நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 01, 2024

கற்பூரவல்லி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 16  
வியாழக்கிழமை

கற்பூரம்!..

நெறி கொண்ட வாழ்வில் நிற்போரைக் கற்பூரத்திற்கு ஒப்பிடுவர் தமிழ் மரபில்..

கற்பூரம் - நறுமணம் மிக்க  மங்கலப் பொருளாகும்..

இதனால் தான் கோதை நாச்சியார் மனதிற்குள் மகிழ்ச்சியும் சந்தேகமும்!..


ஹிந்து சமய வழிபாடுகள் - கற்பூர  தரிசனத்துடன் தான் பூரணம் ஆகின்றன..

கற்பூரம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது:

பூஜைகளுக்கு மட்டுமன்றி பலவித உடல் உபாதைகளுக்கும் கை மருந்து என்று ஆகின்றது.

கைகளில் கற்பூர எண்ணெயை தேய்த்து நுகர்வது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

தொற்று நோய்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக் கூடும் என அஞ்சினால் சுத்தமான கற்பூரம் கரைந்த நீரினால் கைகளைக் கழுவலாம்... நீரில் கரைத்துக் குளிக்கலாம்.. கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில்  குழைத்துக் கைகளில் உடலில்  தடவிக் கொள்வதும் நல்ல பலன் அளிக்கும்..

தலையில் பேன் தொல்லை
இருந்தால் கற்பூரத் தைலத்தைத் தேய்க்க பேன்கள் ஒழிந்து விடும்.

தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்க்க தலைமுடி வளர்ச்சி அடர்த்தியாகும். முடி  உதிராது.. வழுக்கை ஏற்பட்டு இருந்தால் கற்பூர எண்ணெய் முடி வளர உதவுகிறது என்பது பாரம்பரிய மருத்துவம்...


கற்பூரம் மிகச்சிறந்த வலி நிவாரணி... 
கை , கால், இடுப்பு - என உடலின் எந்த பகுதியில் வலி இருந்தாலும்
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைக் கரைத்துத் தேய்க்க வலி குறையும்...

பக்குவப்படுத்தப்படாதது தான் பச்சைக் கற்பூரம்..

இனிப்புகளில் ஓரளவுக்குப் பயன்பாடு ஆகின்றது..

பக்குவபடுத்தப்பட்ட  கற்பூரம் ஹிந்துக்களின் பூஜை ஆரத்திகளில் இடம் பெறுவது..

இது நச்சுத் தன்மை உடையது..

இதன் கூடவே நம்முடைய ஆட்கள் தங்களது கை வரிசையைக் காட்டியதும் திகுதிகு எனப் புகை.. தட்டுகளில் வழிந்த மெழுகு திரவம்.. 

தற்போது
ஆலயங்களில் கற்பூரம் பயன்படுத்துவது என்பது மிகவும் குறைவு.. முழுமையாகத் தடை என்று ஏதும் இல்லை..  
வெளிச் சந்நிதிகளில் அவரவர் விருப்பம்.. 

மூலஸ்தானத்தில் உள் சந்நிதிகளில் கற்பூர தரிசனத்திற்குப் பதிலாக தீப தரிசனம் தான்.. 

இன்றைய கோயில்களில்
இங்கே சூடம் ஏற்றாதீர் என்ற அறிவிப்புகள் சர்வ சாதாரணம்...

அதிக விலையுடைய சுத்தமான கற்பூரத்தை வாங்கிக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை.. 

இப்படியாக நமது
வழிபாட்டினைக் கெடுத்தவை  புறக்காரணிகளே..

ஆனாலும் கோயிலுக்கு அருகிலுள்ள அங்காடிகளில் கிடைப்பன எல்லாம் கலப்படக் கற்பூரமே..

இந்நிலையில் -
கலப்படக் கற்பூரத்திற்கும் வழியின்றிக் கிடக்கின்ற கோயில்கள் பலவாகும்..

அபிஷேக ஆராதனையில் ஷோடஷ உபசாரத்தில் பஞ்ச முகமும் ஒன்று.. இது முழுக்க முழுக்க  கற்பூர தீபம் ஆகும்..

இது இப்போது எண்ணெய் தீபம் ஆகி விட்டது... அடுக்கு தீபத்தின் உச்சியில் கூட எண்ணெய்த் திரி வைக்கப்படுகின்றது..


யாக சாலைகளிலும் கும்பாபிஷேக மகா மங்கல ஆரத்தியிலும் தான் கற்பூர தீபம் தரிசிக்கக் கிடைக்கின்றது..

கற்பூரம், கரித்துண்டு, வாழை மட்டை - என்று மாணாக்கருடைய திறனை மதிப்பிடுகின்ற விதமும் நம்மிடையே இருந்தது..

தீ அருகில் இருக்க எளிதில் பற்றிக் கொள்கின்ற கற்பூரத்தைப் போன்றவன் முதல் நிலை மாணாக்கன்..

தணலில் இட்டு மூட்டினால்  பற்றிக் கொள்கின்ற கரித் துண்டினைப்  போன்றவன் இடை நிலை மாணாக்கன்..

கொழுந்து விட்டு எரிகின்ற தீக்குள் இட்டாலும் பற்றிக் கொள்ளாத வாழை மட்டையைப் போன்றவன் கடை நிலை மாணாக்கன்...

இப்போது இதையெல்லாம் பேசிப் பயன் இல்லை..

இந்தோனேசியத் தீவாகிய சுமத்ராவின் பாருஸ் என்ற மேற்கு கடலோர துறைமுகத்திற்கு அயல்நாட்டு வர்த்தகர்கள் கற்பூரம் வாங்க வந்ததால் - இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய காலத்திலேயே அரேபியாவில்  அறியப்பட்டிருந்தது என்று விக்கி கூறுகின்றது...

கற்பூரம் எனும் சொல்லின் ஆங்கிலச் சொல் Camphor .. 

இச் சொல் பிரெஞ்சு சொல்லான camphre என்பதில்இருந்து வந்தது..

இந்த (இடைக்கால) இலத்தீன் 
சொல் camfora என்பதில் இருந்தும், 

சமஸ்கிருத சொல்லாகிய 
கற்பூர் என்பதில் இருந்தும்
அரபியச் சொல்லாகிய
kafur என்பதில் இருந்தும், 
 பெறப்படுகிறது என்று விக்கி  விவரிக்கின்றது...
(நன்றி : விக்கி)

அதெல்லாம் இருக்கட்டும்... சூடம் என்ற பெயர் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை..

இப்படியாக சுமத்ராவின் கற்பூரத்தை மேலைத்திசை நாடுகள் அறிந்திருந்தாலும் கற்பூரத்தை உயர்ந்ததொரு இடத்தில் வைத்து மகிழ்ந்தது நமது பாரத தேசமே!..

ஏதொன்றும் எஞ்சி நிற்காமல் பூரணமாகப் பொலிந்து இயற்கையுடன் ஒன்றி விடுவதே கற்பூரத்தின் தத்துவம்..

சமயம் சார்ந்த மரபினர் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பூரவல்லி என்றும் கற்பூர பாண்டியன் என்றம் பெயரிட்டு மகிழ்ந்த காலமும் நம்மிடையே இருந்தது..
 

கருப்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்து இருக்குமோ,
மருப்பொசித்த மாதவன் தன்
வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெண்சங்கே!.. 1
நாச்சியார் திருமொழி 567

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கற்பூரத்தின் சிறப்புக்களை பற்றிய பதிவின் வரிகளை மிக ரசித்துப் படித்தேன். அந்தகாலத்தில் அம்மா வீட்டில். உமிக்கரியோடு சிறிது நல்ல கற்பூரத்தை கலந்து காலை, மாலையென பற்களை சுத்தபடுத்தியது மறக்க இயலாத அனுபவங்கள். அந்த நல்ல கற்பூரங்கள் இப்போது கிடைப்பதில்லை. (நல்ல பற்பசைகளும் கிடைப்பதில்லை அது வேறு விஷயம்.) எல்லாம் காலத்தின் மாற்றங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான மேல் விவரங்கள்...

      அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  2. பதிவு மணக்கிறது என்று சொல்லலாம். தெய்வீக மணம். நம் மக்கள் கலப்படம் செய்யாத பொருள்தான் எது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாபாரம் எல்லாவற்றையும் கெடுத்து விட்டது..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. நாளை வெள்ளி ஒரு கற்பூரம் வெளிவரும்!!! இன்று இங்கே.. நாளை .அங்கே...!

    பதிலளிநீக்கு
  4. கற்பூரம் - இன்றைக்கு கிடைப்பது அனைத்தும் கலப்படம்! :(

    தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. இன்றைக்கு எல்லாமே கலப்படம் தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்

      நீக்கு
  5. கற்பூரம் நல்ல பல தகவல்களுடன்.

    சிறுவயதில் எங்கள் வீட்டில் விளை கற்பூரம் என வாங்கி வந்து வெட்டி கண்ணாடிப் போத்தலில் இட்டு மூடி வைத்திருப்பார்கள் கோவில் போகும்போதும் வீட்டுத் தேவைக்கும் எடுத்துக் கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தகவல்கள் சிறப்பு

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி

      நீக்கு
  6. கற்பூரம் பற்றிய செய்திகள் அருமை.
    இப்போது கற்பூரம் கலப்படம் தான்.
    முன்பு காற்றில் கரைந்து விடும் கற்பூரத்தை பாட்டில் போட்டு இரண்டு மிளகையும் அதோடு போட்டு வைப்பார்கள் அம்மா.
    கண் திருஷ்டிக்கு சுற்றி வைக்க கற்பூரம், ஆரத்திக்கு என்று கற்பூரம் இப்போதும் வீடுகளில் பயன்படுத்த படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண் திருஷ்டிக்கு கற்பூரம் சுற்றுவதே சிறப்பு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..