நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 15, 2021

ஆரா அமுதன்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***

அன்றொரு இலையினில் துயின்றவன்
அந்த இரணியன் உடலம் வகிர்ந்தவன்
ஆமை எனக் கடல் அளைந்தவன்..
அமுதாய் அவனியில் குழைந்தவன்..

வராக வடிவுடன் வந்தவன் அவனே
வையகம் காத்து நின்றவன் அவனே..
மீனமும் ஏனமும் பகை வெல்லும்
நாரணன் புகழைப் புவி சொல்லும்..

ஆனைக் கன்று அலறிடக் கண்டு
அன்றோர் முதலையைத் துணித்தவன்
அன்புடன் மதலை அழைத்தது கேட்டு
ஆங்கோர் தூணில் உதித்தவன்..


நற்றவன் வடிவம் நர சிங்கம்
நாயகன் அருளால் நலம் தங்கும்...
கோளரியாய் நின்று குறை கேட்க்கும்
கோவிந்தன் விழிகள் வினை தீர்க்கும்..

வாமன வடிவினில் தனியழகன்
மார்பினில் பத்மம் பேரழகன்
பெருந்துயர் தீர்க்க அவன் வருவான்
பெருநலம் என்றும் அவன் தருவான்..


கோபியர் மனம் தொட்டு ஆடியவன்
கோதையின்  தோள் தொட்டு சூடியவன்..
குருவாய் கீதை உரைக்கின்றவன்
கொடியவர் கௌரவம் தகர்க்கின்றவன்..


அன்னையர் அன்பினில் தவழ்ந்தவன்
அறம் கொண்டு கானில் நடந்தவன்
அனுமன் அன்பினில் களிக்கின்றவன்
நல்லவர் நடுவினில் இனிக்கின்றவன்..

சங்கொடு சக்கரம் தரிக்கின்றவன்..
கடும்பகை கனலாய் எரிக்கின்றவன்..
சார்ங்க நந்தகம் ஏந்தியவன் துயர்
சங்கடம் தீர்த்துத் தாங்கியவன்..


அவன் கதை அசுரர் கதை தீர்க்கும்
அடியவர் மனதில்  நலம் சேர்க்கும்..
அருளே அன்பின் மனம் கொண்டு
ஆரா அமுதாய் பிணி தீர்க்கும்..

ஆய்ச்சியின் மடியில் அமுதுண்டான்
அருள் விளையாடல் பல கொண்டான்..
அவனே அமுதாய்த் திகழ்கின்றான்
அடைக்கலம் நானெனப் புகல்கின்றான்..

மலை போல் கவலை எதற்காக..
மாதவன் சிறுவிரல் அதற்காக..
கோ வர்த்தனமது குடை ஆகும
கோ விந்த நாமம் விடையாகும்.


நாரண நாரண நாரணனே
நலமருள் நாயக பூரணனே..
நாரண நாரண நாரணனே
நல்லவர் வாழ்வின் காரணனே..
ஓம் ஹரி ஓம்..
ஓம் ஹரி ஓம்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்...
***

10 கருத்துகள்:

  1. நாராயாணா எனும் நாமம் நலம் தரும் சொல் அல்லவா! தினம் நாவால் சொன்னால் நலம்.
    உங்கள் கவிதை அருமை.
    நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயாண எனும் நாமம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
    ஆரா அமுதம் பிணி தீர்க்க வரட்டும்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. மலை போல் கவலைகள் மறையட்டும். அடியவர்கள் மனதில் நலம் சேர்க்கட்டும்.
    ஓம் ஹரி ஓம்!
    ஓம் ஹரி ஓம்!

    பதிலளிநீக்கு
  3. படங்களும் கவிதையும் மிக அருமையாக வந்துள்ளன

    பதிலளிநீக்கு
  4. பெருந்துயர் தீர்க்க அவன் வருவான் 
    பெருநலம் என்றும் அவன் தருவான்...

    நம்பிக்கையூட்டும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  5. வழக்கம்போல உங்கள் கவிவரிகள் பிரமாதம்.  விளையாடும் தமிழ்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான வரிகளுடன் அழகான படங்களும். கவிதை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமையான வரிகள் சார். எல்லா துயரும் நீங்கி நாடும் வீடும் நலம் பெற வேண்டும் சார். உங்கள் தமிழைப் பற்றிச்சொல்லத் தேவையே இல்லை! இனிது இனிது!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான கவிதையும் படங்களும், வடுவூரான் அழகும் போட்டி போடும் நம்பெருமாளும் கண்ணையும் மனதையும் கவர்கின்றனர். கவிதை வரிகள் அசத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  9. அண்ணா உங்களின் அழகு தமிழில் என்ன அழகான கவிதை வரிகள். பெருந்துயர் நீக்கி பெரும் நலம் தந்திட அவன் வருவான்...விரைவில் வர வேண்டும் வந்து இந்த மாயாவியை அழித்து...இயல்பு வாழ்க்கை விரைவில் வர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..