நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 03, 2014

சதயத் திருநாள்

சோழப் பேரரசை மீண்டும் நிர்மாணித்து புலிக்கொடியை ஏற்றியவர் விஜயாலய சோழர்( கி.பி.848- 871).

ஆயினும்,


சோழப்பேரரசின் புலிக்கொடி மகோன்னதமாக கடல் கடந்தும் பட்டொளி வீசிப் பறந்திடக் காரணமாக விளங்கியவன் - மாமன்னன் ராஜராஜ சோழன்.

ஐப்பசி சதய நட்சத்திரத்தில் (கி.பி.947) சுந்தர சோழருக்கும் {956 - 973} வானவன் மாதேவிக்கும் தோன்றிய அருந்தவப்புதல்வன்!..

தங்கத் தொட்டிலிலிட்டு - தாயும் தந்தையும் - சீராட்டிய போது, சூட்டி மகிழ்ந்த திருப்பெயர் - அருண்மொழிவர்மன்.

அருண்மொழியின் அன்புச் சகோதரன் - ஆதித்த கரிகாலன்.
மகத்தான வீரன். பாண்டிய நாட்டில் சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவுதற்காக -  வீரபாண்டியனுடன் போர் செய்து அவன் தலையைக் கொய்தவன். அதன் காரணமாகவே பின்னாளில் படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்தவன்..

அன்புச் சகோதரி - குந்தவை நாச்சியார்.
நுண்ணறிவிலும் கலைஞானத்திலும் மிகச்சிறந்து விளங்கிய வீர மங்கை. அருண்மொழி சிவபக்தியில் சிறந்து விளங்கிடக் காரணமானவர்களுள் குந்தவையும் ஒருவர்.

மற்றொருவர் - செம்பியன் மாதேவியார்.

மகா சிவபக்தராகிய கண்டராதித்த சோழரின் பட்டத்து அரசி. 
பெரிய பிராட்டியார் எனப் புகழப்பட்டவர். 

கண்டராதித்த சோழர் சிவநெறிச் செல்வர். 
தில்லை ஆடவல்லானைத் தொழுது நின்ற தூயவர். 

இவர் இயற்றிய திருப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

அதுவரையிலும் சுண்ணாம்புச் சாந்தும் செங்கல்லுமாக விளங்கிய சிவாலயங்களை  - கருங்கற்களைக் கொண்டு கற்றளிகளாக மாற்றிய பெருமையை உடையவர் - கண்டராதித்த சோழர்.

கணவரின் காலத்திற்குப் பிறகு சிவப்பணி செம்மலாக விளங்கியவர் -   செம்பியன் மாதேவியார்.

இவரது திருப்பெயரால் - இன்றும் தஞ்சை மாவட்ட கடற்கரை ஓரத்தில் விளங்கி வரும் ஊர் - செம்பியன் மாதேவிப் பட்டினம்.

தன் கொழுந்தனாரின் பேரப்பிள்ளைகளான குந்தவை, ஆதித்த கரிகாலன், அருள்மொழி ஆகியோரின் மீது அளப்பரிய பாசமும் நேசமும் கொண்டு வளர்த்த பெருமைக்கு உரியவர் செம்பியன் மாதேவியார்.

சோழ தேசத்தின் திருக்கோயில்கள் பலவற்றிலும் திருப்பணிகளை மேற்கொண்ட இவரது - வளர்ப்பினால் தான்,

அரியணை ஏறியதும் வானளாவிய ஸ்ரீவிமானத்துடன் பிரம்மாண்டமாக தக்ஷிணமேருவை தஞ்சைத் தரணியில் எழுப்பினான் - ராஜராஜ சோழன்!..






தனது தந்தை சிவகதி எய்திய பிறகு - அரியணை ஏறாமல்,

கண்டராதித்த சோழர் - செம்பியன் மாதேவியார் ஆகியோரின் மகனும் தனது சித்தப்பாவும் ஆகிய உத்தம சோழனை சோழ மண்டலத்தின் மன்னனாக ஆக்கி அழகு பார்த்தவன் - ராஜராஜ சோழன்!..

இந்த உத்தம சோழனே மதுராந்தகன் எனப்பட்டவன். செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள மதுராந்தக ஏரி - இந்த மன்னனின் சாதனை!..

தென்னக வரலாற்றில் பொற்காலம் எனப் பெருமையுடன் குறிக்கப்படும் ஆட்சிக்குரியவன் - ராஜராஜ சோழன்!..



சங்கு சக்ர ரேகைகளுடன் மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவன் என மக்களால் கொண்டாடப்பட்டவன் - ராஜராஜ சோழன்!..

குட ஓலைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு சோழ மண்டலத்தின் நிர்வாகத்தினை திறம்பட நடாத்தியவன் - ராஜராஜ சோழன்!..

மும்முடிச்சோழ மண்டலம் முழுமையையும் முறையாக அளந்து - நிலத்தின் தன்மைக்கேற்ப வரிவிதித்து - அதையும் கிராம சபைகளின் மூலமாக தணிக்கை செய்து நெறிப்படுத்தியவன் - ராஜராஜ சோழன்!..



தனது ஆட்சியின் நிகழ்வுகளை மக்களும் எதிர்வரும் சந்ததியினரும்  அறியும் பொருட்டு கல்வெட்டுகளாக்கி வைத்தவன் - ராஜராஜ சோழன்!..

மூவர் அருளிய திருப்பதிகங்கள் ஒலைச்சுவடிகளாக - தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள் கிடக்க,

அவற்றைப் பெரும் முயற்சியால் மீட்டு - திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களைக் கொண்டு தேவாரமாகத் தொகுத்தவன் - ராஜராஜ சோழன்!..

அதனால் தான் - சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன் எனப் புகழ் கொண்டான்.

மும்முடிச்சோழன், ஜனநாதன், ஜயங்கொண்டான், சோழ மார்த்தாண்டன், ராஜ மார்த்தாண்டன், நித்ய விநோதன், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் - என்பன மாமன்னன் ராஜராஜ சோழனின் சிறப்புப்பெயர்களுள் சில!..

ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மெய்கீர்த்தி எனப்படுகின்றன.

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி
வேங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்
திண்டிறல் வென்றித் தண்டால் கொந்தன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசு கொள் ஸ்ரீகோவிராஜராஜ கேசரி பந்மரான ஸ்ரீராஜராஜதேவர்...
(நன்றி - விக்கிபீடியா)

கடல் கடந்த போர்களாக ஈழத்தின் மீதும், முந்நீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரம் எனப்பட்ட மாலத்தீவுகளின் மீதும் தொடுக்கப்பட்ட போர்கள் குறிக்கப் படுகின்றன.

ராஜராஜ சோழன் வழி நடத்திய கடற்படையின் துணை கொண்டே ராஜேந்திர சோழன்  கடாரம் ஜாவா சுமத்ரா ஆகிய நாடுகளை வென்று புகழ்க் கொடியினை நாட்டினான்.

பெரும் சிவபக்தனாக விளங்கினாலும் வைணவ ஆலயங்களையும் புத்த விஹாரங்களையும் எழுப்பிய விவரத்தினை கல்வெட்டுகள் கூறுகின்றன.

தமிழகத்தின் கட்டிடக் கலைக்கும்  பாரதத்தின் பெருமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குவது - 

தஞ்சை ராஜராஜேஸ்வரம் எனும் பெருவுடையார் திருக்கோயில்.

வானளாவி நிற்கும் இத்திருக்கோயில் மாமன்னனின் இருபத்தைந்தாம் ஆட்சி ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 

பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய பின் கேரளத்தில் படை நடத்தி - காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளிய கோப்பரகேசரி எனப்புகழ் கொண்டான். 

கொடுமை மிகுந்த சிங்களர்களிடமிருந்து ஈழ நாட்டைக் கைப்பற்றப்பட்டது. 

சிங்களரை அடக்கியதுடன் கன்னடத்தின் கங்கபாடியும் நுளம்ப பாடியும் தடிகை பாடியும் மேலைச் சாளுக்கியமும் வேங்கை நாடும் சோழப்பேரரசுக்கு உட்பட்டன.


மாமன்னன் ராஜராஜ சோழன் இப்பூவுலகில் தோன்றி 1029 ஆண்டுகள் ஆகின்றன. 

தஞ்சையில் நேற்று முன்தினம் சதயத் திருவிழா சிறப்புடன் தொடங்கியது.
சென்ற ஆண்டினைப் போலவே - இந்த ஆண்டும் சிவதரிசனம் பெற்றேன்.

சதய விழாவின் எல்லா நிகழ்வுகளையும்  படம் எடுக்க இயலவில்லை.

இயன்றவரை சில படங்கள் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளன.




இரண்டு நாட்களும் (1/11 மற்றும் 2/11) திருக்கோயிலின் திருச்சுற்றில் விசாலமாக அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.

ஓதுவார்களின் திருமுறை அரங்கம், அப்பர் சுவாமிகள் தேவார குழுவினரின் திருமுறை பாராயணங்கள், கருத்தரங்கம் எனத் தொடர்ந்து மாலையில் பல்வேறு குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடந்தன.

நேற்று (2/11/2014) காலையில் திருமுறை வலம். அதன்பின் -

ராஜராஜசோழனின் திருமேனிக்கு மலரஞ்சலி சிறப்பாக நிகழ்ந்தது. 

ஸ்ரீ பெருவுடையார் ஸ்வாமிக்கும் ஸ்ரீ ப்ரஹந்நாயகி அம்பிகைக்கும் சிறப்பு மஹா அபிஷேகம்  நடந்தது.


நன்றி - தினமணி
சந்நிதியில் கண்கொள்ளாக் காட்சியாக சிறப்பான அலங்காரத்துடன் பெருந்தீப வழிபாடு நிகழ்ந்தது.

மாலையில், அரங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சிகளுக்குப் பின் - நாட்டியாஞ்சலி அதன் பின் கருத்தரங்கம் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்தி மயங்கும் வேளையில் -

மங்கல இசையுடன் திருக்கயிலாய சிவகண வாத்யங்கள் முழங்க, 
சர்வம் சிவமயம் என - பாரம்பர்ய பறையொலி கூத்தொலி முழங்க,
கைவளை குலுங்க காரிகையர் நிகழ்த்திய கோலாட்ட கும்மி ஒலி முழங்க - 

ஸ்ரீ பெருவுடையார் ஸ்ரீ ப்ரஹந்நாயகி சமேதரராக பெரிய ரிஷப வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருளினார்.




ராஜராஜ சோழன் உலா திருமேனி
அச்சமயத்தில் எம்பெருமானின் திருக்கோலத்தினைத் தரிசித்தவாறே - ராஜராஜ சோழனும்  ராஜவீதிகளில் வலம் வந்தருளினார்.

திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து தரிசித்து மகிழ்ந்தனர்.

திரு உலாவின் போது - நான்கு ராஜவீதிகளிலும் உள்ள திருக்கோயில்களின் சார்பாக ஈசனும் அம்பிகையும் மாமன்னனும் வரவேற்கப்பட்டனர்.

ராஜவீதி நெடுகிலும் மாலைகள் சாற்றப்பட்டு மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டது.

மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.


பார் கொண்ட பெருமையெல்லாம் ஊர் கொண்டு நிற்கும் வண்ணம் 
பேர் கொண்டு நிற்கின்றது பெரிய கோயில்!..

தேர் கொண்ட மன்னன் சிவபாத சேகரன் சீர் கொண்டு நின்றனன்!..
பேர் கொண்டு நின்றனன்.. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!..  

திருவீதி கண்டருளிய  
மாமன்னன் ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக!..
***

30 கருத்துகள்:

  1. மாமன்னன் இராஜராஜ சோழன் புகழ் ஓங்கட்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. தென்னக வரலாற்றில் பொற்காலம் எனப் பெருமையுடன் குறிக்கப்படும் ஆட்சிக்குரியவன் - ராஜராஜ சோழன்!..

    சிறப்பான படங்கள்.அருமையாக பகிர்வுகள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அன்பான சகோதரர் அவர்களுக்கு,
    தஞ்சையில் நடைப்பெற்ற இராசராசனின் சதய விழா நிகழ்ச்சியையும் இராசராசனின் வரலாற்றுச் செய்திகளையும் அழகாக தொடுத்து வழங்கியது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கு அன்பின் நல்வரவு!..
      தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இந்த வரலாறுகளைக் கதை வடிவத்தில் எழுதிப் புகழ் பெற்றவர் கல்கி அவர்கள். ஆதித்த கரிகாலன் கொலைஒரு மர்மமாகவே சொல்லப் படுகிறது. எத்தனை கல்வெட்டுக்கள் இருந்தாலும் நம்மால் படித்து பொருள் விளக்கிக் கொள்ள முடிவதில்லை. அதே போல் கருவறைக்குள் இருக்கும் ஓவியங்களைக் காணவும் முடிவதில்லை. எல்லாமே கேட்டறியத்தான் முடிவது சற்றே குறையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      இன்றைக்கு நாம் இவ்வளவு பெருமையுடன் ராஜராஜ சோழனைக் கொண்டாடுகின்றோம் என்றால் - அதில் கல்கி அவர்களுக்கு பெரும் பங்கு உள்ளதை யாரும் மறுக்க இயலாது.

      கல்வெட்டுகளைத் தமிழ்ப்படுத்துவதாக அறிகின்றேன்..

      கருவறையைச் சுற்றிலும் உள்ள ஓவியங்களின் பிரதிகள் - கோயிலின் உள்ளே தென்புறமாக உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன..

      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி ஐயா..

      நீக்கு
  5. எத்தனை நாட்கள் தஞ்சையில் வாசம்.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நவம்பர் 12 வரை தஞ்சையில் இருப்பேன்..
      அதன் பின் மீண்டும் - குவைத்..

      நீக்கு

  6. மாமன்னன் ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக!

    சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் ஐயா!

    அருமையான பதிவு! புலிக்கொடிச் சோழன் புகழ்கண்டு பெருமிதம்
    கொண்டாலும் என் மனத்தில் எங்கள் புலிவீரர் நினைவும் இழப்புகளும்
    சேர்ந்துகொண்டது ஐயா....!

    புலிக்கொடி தாங்கிப் புகழ்கொண்ட சோழன்
    ஒளிகாட்ட வாழ்ந்தகாலம் ஒன்று! - வலியோடு
    வாழ்நில மும்தொலைத்து வாடி வலுவிழந்து
    ஊழ்வினை நோகிறோம் ஓய்ந்து!

    சோழன் புகழும் அவன் நினைவுகளும் சிறப்பு!
    கோவில் விழாப்படங்களும் கண்ணுக்கு விருந்து!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      காலம் நமது கவலைகளைத் தீர்க்கும்..
      கவித்துவமானது தங்கள் கருத்துரை..

      தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ராஜ ராஜசோழன் பற்றி மிகவும் அருமையான தகவல்கள்...
    தெரியாத செய்திகளை எல்லாம் அறியத் தந்தீர்கள் ஐயா...
    படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. சதயத் திருநாள் = துரை செல்வராஜூ

    படங்களுடன் அருமையான, விரிவான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு துரை செல்வராஜூ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இரண்டு நாட்களாக திருசெந்தூர் தரிசனம்.
      எனவே தான் பதில் கூறத் தாமதம்..
      தங்களுக்கு மனமார்ந்த நன்றி..

      நீக்கு
  10. அருமையான கட்டுரை. படங்கள் மூலம் நாங்களும் அங்கே இருந்த உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  11. நலமா நண்பரே,,, ஊரிலிருந்தும் பதிவு தொடர்கிறது வாழ்த்துக்கள் நண்பரே தங்களை மதுரையில் எதிர்பார்த்தேன் ஆனால் தங்களின் வீட்டில் விஷேசம் எனக்கேள்விப்பட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      சிவ்காசியில் என் ம்களுக்கு வளைகாப்பு விசேஷம்.
      அது - அக்டோபர்/26 அன்று நடந்தது. ஆகையால் தான் மதுரைக்கு வரமுடியவில்லை.

      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அருமையான பதிவு.
    சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட ஆட்சிக் காலம்.
    சதய திருவிழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  13. மகள் வளைகாப்பு சிறப்பாக நடந்ததா?
    மகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..
      இறைவனின் கருணையுடனும் தங்களின் நல்லாசிகளுடனும் - மகளின் வளைகாப்பு வைபவம் இனிதே நடந்தது.

      தங்களின் வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றி..

      நீக்கு
  14. சோழரின் பெருமையை எவ்வளவு முறை எழுதினாலும், படித்தாலும் திகட்டாது. பெருமுயற்சி எடுத்து தாங்கள் எழுதியுள்ள விதம் சிறப்பாக உள்ளது. விழா நிகழ்வுகளை தாங்கள் நேரில் பார்த்து தந்துள்ளமை நிறைவாக உள்ளது. வாழ்த்துக்கள். வாய்ப்பிருப்பின் தங்களை நேரில் சந்திக்க முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தாங்கள் சொல்வது போல சோழரின் பெருமையை எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் கேட்டாலும் திகட்டுவதே இல்லை.

      தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    பதிலளிநீக்கு
  16. அன்பின் யாதவன் நம்பி..
    மதிப்புக்குரிய திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் - தஞ்சையம்பதியினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமை கண்டு மகிழ்ச்சி..

    அதனை தளத்தினில் அறிவித்த தங்களுக்கு நன்றி.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..