்று காலையில் முத்துப் பல்லக்கு.
மாலையில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்.

1/5 அன்று தோரணப் பந்தல்.

பதினெட்டாம் திருநாளன்று ஸ்ரீ தியாகராஜர் ருத்ரபாத மூர்த்தியாக யதாஸ்தான பிரவேசம்.

அதைத் தொடர்ந்து நடராஜர் சிவகாம சுந்தரியுடன் திருவீதியுலா.

மதியம் ஸ்ரீ சந்திர சேகரர் திருச்சுற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல்.

அன்று மாலையில் - துவஜ அவரோகணம்.

ஸ்ரீ பிரகதீஸ்வரர் பிரஹந்நாயகியுடன் பெரிய ரிஷபத்தில் எழுந்தருள -
பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா..

அத்துடன் மங்கலகரமாக சித்திரைத் திருவிழா நிறைவடைகின்றது.


(காணொளி :- நன்றி - பிரதோஷம் FB)

திருவிழாவின் போது - திருக்கோயில் வளாகத்தில் வழக்கம் போல பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நிகழ இருக்கின்றன.

ராஜ வீதிகளில் திருத்தேரோட்டம் (ஏப்ரல்/29) நிகழ்வதற்கு முன்பாக -

ஸ்ரீ மன்மத வருடம் சித்திரை மாதம் பரணி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினமாகிய திங்கட்கிழமை (ஏப்ரல்/20 ) காலையில் மேஷ லக்னத்தில் (6.30 - 7.00) புதிய தேரின் வெள்ளோட்டம் நிகழ்கின்றது..

தஞ்சை மாநகரத்தின் மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.

அவர்களோடு எளியேனின் மனமும் தவித்துக் கிடக்கின்றது.

மேலும் ஒரு வேண்டுதல்!..

நூறாண்டுகளுக்குப் பின் திருத்தேர் உருவாகியதைப் போல 
அம்பிகைக்கும் - அலங்கார மணித் தேர் ஒன்று உருவாக வேண்டும்!..

இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில் -
1818 ஆம் ஆண்டு நடந்த திருவிழாவில் - பெரிய கோயிலின் ஐந்து தேர்களை இழுத்ததற்கும் ஸ்வாமி வாகனங்களைச் சுமந்ததற்குமாக - 27,393 பேருக்கு சம்பளம் கொடுத்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.

தஞ்சையின் ராஜவீதிகளில் ஐந்து தேர்களும் ஓடும் காலம் விரைவில் வரும்!..

தஞ்சையில் திருத்தேரோட்டம் நிகழ்வதற்குக் காரணமான அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் - இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

உலகெலாம் தொழவந்தெழு கதிர்ப்பரிதி
ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ
அங்ஙனே அழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலைமாடம்
பருவரை ஞாங்கர் வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்து இஞ்சிசூழ் தஞ்சை 
ராசராசேச்சரத்து இவர்க்கே!..
-: கருவூரார் :-

பெரியநாயகி அம்பிகையே போற்றி
பெருவுடையார் திருவடிகள் போற்றி.. போற்றி.. 

திருச்சிற்றம்பலம்
* * *

24 கருத்துகள்:

 1. குவைத்தில் இருந்தாலும்
  தங்கள் மனமென்னவோ தஞ்சையில்தான்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   நூறாண்டுகளுக்குப் பின் தேரோட்டம்.
   அனைவருக்கும் மகிழ்ச்சி தானே..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 2. தஞ்சையில் தேரோடும் திருநாளன்று பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  தஞ்சை பெரிய கோவில் பற்றியும், தேர் பற்றியும் படங்களுடன் விரிவான விளக்கம் படிக்க சுவாரஸ்யம்.
  பாராட்டுக்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   இறையருளுடன் நிச்சயமாகப் பதிவிடுவேன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. தஞ்சை கோவில் பற்றிய சிறப்பான பதிவு அருமை காணொளி கண்டேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. ஒவ்வொரு தகவலும் அருமை + சுவாரஸ்யம் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. வருகின்ற திங்களன்று வெள்ளோட்டம் நடைபெறவுள்ள நிலையில் நேற்று சென்று பார்த்தேன். பழைய தேர்முட்டியை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. ஒரு நல்ல நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. தஞ்சை தேர் பற்றிய சிறப்பான பதிவு ! தஞ்சை கோவில் பற்றியும், தேர் பற்றியும், படங்களுடன் விரிவான தகவலுக்கு நன்றிகள் கோடி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சிவகுமார்..
   தங்களுக்கு நல்வரவு..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. தேரோட்டம் பற்றி நிறைய தகவல்கள். இலுப்பை மரம் சிற்பங்கள் செய்ய உகந்தது என்ற தகவலை உங்கள் பதிவின் வழியே அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. தேரோட்டம் காணும்பாக்கியம் பெற்றவருள் நானில்லையே என்னும் ஏக்கம் இருக்கிறது தொலைக் காட்சியில் நேரடி ஒளிப்பதிவுஇருக்கும் என நம்பலாமா.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தேரோட்டம் காணும் பாக்கியம் எனக்கும் இல்லையே..
   நிச்சயம் தொலைக் காட்சியில் காட்டப்படும் ..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. தஞ்சையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு திருத் தேரோட்டம்.....

  காணொளி வழியாகத் தான் பார்க்க முடியும்..... பார்க்க வேண்டும்.

  தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   எனக்கும் காணொளி வழியாகத் தான் தரிசனம்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. எங்கோ கண்கெட்டாத தொலைவில் இருக்கும் தாங்கள் எத்துனை அருமையாக பெரிய கோயிலின் வரலாறு மற்றும் தற்போது நடக்க இருக்கும் தேர் ஓட்டம் அருமை. பார்த்து சொல்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. வணக்கம்
  ஐயா
  ஆலயம் பற்றி சிறப்பான தகவலை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ரூபன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. அருமையான தகவல்கள்! விளக்கங்கள்! புகைப்படங்கள்! தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் பற்றி.....அருமையாக எடுத்துரைக்கின்றீர்கள் ஐயா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு