நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 30, 2021

அன்னைக்கு மடல்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த வாரத்தில்
அன்புக்குரிய வல்லியமா,
அன்புக்குரிய கோமதிஅரசு,
அன்புக்குரிய கமலாஹரிஹரன்
ஆகியோரது
வலைத்தளங்களில்
கடிதங்கள் பல 
மலர்ந்திருக்கின்றன..

அந்த வகையில் அப்போதே
மடல் ஒன்றினை
நானும் வரைந்தேன்..

வேறு சில இனிய பதிவுகளில்
கவனம் செலுத்தியது
இக்கவிதையை மேலும் மேலும்
செதுக்கியது - என,
வலைத் தள
அஞ்சலில் சேர்ப்பதற்குத்
தாமதமாகி விட்டது..

அஞ்சல் தாமதமாயினும்
அஞ்சல் என்று வருபவள்
அனைத்தையும் அறிவாள்...

இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன்,
பேச்சியம்மன், இசக்கியம்மன்,
பிடாரியம்மன்
முதலானோர் எங்களது
குலதெய்வக்கோயிலில்
விளங்குகின்றனர்..

ஸ்ரீ நாறும் பூ நாயகி
ஆவுடையாள் (கோமதி)
எனும் திருப்பெயர்கள்
எனது தாத்தா வாழ்ந்த ஊரில்
விளங்கும் அம்பிகையின்
திருப்பெயர்களாகும்...

அன்னைக்கு எழுதப்பட்ட
அந்த மடல்
இன்றைய பதிவில்!..


அம்மா உந்தன் அருள் நோக்கி
அடியேன் வரைந்திடும் கடிதம்..
அம்மா நீயும் இரங்கி வந்தால்
அடியேன் மடலுக்கும்  புனிதம்..

நாயகி உந்தன் நல்லருளாலே
நானும் நலமே நாளும் நலமே
நலமே நலமாய் நின்றிருக்க
நற்றமிழ் மலரை நான் தொடுத்தேன்..

தாயே தமிழே தலைமகளே
தாள்மலர் பணிந்தேன் குலமகளே..
தண்மலர் தமிழ்மலர் தானெடுத்து
தாய் உன்னிடத்தில் நலம் கேட்டேன்..
 

அசுரர் நலத்தினைத் தீர்த்திட்ட
கூர்முனைச் சூலம் நலந்தானா..
நல்லவர் தம்மை வாழ்விக்கும்
அக்கினிக் கொழுந்தும் நலந்தானா..

வஞ்சகர் வலியைத் தீர்க்கின்ற
வாட்படை தானும் நலந்தானா..
கயவர் கூட்டக் கதை முடிக்கும்
பெருங் கதை அதுவும் நலந்தானா..
பேரிடி என்றே ஓசையிடும்
உடுக்கை யதுவும் நலந்தானா..

கொஞ்சு தமிழ்த் திரு ஓங்கார
சங்கு சக்கரம் நலந்தானா..
அரவுடன்  பாசம் காபாலம் 
ஐங்கணை அனைத்தும் நலந்தானா..

பொன்மணி கேடயம் ஈட்டியுடன்
கூர்வேல் அதுவும் நலந்தானா..
அணங்குகள் உந்தன் பரிவாரம்
அவைகளும் ஆங்கே நலந்தானா..
கோமகள் உன்னுடன் விளையாடும்
கோளரி அதுவும் நலந்தானா!..

அனைத்தும் நலமாய் விளங்கட்டும்
அவனியை நன்றாய் காக்கட்டும்..
ஆயினும் அம்மா எனக்கென்று
ஆசைகள் சொன்னேன் உனக்கின்று..

அம்மா உன் அருள் விழிகள்
ஆறுதலைக் காட்டாதா
அங்கும் இங்கும் விளையாடி
அடும் பகையை ஓட்டாதா..
அம்மா உன் புன்னகை தான்
அருள் நெறியைக் கூட்டாதா
அண்டி வரும் பிள்ளை மனம்
மகிழ்வதற்குத் தேற்றாதா..

அம்மா உன் கையிரண்டும்
வாரி என்னைச் சேர்க்காதா
வாட்டமுறும் என் அகத்தில்
வருங்கவலை தீர்க்காதா..
அம்மா உன் திருச்செவியில்
எந்தன் குறை கேட்காதா
என் மகனே.. மகனே.. என்று
செவ்விதழ்கள் மலராதா..


தஞ்சை மகா மண்டலத்தில்
தங்க மாரி ஆனவளே..
சஞ்சலத்தைத் தீர்த்தருளும்
சமயபுர சங்கரியே..
பத்ரகாளி என்றெழுந்து
பகை விரட்டும் அம்பிகையே..
அருள் சுரக்கும் ஆவுடையாளே
ஆதி சிவ நாயகியே..

ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன்
பிரியமுடன் பிரம்ம சக்தி
என்று எங்கும் காப்பவளே
கை கொடுத்து வழி நடத்தி
நல்வினையில் சேர்ப்பவளே..

காத்து அருளும் தாயாகி
கனியமுதம் கொடுத்தவளே..
கோடி நலம் தானருளும்
கோமதியாய்ப் பொலிபவளே..

ஸ்ரீ பேச்சியம்மன்
பேச்சி முத்து என்றே வந்து
பிரியமுடன் பேசுகின்றாய்..
இன்னல் தீர்த்து எந்தன் நெஞ்சில்
இசக்கி என்றே வசிக்கின்றாய்..
எங்கும் பிணி தீர்ப்பவளே
இளங்காளி பிடாரியம்மா..
பீடைகளைப் பிளந்தெறிந்து
பெருந்துணையாய் நிற்பவளே...

தங்க மலர்த் தாமரையில்
தான் பிறந்து வந்தவளே..
எங்கும் துயர் தீர்க்க என்று
சிங்கத்துடன் நின்றவளே..

மஞ்சள் முக மல்லிகையில்
செம்பவளக் குங்குமப்பூ
கொன்றை தவழ் வேணியனின்
மேனி திகழ் சண்பகப்பூ..

தங்க நிறத் தாமரையும்
தண்முல்லை மருக்கொழுந்து
தாழம்மடல் வாசத்துடன்
மகிழம்பூ தாய் உனக்கு..

நாறுங் குழல் நாயகியாள்
நாளும் நலம் சூடிடவே
பவளமல்லி வெட்சியுடன்
தனிநீலக் குவளைப் பூ..

ஸ்ரீ வடபத்ர காளி - தஞ்சை..

அம்மா உன் திருவடியில்
அணி மலர்கள் ஆயிரமாம்
பொன் மலராய்  ஒளி சிந்தும்
அகல் விளக்கும் ஆயிரமாம்...

அம்மா உன் திருவடிகள்
என் கண்ணில் ஒளியாகும்...
அம்மா உன் திருவடியில்
என் சொல்லும் பூவாகும்!..
***
ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. அன்னைக்கே கடிதம்.  மனதில் எழுதிய வரிகள் வலையில் கவிகளாய்..   அருமை.  உங்கள் திறமை என்னை பிரமிக்க வைக்கிறது.  வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      அனைவருடைய அன்பும் ஆதரவும்
      எம்பெருமானின் நல்லருளும் தான் இதற்கெல்லாம் காரணம்...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படிக்கும்போதே மனதில் "மாரியம்மன் தாலாட்டின்"சில வரிகள் நினைவில் வந்தன. அருமையான எழுத்து. மனதில் பொங்கிய பக்திப் பிரவாகம் கவிதை ஊற்றாக வெளியே பொங்கிப் பரவி விட்டது. நன்றியும், வாழ்த்துகளும். _/\_

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  3. அம்மனுக்கு சூட்டிய பாமாலை அருமை ஜி
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. அம்மாவுக்கு கடிதம் மிக அருமை. மனதில் தேர்ந்து எடுத்த முத்துக்களை அழகாய் கோர்த்த முத்துமாலை போல கவிதை பாமாலையை பூமாலையாக சூட்டி விட்டீர்கள் அம்பிகைக்கு.
    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    அம்பிகை அனைவருக்கும் நலம் பல தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையாய் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. அன்னையின் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    அன்னையின் அருள்விழிகள் ஆறுதலை தரும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அன்னைக்கு ஒரு கடிதம் நன்று. அன்னை நம் எல்லோரையும் காத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஆஹா.. அகிலத்திலுள்ள அத்தனை மக்களையும் காக்கும் அன்னைக்கு தாங்கள் எழுதிய மடல் மிக அழகாக உள்ளது.

    /அம்மா உன் திருவடிகள்
    என் கண்ணில் ஒளியாகும்...
    அம்மா உன் திருவடியில்
    என் சொல்லும் பூவாகும்/

    கருத்துள்ள வரிகள். எனக்குப் பிடித்தமான ஸ்ரீ வடபத்ரகானி அன்னையின் கருணை ததும்பும் திருவுருவ காட்சி மனதை கொள்ளை கொண்டது. அன்னையின் படங்களனைத்தும் அருமை. எவ்வளவு அழகழகான வார்த்தைப் பூக்களை கொண்டு தொடுத்த மலர் மாலை. உங்கள் வார்த்தைகளின் கோர்வையில் அன்னையை நேரிலேயே தரிசித்த சிலிர்ப்பு எனக்கு ஏற்ப்பட்டது. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். உங்களை வாழ்த்த எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அதனால் கைகூப்பி வணங்குகிறேன்.🙏.

    என்னையும் தங்கள் பதிவில் குறிப்பிட்டு இருப்பதற்கு மிக்க நன்றிகள். எப்போதும் முடிந்த வரை காலையிலேயே பதிவுகளை படிக்கும் சில வேலைகளினால், இன்று பதிவுகளுக்கு வர தாமதமாகி விட்டது. அதனால் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. தங்களது அன்பு வருகையே எனக்கு மகிழ்ச்சி.. மன்னிப்பு என்பதெல்லாம் எதற்கு?..

    இப்பதிவின் பொருட்டு தாங்கள் எனக்கு அளிக்கும் வணக்கங்களும் வாழ்த்துகளும் அம்பிகைக்கே உரியன...

    அவளன்றி ஏதும் இல்லை...

    ஆன்றோர்கள் சொல்லியதைப் போல
    நாயேனையும் அவளே ஆண்டு கொண்டாள்..

    அவளது திருவருளால் அனைத்தும் நலமாகட்டும்...

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  10. அம்மாவுக்கு ஓரு கடிதம் என்றதும் உங்களைப் பெற்ற தாய்க்கு நீங்கள் எழுதிய கடிதம் என்று நினைத்தேன், ஆனால் உலகையே பெற்ற  தாய்க்கு எழுதிய கடிதம்.. அற்புதம்! தன் மக்களுக்கு கொடிய நோய் தாக்கக் கூடாது என்று சமயபுரம் அன்னை பூச்சொரிதல் சமயத்தில் பச்சைப் பட்டினி இருப்பதாக கூறுவார்கள்.கொடிய நோயாகிய கொரோனா பரவாமல் அன்னை நம்மை காக்கட்டும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      சமயபுரத்தில் அம்பாள் பச்சைப் பட்டினி என பங்குனியில் விரதம் இருந்து பூச்சொரிதலுடன் சித்திரையில் தேர்த் திருவிழா நடைபெறும்...

      அன்னையின் அருளால்
      அனைத்தும் நலமாகட்டும்...

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..