நவராத்திரி வைபவத்தில் இன்று ஸ்ரீ ஸரஸ்வதி பூஜை...
ஞானமும் கல்வியும் நல்லருளும் பெருகிட அவளே அருள் புரிவாள்...
அனைவருக்கும் ஸ்ரீ ஸரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..
சகலகலாவல்லி ஸ்ரீ ஸரஸ்வதி
அன்னை அவள் அல்லால் வேறு ஏது கதி!..
எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளைப் போலவே - இவளுக்கும் மூன்று கண்கள், ஜடாமகுடம், சந்த்ரகலை, ஜபமாலை, சுவடி, வீணை - எனும் நிறை மங்கலங்கள்.
சகல வித்யைகளுக்கும் காரணனான தக்ஷிணாமூர்த்தியும், வித்யா ஸ்வரூபிணியாகிய ஞானசரஸ்வதியும் ஸ்படிகம் போல் ஒளிர்பவர்கள்..
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியும் ஸ்ரீஸரஸ்வதியும்
சுத்த ஸத்வ நிலையைக் குறிக்கும்
ஸ்படிக மாலையைத்தான் வைத்திருக்கின்றார்கள்..
வெண்மை நிறம், சந்த்ரகலை, ஸ்படிக மாலை -
இவற்றை நினைத்தாலே நமக்குத் தூய்மை சாந்தி
எல்லாம் உண்டாகின்றன!..
-: ஸ்ரீபரமாச்சார்ய ஸ்வாமிகள் :-
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.
படிக நிறமும் பவளச்செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போல் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி.
பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி: வெள்ளிதழ் பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள்: இருப்ப என்சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறல் அரிதாவது எனக்கு இனியே!..
பெருந்திருவும் சயமங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப்பொருளும் தரும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ்சீர் தருமே!..
கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்!
இறைவனின் திருவடித்தாமரைகளைப் போற்றி வணங்காத கல்வியினால் என்ன பயன் என்று திருவள்ளுவப் பெருந்தகை வினவுகின்றார்.
அதற்கு நல்லறிவு வேண்டுமே!..
அத்தகைய நல்லறிவினை அருள்பவளே ஸரஸ்வதி!.
அவளே அனைத்தினுக்கும் தொடக்கம்.
அவள் வழி காட்டவே - ஞானமூர்த்தியாகிய தக்ஷிணாமூர்த்தியை -
பரம் பொருளாகிய சிவபெருமானை அடைகின்றோம்!..
என் தந்தையின் நினைவில்... |
''சரஸ்'' எனில் பொய்கை. நமது மனமாகிய பொய்கையில் வசிப்பவள். அதனாலேயே சரஸ்வதி என்று கூறுவர்.
கலைவாணியின் திருக்கரத்தில் திகழும் வீணை கச்சபி எனப்படுவதாகும்... கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் - கல்வியையும் மேன்மையையும் குறிப்பன... அட்ச மாலை தூய்மையைக் குறிப்பது... தீயவைகளை விலக்கி நல்லவைகளை மட்டுமே ஏற்கும் அன்னம் அவளது வாகனம்...
தூய்மையான மனதில் உறைந்திருப்பவள் என்பதைக் குறிப்பதே
அன்னை வீற்றிருக்கும் வெண் தாமரை..
குலோத்துங்க சோழனின் அவைப் புலவராகத் திகழ்ந்த கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் வணங்கி வழிபட்ட சரஸ்வதியின் திருக்கோயில், திருஆரூர் மயிலாடுதுறை வழித்தடத்தில் பூந்தோட்டம் எனும் சிற்றூருக்கு அருகில் உள்ள கூத்தனூரில் உள்ளது.
இங்கு சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக நிகழ்கின்றது. குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய சிறந்த தலம்..
ஸ்ரீ பர்வதவர்த்தனியின் ஸரஸ்வதி திருக்கோலம் |
அன்னையே சரஸ்வதி!..
உன்னை வணங்குகின்றேன்.
வேண்டும் வரங்களை அருள்பவளே!..
மனம் மகிழும் வடிவாகத் திகழ்பவளே!..
ஒவ்வொரு நாளையும்
புதியனவற்றைக் கற்றுக் கொள்ளும்
நாளாகத் தொடங்குகின்றேன்!..
எல்லாம் வெற்றியாக அருள்வாய் தாயே!..
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா
ஃஃஃ
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவள், வீணை செய்யும் ஒலியிலிருப்பவள்... அவள் அருள் கிட்டட்டும் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குஅழகான படங்கள், தெளிவான விளக்கங்கள். அருமை.
பதிலளிநீக்குபடங்கள் அருமை துர்ை அண்ணா
பதிலளிநீக்குவிளக்கங்களும்
பூஜை வாழ்த்துகள்
கீதா
வீட்டுப்பூஜை வாழ்த்துக்கள்.. நானும் நைட்டுக்கு சக்கரைப்புக்கை உள்ந்து வடை கடலைப்பருப்பு வடை அவல் ... இவ்ளோம் செய்ய இருக்கிறேன்.. இதுக்கு மேல வேலையால போய் செய்ய முடியாது...
பதிலளிநீக்குஇங்கே இன்னிக்கு இனிமேல்தான் பூஜை! அதற்கான ஆயத்தங்களைச் செய்யணும். நேற்றுத் தான் கூத்தனூர் சென்று வந்தது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைய தினம் குமரகுருபரர் அருளிய "சகலகலாவல்லி மாலை" சொன்னாலும் சிறப்பு. வழக்கம் போல் அருமையான பதிவு. எல்லா விபரங்களும் அருமை. சரஸ்வதி பற்றி நானும் சில வருடங்கள் முன்னர் நவராத்திரிக்குச் சிறப்புப் பதிவு போட்டிருந்தேன். அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக மிக விசேஷமான நாள்.
பதிலளிநீக்குநம் வாழ்வின் எல்லா அம்சங்களுக்கும் அவ்ள் அருள் பொருந்தினால்
வாழ்வு துலங்கும். இதோ எழுதிக்கொண்டிருக்கும் என் விரல்களுக்கும் அவளே சக்தி கொடுத்தாள்.
கம்பனின் கவி மனத்தாகத்தைத் தணிவிக்கிறது.
அம்மா சரஸ்வதியின் படங்கள் அத்தனையும் அழகு.
இனிய வாழ்த்துகள். வாழ்வு வளம் பெறட்டும்.
ரசித்தேன். கை பிரச்சனையால் நிறைய எழுதலை.
பதிலளிநீக்குஉருப்பளிங்கு - கண்ணாடி போன்று
அழகான படங்களுடன் சரஸ்வதி பூஜை சிறப்புப் பகிர்வு வெகு சிறப்பு.
பதிலளிநீக்கு