நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 25, 2012

கார்த்திகை சோமவாரம்

சோமவாரம்.. பேச்சு வழக்கில்  திங்கட்கிழமையை இவ்விதம் குறிப்பர். திங்கட்கிழமையில் அமாவாசை வந்தால் அதற்கு ஒரு சிறப்பு!...சோமவார அமாவாசை என்று .. 

திங்கட்கிழமையில் பிரதோஷம் வருமாயின் சனிப்பிரதோஷம் போன்று சோம வாரப் பிரதோஷம் என தனிச் சிறப்பு.. எல்லா பிரதோஷ வழிபாட்டின் போதும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள மூலத்தானம் எனும் கருவறையை வலம் வருவதே வித்தியாசமாக இருக்கும். 

நந்தியம்பெருமானை வணங்கி வலமாக நடந்து வடக்கு புறத்தில் சண்டேசர் சன்னதியில் நின்று அபிஷேக தீர்த்தம் வழியும் கோமுகத்தைத் தாண்டாமல் திரும்பி வந்த வழியே நடந்து, இந்த முறை  நந்தியம்பெருமானை வணங்கி அப்பிரதட்சிணமாக சண்டேசர் சன்னதி வரை சென்று கோமுகத்தைத் தாண்டாமல் வணங்கி திரும்பவும்  நந்தியம்பெருமானிடம் வந்தால் அந்த வலமானது (C) சந்திர பிறையைப் போல விளங்கும்.  இதை சோமசூத்திரம் என்பர். சிவாலயத்தில்  பிரதோஷ தினத்தில் மட்டுமே  சோமசூத்திர வலம் செய்து வணங்க  வேண்டும்.  இது இப்படி இருக்க ..

கார்த்திகை மாத திங்கட்கிழமைகள் எல்லாமே வெகு சிறப்பானவை.. அந்த தினங்களில் சிவபெருமான் உறையும் திருக்கோயில்கள் எல்லாவற்றிலுமே சோமவார வழிபாடுகள் நிகழும். அதிலும் குறிப்பாக சங்காபிஷேகம் விசேஷமானது. திருக்கோவில்களின் சூழ்நிலைக்கேற்ப 108 அல்லது 1008 என சங்குகளில் வெட்டிவேர், விளாமிச்சை, பன்னீர், ரோஜா, ஏலம் என பல்வகைப்பட்ட வாசனாதி திரவியங்களில் நிறைந்த நன்னீரை நிரப்பி ஆகம முறைப்படி பூஜித்து அந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர்.  

அந்தி நேரத்தில் நிகழும் இந்த  சங்காபிஷேகத்தை கண்டு தரிசிப்பதையும் அபிஷேக தீர்த்தத்தை தம் மேல் தெளித்துக் கொள்வதையும் அன்பர்கள் பெரும் பாக்கியமாகக்   கருதி மகிழ்வர். 

இறைவன் சோமசுந்தரர் எனத் திருப்பெயர் கொண்டு திகழும் ஒப்பற்ற திருத்தலம் மதுரையம்பதி. வியாழசோமேசர் எனத் திருப்பெயர் கொண்டு விளங்கும் தலம்  திருக்குடந்தை எனப்படும் கும்பகோணம்.

திருவிடைமருதூர், திருக்கடவூர், திருநாகேஸ்வரம், திருவையாறு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருமயிலை, திருவொற்றியூர் - என  எல்லாத்  திருக்கோயில்களிலும் சிறப்பான  முறையில் சங்காபிஷேகம் நடத்தப் படுகின்றது.

இந்த திருத்தலங்களை விட மாறுபட்ட ஒரு திருத்தலம்  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ. தொலைவில்  திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில்  தாமரங்கோட்டைக்கு அடுத்து  உள்ளது. அந்தத் திருத்தலம் பெரிய கட்டுமானங்களுடன் கூடிய கோயில் அல்ல. ஆனால் கார்த்திகை மாத சோம வாரங்களில் ஆயிரம் ஆயிரமாக மக்கள் திரளும் ஒரு திருத்தலம். கார்த்திகையில் விடாது பெருமழை பெய்தாலும் மக்கள் மனம் சலியாது கூடி நின்று கும்பிட்டு மகிழும் திருத்தலம். 

இறைவனுக்கு லிங்கத் திருமேனி கூடக் கிடையாது. அம்பாள் கூட  அருகில் இல்லை. பிள்ளையாரோ முருகனோ சண்டிகேசுவரரோ யாரும் கிடையாது. ராஜ கோபுரமோ, திருச்சுற்று மாளிகையோ, ஆடம்பர விதானங்களோ, அலங்கார மண்டபங்களோ கிடையாது. பிறகு  என்னதான் அங்கே விசேஷம்?..

ஆலமரம். பிரமாண்டமான ஒற்றை ஆலமரம்... அதுவும் வெள்ளை நிற ஆலமரம்... 

அதன் முன்பாக நெடுங்காலமாக வீற்றிருக்கும் நந்தியம் பெருமான்.. ஆலமரத்திற்கு  பிற்காலத்தில்  எழுப்பப்பட்ட ஒரு  சுற்றுச் சுவர். கிழக்குப் பக்கமாக   ஒரு சிறிய கதவு.. அப்படியானால் இறைவன் எங்கே ஐயா?.

இறைவன் தான் ஆலமர வேரில் இருக்கிறாரே !... என்னது?...

ஆம்!...ஆதி வழிபாடு!...

உருவமா?..அருவமா?.. ஆலமரத்தின் கீழ் கிழக்குப் பக்கமாக இரண்டடி உயரத்திற்கு சிவலிங்கம் போல ஆலமரத்தின் வேர் திரண்டுள்ளது.  அதுவே.. அந்த இயற்கையே சிவலிங்கம்.. இந்த சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு  வாரமும்  திங்கட்கிழமை மட்டும் இரவு பத்தரை மணிக்கு மேல் தில்லை திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைத்த பிறகு,  இங்கே வழிபாடுகள் நடைபெறும். இந்த ஒருவேளை பூஜையை  தவிர்த்து  மற்ற நாட்களில் எந்த வழிபாடுகளும் கிடையாது. 

இந்த சிவலிங்கத்தை வருடத்தில் ஒரு  நாளாக தை மாதம் முதல் நாள் பொங்கலன்று  பகலில் மட்டுமே (சூர்ய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை) தரிசனம் செய்ய முடியும். இந்த சுவாமியின் திருப்பெயர்  பொதுஆவுடையார். திருத்தலத்தின் பெயர் பரக்கலக்கோட்டை. 

இந்த ஆலமரத்திலிருந்து சற்று அருகில் பெரிய குளம். அதன் கரையில் ஒரு புளிய மரம்  அதன் நிழலில் பானுகோபர், மகாகோபர்  என இரண்டு முனிவர்கள். அவர்களுக்கு இடையே - இல்லறம் சிறந்ததா? துறவறம்  சிறந்ததா?  - எனப் பிரச்னை !... இது தில்லையில் இறைவனிடம் போயிற்று..  ஈசன் சொன்னார்... உங்கள் பிரச்னையை எதிர்வரும் சோம வாரத்தன்று தில்லையில் அர்த்தஜாம பூஜை முடிந்த பின் வெள்ளால  மரத்தின் கீழிருந்து தீர்த்து வைக்கின்றேன்  என்று ...

அதன்படியே ஈசன் வந்தார். விசாரித்தார். அதற்கு சாட்சியாக பிள்ளையார் வந்தமர்ந்தார். ஈசன் தீர்ப்பு வழங்கினார்... என்னவென்று?.... இல்லறத்தில் துறவறம் சிறந்தது என்று ...

திருப்தியுற்ற  முனிவர்கள் ஈசனை வழிபட்டு மகிழ்ந்தனர்.. அந்த வழக்கமே இன்றும் இரவு பத்தரை மணிக்கு மேல் பூஜை தொடர்கிறது. ஈசன் விசாரித்து தீர்ப்பு சொன்னதால் பொதுஆவுடையார் என்றும் மத்யஸ்தபுரீஸ்வரர் என்றும்  திருப்பெயர்.

பொதுஆவுடையார் சுவாமியை நினைத்தபடி விபூதியை எடுத்து நோயுற்ற கோழி ஆடு மாடு எருமை - என எந்த உயிரினத்திற்கு பூசினாலும் சரி... அவை நோயில் இருந்து மீள்கின்றன... எனவே அவை உயிருடன் காணிக்கை ஆகின்றன.. கால்நடைகள் சுகமாக கன்று ஈனவும்   பால் பெருக்கத்திற்கும்  அருள்கிறார். விபூதியை எடுத்து விளை நிலங்களில் வீச நெல் முதலான தானியங்களையும், மா, பலா, தென்னை முதலான மரங்களையும் காப்பாற்றுகிறார். மக்களின் பிணியினைத் தீர்த்து கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். 

எனவே மக்களின் அன்பும் காணிக்கையும் மலை எனக் குவிகின்றது. காணிக்கை என -  கால்நடைகள்  மந்தை மந்தையாகத் திரள்கின்றன. 

பெருமழை பெய்தாலும் மக்கள் நனையாதிருக்க பிரமாண்டமான பந்தலிட்டு கொடுக்கின்றனர் நிர்வாகத்தினர். 

வாருங்கள்... சோமவாரத்தில் அருள்மிகு பொதுஆவுடையார் சுவாமியை தரிசிப்போம்...

அன்பே அகல் விளக்கு!... மனமே காணிக்கை!...

6 கருத்துகள்:

  1. அன்பின் துரை செல்வராஜு

    கார்த்திகை சோமவாரம் பதிவு நன்று - விளக்கங்கள் அருமை - பல்வேறு தலங்களீல் உள்ள சிவபெருமானுக்கு நடக்கும் சங்காபிஷேகம் இங்கு விளக்கப் பட்டிருக்கிறது.

    ஆலமர வேரில் அமர்ந்திருக்கும் சிவ பெருமானின் தோற்றம் - பொது ஆவுடையார் சுவாமி பற்றிய தல வரலாறு - பூஜை நடக்கும் நேரம் - விபூதியின் பலன் - தரிசன நேரம் ஆகியவை விளக்கமாகப் பகிரப் பட்டுள்ளது.

    பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தாங்கள் வருகை தந்து இனிய கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. அன்புடையீர்,
    வணக்கம்.
    தங்களின் வலைப்பதிவுகளில் சில,
    இன்று (15/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
    அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
    என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      அன்பின் அண்ணா அவர்கள் - நமது தளத்தினை அறிமுகம் செய்தமையை மகிழ்வுடன் அறிவித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

      தங்கள் பாராட்டும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. வணக்கம்,

    சிவன் கோயில்களில் பிரதோஷ காலத்தில் வலம் முறைகுறித்து தாங்கள் சொன்னது எனக்கு புதியது,

    சோமவார வழிபாடு அருமை,

    பொதுஆவுடையார் கோயில் சிறப்புகள் அனைத்தும் தாங்கள் மிக அழகாக ஆழமாக விளக்கியுள்ளீர்கள். தங்கள் தளத்தில் நிறைய தகவல்கள்,

    மிக பொறுமையாக படிக்க வேண்டியுள்ளதால் ஒரு நாளைக்கு ஒரு பதிவு தான் முடிகிறது,,

    தங்கள் எழுத்தின் நடை அருமையாக நீரோட்டம் போல் உள்ளது.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பழைய பதிவுகளைப் புரட்டிப் படிக்க முடிவு செய்து விட்டீர்கள் - என நினைக்கின்றேன்....

      தங்கள் முயற்சிக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..