நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 21, 2015

நாளெல்லாம் யோகா

இன்று சர்வதேச யோகா தினம்..


பாரதப் பண்பாட்டின் மணிமகுடம்..

நம்மை நாமே உணர்வதற்கான முதற்படி!..

கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் - முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பாரதப் பிரதமர் மேதகு நரேந்திரமோடி அவர்கள்,

பாரதத்தின் பாரம்பர்ய கலையான யோகா பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுதும் ஏற்படுத்த வேண்டும். உடலையும் மனதையும் நெறிப்படுத்தும் யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்

- என்று கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா. - ஜூன் 21 -  சர்வதேச யோகா தினம் என அறிவித்தது.

கடந்த டிசம்பரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது 177 நாடுகள் ஆதரவளித்தன.

பின்னும் பலநாடுகள் ஆர்வம் கொண்டன.


ஆக, 192 நாடுகளில், இன்று -
முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் - நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் - ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தலைமையேற்க - முப்பது லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.

தலைநகர் புது தில்லியில் நிகழ இருக்கும் மாபெரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார்.

உலகின் மிக உயரமான பாசறையான சியாச்சின் பனி மலைச்சிகரத்தில் யோகா தினம் அனுசரிக்கப்பட இருக்கின்றது.

சியாச்சின் மலைப்பகுதியில் - நமது ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுவது போல் -

இந்தியப் பெருங்கடல்,  மேற்கு பசிபிக் பெருங்கடல், மத்திய தரைக் கடல் - பகுதிகளில் நங்கூரமிடப்பட்டுள்ள நமது கப்பற்படைத் தளங்களிலும் வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.


யோகா என்றால் என்ன?..

நம்மை நாமே - உள்நோக்கி உணர்தல்!..

முறையான குரு மூலமாக யோக பயிலும் போது - நம்மை நாமே உணரலாம்.

நம்முள் - ஆனந்தம் பெருகுவதை உணரலாம்.. அன்பு பீறிடுவதை அறியலாம்!..

இவற்றினால் - ஆரோக்யம் பெருகுவதைக் காணலாம்!..

யோக பயிற்சிகள் பின்னும் - முத்ரா, தியானம், பிராணாயாமம் - என பலவாகத் தொடர்கின்றன.

யோகா - உடலுக்கும் மனதுக்கும் தேவையானதை அளிக்கவல்லது.

தினமும் பத்து நிமிடம் போதும் என்கிறார்கள்..



ஏழு ஆண்டுகளுக்கு முன் - தஞ்சையில் நடை பெற்ற பயிற்சி வகுப்புக்கு என்னை அழைத்துச்சென்றவர் - திரு. காதர் பாட்சா.. - எனும் நண்பர்.

பயிற்சிக் காலம் - பத்து நாட்கள்..

எளிய முறையில் சுகாசனம் எனும் தொடக்கநிலையில் இருந்து அர்த்த பத்மாசனம், பத்மாசனம், வஜ்ராசனம் - இப்படி இன்னும் சில நிலைகளை பயிற்றுவித்தனர்.

நிறைவாக சவாசனம்..

பரிபூரண ஓய்வு.. நம்மில் இருந்து நம்மை நீக்குதல் அல்லது நீங்குதல்!..

பயிற்சியின் நிறைவு நாளன்று - வீரமாகாளியம்மனுக்கு வருடாந்திர பால்குட உற்சவம். என்னால் கலந்து கொள்ள இயலவில்லை..

நாளும் தவறாது பழகுங்கள்!..

- என்று, பயிற்சியளித்த குரு அறிவுரை வழங்கினார்.

ஆனால் - அதைத்தான் கடைப்பிடிக்கமுடியவில்லை..

பல்வேறு காரணங்கள்.. ஆனால் நிச்சயமாக சோம்பல் அல்ல!..

யோகா பழகுவதற்கு முன்னரே - இறையருளால் தியானம் சற்று கூடிவரும்.

உள்முகத்தில் உரையாடும் குருமூர்த்தியிடம் கேட்டேன்..

என்ன இது!.. இந்த மாதிரி ஆகிவிட்டதே!.. என்று.

பத்தாம் வகுப்பு படிப்பவனுக்கு அரிச்சுவடி எதற்கு?.. - என்று புன்னகைத்தார் குருமூர்த்தி.

மௌனமாகி விட்டேன்.


அடுத்து - மற்றொரு நண்பர் - காயகல்ப பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டு நாள் கழித்து ஆசிரியர் வந்தார்.

என்னை ஒருமுறை உற்றுப் பார்த்தார்.

விளக்கேற்றி வைத்து - வழிபாடு நடந்தது.

பயிற்சி பெற்றவர்கள் கூடியிருந்து அதிர்வலைகளை உருவாக்கினர்..

நாவில் கற்கண்டு வைக்கப்பட்டது. குண்டலினியை எழுப்பினர்.

நிமிடங்கள் கரைந்தனவேயன்றி - கற்கண்டு கரையவில்லை.

எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.

ஒருவழியாக மீள் நினைவுக்கு வந்தேன்..

இதற்கு முன் குண்டலினி பயிற்சி எடுத்ததுண்டா?.. - என்று கேட்டார்கள்..

இல்லை.. என்றேன்..

அநாகதத்தில் இருந்த குண்டலினியை ஆக்ஞா சக்கரத்தில் நிறுத்தியுள்ளோம். சில தினங்கள் தவறாமல் தியான வகுப்புகளுக்கு வாருங்கள்.. தலைவலி ஏதும் ஏற்பட்டால் - உடனே கீழே இறக்கி விடலாம்!.. - என்றார்கள்..

ஆறாதாரச் சக்கரங்கள் தெரியும். சும்மா கிடந்த குண்டலினியை நான் மேலே ஏற்றவில்லையே..

நான் ஏற்றவில்லை எனில் - வேறு யார் இந்த வேலையைச் செய்தது?..

அவர்களிடமே வினவினேன்..

கோயில்களுக்கெல்லாம் போவதுண்டா?.. - தியான பயிற்சியாளர் கேட்டார்.

அந்தக் கேள்விக்கான விடையை என்னை அழைத்துச் சென்ற நண்பர் விஜயகுமார் சொன்னார்..

அதுதான் காரணம்!.. - என்றார்கள்..

அன்றிரவு சவாசனத்தில் இருந்தபோது - குருமூர்த்தி புன்னகைத்தார்.

எனக்கு ஏதும் புரியவில்லை..

அடுத்த சில தினங்கள் - காயகல்ப பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றேன்.

அங்கே பொறுப்புடன் தியானம் பழகினாலும் - எனக்கு ஏதோ ஒன்று சரியாகப்படவில்லை..

தியானத்தின் குவிமுனையை சூன்யத்தில் வைக்கின்றார்களே - என்றிருந்தது.

ஈஸ்வரத் தியானம் அங்கில்லையே!.. - என்றேன் - குருமூர்த்தியிடம்..

ஒவ்வொன்றும் ஒருவிதம். உனக்கு என்ன வேண்டும்!.. - என்று கேட்டார்.

நீங்கள் வேண்டும்!.. - என்றேன்..

அதன் பிறகு காயகல்ப பயிற்சி வகுப்பிற்கும் செல்லவில்லை..

வீட்டில் பயங்கர முணுமுணுப்பு.. எதையும் பொறுப்பாக செய்வதில்லை என்று!..

அடுத்த சில மாதங்களில் குவைத்திற்கு வந்து விட்டேன்..

இதெல்லாம் நடந்து - ஐந்து வருடங்களாகி விட்டன.

நேரம் கெட்ட வேளையில் - வேலைக்குச் செல்வதும் திரும்புவதுமாக - ஆகி விட்டது.

யோகா பயிற்சி தொடக்க நிலைதான் என்றாலும் பயிற்சியாளர் இல்லாமல் தொடரக் கூடாது.

தியானம் அப்படியில்லை..

சுகாசனம்
தொடக்க நிலையாளர்களுக்கு என்றாலும் - பக்தி வழிபாடு எதற்கும் இதுவே முதல்படி. மிக எளிமையானது - சுகாசனம்.

சம்மணம் போட்டு அமர்வதே - சுகாசனம்.

உணவு உண்பதற்காக - தரையில் இருகால்களையும் மடக்கி அமரும் நிலையே சுகாசனம்.

சுகாசனம் எனும் இந்த நிலையை - அர்த்தபத்மாசனம் என்றும் சொல்வர்.

இதற்கு அடுத்த நிலையே - பத்மாசனம்.

சுத்தமான இடத்தில் சற்று அழுத்தமான தரை விரிப்பின் மீது அமர்ந்து - உடலையும் மனதையும் தளர்த்திக் கொண்டு,

இருகைகளிலும் சின்முத்திரை (சுட்டு விரல் நுனியும் பெருவிரல் நுனியும் தொட்டுக்கொள்ள மற்ற மூன்று விரல்களும் நீண்டிருக்கும் முத்திரை) தாங்கி பார்வையை மூக்கின் நுனியில் அல்லது புருவ மத்தியில் நிறுத்தினால் -

சற்றைக்கெல்லாம் மனம் அதுவாகவே அடங்கி விடும்.

ஆரம்பத்தில் மனம் - அங்குமிங்கும் அலைபாயத்தான் செய்யும்..

நாளாக நாளாக - அந்த நிலையிலேயே இருக்க மாட்டோமா.. என்று மனம் ஏங்கும்.

இப்போது தான் புரிகின்றது -

பத்தாம் வகுப்பு படிப்பவனுக்கு அரிச்சுவடி எதற்கு?.. - என்ற கேள்விக்கான விடை.

ஆனாலும் - பத்தாம் வகுப்பிலிருந்து மேலும் இரண்டு வகுப்புகளைக் கடந்து வந்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி..

இப்போதெல்லாம் - நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டு பார்வையை நிலைநிறுத்தினாலே - மனம் அடங்கி விடுகின்றது.

இத்தனைக்கும் காரணம் எது!?..

விநாயக வழிபாடு!..

ஔவையார் அருளிச் செய்த - விநாயகர் அகவல்!..

சில ஆண்டுகளுக்கு முன் வரை நித்ய பாராயணம்..

விடியற்காலையில் - குளித்து முடித்ததும் -

சீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச்சிலம்பு பலஇசை பாட..

என்று தொடங்கி -

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயகா!.. விரைகழல் சரணே!..

- என, கண்களை மூடிக் கொண்டு பாடிப் பரவிய பின்னரே அடுத்தவேலை..

இதேபோல, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமமும் பயில்வோரை யோகநிலைக்கு உயர்த்துவது.


இப்பொழுதெல்லாம் - குண்டலினி அநாகதத்திலிருந்து புறப்பட்டு விசுக்தி எனும் பின் கழுத்தில் வந்து நின்று கொள்கின்றது.

அங்கேயே சில தினங்களுக்கு நிலைத்து நின்று விடுகின்றது. மிகவும் சிரமம்.

அதனால் - வழிபாடு தியானம் இவற்றின் - ஆழத்திற்குச் செல்வதில்லை.

சரி.. யோகாவுக்கும் - இதற்கும் என்ன சம்பந்தம்?..

யோகா, தியானம் , பிராணாயாமம் - என்றெல்லாம் சொன்னேனே!..

இவற்றோடு இன்னும் பல பின்னிப் பிணைந்திருக்கின்றன.

அடிப்படை வாழ்வின் செயல்களில் சில ஆசனங்கள் பிரதிபலிப்பதாக இருந்தாலும் - சில குறிப்பிட்ட ஆசனங்களைத் தவறாமல் செய்தாலே நோய் நொடியின்றி நலமுடன் வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகா - தியானம் செய்வதால் மன அழுத்தம் நீங்குகின்றது.

எண்ணங்களால் தான் இடையூறுகள் ஏற்படுகின்றன.
யோகாவினால் உடலும் மனமும் செம்மையுறுகின்றன.

சாதாரணமாக - சுகாசனத்தில் இருந்து மனதை ஒருமுகப்படுத்தினாலே -
உடலின் சக்தி அதிகரிக்கும். மனம் புத்துணர்ச்சி பெருகும்.

அமைதியுறும் மனம் - நமக்கு வசப்பட்டிருக்கும்.

யோகாசனங்கள் எல்லாம் தகுந்த குருவின் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டியவை.

யார் யாருக்கு என்னென்ன செய்ய இயலுமோ - அவற்றைப் பின்பற்றுவதே நலம்.


முழுக்க முழுக்க - மெய்யான ஆன்மீகத்தில் சிறப்புற்று விளங்குவது - யோகா!..

சர்வேஸ்வரனின் யோக நிலை பிரசித்தம்!..


பராசக்தியாகிய அம்பிகை - திருஆரூரில் மகா மந்திர யோகினியாக - யோக ஆசனத்தில் வீற்றிருக்கின்றாள்..


ஸ்ரீ தர்மசாஸ்தா பட்ட பந்தத்துடன் யோக பத்ராசன நிலையில் வீற்றிருப்பது சபரிமலையில்!..

நலம் தரும் யோகாவினைப் பழகி மேல் நிலையினை அனைவரும் எய்துதல் வேண்டும்.

அதே சமயத்தில் -

நாம் பெறும் நலங்களில் பிறர் உய்வதற்கான சிந்தனையும் செயல்பாடுகளும் அவசியம்..

சில தினங்களுக்கு முன் -

கலையரசி அவர்களின் ஊஞ்சல் வலைத் தளத்தில் -
பசுமைப் புரட்சியின் வன்முறை என்ற பதிவுக்குக் கருத்துரையிடும் போது,

உழவனின் ஆசனத்தில் தீ வைத்த நிலையில்,
ஊரெல்லாம் கேளிக்கை யோகாசன நிலையில் -
இனியாவது வையகம் திருந்தி வளம் பெறட்டும்!..

- என்று குறித்திருந்தேன்..

அதுதான் இங்கும் - இப்பொழுதும்!..

ஏரின் பின்னது தான் உலகம்..
ஏர் ஏற்றம் பெற வேண்டும்..
உழவும் தொழிலும் ஒளி பெறவேண்டும்!..

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..    
* * *

26 கருத்துகள்:

  1. அறியாத பல செய்திகள் அறிந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கட்டுரையைப் படித்தபோது யோகாவின் பன்முகச் சிறப்பை உணரமுடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. யோகாவைப்பற்றிய நிறைய தகவல்களுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. யோகாசனம் பற்றிய நன்மைகள் பலவும் அறிந்தேன் தங்களால் யோகா பயிற்சிக்கு போவது நல்லது என்றும் தோன்றுகிறது. பர்க்கலாம் நன்றி பதிவுக்கு. வாழத்துக்கள் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  5. யோகாசனம், தியானம், பக்தி.....சக்கரங்கள் என நிறைய விசயங்கள் குறித்து அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். சில தினங்களாக எனக்குள் இருந்த ஏதோ ஒன்றுக்கு பதில் கிடைத்தது போல் இருந்தது. நன்றிகள் ஐயா. இதன் தொடர்பாய் மேலும் சில விசயங்கள் தாங்கள் பகிர்ந்தால் நலாமாய் இருக்கும் என தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நான் அறிந்ததையே பதிவில் கூறியுள்ளேன்..
      ஒரு பயிற்சியாளரைப் போல - முழுமையாக தகவல்களை அளித்தல் இயலாது. அது முறையல்ல..

      ஆயினும் - சில விஷயங்கள் என்பது எவை எனக் கூறினால் - இயன்றவரை பதிலளிக்கின்றேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. வணக்கம் .

    மிகச்சிறந்த ஆக்கத்தை
    எங்களுக்கு பதிவு செய்து உள்ளீர்கள் .
    உலக அரங்கிற்கு .
    தமிழ்ச் சமூகம் கொடுத்தது கொஞ்சம்
    அல்ல .
    தமிழ கலைகளை
    இன்று உலக சமூகம் திரும்பி பார்க்கிறது .
    ஆக்கத்திற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      பாராட்டுரைக்கு நன்றி..

      நீக்கு
  7. காதலர் தினம் அன்னையர் தினம் தந்தையர் தினம் என்பது போல் யோகா தினத்தில் ஆண்டுக்கு ஒரு நாள் அது பற்றி நினைவு கூறப்படும் 30 லட்சம் பேர் ஓரிடத்தில் கூடி யோகா செய்யப்போகிறார்களா? ஆசிரியரில்லாமல் செய்யக்கூடாது என்றால் இவர்களுக்கு எல்லாம் ஆசிரியர்கள் உண்டா. இதுவும் மோடியின் gimmicks ல் ஒன்று இந்த தினத்தைச் சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி
      ..
      காதலர் தினம் போன்றவையெல்லாம் மேலைத் தேசத்தவரின் ஒரு நாள் கூத்துகள்..

      தினசரி காதலர் தினம் என்றால் என்ன ஆவது!?..

      ஆனால் - நமக்கு மாத்ரு தேவோ பவ.. பித்ரு தேவோ பவ.. என்று சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள்.. அதுவே -

      அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று பாலபாடம் ஆயிற்று..

      தந்தை தாய் பேண் - என்பது நித்ய கடமைகளுள் ஒன்று..

      அது போலவே, யோகா - நமக்கெல்லாம்!..

      தினந்தோறும் யோகாசனம் செய்பவர்களே கூடியுள்ளனர்.

      இனிமேல் பயில்வதும் தொடர்வதும் அவரவர் ஆர்வத்தினைப் பொறுத்தது.

      யோக நிலைகளை உலகின் மற்றோரும் அறிந்திடவே இந்த நாள்..

      சிறுவயது முதல் யோகாசனம் செய்பவருக்கும் 60 வயதில் ஆர்வம் கொண்டு வருபவருக்கும் வேறுபாடு உள்ளதல்லவா..

      எல்லாரும் எல்லா வகையான ஆசனங்களையும் செய்வதென்பது இயலாததே..

      பல ஆசனங்களைப் பழகி இருந்தாலும் - புதிய ஒன்றினை மேற்கொள்கையில் குருமுகமும் துணையும் வேண்டும் என்பது ஒரு மரபு.. அதைத்தான் தெரிவித்திருக்கின்றேன்..

      இன்றைய தினத்தில் யோக பயிற்சி என்பதாகவே நிகழ்வுகள். பயிற்சியாளர்களுடன் நடந்ததாகவே தெரிகின்றது.

      தங்களின் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. யோகா, தியானம் பற்றி அருமையாக சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. வணக்கம் அய்யா, நலமா?
    அருமையான பதிவு, எப்பவும் போல் குறித்த காலத்தில்,,,,,,,
    பகிர்வுக்கு நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இன்றைய தினம் யோகாசன சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டீர்களா!..

      தங்கள் கருத்துரைக்கு நன்றி.. வாழ்க நலம்!..

      நீக்கு
  10. aya vanakam yoga patri thangalin anupavam arumai. naanum oru vaara yoga pairechel kalanthu kondu srithu katru kondu irukan. athil prayanayamam, sutharasana kriya enakul pala matragal unaranthan. thaangal guru moorthi udan pesuvathi satru virivaga solavum. nandri aya.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      உபாசனாமூர்த்தியையே குருமூர்த்தி எனக் குறிப்பிடுகின்றேன்.

      நான் இந்தப் பதிவினைத் திட்டமிடும்போதே - குருமூர்த்தியுடன் பேசியதை விரிவாக தட்டச்சு செய்திருந்தேன்.. ஆனால் - அதை அவர்கள் விரும்பவில்லை..

      பொதுவாக வீண் வாதங்களைத் தவிர்க்கச் சொல்லுவார்..
      அதனால் - விஷயத்தை மேலோட்டமாகச் சொல்லிச்சென்றேன்..

      உபாசனா மூர்த்தியுடன் பேசுவதென்பது எல்லாருக்கும் ஆகக் கூடியதே!..

      எதிர்வரும் பௌர்ணமிக்குப் பிறகு - சில குறிப்புகளைத் தருகின்றேன்.. தங்களின் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  11. aya thagalin padivuku kaathu irukan. sitharium, kadavalum thariseka matrum paarka aasai.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  12. யோகா பற்றிய அழகான பதிவு. யோகா இப்போதெல்லாம் கடைத்தெருவில் விற்கப்படும் பொருள் போலாகிப்போனது ஐயா இல்லையா? அது ஒரு யோகக் கலை. ஆனால் ஏதோ சாதாரணமானது போல பயிற்றுவிக்கப்படுகின்றது. நல்ல குரு தேவை.

    பிராணாயாமல் ஒழுங்கான முறையில் கற்று செய்தால்தான் நல்லது. மூச்சுப் பயிற்சி கூட சரியாக இல்லை என்றால் மன நிலை கூட பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே சிறந்த குருவின் பார்வையில் அவரது வழிநடத்தலின் பேரில் கற்க வேண்டும்.

    தாங்கள் குண்டலினி சக்தி எழுப்புவது எல்லாம் கற்றது பாக்கியமே. தங்களின் எழுத்தும், பின்னூட்டக் கருத்துகளுமே தங்களை வெகுவாக அடையாளப்படுத்தி விடுகின்றன....

    அருமையான பதிவு தங்கள் அனுபவம் உட்ப்ட....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது மிகச் சரி.. கடைச் சரக்கு போலாகி விட்டது..
      இன்னும் ஒருபடி மேலாகச் சொன்னால் - அழகு சாதனப் பொருள் போல - யோகாவைக் கருதுகின்றனர்..

      காலை நேரத்தில் - சில தொலைக் காட்சிகள் ஒளிபரப்பும் யோகா நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் இருந்தாலே -

      நமக்கு யோக சித்தியாகி விடும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  13. யோகா பற்றியும் தியானத்தின் மகிமைகள் பற்றியும் தெரியாதன தெரிந்து கொண்டேன். யோகா தினத்தில் வெளியிட்டமை சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..