நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 13, 2013

பொன்மகள் வந்தாள்

சித்திரை அமாவாசைக்குப் பின் மூன்றாம் பிறை அக்ஷய திருதியை. "அக்ஷய" என்றால் வளர்வது எனப்பொருள்அக்ஷய திருதியை மஹாலக்ஷ்மிக்கான நாள்எனவே இந்நாளில்''பொன்மகள் வந்தாள்'' என -  பூரிப்புடன் ஸ்ரீமஹாலக்ஷ்மியை  வரவேற்று வழிபடுவது சிறப்பு. 


அக்ஷய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் அவர்கள் ஆசியினால்தான் - குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்று சாஸ்திர சம்பிரதாயங்கள் குறிப்பிடுவதாகவும் சொல்கின்றனர்.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தரவல்லவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி - எங்கெல்லாம் வாசம் செய்கிறாள்

தெய்வ பக்தி, ஆற்றல், துணிவு, பொறுமை, தயை, அடக்கம், கனிவு போன்ற நற்பண்புகள் நிறைந்த உள்ளங்களில் நீங்காது இருப்பவள் .

எந்த வீட்டில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து , வீட்டை தூய்மையாக்கி கோலமிட்டு தீபமேற்றி  வழிபாடு செய்கின்றனரோ அங்கே வசிப்பவள். 

குப்பைகளை வீட்டினுள்ளே சேர்த்து வைக்காமலும் அதேபோல குப்பைகளை வீட்டின் முன்னும் கொட்டிக் குவிக்காமலும் தூய்மையைப் பேணுபவர் இல்லங்கள் மஹாலக்ஷ்மிக்கு உகந்தவை.


தாமரை, சங்கு, உப்பு, அரிசி, மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், வில்வம், துளசி, வெற்றிலை, விசிறி, முகம் பார்க்கும் கண்ணாடி, மாமரம், வாழை, நெல்லிக்காய், பூரணகும்பம் ஆகிய மங்கலங்களிலும் பசு, குதிரை, யானை ஆகிய விலங்குகளிடத்தும் நீங்காது இருப்பவள்.

வீட்டில் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு - விளக்கேற்றி, மஹாலக்ஷ்மி படத்திற்கு திலகமிட்டு பூச்சூட்டி ஒரு செம்பில் பச்சரிசியை நிறைத்து முன் வைத்து  பாயசம் செய்து  நிவேத்யமாக வைத்து தூப தீப ஆராதனையுடன் வணங்கி - வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து, மஞ்சள், குங்குமம் தந்து ஒருவருக்கொருவர் அன்பினைப் பரிமாறினாலே  மகாலட்சுமி மகிழ்ந்து இல்லம் வருவாள்.

இளங்கன்னியர் பெற்றோர்களையும் பெரியோர்களையும் வணங்குங்கள். சுமங்கலிகள்  அன்பின் அடையாளமாக கணவனின் நெற்றியில் திலகமிட்டு - கணவனையும் மாமனார் மாமியாரையும் வீட்டில் உள்ள பெரியோர்களையும் வணங்குங்கள்.

அரிசிக்குப் பதிலாக செம்பில் நீர் நிறைத்து அதில் - துளசி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ரோஜாஇதழ்கள், வெட்டிவேர் ஆகியன இட்டு மாவிலைகளையும் உச்சியில் சிகரமாக தேங்காயையும் வைத்துமங்கல கலசமாக சந்தனம் குங்குமம் சாற்றி, நறுமலர்களைத் தூவி தெரிந்த அளவுக்கு மந்திரம் தோத்திரங்கள் சொல்லி வணங்கலாம். மனம் ஒன்றி வழிபட்டாலே போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

பூஜையில் வைத்து வணங்கிய அரிசியினை வழக்கமாக அரிசி வைக்கும் பாத்திரத்தில் சேர்த்து விடலாம். கலசத்தில் நீர் வைத்தால் அதனை தீர்த்தமாக உட்கொண்டு, வீடெங்கும் பசுக்கொட்டிலிலும் தெளிக்கலாம்.

தங்க நகைகளை விரும்பாதவர் யார்?. தங்கம் வாங்குவது சிறப்பானது தான். அதற்காக தங்கத்தை வாங்குவது  தான் இந்த நாளின் சிறப்பு என்று கூறுவதும் நினைப்பதும் அறியாமை.  .

சில வருடங்களாக தங்கம் வாங்கினால் தான் நல்லது என்று சொல்லிச் சொல்லி மக்களை மயக்கி விட்டனர். தங்கம் வாங்குவது அதிர்ஷ்டம் என்றால் நகைக்கடைக்காரர்கள் வாங்கிய தங்கத்தை ஏன் கூவிக் கூவி விற்க வேண்டும்?... 

சரி!.. அட்க்ஷய திரிதியை நாளில், நீங்கள் வாங்கிய தங்க நகையை - அதே நாளில் அதேகடையில் திரும்பக் கொடுத்தால்- அவர்கள் நீங்கள் கொடுத்த விலையை அப்படியே திருப்பித் தருவார்களா?.. தரமாட்டார்கள்!.. அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறுவார்கள்!..  சிந்தித்துப் பாருங்கள்!...

இறைவனை வழிபடுவதோடு அல்லாமல் அன்று நாம் செய்யும் தானங்கள் சந்ததியினர் நோய்நொடியின்றி வாழ புண்ணியத்தைத் தரும். நல்லவெயில் காலத்தில் இந்த அட்சயதிரிதியை நாளை அனுசரிக்கும்படி வந்ததே!.. ஏன்?..

நம்மில் - ''..எத்தனை பேர் தான தர்மங்களில் நாட்டம் கொள்கிறார்கள்..'' என்பதைக் கணக்கெடுக்கத்தான்!... 

அன்றைய தினம்  - பசித்தோருக்கும் வறியோர்க்கும்  அன்னதானம் செய்தல், உடை கொடுத்தல்  - என ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தால் நம் வீட்டில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் ஆயுளும் குறைவில்லாத செல்வம் எனப் பெருகி நிம்மதியுடன் வாழ வைக்கும்.

விசிறி, குடை, விசிறி, எழுது பொருட்கள், தானம் செய்யலாம். அன்று தண்ணீர் பந்தல் அமையுங்களேன்... வீட்டு வாசலில்!... இயன்றால் மோர் கூட வழங்கி மகிழலாம்!... வெயில் நேரத்தில் வழிநடை செல்வோருக்கு  நீங்கள் வழங்கும் ஒரு குவளை குளிர்ந்த மோர் - வாழ்வையே அளிக்கும்.. நம் வீட்டுவாசலில் ஒருவர் நின்று, மனங்குளிர்ந்து  ஒரு நல்ல வார்த்தை சொன்னால் - நினைத்துப் பாருங்கள்.... எவ்வளவு மகிழ்ச்சி!... 

இன்று ஒரு மரக்கன்றினை நட்டு பராமரிக்கலாம்!... பசு முதலான விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ ஒரு கையளவு உணவு கூட நம்மால் அளிக்க முடியாதா என்ன?...


அக்ஷய திருதியை இவ்வாறு கொண்டாடுவதும் சந்தோஷம் தானே!.. 

தட்க்ஷனின் சாபத்தினால் உருக்குலைந்த சந்திரன் சிவபெருமானின் திருவடித் தாமரைகளில் விழுந்தான். அவன் மீது கருணை கொண்ட பரமன் தேய்ந்த கலையினை சூடிக்கொண்டார். 

தட்க்ஷனின் சாபமும், பரமேஸ்வரனின்  வரமும் பெற்று - சந்திரன் மீண்டும்  பூரண கலைகளுடன் வளரத் தொடங்கினான்.

எனவே இதையெல்லாம்  சிந்தனை செய்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும் என்பது புரியும்.

"அக்ஷய த்ருதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டும்!"  என்று தந்திரமாக சொல்லப்படுவதை  - ஐதீகமாகக் கருதி கருத்தழியாமல் - 

அற்றார்க்கும் அலந்தார்க்கும் – இயன்ற நல்லுதவிகளைச் செய்து நாமே பொன்னாகப் பொலிவோமாக!...  அப்படிப் பொலிந்தால்...

பொன்மகள் வருவாள்... பொருள் கோடி தருவாள்!

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவி , பூதலம் எங்கும் அனைத்து 
செல்வங்களின்  வடிவாக இருக்கின்றாளோ
அந்த தேவியை என்றும் வணங்குகிறேன்!...

3 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை... குறிப்பாக தங்கத்தைப் பற்றிய விளக்கம்... அனைவரும் அறிய வேண்டும்... உணர வேண்டும்...

    வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நண்பர் திரு. தனபாலன் அவர்களுக்கு அக்ஷய திரிதியை நல்வாழ்த்துக்கள்!....

    பதிலளிநீக்கு
  3. வருக..அபிராம் ராம் அவர்களே!.. தங்கள் வருகைக்கு நன்றி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..