நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 22, 2012

முதல் வணக்கம்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்!. 
திருமூலர்
 
எல்லாருக்கும் எல்லா நலன்களையும், இக பர செளபாக்கியங்களையும் வாரித் தரும் வள்ளல் விநாயகப் பெருமானை இந்த வேளையில் மனம் நிறைய வணங்கிக்கொள்கின்றேன்...

வெகு நாளைய கனவு... நாமும் ஒரு வலைத்தளம் எழுத வேண்டும் என்று.. 

என்ன எழுதுவது என்பதை விட - எதற்கு எழுதுவது? என்ற வினா தான் பாடாகப் படுத்தியது. எப்படியோ துணிந்து விட்டேன். 

இனி.... அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன்...

நவீன தொழில் நுட்ப உலகில் இப்படியொரு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றி... 

Thanks to Google!..

இது ஒரு தொடக்கம் தான்!.... அன்பினோர் எல்லாருக்கும் வணக்கம்!...  



திருக்கயிலாய மாமலையில் - அம்மையும் அப்பனும் ஆனந்தத் திருக்கோலம் கொண்டு - பிரணவ உருவமாய்ப் பொருந்திய வேளையில்,

ஒளியிலிருந்து ஒலியாக - ஓம் - எனுத் தோன்றியவர் விநாயகப் பெருமான்..

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வரஅருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!..

சிவபெருமான் தன்னை வழிபடுபவர் தம் இடரைக் களைவதற்காக யானை உருக்கொண்டு உமையன்னையுடன் கணபதியைத் தோற்றுவித்தார்!..

- என்று, திருஞானசம்பந்தர் தமது திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

கஜமுக அசுரனை அழிப்பதற்காக சிவபெருமான் கஜமாமுகனைப் படைத்தார் என்பதனை -

''கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்
கயாசுரனை அவனாற் கொல்வித்தார் போலும்''

- என்று திருநாவுக்கரசரும் திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில் பரவுகின்றார்.

இத்திருக்குறிப்புகளினால் யானைமுக அசுரனை அழித்து அடியவரைக் காப்பதற்கே விநாயகர் தோன்றினார் என்பது நாம் கொள்ளத்தக்கது.

எளிமையே வடிவானவர் விநாயகப்பெருமான்.

நாம் அந்த எளிமையையே மனதில் சொல்லில் செயலில் கொண்டு, அவரை வழிபட நம்முள் பண்பும் பணிவும் மிகுத்து வரும் வண்ணம் நல்லருள் புரியும் நாயகன் அவர்.

பண்பும் பணிவும் நம்முள் பூத்து மலருங்கால் அந்தப் பூவாகிய இதயக் கமலத்துள் தாமே வந்தமர்ந்து நமக்கு நற்கதியினை அருள்கின்றார்.

முழுமுதற் பொருளாகிய வேழமுகத்தவனுக்கு மோதகம் சமர்ப்பித்து சரணடைய - பாதகம் எல்லாம் சாதகமாகும் என்பது ஐதீகம்.

விநாயகர் வழிபாடு தொன்மையானது.

ஆதியிலிருந்தே உள்ளது என்றும் -

மகேந்திர பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி வடக்கே படை நடத்திச் சென்று வாதாபி என்னும் நகரை வெற்றி கொண்டபின் அங்கிருந்த கணபதியின் திருவடிவத்தை, பல்லவனின் வெற்றிக்கு அடையாளமாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து,

அதனை தனது சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளச் செய்து வழிபட்டார். எனவே,

பரஞ்சோதியால்  தோன்றியது தான் விநாயகர் வழிபாடு என்றும் கூறுவர்.

இவரே பின்னாளில் ''சிறுதொண்டர்'' எனச் சிறப்பு பெற்று நாயன்மார்களுள் இடம் பெற்றவர்.

எது எப்படியோ!...

சிறு குழந்தைகள் முதல் பழுத்த பெரியோர் வரை அனைவருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்குபவர் விநாயகர்.

கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கை கொடுத்து - துக்க சாகரத்திலிருந்து நம்மைக் கரையேற்றிக் காத்தருள்பவர் விநாயகப்பெருமான்!. அதனால் தானே...  

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை 
கணபதி என்றிடக் காலனும் கை தொழும் 
கணபதி என்றிடக் கருமம் ஆதலால் 
கணபதி என்றிடக் கவலை தீருமே!... 

என்று பழந்தமிழ்ப் பாடலொன்று பகர்கின்றது. கவலையும் கஷ்டமும் நீங்கி விட்டால் கலையும் திறனும் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன.

அந்த நிலை கைகூடி வர - தமிழ் மூதாட்டியான ஒளவையார் நமக்கு வழிகாட்டுகின்றார். 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு 
சங்கத்தமிழ் மூன்று தா!...

என்ற தீந்தமிழ்ப்பாடல் எல்லாருக்கும் விருப்பமான பிரார்த்தனைப் பாடல்களுள் ஒன்று.

விநாயகருடைய திருநட்சத்திரம் ''ஹஸ்தம்'' எனவும் ராசி ''கன்னி'' எனவும் கூறுவர். விநாயகருடன் ஐந்து மிகவும் தொடர்புடையது.

ஐந்து கரங்களும், அவர் இயற்றும் ஐந்தொழில்களும், ஐந்து முகங்களுடன் ஹேரம்ப கணபதியாக விளங்கும் திருத்தோற்றமும் இதனைப் புலப்படுத்தும். இவருடைய திருப்பெயர்களுள் பதினாறு சிறப்புடையன.

கணபதி தோத்திரங்களுள் ஆதிசங்கரர் அருளிய - ''முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்'' - எனத் துவங்கும் ''கணேச பஞ்சரத்னம்'' நல்ல தாளக்கட்டுடன் கேட்பவரை பரவச நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஒளவையார் அருளிய ''விநாயகர் அகவல்'' - எனும் ஞானநூலைத் தினமும் பாராயணம் செய்வோர்க்கு பலப்பல நன்மைகள் விளைவது கண்கூடு.

அருளும் பொருளும் அருளும் விநாயக மூர்த்தியை பொருளுணர்ந்து வணங்கி மேலும் செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்...சிந்திப்போம்...

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயகா விரைகழல் சரணே!..
* * *

6 கருத்துகள்:

  1. நான் காலம் தாழ்த்தி வந்தாலும் என் வாழ்த்து முதல் வாழ்த்து என்பதில் மகிழ்ச்சி.
    தங்கள் பணி தொடரட்டும்.
    ந. பரமசிவம்

    பதிலளிநீக்கு
  2. எனது முதல் பதிவுக்கு முத்தான வாழ்த்து வழங்கிய திரு.ந, பரமசிவம் அவர்களுக்கு மிக்க நன்றி!.. தங்கள் வரவு நல்வரவாகுக!..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் துரை செல்வராஜ் - ஆனை முகனை வணங்கித் துவங்கும் எச்செயலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தான் நான் பணியாற்றி வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த கடவுள் விநாயகப் பெருமான்.

    தாங்களும் வேழ முகத்து விநாயகனைத் தொழுது பதிவின்பைத் துவங்கியது மகிழ்ச்சியைத் தருகிறது. விநாயகர் வணக்கத்தினையே இவ்வளவு தகவல்களுடன் நீண்ட பதிவாக இட்டமை தங்களின் பக்தியினைக் காட்டுகிறது.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. வணக்கம்!.. விநாயகர் வணக்கத்தினை முன்னிட்டு என்னையும் வாழ்த்திய தங்களின் மேலான பெருந்தன்மையினை என்றுன் என் நெஞ்சில் கொள்வேன்!.. தங்களின் வரவும் வாழ்த்தும் மேலும் சிறப்பினுக்கு என்னை இட்டுச் செல்லுமாக!...

      நீக்கு
  4. அப்பாடா எப்படியோ தங்கள் முதல் பதிவைப் பார்த்துவிட்டேன். ஆஹா எனக்கு மிகவும் பிடித்த பரஞ்சோதி தங்கள் பதிவில்,, வாதாபி பிள்ளையார் தொடக்கம்,,,
    வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தேடி வந்து பதிவினைப் படித்து - கருத்துரையும் வாழ்த்துரையும் வழங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..