நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 19, 2015

முளைக்கொட்டு

மதுரையம்பதி!..


அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் திருத்தலம்!..

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி  - மலையத்வஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் மகளாக அக்னியில் தோன்றிய திருத்தலம். 

தடாதகை எனும் திருநாமத்துடன் அவள் வளர்ந்தாலும் அங்கயற்கண்ணி - மீனாக்ஷி எனும் திருப்பெயர்களே அவளுக்கு உரியவை. 

காரணம்?..

அங்கயற்கண்ணி - மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். 

மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப் போல, 

அங்கயற்கண்ணியும் தன்னைத் தரிசிக்க வரும் அன்பர்களைத் தன் அருட்கண்களால் நோக்கி நலம் செய்விக்கும் தன்மையால்!..

இறைவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நிகழ்ந்த பெரும்பதிக்குச் சொந்தக்காரி!..

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமானின் திருத்தலம் எனினும் -

ஒவ்வொரு நாளும் அனைத்து பூஜைகளும்  ஸ்ரீ மீனாக்ஷிக்கு நிறைவேறிய பின்னரே  பெருமானுக்கு  நடைபெறுகின்றன.

சக்தி பீடங்களுள் இத்திருத்தலம்  - ராஜமாதங்கி சியாமளா பீடம்.

ராஜமாதங்கியின் திருமேனி வண்ணம் - பச்சை!..

ஓங்காரி என்பார் அவள் ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்..

- என்றுரைப்பார் - திருமூலர்.

அந்தாதி உரைத்த அபிராமிபட்டர் - நூற்பயன் கூறும் போது அம்பிகையை மாதுளம்பூ நிறத்தாள் என்று போற்றுகின்றார்..

எனினும்,

சிந்துரானன சுந்தரி!. சிந்துர வண்ணத்தினாள்!.. பவளக்கொடி!.. படரும் பரிமளப் பச்சைக்கொடி!..

என்றெல்லாம் புகழ்கின்றார்..


அம்பிகையின் அழகு வண்ணங்களைச் சொல்லும் போது - 

பிங்களை!.. நீலி!.. செய்யாள்!.. வெளியாள்!.. பசும் பொற்கொடியே!.. - என வர்ணித்து களிப்பெய்துகின்றார்..

பிங்களை - பொன் நிறத்தாள்.. - இவளே ஸ்வர்ணா - எனப்படுபவள்..

நீலி - நீல நிறமுடைய காளி..

செய்யாள் - செந்நிறமுடைய திருமகள்..

வெளியாள் - வெண்ணிறமுடைய கலைமகள்..

பசும்பொற்கொடி - பச்சை நிறமுடைய மலைமகள்.. 

அம்பிகையின் திருநாமங்களை ஏத்தும் ஐம்பதாவது திருப்பாடலில் - சாமளை என்று குறிப்பார்..

சாமளை எனில் பச்சை வண்ணத்தை உடையவள்..

இதையே - மாதா.. மரகத ஸ்யாமா.. மாதங்கி!.. என்பார் மகாகவி காளிதாசர்.

ஒருசமயம் - மதங்க மகரிஷியின் மகளாகத் தோன்றி வளர்ந்ததனால் மாதங்கி எனப்பட்டாள்..

எனவே தான்- 

ராஜமாதங்கி!..

அம்பிகை - மனங்கொண்டு மதங்க மகரிஷியின் மகளாகத் தோன்றியபோது -

மண்களிக்கும் பச்சை வண்ணங்கொண்டு தோன்றினாள் - எனச் சொல்கின்றார் பட்டர்..

அவள் பச்சை வண்ணங்கொண்டு எழுந்தருளியதால் தானே - 

மதுரை மண்ணில் - மாளாத செந்நெல் விளைந்து -
மாடு கட்டிப் போரடித்து ஆகாமல் -ஆனை கட்டிப் போரடிக்க முடிந்தது.

அருளாட்சி செய்யும் அவளுக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள்!.. 

அங்கயற்கண்ணி, கயற்கண்ணி, கருந்தடங்கண்ணி, மாணிக்கவல்லி, மரகத வல்லி, அபிஷேகவல்லி, கற்பூரவல்லி, சுந்தரவல்லி!..

வருடம் முழுதும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம். 

எனினும் - ஆடியில் நிகழும் முளைக்கொட்டு உற்சவம் தனித்தன்மையானது.

நாடும் செழிக்க வேண்டும்..
நல்லமழை பெய்ய வேண்டும்!..
வீடும் கொழிக்க வேண்டும்..
நல்லவிதை தழைக்க வேண்டும்!..

- என, வேண்டிக் கொண்டு நடத்தப்படும் மண் வாசனைத் திருவிழா..

ஆடி மாதத்தில் - நதிகளில் நீர்ப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் நடத்தப்படும் உன்னதத் திருவிழா..

பாரெங்கும் பசிப்பிணி தீர வேண்டி நடத்தப்படும் மகத்தான உற்சவம்.


மதுரையில் ஆடி மாத  ஆயில்ய நக்ஷத்திரத்தில் கொடியேற்றி ஆடி முளைக் கொட்டுத் திருவிழா கொண்டாடுவார்கள்.   

அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப்படும் உற்சவம் இது.

இன்று காலை கொடியேற்றம்
அதன்படி -  முளைக்கொட்டு உற்சவம் அம்மன் சந்நிதியில் கொடியேற்றம் இன்று காலை (ஜூலை/19) மங்கலகரமாக நிகழ்ந்தது .

நேற்று வாஸ்து சாந்தி நடைபெற்றதைத் தொடர்ந்து -
இன்று முதல் பத்து நாட்கள் (ஜூலை/28)  முளைக்கொட்டு உற்சவம்.



விழாவினில் ஸ்வாமியும் அம்மனும் வெள்ளி சிம்மாசனம், சிம்ம வாகனம் தங்கச் சப்பரம், வெள்ளி ரிஷப வாகனம், அன்ன வாகனம், கிளி வாகனம் இவற்றில் எழுந்தருளி ஆடி வீதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஏழாம் நாள் - திருக்கயிலாய வாகனத்தில் எழுந்தருளி சுந்தரர்க்கு திருக்காட்சி அருள்கின்றனர். அன்றிரவு புஷ்ப பல்லக்கு..

ஒன்பதாம் நாள் சைத்ரோபசாரம். 

பத்தாம் நாள் பொற்றாமரைக் குளத்தில் பாலிகைகளைக் கரைத்து தீர்த்தவாரி..

அன்றிரவு கனக தண்டியலில் மீனாக்ஷி எழுந்தருள்கின்றாள்..

அத்துடன் முளைக்கொட்டு திருவிழா சிறப்புடன் நிறைவுறும்.   


முளைக்கொட்டு உற்சவத்தினை - நதிகளில் புது வெள்ளம் பாய்ந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளர்ந்து சாகுபடி செழிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் வைபவம் எனலாம்.

இந்த வேளையில் பல்வேறு கிராமங்களிலும் தெய்வங்களுக்கு விழா நடத்தி - முளைப்பாரி எடுத்து பிரார்த்திப்பார்கள்.

முளைப்பாரிக்கு என தனியாக மண்பாண்டம் உள்ளது.  
இப்போது பித்தளைப் பாத்திரங்களும் வந்து விட்டன.

பானையில் அந்தந்தப் பகுதிகளுக்குரிய  விளைநிலத்தின் மண்ணை  இயற்கை உரங்களான - சாணம்,சாம்பல், எரு இவற்றுடன் கலந்து நிரப்புவார்கள்.  

இதன் பின்னர் - சோளம், கம்பு, கேழ்வரகு எனும் சிறுதான்ய விதைகளைத் தூவுவர். 

அதிலும் முக்கியமாகப் பச்சைப் பயறு இடம் பெறும்.

விதைகளின் மேலேயும் கொஞ்சம் மண்ணைத் தூவி பதமாக நீர் தெளித்து - சற்றே நிழலான இடத்தில் பாதுகாத்து வைப்பர். 


முளைப்பாரி நேர்ந்து கொள்ளப்பட்ட வீட்டில் அதிகமான சுத்தம் பேணப்படும்.  வெளி ஆட்களை உள்ளே விட மாட்டார்கள்.

முளைப்பாரிக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைத்து மலர்ச்சரங்களை சூடி - எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வார்கள். 

காலை, மாலை - என இருவேளையும் வீட்டிலுள்ள பெண்கள் வழிபாடு நடத்துவார்கள்.

கன்னிப் பெண்கள் பராமரிக்கும் பாலிகை - முளைப்பாரி செழித்து உயரமாக வளர்ந்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. 

மேலும் முளைப்பாரி உயரமாக வளர்ந்தால்  அந்த வருஷம் விவசாயமும் செழிப்பாக இருக்கும் என்பதும் ஒரு குறிப்பு.

திருவிழாவுக்கு முன் ஏழாம் நாள் ஒன்பதாம் நாள் என சௌகரியப்படி பாலிகை வளர்க்கும் மக்கள் அனைவருமாக முளைப்பாரியை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று ஊர்க்கோயிலில் வைத்து கும்மியிட்டு குலவையுடன் பூஜை செய்த பின் ஆறு குளங்களில் கரைத்து விடுவர். 

முளைப்பாரியில் முளைத்த இளம் நாற்றுகள் ஆற்று நீரின் ஓட்டத்தில் சென்று எங்காவது கரை சேர்ந்து தழைத்து எழும் என்பது நம்பிக்கை.

நன்றி - பரிவை சே. குமார்
மதுரையில் - திருவிழாவின் போது நேர்ந்து கொண்டு - மக்கள் எடுத்து வரும் முளைப்பாரிகள் எல்லாம் அம்மனுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும். 

கும்மி குலவையுடன் முளைக்கொட்டு பொற்றாமரையில் கரைக்கப்படும் நிகழ்வுடன் ஆடி முளைக்கொட்டு  உற்சவம் நிறைவடையும்.


(நல்மனதில்) வித்தாகி ( பசுமையுடன் ) முளைத்தெழுந்த புத்தி - அபிராமி!.. - என்று தீர்க்கமாக உரைக்கின்றார் அபிராமிபட்டர்.

மண்ணில் முளைக்கும் எல்லாமே பச்சை வண்ணம்!..

மனம் மகிழ்வது பச்சை வண்ணத்தினால்!..

மன்னுயிர்களின் பசிப்பிணி அடங்கி வயிறு நிறைவது பச்சை வண்ணத்தினால்!..

சோறும் நீரும் பச்சை வண்ணமே!..

இங்கே சோறு என குறிக்கப்படுவது - பசுமை நிறைந்த வயல் வெளியை!..

தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு.. அது நீல வண்ணமாகப் பொலியும்..

அந்த நிலையே - ராஜஸ்யாமா!..

ஆக - மண் மகிழ்வது பச்சை வண்ணத்தினால் என்பது தெளிவு!..

பச்சை மாமலைபோல் மேனி!.. - என்பார் தொண்டரடிப் பொடியாழ்வார்!..

அவ்வண்ணம் செங்கண்மால் திருத்தங்கச்சியாகிய அம்பிகைக்கும் உரியது..

அதனால் தான்,

அன்னை மீனாட்சி - ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் பச்சைப் பசேலென விளங்கும் முளைப்பாரிகளைக் கொண்டு ஆராதிக்கப்படுகின்றாள்..

பாருலகைப் பரிபாலிக்கும் வண்ணம்
பரமேஸ்வரியின் திருமேனி வண்ணம்!..

என்பதை உணர்ந்து கொண்டால்

பச்சைப் பசும் நிறத்தில் திகழ்ந்து பசி தீர்க்கும் 
நீரை - நிழல் தரும் மரத்தை அழிக்கும் எண்ணம் வராது!..

பசுமையைக் காக்கும் வண்ணம் 
அன்னை - நல்லெண்ணங்களை அருள்வாளாக!..

மேகம் பொழிய வேணும்.. மேட்டு அருவி பாய வேணும்.. 
காடும் செழிக்க வேணும்.. கண்மாயும் நிறைய வேணும்!. 
ஆடும் தழைக்க வேணும்.. மாடும் கொழிக்க வேணும்..
ஊரும் செழிக்க வேணும்.. உள்வீடும் நிறைய வேணும்!.

பசுங்கிளியுடன் திகழும் பச்சைப் பசுங்கொடியாள் 
பாரெங்கும் படியளந்து காத்தருள்வாளாக!.. 

அங்கயற்கண் அன்னையே சரணம்!..
* * *

20 கருத்துகள்:

  1. அருள் மணம் வீசும் அற்புத படைப்பு
    ஆடி முளைக்கொட்டு திருவிழாவின சிறப்புக்களை
    சீர்தூக்கி பார்த்து பதிவக்கித் தந்தமைக்கு நன்றி அய்யா!
    இறைப் பணி சிறக்கட்டும்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. அன்னை மீனாட்சி அம்மனின் சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  3. கண்ணில் காட்சிகள் விரிந்தன. மதுரை மீனாட்சி அம்மனின் ஆசிகள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் கருத்துரைக்கு நன்றியும்...

      நீக்கு
  4. அன்னை மீனாட்சியின் முளைக்கொட்டு விழா பற்றி மிக அருமையான பகிர்வு... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  5. வணக்கம்,
    அழகான புகைப்படங்களுடன் கூடிய அருமையான விளக்கம்,
    நாடு செழிக்க வேனும்,
    நல்ல மழை பெய்ய வேணும்
    பாடல் நினைவில் உள்ளது,,,,,,,,,,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி...

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்...

      நீக்கு
  7. முளைப் பாரியைத்தான் முளைக்கொட்டு என்கிறார்கள் போலுள்ளது. ஒரு நல்ல விழாவிற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      முளைப்பாரி தான் முளைக்கொட்டு எனப்படுவது..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. அம்மனைப் பற்றி அருமையான தகவல்கள் அறிந்தேன். முளைப்பாரி எல்லாம் நான் அறிந்ததில்லை இப்போதான் அறிகிறேன். பதிவுக்கு நன்றி! அம்பாளின் அருள் யாவர்க்கும் கிட்டட்டும் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்னையின் அருள் அனைவருக்கும் ஆகுக!..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. முளைப்பாரி...... அருமையான கட்டுரை.... காட்சிகள் கண் முன்னே விரிந்தன. வடக்கிலும் இம்மாதிரி சில விழாக்கள் உண்டு. ஆனாலும், நம்ம ஊர் மாதிரி வராது என்று தான் எனக்குத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்.

      உண்மைதான்..
      சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா!..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. மீனாட்சி அம்மனை பற்றி அருமையான பதிவு. எங்கள் ஊரில் முளைப்பாரி என்று சொல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      முளைப்பாரி என்றாலும் - மதுரையில் முளைக்கொட்டு உற்சவம் என்றல்லவா கூறுகின்றனர்!..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..