நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 31, 2015

சக்தி தரிசனம் - 3

தவமும் தவமுடையார்க்கே ஆகும்!..

- என்றார் திருவள்ளுவப்பெருமான்..

மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்!..

என்றார் தமிழ் மூதாட்டி..

தவமாய்த் தவமிருந்து பெறுதற்கரிய செல்வத்தினை - பெற்றாள் அவள்!..
- எனில் எத்தகைய தவத்தினை அவள் இயற்றியிருக்க வேண்டும்!..

அதுவும், மேலைத் தவமும் தவத்தின் பயனும் கூட வந்திருந்தது போலும்..


ஒரு காலத்தில் இமயமலையின் அரசன் இமவானின் மகளாக அம்பிகை பிறந்திருந்தாள்.. அவன் மடியில் தவழ்ந்திருந்தாள்.. .

அப்போது அவளுடைய திருப்பெயர் உமா பார்வதி..

இமவானும் அவனது இல்லத்தரசி மேனையும் - சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள் - அவளை!..

வளர்ந்து வருங்காலத்தில் - ஒருநாள்,

நான் தவம் செய்து சிவத்தினை அடைவேன்!.. என்றாள்..

அன்பு மகளே!.. தவம் என்றால் என்னவென்று அறிவாயோ நீ!.. அது மிகவும் கடுமையானது.. மனப்பூர்வமான பக்தியும் மகேசனின் அருளைக் கூட்டுமே!..

அந்தவழி மானிடர்க்கு!.. நான் தவள்.. மாத்தவள்!.. - என்றுரைத்தாள்.

அங்ஙனமாயின் அதுவே சிவம் காட்டும் வழியாகட்டும்!..  என மொழிந்தனர்..

அதன்பின் - இமயகிரி ராஜ தனயை - தவமாய்த் தவமிருந்தாள்..

பசிக்கு ஆதரவாக ஒரு இலையைக் கூட உண்ணாமல்
தாகத்திற்குத் துணையாக ஒரு துளி நீரைக் கூட அருந்தாமல்
இமயத்தின் கடுங்குளிருக்கு எதிராக ஒரு சால்வையைக் கூட அணியாமல் -

உமையாள் இயற்றிய தவம் மிகக் கடுமையானது.

அதனால் தான் அவள் -  அபர்ணா எனப்பட்டாள்..

யோகியரும் ஞானியரும் கூடி நின்று போற்றி வணங்கினர்


நல்லதொரு நாளில் - சிவப்பரம் பொருளுடன் திருமணக்கோலங்கொண்டாள்..

அதன்பின் வேறொரு சந்தர்ப்பத்தில் - ஈசன் எம்பெருமானின் திருக்கோலம் ஒன்றினைத் தரிசிக்க விழைந்த அம்பிகை - தவக்கோலங்கொண்டாள்..

அன்றைக்காவது அப்பன் அம்மை என -  இமவானும் மேனையும்.. குற்றேவலுக்கு உற்ற தோழியரும் அருகிருந்தனர்..

ஆனால் - இன்றைக்கோ - அம்பிகையின் அருகில் யாருமே இல்லை!..

தானாய் தோன்றினள் தற்பரை - தாமிரபரணியின் வடகரையில்!..

அந்த புன்னை வனத்தில் ஒன்று பலவாய் - பாம்புகள்..

இவைகளும் தங்களுக்குள் ஓயாமல் சீறிக் கொண்டிருந்தன.

இவற்றுக்குத் தலைமையாக சங்கன் எனவும் பதுமன் எனவும் இரு நாகங்கள்..

இவற்றுக்கிடையே என்ன பிரச்னை!?..

சங்கன் - சிவபெருமானை முதற்பொருளாகவும்,
பத்மன் - ஹரிபரந்தாமனை  முதற்பொருளாகவும் வழிபட்டுக் கொண்டிருக்க -

அவற்றுக்கிடையே தகராறு - ஹரனே உயந்தவர்.. இல்லை.. இல்லை.. ஹரியே உயர்ந்தவர் - என்று!..

சிற்றுயிர்களின் அன்பினைக் கண்டு மனம் இரங்கினர் - ஹரியும் ஹரனும்..

ஹரியே ஹரன்!.. ஹரனே ஹரி!.. தம்முள் பேதம் எதுவும் இல்லை!.. - என உரைத்தனர்..

அந்த பொழுதில் நாகங்களுக்கு ஆறுதல் கிடைத்தது என்றாலும் அடுத்த பொழுதில் - மீண்டும் அடிதடி ஆரம்பமாயிற்று..

அதைக் கண்ட முனிவர்கள் சினத்துடன்,

ஒற்றைச் சொல்லால் உண்மை உரைக்கப்பட்டும் உணர்ந்து கொள்ளாத மூர்க்கத்தினால் - சிவ விஷ்ணு பேதம் உண்டு என - புன்மை புகன்ற உங்கள் நாக்கு இருகூறாக பிளவுபட்டுப் போகட்டும்!..

- என சாபம் கொடுத்தனர்.

அதிலிருந்து தான் பாம்புகள் அனைத்தும் பிளவுபட்ட நாவுடன் அலைகின்றன.

இவைகளுக்கு சாப விமோசனம் வேண்டுமே!..

நாகங்களும் மனம் வருந்தின.. தங்கள் பிழையை உணர்ந்தன..

அந்த வேளையில் தான் பரமேஸ்வரியாகிய உமாபார்வதி - அந்தப் புன்னை வனத்தினுள் தவமிருக்க வந்தாள்..

அம்பிகையின் தவநிலையைக் கண்டு அவளுக்கு ஆதரவாக தேவ கன்னியர் பசுக்களாக உருமாறி வந்து சூழ்ந்து நின்றனர்..

அம்பிகை - புன்னை வனத்தில் தவம் மேற்கொண்டது ஆடி மாதத்தில்..
அங்கே ஒன்பது நாட்கள் கடுந்தவமிருந்ததாக ஐதீகம்..

பத்தாம் நாள்.. பௌர்ணமி..

உள்ளக்கிழியில் உரு எழுதிக் காத்திருந்தாள் - அம்பிகை..

எதை எண்ணிக் காத்திருந்தாள் - அம்பிகை?..

அண்ணலும் அண்ணனும் ஏக உருவில் வந்து அருள் தர வேண்டும்!..
சங்கர நாராயணத் திருக்கோலத்தினைத் தரிசிக்க வேண்டும்!..

அம்பிகையின் ஆவல் - ஆடி மாதத்தின் பௌர்ணமி நாளில் நிறைவேறியது..

சந்த்ரோதய வேளையில் - அண்டபகிரண்டமும் அதுவரை கண்டிராத அற்புதத் திருக்கோலத்தினைத் தரிசித்தனள் அம்பிகை..


தேவர்களும் முனிவர்களும் பொன்மலர்களைப் பொழிந்து வணங்கினர்..

நின் தவங்கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில் வேண்டுவன கேள்.. தேவி!..

யான் பெற்ற பேறாக.. தேவரீர் - இந்தப் புன்னை வனத்தினுள் எழுந்தருள வேண்டும்.. ஏங்கி இளைத்து வருவோர் தம் எண்ணங்கள் நல்ல வண்ணமாக ஈடேற வேண்டும்.. சிற்றுயிர்களாகிய நாகங்கள் சீர் பெறவேண்டும்!..

வேண்டிக் கேட்டு நின்றாள் - வேத வேதாந்தங்களைக் கடந்த நின்மலி..

ஆகும்.. அவ்வண்ணமே ஆகும். ஆனாலும் -  திருக்கோலத்தினை உரைத்த பின்னும் நாகங்கள் பேதங்கொண்டு பிதற்றித் திரிந்ததனால் - நாக்கு பிளவு பட்டது.  கடையூழி வரைக்கும் உழன்று கிடக்கும் நாகங்களின் நிலை கண்டு உலகோர் திருந்தட்டும்..

ஆயினும் நாகங்களை யாம் ஆட்கொண்டோம்!. அவை கிடந்த புற்றுமண் இங்கே பிரசாதமாகி நலம் நல்கும்!..

அம்பிகை மனம் மகிழ்ந்தாள்.. வலம் வந்து வணங்கினாள்..

சங்கர நாராயணராகப் பொலிந்த எம்பெருமான் சங்கரலிங்க வடிவு கொண்டு திகழ்ந்தனன்..

அம்பிகை அகம் மகிழ்ந்து - ஆங்கெழுந்த ஜோதியுள் கலந்து சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபினியாக திருக்காட்சி நல்கினள்..

பசுக்களுடன் கூடியிருந்தமையால் - ஆவுடை நாயகி எனப்பட்டாள்..

பின்னும் - பசுக்கள் தம் சிந்தையில் வைத்து அம்பிகையை பூஜித்ததால் -
கோமதியாள் எனவும் புகழப்பட்டாள்..

நாகங்கள் உண்மையை உணர்ந்தன.. திருக்குளம் ஒன்றினை அமைத்தன.
அதில் நீரெடுத்து தேவதேவியரை நீராட்டி மனம் மகிழ்ந்தன..

அன்றிலிருந்து திருத்தலம் - சங்கர நாராயணர் திருக்கோயில் எனப்பட்டது.

இன்றைக்கு - சங்கரன்கோயில் என சிறப்புறு தலமாக விளங்குகின்றது..

திருநெல்வேலிச் சீமையின் புகழ்மிகும் திருத்தலங்களுள் இதுவும் ஒன்று..


திருத்தலம் - சங்கரன்கோயில்

இறைவன் - ஸ்ரீசங்கரலிங்கப் பெருமான்
இறைவி - ஸ்ரீகோமதி அம்பாள்
தலவிருட்சம் - புன்னை
தீர்த்தம் - நாகசுனை எனும் திருக்குளம்.

ஈசன் எம்பெருமான் - வலப்புறம் -  கங்கை, பிறைநிலவு, ஜடாமுடி.
திருக்கரத்தில் மழுவும் திருமார்பில் ருத்ராட்ச மாலையும் திகழ்கின்றன.  அரையில் புலித் தோலாடை இலங்குகின்றது.

அருகில் - சங்கன் சேவை செய்கின்றான்..

பெருமானின் இடப்புறம் - நாராயண வடிவம்.. திருமுடியில் கிரீடம்.
திருக்கரத்தில் சங்கும் திருமார்பில் துளசி மாலையும் திகழ்கின்றன.   அரையில் பீதாம்பரம் இலங்குகின்றது.

அருகில் - பத்மன் சேவை செய்கின்றான்..

காலை உஷத் கால பூஜையில் துளசி தீர்த்தமும் அதற்கடுத்த பூஜைகளில் திருநீறும் வழங்கப்படுகின்றன..

திருக்கோயிலில் மகத்தானது - புற்று மண் பிரசாதம்..

இந்த புற்று மண் சகல விஷக்கடிகளையும் தீர்க்கின்றது என்பது ஐதீகம்.. 

பௌர்ணமியைப் பத்தாம் நாளாகக் கொண்டு ஆடித் தபசு எனும் வைபவம் நிகழ்கின்றது..


கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் - நாளும் ஒரு திருக்கோலம் கொண்டு அன்னை வீதி வலம் வந்தருளினள்..

ஆடித் தவசு திருக்காட்சிக்கு முந்தைய நாள் காலையில் முளைப்பாரி.. அன்றிரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பிகை வீதியுலா..

முளைப்பாரிக்கு முதல்நாளில் - கோமதி தேரேறி வந்தாள்..

அம்பாளுக்குரிய வைபவம் என்பதால் அவள் மட்டுமே வீதிவலம்..
அன்றிரவு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் வீதியுலா..

பௌர்ணமியை அனுசரித்து நிகழும் திருவிழாவில் -
முளைப்பாரிக்கு அடுத்த நாள் ஆடித் தவசு திருக்காட்சி..


இவ்வண்ணமாக - நேற்று வியாழக்கிழமை மாலை ஆடித் தவசு திருக்காட்சி கோலாகலமாக நிகழ்ந்தது..

மாலை ஆறு மணியளவில் - ஸ்வாமி சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி - கோமதி அன்னைக்குத் திருக்காட்சி அருளினார்..

அதன்பின் - இரவு ஒன்பது மணியளவில் எம்பெருமான் சங்கரலிங்க ஸ்வாமியாக யானை வாகனத்தில் எழுந்தருளி - மீண்டும் அம்பிகைக்குத் திருக்காட்சி நல்கினார்..

ஆயிரமாயிரம் பக்தர்கள் திருக்காட்சி கண்டு மகிழ்ந்தனர்..

தென்பாண்டிச் சீமையில் ஊர்கள் தோறும் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழும் பெயர்களுள் குறிப்பிடத்தக்கவை -

சங்கரலிங்கம் - கோமதி

ஆடித்தவசு வைபவத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை எனில் விழாவின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்..

வீட்டின் சுற்றுப்புறங்களில் பாம்புகள் புழங்கினால் - திருக்கோயிலின் புற்று மண் பாதுகாப்பு ஆகின்றது. புற்று மண்ணைத் தூவினால் வீட்டைச் சுற்றித் திரியும் பாம்புகள் அகன்று போகின்றன..

நாக சுனை தீர்த்தத்தில் உப்பையும் சர்க்கரையையும் வீசினால் - கஷ்டங்களும் கவலைகளும் தீர்கின்றன..

அம்பாள் சந்நிதி எதிரே ஸ்ரீசக்கரக் குழி உள்ளது. இங்கே அமர்ந்து அம்மனை வழிபட மன நோயும் கவலையும் குழப்பமும் தீர்கின்றன..


மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூன்றினாலும் சிறப்புற்றிருக்கும் சங்கரன் கோயில் - சிறப்பான திருத்தலம் ஆகும்..

தேவாரத் திருப்பதிகங்கள் இத்திருத்தலத்திற்கு என எதுவும் இல்லை.
எனினும் ஏதோ ஒரு திருப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை..

ஈசனின் வாம பாகத்தில் அம்பிகை குடி கொண்டிருப்பது போலவே, நாராயணனும் குடிகொண்டுள்ள திருக்கோலத்தை - திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தப்பெருமானும் பலவாறாகப் புகழ்கின்றனர்..

மறிகடல் வண்ணன் பாகா!.. (4/62) - என்று மதுரையம்பதியிலும்

மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகி!. (4/22) - என்று தில்லையிலும்

குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய்!.. (6/81) என்று திருக்கோடிகாவிலும்

சிவபெருமானின் சங்கர நாராயணத் திருக்கோலத்தினைப் போற்றுகின்றார் அப்பர் ஸ்வாமிகள்..

பாதியா உடல் கொண்டது மாலையே!.. (3/115) - என்று மாமதுரையிலும்

மாலும் ஓர் பாகம் உடையார்!.. (2/67) - என்று பெரும்புலியூரிலும் ஞானசம்பந்தப் பெருமான் சங்கர நாராயணத் திருக்கோலத்தைப் புகழ்கின்றார்..

ஈசனுக்கு இடப்புறம் ஹரிபரந்தாமன் எனில் -
பரந்தாமனின் வலப்புறம் ஈசன் எம்பெருமான் தானே!..

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து.. (1186) என்றும்

மலைமங்கை தன் பங்கனை பங்கினில் வைத்து உகந்தான்!.. (1640) என்றும் திருமங்கை ஆழ்வார் புகழ்கின்றார்...


தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.. (2344)

- என்று பேயாழ்வார் சங்கர நாராயண திருக்கோலத்தைப் போற்றுகின்றார்..

இதே போல -

அரன்நாரணன் நாமம் ஆன்விடைபுள்ளூர்தி
உரைநூல் மறைஉறையும் கோயில் - வரைநீர்
கருமம் அழிப்பளிப்பு கையதுவேல் நேமி
உருவம் எரிகார்மேனி ஒன்று.. (2086)

மிகத் தெளிவாக பொய்கை ஆழ்வார் சங்கர நாராயண திருக்கோலத்தை  நமக்குக் காட்டுகின்றார்..

ஆடி மாதத்தின் மூன்றாம் வெள்ளியாகிய இன்று

சங்கர நாராயணத் திருக்கோலத்தை 
தரிசனம் செய்து வைக்கின்றாள்..
சகல உயிர்களுக்கும் தாயாகி நிற்கும் 
தயாபரி ஸ்ரீ கோமதி..

ஓம் சக்தி ஓம் 
* * * 

12 கருத்துகள்:

  1. சங்கரன்கோயில் சென்றுள்ளேன். இருந்தாலும் தங்களின் பாக்கியத்தால் இன்று மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சங்கரன்கோயில் பலமுறை சென்றுள்ளோம் ஐயா... சிறப்பான பல தகவல்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. வணக்கம்,
    மதுரையம்பதியை, தஞ்சையம்பதி பதிவிட்டது அருமை,
    வாழ்த்துக்கள், இங்கும் சங்கரநாராயணன் உண்டு, தாங்கள் சொல்லும் விதம் கண்டு நாமும் இப்படி பதிவிட்டால் என்ன என்ற ஆசை வருகிறது, ஆனால் என் பதிவில் கேள்வியே தொக்கி நிற்கும் என் செய்வது?
    பல தளங்களைத் தங்கள் மூலமே அறிகிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் ஆவலைக் கண்டு மகிழ்ச்சி..
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. ஒரு முறை ஆகும்பே இலிருந்து சிருங்கேரி என்று நினைக்கிறேன் போகும் வழியில் ஒரு சங்கர நாராயணன் கோவில் பார்த்தோம். புராதனமானது என்று சொன்னார்கள். எனக்கு ஒரு சந்தேகம் எப்படி இப்படி லயித்து இறைப் பதிவுகளையே எழுதுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      சங்கர நாராயண வழிபாடு மிகத் தொன்மையானது..
      தஞ்சையிலும் சங்கர நாராயணர் கோயில் உண்டு..

      இறை சிந்தனை கூடவே பயணிக்கின்றது..

      அடுத்தடுத்த பதிவுகளுக்காக கோயில்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் - மனம் அமைதி பெறுகின்றது..

      அதுவே மிகப் பெரிய மகிழ்ச்சி..

      தங்களன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      தங்கள்

      நீக்கு
  5. சங்கரன் கோயில் இன்னும் சென்றதில்லை... செல்ல வேண்டும் ஐயா...
    அருமையான ஆன்மீகப் பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      மறுமுறை தாயகம் வரும்போது அவசியம் தரிசனம் செய்யவும்.
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்லதகவல்கள்! செல்ல வேண்டும்...அருமையாகவும் சொல்லிச் செல்கின்றீர்கள் ஐயா! சக்தி தரிசனம் சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..