நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


திங்கள், மே 06, 2013

வந்தாள் மஹாலக்ஷ்மி

வாழ வேண்டும்.

நாம் வாழ வேண்டும். 

அதுவும் நன்றாக வாழ வேண்டும்.. நன்றாக வாழ்வது என்றால் எப்படி?... 


நோய் நொடி இல்லாமல் நீங்காப் புகழுடன் மகாகவி பாரதி கேட்டுக் கொண்ட மாதிரி - ''...செல்வம் எட்டும் எய்தி நின்னால் செம்மை ஏறி வாழ்வேன்!...'' என்றபடிக்கு வாழ வேண்டும். 

அப்படி என்றால் அதற்கு தயவு வேண்டும். 

யாருடைய தயவு?...

அடுத்த வீட்டுக்காரர் தயவா?... எதிர்த்த வீட்டுக்காரர் தயவா?... அல்லது உற்றார் - உறவினர் , உடன் பிறந்தோர் தயவா?... 

நாம் நன்றாக வாழ்வதற்கு இவர்கள் யாருடைய தயவும் வேண்டாம். பிறகு?... 

நம் உள்ளத்தில் தயை - தயவு - என்னும் பெருங்குணம் நிறைந்திருந்தால் போதும். நாம் நன்றாக வாழ்ந்திட முடியும்!... அதனால் நம் சந்ததியும் நன்றாக வாழ்ந்திடக் கூடும். 

நன்றாக வாழ்வது என்றால்!... 

நான்கு - ஐந்து உயர்ரக உல்லாச வாகனங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய ஆடம்பர மாளிகை, அலமாரியைத் திறந்தால் சரிந்து விழும் அளவுக்கு உயர்ரக ஆடை வகைகள்,  வங்கிப்பெட்டகம் நிறைய வைரவைடூரிய - தங்கநகைகள்,  நறுமணம் கமழும் பாசுமதி அரிசிச்சோறு, பாதாம்பருப்பு அரைத்துக் கலக்கப் பட்ட காராம்பசுவின் பால், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்கும் - ஆண், பெண் ஏவலாட்கள் - இதெல்லாமா?... 

இல்லை!... நிச்சயமாக இல்லை!... 

சரி... இதெல்லாம் தான் என்று வைத்துக் கொண்டாலும், இவைகளுடன் கூடிய சுகபோக வாழ்வைச் சுவைத்துக் கொண்டிருக்கும் ஒருவரை - அவர் அனுமதித்தால் - அவரைக் கேட்டுப் பாருங்களேன்... 

''... இவையெல்லாம் போதுமா..'' என்று,

''... இப்போது நிம்மதியா?..'' என்று..

கிடைக்கும் பதில் -  ''...இல்லை!..''என்பதுதான்... 

அப்படியானால், எட்டுப் பெருஞ்செல்வமும் நிறைந்த இனிய வாழ்வு  - 

போதும் என்பதையும் நிம்மதி என்பதையும் தராது என்றால் -

அவற்றைத் தரவல்லது எது!...  

தயை. இரக்கத்துடன் கூடிய பெருங்கருணை - எனும் அருங்குணம்.

நாம் வாழ வேண்டும் என்பதிலும் மேம்பட்டு -  எல்லோரும் வாழ வேண்டும் - எனும் பெருங்குணம்.

அந்தப் பெருங்குணத்தை எப்படிப் பெறுவது?.. 

தன்னலமற்ற இறை வழிபாட்டினால்...

தன்னலமற்ற இறை வழிபாட்டினால்... தானாகவே, எந்த பெரிய பயிற்சியும் இல்லாமலேயே ஆக்ஞா சக்கரம் திறந்து கொள்ளும்!... ஆக்ஞா சக்கரம் திறந்து கொண்டதனால் தன்னை அறிந்து தான் அடங்குதலும் வழிநடையில் உள்ள விசுக்தி சக்கரம் திறக்கப்பட்டதனால் வாக்குப் பலிதமும் உண்டாகும்!... 

பிறகென்ன!... உச்சியில் - அமிர்த தாரைகள் பொழிய சஹஸ்ராரம்!.... 

அதற்கும் மேலே.... வெட்டவெளியில் துவாதச சாந்தப்பெருவெளியில் அம்மையப்பனின் ஆனந்தத் திருநடனத்தை -  எந்நேரம் கண்டு இன்புற வேண்டியது தானே!...

இந்த நிலையை அடைய  - தயை எனும் பெருங்குணத்தை நெஞ்சில் நிலை நிறுத்த -  தன்னலமற்ற இறை வழிபாட்டில்,

குலதெய்வத்தை முன் நிறுத்தி வழிபடுங்கள்!...  

இஷ்ட தெய்வத்தைப் போற்றி வழிபடுங்கள்!...  


மங்களே மங்களாதார மாங்கல்ய மங்கலப்ரதே|
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா||

மாங்கல்யம்  எனும் மங்கலத்தை அருள்பவளே! மங்களேஸ்வரியே! நான் விரும்பும் மங்கலத்தைப் பெறுவதற்கு மங்கள மயமான மாங்கல்யத்தைத் தந்தருள்வாயாக!

ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே|
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே||

ஸர்வ மங்களங்களையும் அருளும் மாங்கல்ய தேவியே!.. அனைத்தையும் சாதித்து அருள்பவளே!.. த்ரயம்பகே!..  நாராயணீ!..  சரணடைந்தவர்களை  காத்தருளி - அவர்தம் நற்செயல்களின் வெற்றிக்கு அருள்பவளே!.. உன்னை வணங்குகின்றேன்!..

சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய ஸம்பதாம்|
மம சத்ரு விநாசாய தீபஜோதி நமோஸ்துதே||

சுபங்களை நடத்தித்தரும் கல்யாணியே!. ஆயுளையும் ஆரோக்யத்தையும் நிறைந்த செல்வத்தையும் அருள்பவளே!. என்னுள் எனக்கு எதிராக இருக்கும் தீயகுணங்களை மாய்த்தருளும் தீபஜோதி வடிவானவளே!. உன்னை வணங்குகின்றேன்!...  

பெருஞ்செல்வத்துடன் நாம் வாழும் வாழ்வில், ஆதரவற்ற வறியார்க்கும் ஈதல் வேண்டும். அதனால் உண்டாகும் புகழுடன் வாழ்தல் வேண்டும். அந்த புகழ் அல்லாத மற்றொன்று  - நம் உயிருக்கு - ஆன்மாவுக்கு -  பயனாக ஆகாது.
(திருக்குறள் :- அறம் - இல்லற இயல்/ புகழ் - 231)

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு.

2 கருத்துகள்:

  1. சிறப்பான விளக்கம்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...வணக்கம்!.. எல்லாரும் எல்லாமும் - நல்லன எல்லாமும் பெறவேண்டும் என்பதே பேராவல்...இறையருள் என்றும் துணையிருப்பதாக!..

      நீக்கு