நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 22, 2014

அறம் வளர்த்த நாயகி

திருஐயாறு.

ஆடி முதல் செவ்வாய் தரிசனம்

கங்கையினும் புனிதமாய காவிரியின் வடகரைத் தலம்.

தென் கயிலாயம் எனப்புகழப்படும் திருத்தலம்.


ஏழுகோடி முறை ருத்ர ஜபம் செய்த நந்தியம்பெருமானுக்கு - இறைவன் திருமுழுக்கு செய்வித்து அதிகார நந்தி எனும் பதவியினை வழங்கிச் சிறப்பித்த திருத்தலம். 

ஞானசம்பந்தப் பெருமான் தரிசனம் செய்யுங்கால் - அஞ்சேல் என்று அருள் செய்து - இயலாய் ஏழிசையாய் தம்மை உணர்த்திய திருத்தலம்.

அப்பர் பெருமானுக்குக் கயிலாயத் திருக்காட்சி அருளியதுடன் காதல் மடப்பிடியோடுங் களிறு என சிவசக்தி ஸ்வரூப தரிசனங்காட்டியருளிய திருத்தலம்.

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு காவிரி வழி விட்டு விலகிய திருத்தலம்.

ஐயாறப்பன் - தானே சைவனாகி நின்ற தன்மையினை மாணிக்க வாசகப் பெருமான் புகழ்ந்தோதிய திருத்தலம்.

சப்தஸ்தானத் திருத்தலங்களுள் முதன்மையான திருத்தலம்.


இப்படி எத்தனையோ சிறப்புகள் பொலிந்து விளங்கினும் அத்தனைக்கும் சிகரம் என - சர்வஜன ரக்ஷகியான அம்பிகை - அறம் வளர்த்த நாயகி - ஸ்ரீதர்மஸம்வர்த்தனி - எனத் திகழும் திருத்தலம்.

ஒருமுறை - உலகம் உய்வடையும் பொருட்டு - 

பூவுலகில் இருந்து இரு நாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது இயற்றி தம்மை அறியுமாறு  அம்பிகைக்கு அருளினார்  - ஐயன். 

அதன்படி ஐயன் அளந்த இருநாழி நெல்லுடன் பூவுலகில் - காஞ்சி எனும் திருத்தலத்தில் - கம்பை ஆற்றின் கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது வளர்த்தனள் அம்பிகை என்பது ஐதீகம்.


அதனாலேயே - அம்பிகைக்கு அறம் வளர்த்த நாயகி  - ஸ்ரீதர்மஸம்வர்த்தனி எனும் திருப்பெயர் அமைந்தது. 

அம்பிகை அறம் வளர்த்தது காஞ்சியில் என்றாலும் அங்கே அவளுக்கு ஸ்ரீகாமாட்சி என்பதே திருப்பெயர். 

ஆனால், செயலால் சீர் கொண்ட சேயிழையாள் அறம் வளர்த்த நாயகி எனும் திருப்பெயர் கொண்டு திகழ்வது - திருஐயாற்றில் தான்!..

ஆருயிர் தழைக்கும் பொருட்டு அறம் வளர்த்த அம்பிகை திருஐயாற்றில் ஆடிப்பூர மகோத்ஸவத்தில் தேரோட்டம் காணுகின்றாள்!..

ஜூலை/21 திங்கள் அன்று காலையில் துவஜாரோகணம் சிறப்புடன் நிகழ்ந்தது.

தொடர்ந்து வரும் நாட்களில் சேஷ வாகனத்திலும் கிளி வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளும் அம்பிகை - 

ஜூலை/26 ஆடி அமாவாசை அன்று ஐயனுடன் கூடி  அப்பர் பெருமானுக்குக் கயிலாயத் திருக்காட்சி நல்குவதுடன் - அன்ன வாகனத்தில் எழுந்தருளி வலம் வருகின்றனள்.

அதன் பின் சிம்ம வாகனத்திலும் குதிரை வாகனத்திலும் வீதிவலம் வருகின்றனள். ஜீலை/29 அன்று ஒன்பதாம் திருநாள் ரதாரோஹணம். 

மறுநாள் காவிரியில் தீர்த்தவாரி. துவஜாவரோஹணம்.

இவ்வண்ணமே - ஆடிப்பூரத்தினை அனுசரித்து, 


திருஅண்ணாமலையில் ஸ்ரீஉண்ணாமுலை நாயகியும் 
திருநெல்வேலியில் ஸ்ரீ காந்திமதி அம்பிகையும் 
திருஇராமேஸ்வரத்தில் ஸ்ரீபர்வதவர்த்தனி அம்பிகையும் 
திருஆடானையில் ஸ்ரீசிநேகவல்லி அம்பிகையும் 
சங்கரன்கோயிலில் ஸ்ரீகோமதி அம்பிகையும் மகோத்ஸவம் காண்கின்றனர். 

மேலும் பல தலங்களிலும் மங்கலகரமாக வைபவங்கள் நடைபெறுகின்றன.

அம்பிகை அறம் வளர்த்த வைபவத்தினை பற்பல புண்ணியரும் புகழ்ந்து போற்றியுள்ளளனர்.

காஞ்சியில் கோயில் கொண்ட குமரனை  , 

உமையாள் சேர்ந்தருள் அறம் உறு 
சீர் காஞ்சியில் உறைவோனே!.. (338) 

- என்று அருணகிரி நாதர் கும்பிட்டு வணங்குகின்றார்.

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே!..
(57)
- என்று அந்தாதியில் பாடிப் பரவும் அபிராமபட்டர் -

நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று
நித்தமும் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்திரண்டறம் வளர்க்கின்றவள்!..
- என்று போற்றுவதும் சிந்திப்பதற்குரியன.

சரி.. முப்பத்திரண்டு அறங்கள் என்பன எவையெல்லாம்!?..

1.வறுமையில் வாடுபவர்கள் பசியாறும்படி அன்னமிடுதல்.
2.நன்னெறிகளைப் போதிப்பவர்களின் பசியாற்றுதல்.
3.அறு சமயத்தார்க்கும் உணவிடுதல்.
4.பசுவுக்கு உணவு ஈதல். ( ஒரு கைப்பிடி புல் என்பது திருமூலர் சொல்)
5.சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குதல்.
6.இரப்போர்க்கு ஈதல்.
7.வலிய அழைத்து உண்ணக் கொடுத்தல்.
8.சிறு குழந்தைகளுக்குப் பசியாற்றுதல்.

9.எளியோர்க்கு மகப்பேறு பார்த்தல்.
10.அனாதைக் குழந்தைகளை வளர்த்தல்.
11.தாய்ப்பால் அற்ற குழந்தைகளுக்குப் பாலூட்டுதல்.
12.அனாதை சடலங்களுக்கு கிரியை செய்தல்.
13.பேரிடர்களில் தவிக்கும் மக்களுக்கு வாழ்வித்தல்.
14.வண்ணார்களுக்கு வாழ்வளித்தல்.
15.நாவிதர்களுக்கு நலம் விளைவித்தல்.
16.சுண்ணாம்பு அளித்தல்

17.நோய்க்கு மருந்தளித்தல்.
18.கண்ணாடி வழங்குதல்.
19.தகவல் அறிவித்தல்.
20.கண்நோய்க்கு மருந்தளித்தல்.
21.தலைக்கு எண்ணெய் அளித்தல்.
22.வறுமையுற்ற கன்னியர்  திருமணத்தை நடத்துதல் (கன்னிகா தானம்)
23.சிகை நீக்க உதவுதல்
24.பிறர் அறங்காத்தல்.

25.தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்.
26.திருமடங்கள் அமைத்தல்.
27.சாலைகள் அமைத்தல். பராமரித்தல்.
28.சோலைகள் அமைத்தல். பராமரித்தல்.
29.ஆ உரிஞ்சு கல் அமைத்தல் (விலங்குகள் உரசிக் கொள்ளும் தூண்).
30.தம்பதியர் உறக்கத்திற்கு இடையூறு அகற்றல்.
31.பசுமந்தையில் காளை சேர்த்தல்.
32.கொலைக் களத்தில் பொருள் கொடுத்து சிற்றுயிர்களைக் காத்தல்.

சற்றே மாறுபட்டாலும் பெரிய புராணத்திலும் அறப்பளீஸ்வர சதகத்திலும் முப்பத்திரண்டு அறங்கள் கூறப்பட்டுள்ளன.


அம்பிகையைப் பணிந்து நிற்போர் எளியோர் ஆயினும் முப்பத்திரண்டு அறங்களையும் பேணும் தன்மையை எய்துவர் என்பது திருக்குறிப்பு. 

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
திருக்குறள்.

ஓம் சக்தி ஓம்.
* * *

11 கருத்துகள்:

  1. அறம் வளர்த்த நாயகி அறிந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. முப்பத்திரண்டு அறங்கள் ஆகா...! நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அறம் வளர்த்த நாயகி பற்றி
    அற்புதமான பகிர்வுகள்..பர்ராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வணக்கம் ஐயா!
    முப்பதியிரண்டு அறங்கள் மிக அருமை ஐயா!
    அறியாதன அறிந்தேன் உங்களின் சிறந்த பதிவினால் இன்று.

    மிக்க நன்றி ஐயா! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. 32 அறங்கள் பட்டி அருமை.
    ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தருவீர்களா?
    தங்கள் முயற்சி தழைத்தோங்குக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Google translator has turned a traitor.
      32 வகை அறங்கள் என்பதை
      32 rooms menu என்று
      ஆங்கிலத்தில் மொழிெபெயர்த் துள்ளது
      நல்ல நகைச்சுவை

      நீக்கு
  6. டisting of 22 types of charity deserves appreciation.can you give a note of explanation to each one of the charities.
    May your endeavour succeed

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..