நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 22, 2024

திட்டை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வியாழக்கிழமை

திரு தென்குடித்திட்டை
திட்டை
தேவகுரு வழிபட்ட தலம்


இறைவன்
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
ஸ்ரீ பசுபதீஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ சுகந்தகுந்தளாம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை

தீர்த்தம் சக்கர தீர்த்தம்
தலவிருட்சம் முல்லை 

பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது சீர்காழி தில்லை மற்றும் திட்டை முதலான தலங்கள் பாதிக்கப்படாது இருந்தன என்பது ஐதீகம்.

வசிஷ்ட மகரிஷி காமதேனு வழிபட்ட திருத்தலம்..


தேவகுரு ஆகிய பிரகஸ்பதி வணங்கி நலம் பெற்ற தலம்..

ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியின் மீது, சூரியனின் கதிர்கள் பரவுகின்றன.

மூலஸ்தானத்தில் பிரம்மரந்திர சந்திர காந்தக் கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு  ஒரு துளி நீராக சிவலிங்கத்தின்  மீது விழுகின்றது.. 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நேரில் இதனைக் கண்டிருக்கின்றேன்..

கோயில் முழுதும் கருங்கற் திருப்பணி..

தஞ்சை மாநகர் வெண்ணாற்றங்கரை பள்ளியக்கிரஹாரத்தில் இருந்து வட கிழக்காக
திருக்கருகாவூர் சாலையில் 6 கி.மீ. தூரத்தில் திட்டை  திருத்தலம் அமைந்துள்ளது..

முந்தைய பதிவு இணைப்பு..

திருஞானசம்பந்தப் பெருமான்
அருளிச்செய்த
மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 35

முன்னைநான் மறையவை
  முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ
  நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி
  வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல்
  தென்குடித் திட்டையே.  1 

மகரமா டுங்கொடி
  மன்மத வேள்தனை
நிகரலா காநெருப்
  பெழவிழித் தானிடம்
பகரபா ணித்தலம்
  பன்மக ரத்தோடுஞ்
சிகரமா ளிகைதொகுந்
  தென்குடித் திட்டையே.  2  

கருவினா லன்றியே
  கருவெலா மாயவன்
உருவினா லன்றியே
  உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும்
  பாடலோ டாடலுந்
திருவினான் மிகுபுகழ்த்
  தென்குடித் திட்டையே.  3  

உண்ணிலா வாவியா
  யோங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா
  வேதவே தாந்தனூர்
எண்ணிலார் எழில்மணிக்
  கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந்
  தென்குடித் திட்டையே.  4  

வருந்திவா னோர்கள்வந்
  தடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க்
  கருள்செய்தான் அமருமூர்
செருந்திபூ மாதவிப்
  பந்தர்வண் செண்பகந்
திருந்துநீள் வளர்பொழில்
  தென்குடித் திட்டையே.  5  

ஊறினார் ஓசையுள்
  ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங்
  குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத்
  தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந்
  தென்குடித் திட்டையே.  6 

கானலைக் கும்மவன்
  கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத்
  தேவுவைத் தானிடந்
தானலைத் தெள்ளமூர்
  தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல்
  தென்குடித் திட்டையே.  7  

மாலொடும் பொருதிறல்
  வாளரக் கன்நெரிந்
தோலிடும் படிவிர
  லொன்றுவைத் தானிடங்
காலொடுங் கனகமூக்
  குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல்
  தென்குடித் திட்டையே.  8  

நாரணன் தன்னொடு
  நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி
  காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ
  சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த்
  தென்குடித் திட்டையே.  9 

குண்டிகைக் கையுடைக்
  குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும்
  பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழில்
  தண்டலைக் கொண்டலார்
தெண்திரைத் தண்புனல்
  தென்குடித் திட்டையே.  10  

தேனலார் சோலைசூழ்
  தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில்
  சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம்
  பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க்
  கில்லையாம் பாவமே.. 11

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***




16 கருத்துகள்:

  1. திட்டையிலிருந்து வந்து என்னுடன் படித்த ஒரு நண்பன் உண்டு.  பெயர் மறந்து விட்டது.  அவனை திட்டை என்றே கூப்பிடுவோம்.  பெயர் மட்டுமல்ல, அவன் என்னுடன் படித்தது பள்ளியிலா, கல்லூரியிலா என்றும் நினைவில்லை!  

    சில நண்பர்கள் பெயரும் முகமும் பெயரும் நினைவில் இருக்கும் அளவு சிலர் முகம், பெயர் நினைவில் இருப்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திட்டையிலிருந்து வந்து என்னுடன் படித்த ஒரு நண்பன் உண்டு.  பெயர் மறந்து விட்டது.  அவனை திட்டை என்றே கூப்பிடுவோம்.  பெயர் மட்டுமல்ல, அவன் என்னுடன் படித்தது பள்ளியிலா, கல்லூரியிலா என்றும் நினைவில்லை!  

    சில நண்பர்கள் பெயரும் முகமும் பெயரும் நினைவில் இருக்கும் அளவு சிலர் முகம், பெயர் நினைவில் இருப்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நண்பர்கள் பெயரும் முகமும் பெயரும் நினைவில் இருக்கும் அளவு சிலர் முகம், பெயர் நினைவில் இருப்பதில்லை!

      உண்மை தான்..

      நீக்கு
  3. ஒருமுறை பின்னூட்டம் கொடுத்தபோது ஏற்றுக் கொள்ள்வில்லை.  இதுவும் தகராறு செய்கிறது.  வெளியானால்தான் வந்து சேர்ந்ததா என்று தெரியும்!!

    பதிலளிநீக்கு
  4. தெளிவு பெற்று விட்டேன்.  பள்ளிதான் தஞ்சையில் படித்தேன்.  கல்லூரி மதுரையில்.  எனவே பள்ளியில்தான் உடன் படித்த நண்பன்!  ஸ்ரீ சுகந்தகுந்தளாம்பிகை மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் பசுபதீஸ்வரரை வணங்கிக் கொள்கிறேன்.  அவரருள் அகிலமெல்லாம் பரவட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசுபதீஸ்வரர் அருள் அகிலமெல்லாம் பரவட்டும்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  5. ஒரு முறை இந்த ஆலயத்திற்குச் சென்றிருக்கிறேன் - ஒரு நாள் பயணத்தில் அவசர அவசரமாகச் சென்று வந்த திருத்தலம். நின்று நிதானித்து பார்த்து வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஒருமுறை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  6. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  7. திட்டை கோயில் இரண்டு மூன்று தடவை போய் இருக்கிறோம்.
    பதிகத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// பதிகத்தைப் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  8. தென் குடித்திட்டை தரிசனம் .சிவாயநமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..