நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 24, 2015

எங்கும் சிதம்பரம்

பூஜ்ஜியம்.

எதுவுமில்லை அதற்குள்..
ஆனால், எல்லாமும் இருக்கின்றன - அதற்குள்!...

கணிதவியலும் இறையியலும் ஒன்றிணைந்திருப்பது பூஜ்ஜியத்தில்!..

இரண்டையும் வழங்கிய பெருமை - புண்ணியம் மிகும் பாரத நாட்டிற்குத்தான்!.


பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!..

தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போல் இருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!..

முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்குச்
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்!..

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்!..

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!..
-: கவியரசர் கண்ணதாசன் :-



கவியரசருக்கு இன்று பிறந்த நாள்..
மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள்..
* * *

பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் என்பது - வெளி.. வெட்டவெளி!.. ஆகாயம்!..

அங்கேதான்,  ஆனந்த நடனம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது என்றனர் ஆன்றோர்கள்..

அதைக் குறிப்பதே ஞான ஆகாசம் எனப்படும் சித்சபை.

அதுவே திருச்சிற்றம்பலம் என போற்றப்படுவது..

புண்ணிய பாரதத்தில் எத்தனை எத்தனையோ திருக்கோயில்கள் இருப்பினும் திருச்சிற்றம்பலம் என சிறப்புடன் குறிப்பிடப்படுவது - 

தில்லை எனும் திருத்தலம்.


தில்லைத் திருச்சிற்றம்பலம் என்ற புகழுக்குரிய - சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோயிலில் எத்தனையோ வைபவங்கள் நிகழ்வுறுகின்றன.

அவற்றுள் - மார்கழித் திருவாதிரையும் ஆனி உத்திரமும் சிறப்புடையவை.

ஏனெனில் இந்த இரு தினங்களில் மட்டுமே வைகறைப் பொழுதில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பெறும்.

அவ்வண்ணமாக - ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 15/6 திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்மையப்பன் விளங்கும் சித்சபையின் துவஜ மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியிருக்க - காலை பத்து மணியளவில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது

அதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக பஞ்சமூர்த்தி வீதி உலாவுடன் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஜூன் 16 அன்று வெள்ளி சந்திர பிரபையிலும்
17 அன்று தங்க சூரிய பிரபையிலும்
18 அன்று வெள்ளி பூதவாகனத்திலும்
19 அன்று வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்)
20 அன்று வெள்ளி யானை வாகனத்திலும்
21 அன்று தங்க கைலாச வாகனத்திலும்

எம்பெருமான் எழுந்தருள - திருவீதி உலா நடைபெற்றது.

22/6 அன்று மாணிக்கவாசகர் குருபூஜையும்
தொடர்ந்து - தங்க ரதத்தில் பிட்சாடனர் திருவீதிஉலாவும் நடைபெற்றது.
நேற்று (ஜூன்/23) செவ்வாய்க்கிழமை காலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தி திருத்தேரில் எழுந்தருள - தேர்த் திருவிழா சிறப்புடன் நடைபெற்றது.

ஆயிரக்காணக்கான பக்தர்கள் அணி திரண்டு அழகுத் தேர்களின் வடம் பிடித்து இழுத்து தேரடியில் நிலைப்படுத்தினர்.

இரவு எட்டு மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் -
எம்பெருமானுக்கு ஏககால லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

இன்று சூரியோதயத்திற்கு முன் - அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீசிவகாம சுந்தரிக்கும் ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கும் மகா அபிஷேகமும் ஷோடச உபசாரமும் நடைபெறுகின்றது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜை நிகழ்வுறும்.
பஞ்சமூர்த்தி திருவீதி உலா எழுந்தருளிய பின் - 
பிற்பகல் இரண்டு மணியளவில் ஆனித் திருமஞ்சன மகா தரிசனம்.

அலங்கார தரிசனத்திற்குப் பின் - சிவகாமசுந்தரியும் நடராஜப்பெருமானும் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியபடியே ஞானகாசம் எனும் சித்சபையினுள் எழுந்தருள்வர்.

சித்சபையினுள் எழுந்தருளிய பின் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. 

நாளை (ஜூன்/25) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு திருவீதி உலா. 

அந்த வைபவத்துடன் கொடியிறக்கம்.
உற்சவம் மங்கலகரமாக நிறைவடைகின்றது.


வெட்ட வெளியெனும் ஆகாயத் திருத்தலத்தில் ஆனந்தத் திருத்தாண்டவம் நிகழ்கின்றது என்பதை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஞானிகளும் யோகியரும் சித்தர்களும் சமயக் குரவர்களும் சொல்லி வந்திருக்கின்றனர்.

அந்தத் தாண்டவத்தின் வெளிக்கூறுதான் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் திருக்கோலம்.

தமிழகத்திலுள்ள சிவாலயங்கள் அனைத்திலும் சிறப்புடன் விளங்குவது ஸ்ரீநடராஜப் பெருமானின் திருவடிவ.

இத்திருமேனி - தமிழர்களாகிய நமக்கே சொந்தமானது..

சிவ சமயத்தின் தத்துவம் அழகின் வடிவமாக மெய்ஞானத்தை உணர்த்தியது.

அதையே - இன்றைய மேலை நாடுகளும் ஆமோதிக்கின்றன. 

ஸ்ரீநடராஜ தத்துவத்தை ஆய்ந்தறிவதற்கு முற்பட்டுள்ளன.

அதன் விளைவு -

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் - பிரம்மாண்டமாக ஸ்ரீநடராஜரின் திருமேனி விளங்குகின்றது.

(அணுத் துகள் ஆய்வு மையம் பற்றிய தகவல்கள் Facebookல் பெற்றவை)

Sri Natarajar - CERN
CERN (The European Organization for Nuclear Research, known as CERN) என்பது ஸ்விட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள - இருபது நாடுகள் ஒன்றிணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம். 

இங்குதான் - Large Hadron Collider (LHC) உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கி (Particle Accelerator) அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மூலத் துகள்களை அதிவேகத்தில் பயணிக்கச் செய்து அவற்றின் குணங்களை செயல்களை ஆராய்கின்றனர்.

CERN விஞ்ஞானிகள் - அணுத் துகள் இயக்கத்தையும் சிவபெருமானின் நடனத்தையும் ஒப்பிட்டுக் கூறி வியக்கின்றனர்.

அந்த வியப்பின் விளைவே - நடராஜர் திருமேனி!..

Sri Natarajar - CERN
எங்கும் திருமேனி - எங்கும் சிதம்பரம்!.. 

- என்று திருமூலர் குறித்த திருமந்திரம் மெய்யாகி விட்டது.

Sri Natarajar - CERN

அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் - நடராஜர் திருமேனி அமைந்துள்ளதைப் பற்றி, 

On June 18, 2004 - an unusual new landmark was unveiled at CERN - a 2mtr tall statue of the Hindu Creator/ Destroyer deity Shiva. Interesting choice.

- என்று குறிப்பிடப்படுகின்றது.


CERN விஞ்ஞானிகள் அணுத் துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிட்டு உணர்ந்து உலகிற்கு அறிவித்ததை சிறப்பிக்கும் பொருட்டு -

அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் - நடராஜர் திருமேனியை - இந்திய அரசு பெருமையுடன் வழங்கியுள்ளது. 

அணுத் துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாக - நவீன இயற்பியல் கூறுகின்றது. கீழை நாட்டின் ஞானிகள்  உலக இயக்கத்தைப் பற்றி விவரிக்கும் போது குறிப்பிடும் நடராஜரின் நடனம் போலவே இது உள்ளது.

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் அறிய வேண்டும்!..

இப்படிக் கூறுபவர் - இயற்பியலாளர் ஃபிரிட்ஜோப் காப்ரா (Fritjof Capra) .


THE TAO OF PHYSICS 
An Exploration of the Paralles Between Modern Physics and Eastern Mysticism., (Published in 1975)

- எனும் நூலை எழுதியவர்.

அணுவில் உள்ள அசைவை - சிவ நடனத்தில் கண்டு உணர்ந்த காப்ரா -
1977 அக்டோபர் 29 அன்று லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகுக்கு விவரித்தார்.

நவீன கருவிகள் மூலமாக அணுத் துகள்கள் நடனமிடும் அற்புதத்தைப் படம் பிடித்து - அதை சிவநடனத்துடன் ஒப்பிடும் காட்சியைக் கண்ட உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் -
தில்லை நடராஜனின் திருநடனம்!..

கடவுள் துகள் ஆராய்ச்சிக்குக் கிடைத்த தெளிவான பதில்தான் நடராஜர் சிலை!..

- இப்படிக் கூறியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு A.P.J.அப்துல் கலாம் அவர்கள்!..

இதைத்தான் - அன்றே நமக்குச் சுட்டிக் காட்டினர் - ஆன்றோர்கள்.

அற்புதக் கூத்தனை ஆனந்தக் கூத்தனை
அம்மை அப்பனாம் சிற்றம்பலக் கூத்தனைக்
கண்டு உணர்ந்து களிப்பெய்துவோம்..


எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே!..
திருமூலர்.

அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் 
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத 
நாளெல்லாம் பிறவா நாளே!.. (6/1) 
திருநாவுக்கரசர்.

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
* * * 

19 கருத்துகள்:

  1. அருமையான தகவல்கள். ஆனந்தக் கூத்தனின் நடனம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான தகவல்கள்... விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் தான் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நடராஜத் திருமேனியின் தத்துவத்தை அறிவியல் நோக்கில் பகிர்ந்த விதம் நன்று. கலைஞர்களை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தகவல்கள் அனைத்தும் அருமை ஜி கண்ணதாசனின் பிறந்தநாளையும் இணைத்தது மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கண்ணதாசன் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து (மெல்லிசை மன்னரின் பிறந்த நாளும் அதுவே- இது தெரியாதது) கூடவே சிதம்பரம் ஆடல் வல்லானையும் சேர்த்து, ஆனித் திருமஞ்சன விழாவையும் குறிப்பிட்டு மொத்தத்தில் ஒரு தகவல் கள்ஞ்சியமாகப் பதிவிட்டது எல்லாமே ரசனைதான் அணுத்துகள்கள் ஆடும் அற்புதத்தைப் படம் பிடித்து... இதுவரை அறியாதது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      வலைச்சரத்தின் பணிச்சுமைகளுக்கு இடையேயும் -
      தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. வணக்கம்,
    அப்பப்பா, எப்படித்தான் இவ்வளவு தகவல்களைக் குறித்த காலத்தில் தாங்கள் தருகிறீர்களோ, அத்துனைத் தகவல்களும் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான வருகையும் அழகான கருத்துரைகளும் தான் காரணம்!..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. திருமஞ்சன தரிசனம் அருமை ஐயா.

    கண்ணதாசன், மில்லிசை மன்னர் விஸ்வனாரின் பிறந்த நாள்...காலையில் முகநூலில் பார்த்தேன். நீங்களும் இன்று 3 மேர்த்து முத்தாய் படைத்து இருக்கிறீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நல்ல பயனுள்ள தகவல்கள். கண்ணதாசனின் பிறந்த நாளையும் இணைத்திருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. ஓ மெல்லிசை மன்னரின் பிறந்தநாளும் கவிஞரின் நாளும் ஒன்றா தெரிந்து கொண்டோம். சிதம்பரத்தில் இருண்ட பூஜ்ஜிய வெளியைக் கண்டு அதன் தத்துவத்தை அறிந்ததுண்டு....இப்போது உங்கள் பதிவின் முஇலம் தகவல்கள் பல அறிந்தோம் மிக்க நன்றி ஐயா!

    திருமூலரின் அந்த வரிகளைத்தான் நாங்கள் எங்களது அன்பே சிவம் கடவுள் பற்றிய இடுகையில் சொல்லி இருந்தோம்....நாங்கள் மிகவும் ரசிப்பது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிக செய்திகளுடன் கருத்துரை.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..