நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014

தேவி தரிசனம் - 4

ஸ்ரீமஹாலக்ஷ்மி!..

அவள் தான்,  வேண்டும் வரங்களையும் வளங்களையும் வழங்கி -  நம் வாழ்வினை  - நடத்துபவள்.


இக வாழ்வில் - வேண்டும் வரங்கள், வளங்கள் எனில் -

நாம் வேண்டியதை அல்ல!.. நமக்கு வேண்டியதை!..

நமது பூர்வ ஜன்மத்தின் சஞ்சித ப்ராரப்த வினைகளை அனுசரித்து - நமக்கு எவற்றை வழங்க வேண்டுமோ அவற்றை வழங்கி அருள்வாள். 

அதன்படி எவற்றையெல்லாம் நாம் அனுபவிக்கும் படியான விதி இருக்கின்றதோ - அவற்றை நாம் அனுபவிக்க வேண்டும். அனுபவித்தே தீர வேண்டும்.

இப்படி அனுபவிக்கும் வேளையில் - அல்லலும் துன்பமும் துயரமும் தொடருமேயானால் -

அவற்றில் இருந்து நாம் மீள்வதற்கு பெரிதும் உதவியாய்த் திகழ்வன - வழிபாடுகள்.


விதியின்  வசமாக தொல்லைகளும் துயரங்களும் ஒரேயடியாகத் தொலைய வில்லை எனினும் -

இடையறாத அன்பின் வழிபாடுகளினால் - விதியின் இறுக்கம் இளகுகின்றது.

அன்பின் வழிபாடுகள் என்றால் - திருக்கோயில்களில் பரிகாரம் செய்வதா!..

நல்லொழுக்கம் கொண்டு நடப்பது!..  தொண்டு உள்ளம் கொண்டு உழைப்பது!..

நல்லொழுக்கம் என்பது - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவது!..

தொண்டு உள்ளம் என்பது - இயற்கையைப் பேணிக் காப்பது!..

ஒருவன் அளவு கடந்த வறுமையிலும் தடுமாறாது - தடம் மாறாது நேர்வழியில் செல்வானாயின் அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதற்காகத் தான் -

வறுமையிலும் செம்மை - என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

அத்தகைய மனோதிடம் அமையுமானால்  - சற்றும் குறைவில்லாமல் அருள் மழை பொழிவாள் என்பதற்கு பல்வேறு எடுத்துக் காட்டுகள் உள்ளன.

நலந்தரும் கனகதாரா ஸ்தோத்திரத்தின் அடிப்படை என்ன?..

தமக்கென்று வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியை - பவதி பிக்ஷாம் தேஹி!.. - என வந்த பாலகனுக்கு இட்டார் அந்த மாதரசி.


''பிக்ஷை ஏற்க வந்திருக்கும் பாலனுக்கு இடுவதற்கு இதை விட நல்லதாக வேறு ஒன்றும் இல்லையே..'' - 

- என்ற மனவருத்தம் தான் - அங்கே பொன்மழை பெய்யக் காரணமாக இருந்தது. 

அத்தகைய மனோபாவம் அமையப் பெற்றவர் - அவள் அன்பினுக்கு உரியவர்.

ஆடி மாதத்தின் பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமை!..

ஸ்ரீ மஹாலக்ஷ்மியை மனமாரத் துதிக்கும் நாள்..

ஸ்ரீவரலக்ஷ்மி விரதம்!.. 

கணவனின் நலத்திற்கும் குறையாத செல்வ வளத்திற்கும் - வேண்டிக் கொண்டு சுமங்கலிப் பெண்களும் ,

நல்ல கணவன் அமையவும் எதிர்வரும் இல்வாழ்க்கை சிறக்கவும் வேண்டிக் கொண்டு கன்னிப் பெண்களும் பக்தி பூர்வமாகக் கடைப்பிடிக்கின்றனர். 


வீட்டைச் சுத்தம் செய்து, வாழைக்கன்று மாவிலைத் தோரணங்களுடன் மண்டபம் அமைத்து,  வாழையிலையில் பச்சரிசியைப் பரப்பி - அதில் மஞ்சள் பூசிய தேங்காயுடன் கலசம் அமைத்து - மஹாலக்ஷ்மி திருமுகம் வைத்து,  அலங்கரித்து,

ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் சரடுகளை ஒற்றைப்படையில் சூட்டி -  ஸ்ரீஅஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்,  சகஸ்ரநாமம் சொல்லி  - இனிப்பு வகைகளை நிவேதனம் செய்து, தூப தீப ஆராதனைகளுடன்  வழிபடுவர்.  

விரதம் இருந்தோர் - பழுத்த சுமங்கலிகளைக் கொண்டு, மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்வர்.

வழிபாட்டில் கலந்து கொண்ட எல்லாருக்கும்  மஞ்சள், குங்குமம், சந்தனம், தாம்பூலம் வழங்கி - வாழ்த்துக்களுடன் விரதத்தினை மன நிறைவுடன் பூர்த்தி செய்வர்.

மங்கலமாக வாழ்வதென்பது  பெறுதற்கரிய பேறு. கணவன் பூரண நலத்துடன் வாழ்வாங்கு வாழ்வதே எல்லாப் பெண்களுடைய வேண்டுதல். 

அதே சமயம் - மனைவியும் மக்களும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ வேண்டும் என -  வேண்டிக் கொள்வதும்,

அதற்காக நேரிய வழியில் உழைப்பதும் ஒவ்வொரு அன்பான கணவனின் கடமை.

அந்த அளவில் - நாமும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வேண்டிக் கொள்வோம்!..

சகல செல்வங்களுக்கும் அதிபதியானவள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி!..

அவளைக் குறித்து நோன்பு நோற்கும் அனைவருக்கும் மங்கலங்கள் அருள்வாளாக!..

அறம் சார்ந்த அனைத்தையும் ஈடேற்றி  அன்னை ஸ்ரீ வரலக்ஷ்மி நல்லருள் புரிவாளாக!..

ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு  -
நலந்தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்.


தேவேந்திரன் துதி செய்து வணங்கிய
ஸ்ரீமஹாலக்ஷ்மி அஷ்டகம்.

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.. 

வணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவள். ஸ்ரீ பீடத்தில் நிலைத்து வசிப்பவள். தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவள். கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவள். எல்லா பாவங்களையும் அழிப்பவளும்  ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

சர்வக்ஞே சர்வ வரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். அனைத்து வரங்களையும் அளிப்பவள். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்!.

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவள். மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும் மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

முதலும்  முடிவும் அற்ற தேவியானவள். பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவள். யோக நிலையில் தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மகோதரே 
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவள். எளிதில் உணரப்பட முடியாதவள். (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் உடையவள். அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

பத்மாசனத்தில் அமர்ந்தவள். பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவள். பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்!.

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவள். பலவிதமான  அலங்காரங்கள் கொண்டு திகழ்பவள். பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளும் அகில உலகங்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்!.

பலஸ்ருதி:-

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: 
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: 

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி  மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் 
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: 
திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் 
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. 

தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று  முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.

அகமும் புறமும் தூய்மையாகி, 
மனநிறைவுடன்  கொடுப்பதும் கொள்வதும்
வழிபாட்டின் அடிப்படை. 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத 
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
* * *

14 கருத்துகள்:

 1. தேவி தரிசனம் கண்டேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 2. மஹாலக்ஷ்மி அஷ்டகம் சிறிய வயதிலிருந்து அம்மா சொல்லிக் கொடுத்து சொல்லி வருகிறேன். வெள்ளிக் கிழமை தோறும்.
  அதற்கு அழகான விளக்கம் கொடுத்து பாடலும் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
  பக்தி மட்டும் போதாது ,நல் ஒழுக்கம், நல்நடத்தை, தொண்டுள்ளம் வேண்டும் என்று அருமையாக சொன்னீர்கள். வரலக்ஷ்மி விரதம் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   ஸ்ரீ வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 3. மங்களகரமான வரலஷ்மி விரத பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 4. வணக்கம் ஐயா!

  மஹா லக்ஷ்மி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்!

  //விதியின் வசமாக தொல்லைகளும் துயரங்களும் ஒரேயடியாகத் தொலைய வில்லை எனினும் -

  இடையறாத அன்பின் வழிபாடுகளினால் - விதியின் இறுக்கம் இளகுகின்றது.//

  ஐயா!.. அந்த விதி எனக்கும் வழி விடாதா இறுக்கம் இளகாதா என என்றும் வேண்டுகிறேன்...
  அருமையான பதிவு!
  அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   திறவாத கதவு என்று ஏதுமில்லை..
   திடங்கொள்க.. திருவருள் சேரும்..
   தங்கள் குறை தீர வேண்டுகின்றேன்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
  2. தேவி(யர்)களின் தரிசனம் புகைப்படங்கள் அருமையாக இருந்தது ஐயா.

   நீக்கு
  3. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அருமையான பக்தி பரவசம் ஊட்டும் பதிவு எப்போதும் போல் மனம் நிறைவைய் தந்தன. தவியின் தரிசனம் துயரினை போக்கும். நன்றி தொடர வாழத்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஆடிப் பதிவுகளைக் கண்டேன். மனம் நிறைவாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு