நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 23, 2015

சித்திரைத் திருவிழா - 1

அதோ.. இதோ.. என்று ஆவலுடன் எதிர்நோக்கிக் கிடந்த நாள்!.

மாமதுரையில் சித்திரைத் திருநாள்!..


மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயிலில் நிகழும் மங்கலகரமான மன்மத வருடத்தின் சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்றம் ஏப்ரல்/21 செவ்வாய்க் கிழமை - அக்ஷய திரிதியை அன்று கோலாகலமாக நிகழ்ந்தது.

நன்றி - ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில்.
முன்னதாக ஏப்ரல்/20 அன்று பூமி பூஜை (வாஸ்து சாந்தி) நடைபெற்றது.

ஏப்ரல்/21 - காலை ஏழு மணியளவில் - ஸ்வாமி சந்நிதியின் கம்பத்தடி மண்டபத்தில் திருக்கொடியேற்றத்திற்கான சிறப்பு பூஜைகள் தொடங்கின.

கம்பத்தடி மண்டபத்தில் நறுமணம் மிக்க மலர்களால் - பூப் பந்தல் அமைக்கப்பட்டு-  பூந்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஸ்வாமி அம்பாளுக்கு என இரண்டு கலசங்களும் பரிவார மூர்த்திகளுக்கு என எட்டு கலசங்களும் ஸ்தாபிக்கப்பட்டு வேத மந்திரங்களுடன் பூஜிக்கப்பட்டன.

காலை 11 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ சுந்தரேசர் பிரியா விடையுடனும் ஸ்ரீமீனாக்ஷி அம்மனும் கம்பத்தடியில் எழுந்தருளினர்.

அதன்பின் திருக்கொடி பூஜை நடந்தது.

கொடிமரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என மங்கலத் திரவியங்களாலும் பூஜை செய்யப் பெற்ற புனித கலச நீராலும் அபிஷேகம் செய்யப்பெற்றது.

தர்ப்பை புற்கள் கட்டப்பெற்று பெரிய மாலைகள் சாற்றப்பட்டன.

தேங்காய் பல்வகை பழ பூஜைகள் நடைபெற்றன.


காலை 11.48 மணியளவில் கடக லக்னத்தில் -
நந்தியும் சிவலிங்கமும் எழுதப் பெற்ற வெண்ணிறத் திருக்கொடி -
64 அடி உயரமுடைய தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

பதினாறு வகையான தீப உபசாரங்கள் செய்யப்பெற்றன.

மதியம் 12.30 மணி அளவில் - பூச்சொரிதலுடன் மகாதீப ஆராதனை நிகழ்ந்தது.

தேவாரத் திருமுறைப் பாடல்களைப் பாடி ஓதுவார்கள் போற்றிசைத்தனர்.

கொடியேற்றத்திற்குப் பின் - ஸ்வாமி அம்மன் - வெள்ளி சிம்மாசனத்தில் குலாளர் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.


சுரும்பு முரல் கடி மலர்பூங்குழல் போற்றி 
உத்தரியத் தொடித்தோள் போற்றி 
கரும்புருவச் சிலை போற்றி 
கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி 
இரும்பு மனம் குழைத் தென்னை 
எடுத்தாண்ட அங்கயற்கண் எம்பிராட்டி 
அரும்பும் இளநகை போற்றி ஆரண 
நூபுரஞ்சிலம்பும் அடிகள் போற்றி!..
(திருவிளையாடற் புராணம்)  
* * *

முதலாம் திருநாள் (21/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

காலை - வெள்ளி சிம்மாசனம்.

-: இரவு :- 
ஸ்ரீசொக்கநாதப் பெருமான் கற்பக விருட்சத்திலும் -
அன்னை கயற்கண்ணி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். 










இரண்டாம் திருநாள் (22/4) வைபவம். 
மாசி வீதிகளில் திருவீதி உலா.

காலை - தங்க சப்பரம்.

-: இரவு :- 
ஸ்ரீசுந்தரேசப் பெருமான் பூத வாகனத்திலும் -
அன்னை மீனாட்சி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். 









தொடர்ந்து வரும் நாட்களில் சிறப்பு மிகு அலங்காரங்களுடன் அம்மையும் அப்பனும் ஆருயிர்களுக்கு அருள் செய்யும் விதமாக எழுந்தருள்கின்றனர்.

சித்திரைத் திருநாளின் பத்தாம் திருநாளன்று (ஏப்ரல்/30) திருக்கல்யாணம்.

வழக்கம் போல - அழகிய படங்களை வழங்குகின்ற -
அன்பு நண்பர் திரு. குணா அமுதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!..

வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ்சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செய்யாயே!.. (4/62)
-: திருநாவுக்கரசர் :-

மீனாட்சி சுந்தரேசர் திருவடிகள் போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

22 கருத்துகள்:

  1. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் திருவிழாதானே. ஒவ்வொரு வருடமும் பதிவுகள் பல வாசித்து விட்டேன் இருந்தாலும் நீங்கள் சொல்லிப் போகும் பாணி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. உங்கள் நடையிலும், எழுத்திலும் திருவிழாக்களைக் குறித்து வாசிப்பது மிகவும் சுவாஸ்யமாகவும், இன்பமாகவும் இருக்கின்றது ஐயா! புகைப்படங்களும் அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகான புகைப்படங்களோடு வழக்கமான தங்களது நல்ல வர்ணனையும் அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. எப்படி இப்படி சுத்தி போட்டுக்கோங்க, உடன் உடன் பதிவு, சிறப்பான கோயில்களின் தகவல்கள், அழகிய புகைப்படங்கள், நல்ல நடை, அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தஞ்சையிலிருந்து மதுரைக்கு. உங்களுடைய எழுத்தின் வேகமும், செய்திகளைத் தரும் பாணியும் மிகவும் சிறப்பாக அமையக் காரணம் அவ்விறையருளே என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நேரில் கண்டது போன்ற எழுத்துக்கள்
    உங்களால் மட்டுமே முடியும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நாங்களும் கலந்து கொண்ட உணர்வு ஐயா... நன்றி... படங்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. கோவில்களை பற்றிய தகவல்களை அருமையாக கொடுக்கீங்க. புகைப்படங்களும் மிக அழகு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தெய்வீக மனம் கமழும் மிக அருமையான பதிவு. படங்கள் எல்லாமே பளீச் .. பளீச். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. அருமையான படங்கள்.

    படங்கள் மூலம் நாங்களும் கலந்து கொண்ட உணர்வு. நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. மதுரையில் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் பற்றி அறிந்தேன். நேர்த்தியான புகைப்படங்களுடன் கூடிய வர்ணனை அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..