நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014

ஆரூர் கமலாம்பிகை

பிரதோஷ வேளைகளில் சகல தேவ கணங்களும் சிவ தரிசனம் செய்வதாக ஐதீகம். 

அவர்களை ஒழுங்கு செய்து திருக்கயிலையில் அமைதியைக் காப்பவர் நந்தியம்பெருமான்!.. 

அதனாலேயே அவர் அதிகார நந்தி எனும் திருப்பெயரினை உடையவர்.

அத்தன்மையை உடையவர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு அதனைச் செய்ய முடியாது. 

அங்கும் இங்கும் ஓடி அல்லது ஸ்திரமாக ஓரிடத்தில் இருந்து கொண்டு தான் மெய்க்காவல் பணியைச் செய்ய இயலும். 


அப்படி - நின்ற திருக்கோலத்துடன் நந்தி திகழும் திருத்தலம்  - திருஆரூர்.

ஆரூரில் ஏன் நந்தியம்பெருமான் நின்று கொண்டிருக்க வேண்டும்!.. 

முப்பத்து முக்கோடித் தேவர்களும் சர்வ சதாகாலமும் - வீதி விடங்கப் பெருமானைத் தரிசித்து இன்புற நெருக்கியடித்துக் கொண்டு நிற்பதனால்!..

சப்த விடங்கருள் முதலானவர் - ஆரூர் வீதிவிடங்கப் பெருமான்!..

ஆரூர் எப்போது தோன்றியது!.. -  என அந்த இறைவனிடமே வியந்து கேட்பவர்  - அப்பர் பெருமான். 

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை ஏந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே!..
(6/34)

அந்த அளவுக்குப் பழைமையான திருத்தலம்.

பஞ்ச பூதத் தலங்களுள் - இத் திருத்தலம் - பிருத்வி (மண்) தலம்.

சோழர்களின் முதல்வர் எனப்படும் முசுகுந்த சக்ரவர்த்தி ஆட்சி செய்ததும் மாமன்னன் மனுநீதிச் சோழன் ஆட்சி செய்ததும் ஆகிய -  திருத்தலம். 

பசுங்கன்று மாள்வதற்குக் காரணமான தன் மகனைத் தேர்க் காலில் இட்டு - நீதியை நிலை நாட்டிய பெருமகன் - மனுநீதிச் சோழன்.

சோழ மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும் திருத்தலங்களுள் ஒன்று. 

அத்துடன் அவர்களுக்கு தில்லைத் திருச்சிற்றம்பலம் போல அபிமான திருத் தலம் - திரு ஆரூர்.

சமயாச்சார்யார்கள் - நால்வரும் பாடிப் பரவிய திருத்தலம்.


பூங்கோயில் எனப்படும்  - இத்திருத்தலத்தில் வருடம் முழுதும் விசேஷங்கள் நிகழ்கின்றன.

ஈசன் சுயம்பு மூர்த்தி. புற்று உருவானவர். எனவே- மூலவர் வன்மீக நாதர் புற்றிடங்கொண்டார் என்பன திருப்பெயர்கள். 

வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கின்றது. அபிஷேகங்கள் கிடையாது. 

ஐயனின் கருவறையை திருமூலட்டானம்  - என்கின்றார் திருநாவுக்கரசர்.

வீதி விடங்கரின் சந்நிதியில் வெள்ளிப்பேழைக்குள் இருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு தான் அபிஷேகம். வீதிவிடங்கரின் அருகில் பிரியாது இருப்பவள் - அல்லியங்கோதை. 

இந்த சந்நிதியில் தான் நந்தியம் பெருமான் நின்ற வண்ணம் விளங்குகின்றார். சாயரட்சை பூஜை அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று!..

மூலாதார கணபதி
ஸ்வாமி சந்நிதியின் அருகில் மூலாதார கணபதி. குண்டலியாகிய நாகத்தின் மீது நர்த்தனத் திருக்கோலம்.

முதல் திருச்சுற்றில் வாதாபி கணபதி விளங்குகின்றார். இந்த விநாயகரின் முன்னிலையில்தான் முத்துஸ்வாமி  தீக்ஷிதர் வாதாபி கணபதிம் பஜேஹம்.. - எனும் கீர்த்தனையை பாடினார் என்பர்.  

திருமூலட்டானத்தின் பின்புறம் மஹாலக்ஷ்மியின் சந்நிதி. 

வாயு மூலையில்  நவக்கிரகங்கள்.  கூடிக் குழுமியவாறு இல்லாமல் - அடக்க ஒடுக்கமாக ஒரே வரிசையாக இருக்கின்றனர். நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது. 

ஆகையால் - ஆதித் திருத்தலமான ஆரூரின் மகத்துவம் அறியாத மக்கள்  - தீபம் ஏற்றும் மேடையைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.

மூலஸ்தானத்திற்கு வடபால்   - ருண விமோசன லிங்கம் இலங்குகின்றது.  

அருகிலேயே யம சண்டேஸ்வரனின் சந்நிதி.  

யமன் தனது வழக்கமான பணியினை விடுத்து  - திருஆரூரில் சண்டிகேஸ்வர பாவனையில் அமர்ந்து ஈசன் பணி செய்வதாக ஐதீகம்.  

பூங்கோயிலின் வெளிப்புறமுள்ள திருச்சுற்றில் ஆரூர் அறநெறி எனும் திருக் கோயில். நமிநந்தியடிகள் நீரால் விளக்கு எரித்தது இங்கே தான். மேற்கு நோக்கிய சந்நிதி. 

பிரதோஷ அபிஷேகங்கள் இங்குள்ள  நந்தியம்பெருமானுக்கே!.. 

தெற்குத் திருச்சுற்றில் எரிசினக்கொற்றவை!.. மிகுந்த வரப்ரசாதி. வடக்கு நோக்கியவள்.

மேற்புறம் ஆனந்தீஸ்வரர் சந்நிதி. அருகே கமலமுனி சித்தர் பீடம். 

இங்கேதான் ராஜேந்திர சோழன் வழிபட்ட - ஜேஷ்டாதேவி தன் மகனுடனும் மகளுடனும் அருள்புரிகின்றாள். 

எங்கள் குடும்பத்தில் நெருக்கடியான சமயங்களில் - இவளைத்  தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம். அருள் பொழியும் ஜேஷ்டா தேவியின் திருவிழிகள் - அல்லலை அகற்றுவது நிதர்சனம்.

வடக்குத் திருச்சுற்றில் தேவதச்சன் விஸ்வகர்மா பூஜித்த லிங்கம். வீடு கட்டுவதில் ஏற்படும் தடங்கல்களை அகற்றி அருள் புரியும் சந்நிதி.


ஐயனுடன் உறையும் அம்பிகை -  நீலோத்பலாம்பாள்!.. 

தெற்கு நோக்கிய திருச்சந்நிதி. சேடிப் பெண்ணின் தோளில் இருக்கும்   - செல்வச் சிறுவன் முருகனின் சிரசினை வாஞ்சையுடன் வருடிய வண்ணம் திருக்காட்சி நல்குகின்றனள்.

எந்தக் காலத்திலும்  - ஸ்வாமி  கீழைக் கோபுரத்தின் வழியாக எழுந்தருவதே இல்லை. 

காரணம்  - கீழைக்கோபுரத்தில் இந்திரன் இன்னும் காத்திருக்கின்றான். வீதி விடங்கப் பெருமானை மீண்டும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு!..

திருஆரூர் - சக்தி பீடங்களுள் ஒன்று!.. பராசக்தி தவம் செய்த தலம் என்பர்.  


அம்பிகை கமலை எனப்பட்டவள்.

மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி ஆகியோரின் அம்சங்களத் தன்னகத்தே கொண்டவளாக விளங்குகின்றனள் - அம்பிகை
பிறைச்சந்திரன் அம்பிகையின் திருமுடியினை அலங்கரிக்கின்றது.

வலது கரத்தில் நீலோத்பல மலரை ஏந்திய வண்ணம் யோகாசனத்தில் - மேதா விலாசத் திருக்கோலம் கொண்டு தனிக்கோயிலில் விளங்குகின்றாள்.

கமலாம்பிகையைத் தரிசித்து, அவளை - இதயக்கமலத்தில் வைத்துத் தியானிப்பவர்களுக்கு நல்லதொரு  ஞானம் சித்திக்கும் என்பது ஆன்றோர் திருவாக்கு.

உற்சவ அம்பிகை - மனோன்மணி.  ஆடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக மிகச் சிறப்பாக நிகழ்கின்றது. ஐப்பசி பூரத்தில் விசேஷ மங்கல வைபவங்கள்.

அம்பாள் யாழைப் பழித்த மொழியாள் - என்பதால் சரஸ்வதி தவ நிலையில் உறைகின்றாள். தீபாவளி அன்று மஹாலக்ஷ்மிக்கு சொர்ணாபிஷேகம். 

ஸ்ரீதியாகராஜர் - ஸ்ரீ கமலாம்பிகை
கமலாம்பிகையின் திருக்கோயிலின் உள் திருச்சுற்றில் அட்க்ஷர பீடம் திகழ்கின்றது. கமலாம்பிகை - லலிதா பரமேஸ்வரி எனத் திகழ்வதால் - பௌர்ணமி வழிபாடுகளும் திருவிளக்கு பூஜைகளும்  விசேஷமாக நிகழ்கின்றன. 

கோயில் ஐவேலி, குளம் ஐவேலி எனப் புகழப்படும் திருக்கோயிலுக்குரிய தீர்த்தம்  - கமலாலயம். தல விருட்சம் - மாதிரி மரம். 

தேர் மிகப் பிரம்மாண்டமானது. திருஆரூர் தேரழகு என்பது பெருமை.  

ஆழித்தேர் என்பது இதன் பெயர். 

ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்!. என திருநாவுக்கரசர் போற்றுகின்றார். 

ஆரூரில் பிறக்க முக்தி - என்பது சொல் வழக்கு. 

நம்முடைய பிறப்பு நம் கையில் இல்லை. அது இறைவன் அளிக்கும் வரம். 

வீதி விடங்கர் சந்நிதியில் சுந்தரரும் பரவை நாச்சியாரும்
அதனால் தான் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் - திருஆரூரில் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்!..  - என்றருளினார் திருத்தொண்டத்தொகையில்!.. 

திருஒற்றியூரில் சங்கிலியாரைப் பிரிந்ததும் பார்வையை இழந்தார் சுந்தரர். 

தட்டுத் தடுமாறி நடந்தவர்க்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் அருளி - காமாக்ஷி அருகிருக்கும் காஞ்சியில் இடது கண்ணில் பார்வையைக் கொடுத்த இறைவன் -

கமலாம்பிகை அருகிருக்கும் திருஆரூரில் வலது கண்ணில் பார்வையைக் கொடுத்தனன்.

அம்பிகை - எரிசினக் கொற்றவை, மஹா துர்க்கை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள், கமலாம்பிகை - என ஐவகைத் திருக்கோலங்கொண்டு அருள் பாலிக்கும் திருத்தலம்  - திருஆரூர்.

ஆரூர்த் திருப்பதிகங்களில் - 

குழல்வலங் கொண்ட சொல்லாள்,  வாரேறு வனமுலையாள்,
தடங்கண் உமையாள், வளைக் கையாள், மலையார் பொற் பாவை,  
பாடகஞ்சேர் மெல்லடி நற்பாவை, அஞ்சணை குழலினாள், 
பண்ணின் இன்மொழியாள், மட்டுவார் குழலாள், கோலவேற் கண்ணி, 
மலைவளர்த்த மடமங்கை, மின்னலத்த நுண்ணிடையாள்

- என்றெல்லாம் அம்பிகையை வாயாரப் புகழ்ந்து பாடுகின்றார் - நாவுக்கரசர்.

ஸ்ரீகமலாம்பிகை அளவிலாப் பெருமைகளை உடையவள். 
அன்பு மிகுத்தவள். அருள் திறத்தவள். அரும் பெரும் தவத்தவள்.

ஆடி மாதத்தின் நான்காவது செவ்வாய்க் கிழமை.
இந்நாளில் ஆரூர் கமலாம்பிகையைச் சிந்தித்து அருள் பெறுவோம்!..

ஓம் சக்தி ஓம்!..
ஆரூர் கமலாம்பிகையே சரணம்!..
* * * 

16 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!

    கண்களில் ஒற்றிக்கொள்ளும் படியான அற்புதப் படங்கள்!
    அன்னையின் திருத் தோற்றம் அத்தனை அழகும் கருணை மிக்கதாயும் இருக்கின்றது.
    ஆடிச் செவ்வாயில் அம்பிகையின் இன்னுமொரு வரலாறு கண்டேன். மகிழ்ச்சி ஐயா!

    நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா.
    சொல்லிய விதமும் படங்களும் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. ஆரூர் அமுதினைப்பற்றி அழகான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி

      நீக்கு
  4. படங்களின் தரிசனம் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. அருமையான பதிவு. போன மாதம் உறவினர்களுடன் சென்று வந்தோம்.
    பாலாலயம் நடக்கிறது.
    படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆரூர் கமலாம்பிகை அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்பின் இனிய தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. இரண்டு முறை சென்றிருக்கிறோம் நான் திருச்சி கொதிகலன் தொழிற்சாலையில் பணியிலிருந்தபோது தேர்ச் சக்கரத்துக்கு hydraulic brakes பொருத்தி ஓடாத தேரை ஒட்டுவித்தது தெரியும் நாங்கள் மூன்றாண்டுகளுக்கு முன் சென்றபோது தேர் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போடப்பட்டு இருந்தது. பதிவிட்டிருந்த பல பதிவுகளிலும் இன்றைய தேரின் நிலை கேட்டு எழுதி இருந்தும் யாரும் எதுவும் கூறவில்லை. அங்கு நாங்கள் சென்றிருந்தபோது நீலோத்பலம் எனும் ஒரு நூலை அங்கிருந்த தமிழ் அறிஞர் எனக்கு விற்பனையில் கொடுத்தார். பதிவினைப் படிக்கும் போது நினைவுகள் சுழல்வதைத் தவிர்க்க இயலவில்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்த போது தேர் பிரித்துப் போடப்பட்டிருந்ததை நானும் கண்டேன்.. அதுவும் கோயில் பிரகாரத்தில் - வெட்ட வெளியில்!..

      விஸ்தாரமான கோயில். அர்ச்சகர்களைக் கேட்டதற்கு - இதெல்லாம் - அவர்களோட பிரச்னை என்றார்களே தவிர வேறொன்றும் சொல்லவில்லை.

      ஆரூர் கோயிலைக் குறித்து பட்டினத்தார் பாடியருளிய திருப்பாடலின் படியே இன்றைக்கு கோயிலின் நிலைமை இருக்கின்றது.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..

      நீக்கு
  8. திருவாரூர் கோவில் பற்றிய விபரமும் அறிந்தேன் அழகிய கோவிலும் தேரும் கண்டும் ஆனந்தம் அடைந்தேன். மிக்க மகிழ்ச்சி சகோ! தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..