நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 14, 2016

இதெல்லாம் கடன்!..

என்ன செய்வது இதற்கு?..



மடி கொடுத்த அன்னை தனைத் துதிக்காதது - கடன்..  
தோள் கொடுத்த தந்தை சொல்லைக் கேட்காதது - கடன்!..

மதி கொடுத்த ஆசானை மதிக்காதது - கடன்..
தனைக் கொடுத்த மனையாளை வதைப்பதுவும் - கடன்!..  

உடன் பிறந்த உறவுகளை ஒதுக்குவது - கடன்..  
உற்றாரை மற்றோரை வெறுப்பதுவும் - கடன்!..

பிள்ளைகளின் வாழ்வுக்கென வாழாதது - கடன்..
பேர் கொண்ட பெரியோரைப் பிழைத்ததுவும் - கடன்!..  

நீத்தோரை நினையாது இருந்ததுவும் - கடன்..
மூத்தோர் தம் வார்த்தைகளை கேளாதது - கடன்!..  



குலதெய்வக் கோயில்தனை வணங்காதது - கடன்..  
வீட்டருகில் தெய்வத்தை விலக்கியதும் - கடன்!..

அற்றார் தம் அழிபசியைத் தீர்க்காதது - கடன்..
உற்றார் தம் வறுமைக்கு நகைத்ததுவும் - கடன்!..    

நிதி இருந்தும் இரப்போர்க்குக் ஈயாதது - கடன்..
மதி அறிந்தும் நல்வழியில் செல்லாதது - கடன்!..  

எளியோர் தம் இல்லத்தில் கை நனைக்காதது - கடன்..
இல்லாதோர் வாழ்வுக்குக் கை கொடுக்காததும் - கடன்!..  



நன்னெறியில் வாழ்வதற்கு நினையாதது - கடன்..
நல்லெண்ணம் கொண்டோரைப் பழித்ததுவும் - கடன்!..

பெருஞ் செயலால் பேரொன்று கொள்ளாதது - கடன்..  
பேராசைப் பெரும் பகையைத் தள்ளாததுவும் - கடன்!..


நட்பின் இடர் தீர்க்காமல் விட்டதுவும் - கடன்..
நட்பின் இடை பகையூட்டி விட்டதுவும் - கடன்!.. 

வருகின்ற வாய்ப்பு தனை விட்டதுவும் - கடன்..
வாராத தொழில் ஒன்றைத் தொட்டதுவும் - கடன்!..


அருந்துகின்ற நீர் நிலையை அழித்ததுவும் - கடன்!..  
பொருந்துகின்ற விலங்குகளை விரட்டியதும் - கடன்!..


கூடு கொண்ட குருவிகளைக் குலைத்ததுவும் - கடன்..
கொடு வாளால் நெடுமரத்தைத் துணித்ததுவும் - கடன்!..   

உயிர் கொண்ட தம் உடலைப் பேணாதது - கடன்..
ஒருவருக்கும் நல்வார்த்தை கூறாததும் - கடன்!..



உலைவைக்க ஊர்ப் பணத்தை அடித்ததுவும் - கடன்..
ஊர்முன்னே உத்தமனாய் நடித்ததுவும் - கடன்!..

உழைக்காது பெருஞ் செல்வம் சேர்த்ததுவும் - கடன்..
பிழைக்காது மெய் என்று நினைத்ததுவும் - கடன்!..



குடி கொன்ற குடி கொண்டு நின்றதுவும் - கடன்..
குடி கொண்ட பேர் கெடுத்து அழித்தவும் - கடன்!.. 

வாழ்வழித்து இலவசத்தைக் கொடுத்ததுவும் - கடன்..
வாக்களித்தோர் வாழ்வு தனைக் கெடுத்ததுவும் - கடன்!..



ஆட்சிக்காக காசைக் காட்டிக் கேட்பதுவும் - கடன்..
சாட்சியாக வரும் உண்மை மறப்பதுவும் - கடன்!..

வாக்களித்த வார்த்தைகளே ஆட்சிக்கு - கடன்..  
வாக்களிக்க வாக்குகளே மக்களுக்கு - கடன்!..


வாழ்க தமிழகம்..
வளர்க தமிழகம்!.. 
*** 

14 கருத்துகள்:

  1. நாம் வாழ்வதே கடன்தானே ஐயா...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நாம் வாழ்வது கடன் தான்.. ஆனால் - இங்கே கடன் என்ற வார்த்தையை பாவம் என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கின்றேன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நம் கடன் கடன் செய்து கிடப்பதே என்றாகிவிட்டது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கடமைகளை நிறைவேற்றத்தான் வேண்டும்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி அருமையான வாழ்வியல் தத்துவம் மிகவும் ரசித்து படித்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      மாதா, பிதா, குரு, தெய்வத்தை மறப்பது பாவம் - என்ற வகையில் சிறு குறிப்பினைப் படிக்க நேர்ந்தது..

      அதனால் விளைந்ததே -இந்தப் பதிவு..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடன்
    சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன் என்னும் வரிசையைப் படித்த நினைவு இந்தக் கடனுக்கும் அந்தக் கடனுக்கும் வித்தியாசம் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தாங்கள் குறிக்கும் கடன் என்ற வார்த்தை கடமை என்ற அர்த்தத்தில் வரும்..

      ஆனால் - இங்கே கடன் என்பது திருப்பிச் செலுத்த வேண்டியது என்ற அர்த்தத்தில் வரும்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பாவங்கள் கூடிக் கொண்டே போகிறது. நெறிப்படி வாழாத காரணத்தால்.
    பாவங்களை அழகாய் பட்டியலிட்டு சொல்லிவிட்டீர்கள். உணர்ந்து நடக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்னை, தந்தை, குரு, தெய்வம் - இவர்களை மறப்பது பாவம் என்றபடிக்கு ஒரு சிறு குறிப்பு ஒன்றைப் படிக்க நேர்ந்தது..

      நிகழ்வுகள் சிலவற்றுடன் அதைத் தொடர்ந்து - தமிழ்நாட்டின் நிலையையும் வாக்களிக்கும் அவசியத்தையும் பதிவு செய்தேன்..

      பதிவு முழுதும் பாவம் என்ற வார்த்தையைப் பதிவு செய்ய மனம் அஞ்சியது..

      எனவே தான் - நாம் பட்டுள்ள கடன் என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமை ஐயா.....

    எத்தனை கடன்கள்.... அதிகரித்துக் கொண்டே போகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      அவரவரும் நினைத்தால் கடனை அடைத்து விடலாம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அருமையான படைப்பு, இதுவே இன்றைய உண்மை மற்றும் நிதர்சனம். இதை ஒருமுறை வாசிப்பவர்கள் மனதில் உறுதியாக மாற்றம் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்த்துக்கள். தாங்கள் அனுமதியளிப்பின் இந்த படைப்பை நான் பலரிடம் (பாமரரிடம்) கொண்டு செல்ல விரும்புகின்றேன், ஒரு காகித அச்சு வடிவில். இசைவு இருப்பின் இந்த படைப்பை எனக்கு மின்னஞ்சல் வழி அனுப்பவும். மீண்டும் நன்றியும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்களது கருத்துரையை இன்று தான் கவனித்தேன்.. தங்களது மின்னஞ்சலைத் தரவும்.. அனுப்பி வைக்கின்றேன்..

      தங்களது வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..