நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 02, 2016

என் கண்

அழகு.. பேரழகு!..

அதனால்தான்,

அனல் பறந்த போர்முகத்தில் -

அருள் இளங்குமரனைக் கண்டு
ஐயன் அருள்வேல் முருகனைக் கண்டு

அசுரன் சூரபத்மனும் திகைத்து நின்றான்!..



அசுரனும் வியந்து நின்ற அந்தப் பேரழகை எல்லாம்
நாமும் கண்டு மகிழவேண்டும் தான்!..

ஆனால் - அது எங்ஙனம் சாத்தியமாகும்!..

அதற்காகத்தான்
தெய்வச் செயல்களாக பல நிகழ்ந்திருக்கின்றன..

அழகெல்லாம் முருகனே!..

அழகென்ற சொல்லுக்கு முருகா!..

- என்றெல்லாம் உருகினார்கள்..

உள்ளம் உருகுதையா!..
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள்
ஆசை பெருகுதையா!..

- என்று, பாலமுருகனை வாரி அணைத்திட இரு கைகளையும் நீட்டி நின்றார்கள்..

எல்லாவற்றுக்கும் மேலாக - தம்மைப் பெண்ணாக பாவித்துக் கொண்டு,

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்..
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்..
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!..

- என்று, நெக்குருகி நின்றார்கள்...

இன்னும் ஒருபடி மேலே போய் -

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி..
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி..
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி..
வேலன் இல்லாமல் தோகை ஏதடி!..

- என்று உரங்கொண்டு நின்றார்கள்..


என் மனம் அவனுடைய மயிலாகி விட்டது..
அந்த மயிலும் அவனுக்காகவே காத்துக் கிடக்கின்றது..

அதுவும் எங்கே!..

குகனுடைய ஆலயத்தில்!..

அது எங்கே இருக்கின்றது?..

அது எங்கேயும் இல்லை..
என் மாந்தளிர் மேனியே கோயிலாகி விட்டது..

ஓ!..

நானே.. நானே!.. அதனால் தானே என்குரலும் கோயில் மணியோசையாகி விட்டது!..

ஓஹோ!..

அப்படியிருக்க.. அந்த அழகு வேலன் எங்கே சென்றான்?..

வரச் சொல்லடி அவனை வரச் சொல்லடி!..
அந்தி மாலைதனில் அவனை வரச் சொல்லடி!..
மலைக்கோயில் குமரேசன் அறியாததா?..
என் மனம் என்ன கதைச் சொல்லத் தெரியாதா!..

அடாடா!...

அங்கே, மாமனுக்காக யமுனைக் கரை என்றால் -

இங்கே மருகனுக்காக -
காடு மலை, ஆறு குளம், வயல் வெளி, கடல் கரை, மனம் மெய் - எல்லாமும்!..

எண்கண் முருகன்
காவிரியின் கருணையால் தழைத்திருக்கும்
சோழ வளநாட்டின் திருத்தலங்களுள் ஒன்று -

எண்கண்!..

கண்ணுற்றவர்கள் கண்டு கடைத்தேறுதற்கென எழுந்துள்ள திருத்தலம்!..

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகிய அம்பிகை -
தன் அன்பு மகனைத் தன் அருகிலேயே அமர்த்திக் கொண்டாள்..

வெளியே சென்றால் பிறர் கண்பட்டு விடும்!.. - என்று!..

உண்மைதான்.. பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க.. என்றார்களே!..

அந்த அழகை எண்கண் முருகனிடம் காணலாம்..

தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு சாலை வழியே செல்கையில் நீடாமங்கலம் கொரடாச்சேரியை அடுத்துள்ளது முகுந்தனூர்.

இந்த ஊரில் இறங்கிக் கொண்டால் அங்கிருந்து வடக்காக ஒரு கி.மீ தொலைவில் எண்கண்..

இரயில் வழி என்றால் கொரடாச்சேரியில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்துகளில் செல்லலாம்..

திருவாரூர் - தஞ்சை பேருந்துகள் முகுந்தனூரில் நின்று செல்கின்றன..

பசுமையான கிராமத்தில் அமைந்துள்ளது எண்கண் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில்..

உண்மையில் எண்கண் சிவாலயமாகும்..

வயலூர், சிக்கல், கீழ்வேளூர், வைத்தீஸ்வரன்கோயில் - திருத்தலங்களைப் போல இங்கே முருகப்பெருமான் சிறப்புற்று விளங்குகின்றனன்..

முருகன் சிவபெருமானுக்குக் குருவாக அமர்ந்த தலம் - சுவாமிமலை..
முருகன் நான்முகனுக்குக் குருவாக அமர்ந்த தலம் - எண்கண்..

அன்றைக்குக் கயிலைமாமலையில் -
திருமுருகனைத் திரும்பிப் பார்க்காமல் சென்ற நான்முகன் -
தன் பிழைதனை உணர்ந்து மனம் வருந்தினான்..

தன் குற்றம் பொறுத்தருளுமாறு ஈசனை வழிபட்டு நின்றான்..

எம்பெருமானும் நான்முகனின் பிழை பொறுத்தருளி -
பிரணவ உபதேசம் செய்தருளுமாறு செல்வக்குமரனைப் பணித்தருளினார்..

அந்த அளவில் - திருமுருகன் நான்முகனுக்குத் திருக்காட்சி நல்கினான்..

நான்முகனும் எண்கண்களால் எம்பிரானைத் தரிசித்து வழிபட்டு உய்ந்தனன்..

இத்திருத்தலத்தில் - முருகனிடம் நான்முகன் பிரணவப் பொருளின் உபதேசம் பெற்றுக் கொண்டதாகத் திருக்குறிப்பு..

சிக்கல் திருக்கோயிலில் சிங்கார வேலனின் சந்நிதி தெற்கு முகம்..
திருச்செந்தூரில் ஜயந்தி நாதனின் திருச்சந்நிதி தெற்கு முகம்..
சுவாமி மலையில் சிவகுருநாதனின் சந்நிதி தெற்கு முகம்..

அதுபோல, எண்கண்ணிலும் முருகனின் திருச்சந்நிதி தெற்கு முகம்..

பற்பல சிறப்புகளைக் கொண்ட திருத்தலம் என்கண்..

இத்திருத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களிடம்
திருச்செந்தூரில் போர் முடித்த வெற்றிச் செய்தியை - 
எம்பிரான் உரைத்தருளியதாக ஒரு திருக்குறிப்பும் உளது..

எட்டிக்குடி, பரவைச்சேரி (பொறவச்சேரி), எண்கண் - 
எனும் மூன்று தலங்களிலும் உள்ள முருகன் திருமேனிகள் 
ஒரே சிற்பியால் செய்யப் பெற்றவை என்று சொல்லப்படுகின்றது..

எட்டிக்குடியில் முழுத்திறனுடன் சிலை வடித்த சிற்பி தனது வலக்கை கட்டை விரலை இழந்த நிலையில் பொறவச்சேரியில் சிலை வடித்தான்.. ..

அந்தச் சிற்பி பார்வை இழந்த நிலையில் சிலை வடித்த தலம் - எண்கண்..

முதல் சிலை செய்த பின் - இதுபோல வேறொன்று செய்யக்கூடாதென
மன்னன் சிற்பியின் கட்டை விரலை நறுக்கினான்..

விரலை இழந்த சிற்பி  இரண்டாவது சிலையையும் வடித்தான்..

கோபமுற்ற மன்னன் விழியிரண்டையும் பறித்தான்..
இறையருள் துணை கொண்டு சிற்பி மூன்றாவது சிலையையும் செய்து முடித்தான்..

அத்துடன் மீண்டும் பார்வை நலம் பெற்றான் - என்றொரு கதை உண்டு..

அதற்கேற்றாற்போல - 
இத்தலத்தில் குமர தீர்த்தத்தில் நீராடி இறை தரிசனம் செய்து வழிபடுவோர் தம் பார்வைக் குறைபாடுகள் நீங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

எண்கண்


இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரகந்நாயகி
தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - குமார தீர்த்தம்.

விநாயகப் பெருமான் நர்த்தனத் திருக்கோலங்கொண்டு விளங்குகின்றார்..

தெற்கு முகமாகத் திகழ்கின்றது குமரகோட்டம்

வள்ளி தெய்வயானையுடன் ஆறு திருமுகங்களும் 
பன்னிரு திருக்கரங்களுமாக மயிலின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் திருமுருகன் திருக்காட்சி நல்குகின்றனன்..

பாசம், சக்கரம், வாள், அம்பு, வஜ்ராயுதம் இவற்றுடன்
சூலம், வில், கேடயம், கொடி, கதை ஆகியன திருக்கரங்களில் திகழ்கின்றன..

வலது திருக்கரத்தால் அபயம் அருளும் முருகனின் 
இடது திருக்கரத்தில் தாமரை திகழ்கின்றது..

எண்கண்ணில் அருணகிரிநாதர் வழிபட்டிருக்கின்றார்..


வருடத்தின் எல்லா கார்த்திகை நாட்களும் சிறப்பாக நிகழ்கின்றன.. 

வைகாசி விசாகம் கந்த சஷ்டி ஆகியன திருவிழாக்கோலம்..

தைப் பூசத்தன்று ஆயிரமாக பாற்குடங்கள்.. காவடிகள்..

தஞ்சை வளநாட்டின் தலையாய திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று..

பல ஆண்டுகளுக்கு முன் இத்திருத்தலத்தை தரிசித்துள்ளேன்..
அப்போதெல்லாம் படங்களெடுக்கும் வசதியும் வாய்ப்பும் இல்லை..

இந்தப் பதிவின் படங்கள் இணையத்தில் பெற்றவை..

எண்கண் எம்பிரான் மீண்டும் தரிசனம் தந்தருளல் வேண்டும்..

கந்த சஷ்டி விரத நாட்களில்
எண்கண் திருத்தலத்தைச் சிந்தித்திருந்ததில் மகிழ்ச்சி.. 


சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சண்ப கஞ்செ றிந்தி லங்கு - திரடோளுந்
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச - மயிலேறித்

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
சென்ற சைந்து கந்து வந்து - க்ருபையோடே
சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
செம்ப தம்ப ணிந்தி ரென்று - மொழிவாயே!..

அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
அங்க முங்கு லைந்த ரங்கொள் - பொடியாக
அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் - மருகோனே..

இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
டும்ப ரன்ற னன்பில் வந்த - குமரேசா
இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
எண்க ணங்க மர்ந்தி ருந்த - பெருமாளே!..
-: அருணகிரிநாதர் :-

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!..
* * *

14 கருத்துகள்:

  1. எண்கண் சென்றுள்ளேன். இன்று தங்கள் பதிவு மூலமாக மறுபடியும் சென்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு மூன்று முறை போய் இருக்கிறோம் என்கண்.
    அருமையாக முருகன் பாடல்கள், திருப்புகழ் பாடல் பகிர்வு என்று பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இதுவரை அறியாத இடம் சென்றதில்லை. தஞ்சை கும்பகோணம் பகுதிகளில் பார்த்த இடங்களை விட பார்க்காத இடங்களே அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      உண்மைதான்.. ஒரு நாளைக்கு ஒரு கோயில் என்றாலும்
      ஒரு வருடத்திற்கு மேல் ஆகும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. அன்பின் ஜி
    என் கண் என்று தொடங்கி எண்கண் முருகன் பற்றிய விரிவான விளக்கம் அருமை வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்களுக்கு நல்வரவு..

      நீண்ட இடைவெளிக்குப் பின் தங்களின் வருகை..
      மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. என்கண் திருத்தலம் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய விபரங்களும் அருமை. நன்றி துரை சார்!

    பதிலளிநீக்கு
  7. என்கண் திருத்தலம் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...
    முருகனை அழைக்காத நாளில்லை... எல்லாச் செயலிலும் முருகனைத்தான் அழைப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      முன்னின்று காத்தருள்வான் முருகன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பெயரில்லா04 நவம்பர், 2016 15:58

    Nandri Ayya
    Karanthai Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..