நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 17, 2015

வளம் தர வருக!..


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்..

திருக்கயிலாய மாமலையில் - அம்மையும் அப்பனும் ஆனந்தத் திருக்கோலம் கொண்டு - பிரணவ உருவமாய்ப் பொருந்திய வேளையில்,

ஒளியிலிருந்து ஒலியாக - ஓம் - எனத் தோன்றியவர் விநாயகப் பெருமான்..

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வரஅருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!.

சிவபெருமான் தன்னை வழிபடுபவர் தம் இடரைக் களைவதற்காக யானை உருக்கொண்டு உமையன்னையுடன் கணபதியைத் தோற்றுவித்தார்

- என்று திருஞானசம்பந்தப் பெருமான் புகழ்ந்துரைக்கின்றார் ..

கஜமுக அசுரனை அழிப்பதற்காக சிவபெருமான் கஜமாமுகனைப் படைத்தார் என்பதனை -

''கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்
கயாசுரனை அவனாற் கொல்வித்தார் போலும்''

- என்று திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில் பரவுகின்றார் - திருநாவுக்கரசர்.. 

சான்றோர்கள் வழங்கியுள்ள - இத்திருக்குறிப்புகளினால்,

கஜமுக அசுரனை அழித்து அடியவரைக் காப்பதற்கே விநாயகர் தோன்றினார் என்பது நாம் கொள்ளத்தக்கது.

எளிமையே வடிவானவர் விநாயகப்பெருமான்.

எளிமையை மனதிலும் சொல்லிலும் செயலிலும் கொண்டு, அவரை வழிபட -
நம்முள் பண்பும் பணிவும் மிகுத்து வரும் என்பது ஆன்றோர் வாக்கு..

பண்பும் பணிவும் நம்முள் பூத்து மலருங்கால் அந்தப் பூவாகிய இதயக் கமலத்துள் தாமே வந்தமர்ந்து நமக்கு நற்கதியினை அருள்கின்றார். 

முழுமுதற் பொருளாகிய வேழமுகத்தவனுக்கு மோதகம் சமர்ப்பித்து சரணடைய - பாதகம் எல்லாம் சாதகமாகும் என்பது ஐதீகம்.


விநாயகர் வழிபாடு தொன்மையானது.

ஆதியிலிருந்தே உள்ளது என்றும்,

மகேந்திர பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி வடக்கே படை நடத்திச் சென்று வாதாபி என்னும் நகரை வெற்றி கொண்டபின் அங்கிருந்த கணபதியின் திருவடிவத்தை, பல்லவனின் வெற்றிக்கு அடையாளமாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து,

அதனை தனது சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளச் செய்து வழிபட்டார். எனவே பரஞ்சோதியால்  தோன்றியது தான் விநாயகர் வழிபாடு என்றும் கூறுவர்.

எது எப்படியோ!... சிறு குழந்தைகள் முதல் பழுத்த பெரியோர் வரை அனைவருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்குபவர் விநாயகர்.

கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கை கொடுத்து - துக்க சாகரத்திலிருந்து நம்மைக் கரையேற்றிக் காத்தருள்பவர் விநாயகப்பெருமான்!.

அதனால் தானே...  

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை 
கணபதி என்றிடக் காலனும் கை தொழும் 
கணபதி என்றிடக் கருமம் ஆதலால் 
கணபதி என்றிடக் கவலை தீருமே!... 

என்று பழந்தமிழ்ப் பாடலொன்று பகர்கின்றது.

கவலையும் கஷ்டமும் நீங்கி விட்டால் கலையும் திறனும் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன.

அந்த நிலை கைகூடி வருவதற்கு - தமிழ் மூதாட்டியான ஒளவையார் நமக்கு வழிகாட்டுகின்றார். 

கற்பக விநாயகர்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு 
சங்கத் தமிழ் மூன்றுந் தா!...

என்ற பாடல் எல்லாருக்கும் விருப்பமான திருப்பாடல். 

விநாயகருடைய திருநட்சத்திரம் - ஹஸ்தம். ராசி - கன்னி..

விநாயகருடன் ஐந்து என்ற எண் மிகவும் தொடர்புடையது.

ஐந்து கரங்களும், அவர் இயற்றும் ஐந்தொழில்களும், ஐந்து முகங்களுடன் ஹேரம்ப கணபதியாக விளங்கும் திருத்தோற்றமும் இதனைப் புலப்படுத்தும்.

ஒளவையார் விநாயகப்பெருமானை அகவல் - கொண்டு போற்றிப் பாடினார்.

விநாயகர் அகவல் - எனும் ஞானநூலைத் தினமும் பாராயணம் செய்வோர்க்கு பலப்பல நன்மைகள் விளைகின்றன...

சரி... விநாயகர் நமக்கு எதைக் கற்பிக்கின்றார்?....

அடக்கமாக இருத்தல். 
தாய் தந்தையரைப் போற்றுதல். 
ஊருக்கு உழைத்தல்.

பரம்பொருளாகிய சிவபெருமானின் முதற்பிள்ளையாய் இருந்தும்
தாமே அங்குச பாசம் கொண்டு அடக்கத்துடன் அமர்ந்தவர்.

தன்னை வணங்கும் அடியவர்க்கும் -  தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும் வகையினை அருள்பவர்.

பிள்ளையாரை மனதார வணங்குபவருக்கு வேறொரு குரு தேவையில்லை..

தன்னடக்கம் கொள்வோமாயின் நாம் சாதிக்கக்கூடியவை ஏராளம்...

''அடக்கம் அமரருள் உய்க்கும் '' - என்று திருவள்ளுவர் அறிவுறுத்துகின்றார்.

தாய் தந்தையரைப் போற்றுதல்.
அதை முன்னிட்டே விநாயகருக்கு ஞானக்கனி கிடைத்தது.

ஊருக்கு உழைத்தல் எனில் தன்னிடம் எது சிறப்போ அதையும் விட்டுக் கொடுத்தல். தனது ஒற்றைத் தந்தத்தை ஒடித்தல்லவா மகாபாரதத்தை மேரு மலையில் எழுதினார்.

தவிரவும்,

திருநாளைப் போவார் என்று புகழப்பட்ட ஸ்ரீநந்தனார் சுவாமிகளின் விருப்பத்திற்காக பிள்ளையார் தன் திருக்கரங்களால் சீர்படுத்திக் கொடுத்த திருக்குளம் திருப்புன்கூரில் இன்றும் உள்ளது.

அந்தத் திருக்குளத்திற்கு - பிள்ளையார் குளம் என்றே பெயர்..

எழுந்தருளும் பிள்ளையார் - திருவலஞ்சுழி
அடியார்க்கு எளியராக வருவதில் விநாயகப் பெருமானுக்கு நிகரே இல்லை..

காவிரிக்கு கர்வ பங்கம் ஆன வரையில் சரி..

அவளை எப்படி கமண்டலத்திற்குள் அடைத்து வைக்கலாம்!?.. அகத்திய மகரிஷி செய்ததைக் கேட்பார் யாரும் இல்லையா!..

- என சகலரும் பரிதவித்து நின்றனர்..

இந்திராதிதேவர்கள் அகத்திய முனிவரிடம் சென்று பேசுவதற்கு அஞ்சினர்..

ஆற்றை அடைத்து வைத்த முனிவர் கடுங்கோபத்துடன் சாபம் கொடுத்து விட்டால்!..

அந்த வேளையில்,

காவிரிப் பிரச்னையை நான் தீர்த்து வைக்கின்றேன்!.. - என முன்வந்தவர் கணபதி..

உருவங்கண்டு நகையாடிய கன்னி இளங்காவிரிக்கு நல்லனவற்றை எடுத்துப் புகன்றிருக்க வேண்டும் - அகத்திய மாமுனிவர். 

ஆனாலும், அன்றைக்கு அதைக் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை.. 

அதற்காக சிறைப்படுத்தியது ஒருவிதத்தில் சரி..

ஆனால் அதையே மனதில் கொண்டு காலகாலத்திற்கும் நதிக் கன்னியை அடைத்து வைப்பது என்ன நீதி?..

காவிரிக்கு நீதி வழங்குவதற்காக -  

காக்கை வடிவமாகச் சென்று அகத்திய முனிவரின் கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார்..

சிறை மீண்ட காவிரி சுதந்திரமாக - சுற்றிச் சுழன்று சமவெளியில் பாய்ந்தாள்..

காவிரி விடுபட்டதை அறிந்த முனிவர் திடுக்கிட்டார்..

காக்கை திடீரென சிறுபாலகனாக உருவம் மாறி ஓடுவதைக் கண்டு திகைத்த அகத்தியர் - துரத்திச் சென்று பிடித்தார்..

கோபத்துடன் தலையில் குட்டினார்..

விநாயகப்பெருமான் தன்னுரு காட்டி நின்றார்..

பிழை பொறுத்தருள்க ஐயனே!.- என, தோப்புக் கரணமிட்டதுடன், தானே தன் தலையில் குட்டிக் கொண்டார் - அகத்தியர்..

அகத்திய குருநாதர் வழியாகத் தான் -
விநாயக வழிபாட்டில் தலையில் குட்டிக் கொள்வதும் தோப்புக்கரணம் இடுவதும்!..

மேட்டில் உற்பத்தியாகும் காவிரி பள்ளத்திற்கே சொந்தம் என்பதை நிலைநாட்டிய - விநாயகப் பெருமான்,

அனைவருக்குமான ஆற்று வெள்ளத்தை அடைத்து வைத்தது தவறு!.. - என அகத்திய மாமுனிவருக்கு விளங்க வைத்தார்..

அகத்திய மாமுனிவருக்கு மட்டுமல்லாது -
அகிலத்திற்கே நீதியாக - அன்றைக்கு நிகழ்ந்தது - அந்தத் திருவிளையாடல்!..

கணபதி - காக்கையின் வடிவில் வந்து -
கழனிகள் வாழ்வதற்குக் காவிரியை மீட்டளித்ததை நினைவு கூர்தலே -

காக்கைக்கு - ஒருகைப் பிடி சோறு வைப்பது!..

நீரைத் திறந்து விட்டு - மண்ணை வாழ வைத்தவர் மகாகணபதி..

அதனால் தான் - மண்ணில் திருவுருவங் கொள்கின்றார் - ஐங்கர மூர்த்தி..

மண்ணில் விளையும் பொருட்களுள் மகத்தானது மஞ்சள்..

ஏனெனில் - மஞ்சள் இயற்கையாகவே கிருமிநாசினி!..

மஞ்சளை அரைத்துப் பிடித்தாலும் பிள்ளையார் வடிவம்..

பிடித்து வைத்தால் பிள்ளையார்!.. என்பது சிறப்பு..

இதுவே - ஹரித்ரா கணபதி எனும் திருக்கோலம்..

கூப்பிட்ட குரலுக்குச் செவி சாய்ப்பவர் - பிள்ளையார்..

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் - திருவையாற்றில் காவிரி வெள்ளத்தைக் கடந்து வர இயலாமல் தவித்து ஓலமிட்ட போது -

அவருடன் சேர்ந்து கணபதியும் ஓலமிட்டதாக தலபுராணம் கூறுகின்றது..

திருநாரையூரில் -
நம்பிக்குக் குருவாக இருந்து பயிற்றுவித்தவர் - பொல்லாப்பிள்ளையார்.

இவருடைய அருளால்தான் - ராஜராஜ சோழன் - தில்லையின் நிலவறையில் வைக்கப்பட்டிருந்த தேவார ஏடுகளைக் கண்டடைந்தான்!..

வல்லப விநாயகர் - தஞ்சை
தஞ்சை வல்லப விநாயகர்
பிள்ளையாரின் பெருமைகளுக்கு அளவேயில்லை!..

நாள் முழுதும் - அர்த்தத்துடன் பேசிக் கொண்டேயிருக்கலாம்!..

அதைத் தான் பிள்ளையாரும் பெரிதும் விரும்புகின்றார்..

பிள்ளையார் கற்பித்த - ஏதொன்றையும் வாழ்வில் கொள்ளாமல், அவருடைய நல்லருளைப் பெற இயலாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!..

ஏனெனில், பிள்ளையார் - ஞானம் அருளும் குரு!..

அவரே உலகின் முதற்பதிவர்!..

நாமெல்லாம் - நமக்கான வலைப் பதிவர்கள் தான்!..

அவரோ - மகத்தான மலைப் பதிவர்!..

வியாச முனிவர் சொல்லச் சொல்ல -
மேருமலையில் மகாபாரதத்தைப் பதிவு செய்தவர்..

வணங்கும்போது தலை குனிந்து நெற்றியில் குட்டிக் கொள்வதும்
தோப்புக் கரணம் இடுவதும் பிள்ளையாருக்கே உரியவை.

இதனால் மூளையில் உள்ள சுரப்பிகள் தூண்டப் பெற்று சுறுசுறுப்பாகவும் தெளிவாக செயலாற்றவும் முடிகிறது என அறிந்துள்ளனர்.


நாம் சுறுசுறுப்பாக உழைத்து சொல்லிலும் செயலிலும் தெளிவாக
இருப்போமேயானால்,

மற்றவர் முன் தலைகுனியவும், மண்டியிடவும் அவசியமே இல்லை!..

பொருளுணர்ந்து பிள்ளையாரை வணங்கும் போது -
நம் புத்தியில் அவரே வந்தமர்கின்றார்..

அவர் நம் புத்தியில் இருப்பதனால் - தீயசெயல்களைச் செய்வதில்லை..

சொல்லும் செயலும் தெளிவாக இருப்பதனால் - அவை சித்தியாகின்றன.. 

சித்தி எனில் மகத்தான வெற்றி!..

சித்தி எனும் நிலையே உயர்வானது.. அதற்கு மேலாக ஒன்றும் இல்லை..

இதனாலேயே - சித்தி புத்தி கணபதி எனும் திருக்கோலம்..


வல்லபம் எனும் வல்லமையை அருள்பவர் - கணபதி.. 

அதனாலேயே - வல்லப கணபதி எனும் அருட்தோற்றம்.


பாரதம் முழுதும் விநாயக சதுர்த்தி விழா கோலாகலமாக நடக்கின்றது.

தமிழகத்தில் - கணபதி சந்நிதிகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் திருவிழாக்கள் நிகழ்கின்றன..

வளந்தர வருக.. நலந்தர வருக!.. 
என அவரை வணங்கி அழைப்போம்!..

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!..

அருளும் பொருளும் அருளும் பெருமானை 
பொருளுணர்ந்து வணங்குவோம்!..

ஓம் கம் கணபதயே நம:  
* * *

19 கருத்துகள்:

  1. சிறப்பு பதிவு அருமை... இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. முதற்பதிவரைப் பற்றி சிறப்பாக, இறையுணர்வுடன் பகிர்ந்துள்ள தங்களது பதிவு மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதிவு மிகவும் அருமை ஜி இனிய விநாயகர் தின நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான தகவல்கள்...... பகிர்வுக்கு நன்றி நண்பரே..

    அனைவருக்கும் நல்லதே நடக்க விநாயகப் பெருமான் அருள் புரியட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. விநாயகன் பெருமை அழகிய படங்கள் என்று
    மிகவும் அருமையான பதிவு ஐயா!

    அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அருமையான பிள்ளையார் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஒரு நாள் இணையப்பக்கம் வரலன்னா,,,,,,, எவ்வளவு நடக்குது?
    அமையான தொகுப்பு,,,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      எங்கே காணவில்லையே என நினைத்தேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. எவ்வளவு செய்திகள்! பிள்ளையார் பெருமைகளை நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம், கேட்டுக் கொண்டும் இருக்கலாம். எளிமை, இனிமை நிறைந்தவர் பிள்ளையார். ஊரில் இருப்பதால் பதிவுகள் படிக்க தாமதம்.ஆகிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும்.. நன்றி..

      நீக்கு
  10. அருமையான தொகுப்பு சகோதரரே!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..