நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 08, 2024

திருக்கோடிகா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 23
வியாழக்கிழமை

திருக்கோடிகா
(திருக்கோடிகாவல்)


இறைவன்
ஸ்ரீ கோடீஸ்வரர்
ஸ்ரீ கோடிகா நாதர்


அம்பிகை
ஸ்ரீ திரிபுரசுந்தரி

தல விருட்சம் பிரம்பு
தீர்த்தம் ஸ்ருங்க தீர்த்தம் காவிரி 


' கா '  எனக் குறிக்கப்பட்ட திருவூர்கள் ஐந்தனுள் ஒன்று.. 

ஏனைய நான்கு தலங்கள் :- 
திரு ஆனைக்கா, திரு நெல்லிக்கா
திரு குரக்குக்கா, திரு கோலக்கா..

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.. 


இத்தலத்தின் புராதனத் திருப்பெயர் வேத்ர வனம் என்பதாகும்.. வேத்ரம் எனில் பிரம்பு..

இத்தலம் -
தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி வடகரையில்   முப்பத்தேழாவது திருத்தலம் ஆகும்..


(கல்லணை பூம்புகார் சாலையில்) கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கதிராமங்கலத்தில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் உள்ளது இக்கோயில்..


இத்தலம் மூன்று கோடி முனிவர்களால் வழிபடப்பட்டதாகும். இக்கோயில் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியாராகிய செம்பியன் மாதேவியாரால் கற்றளியாக எழுப்பப்பட்டது..

இக்கோயிலின் உள் மண்டபத்தில் வலப்புறம் சித்ரகுப்தரும், இடப்புறம் எமதர்மனும் எழுந்தருளி உள்ளனர்...
சநைச்சரனும் யமதர்ம ராஜனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர்.

திருக்கடவூரில் சம்ஹாரம் செய்யப்பட்ட யமன் உயிர் பெற்றெழுவதில்  விநாயகர் பேருதவி செய்ததால்  இத்தலத்தில் ஸ்ரீ கரையேற்று விநாயகர் எனத் திருப்பெயர்.. 

யமன் மாண்டதனால் பூபாரம் தாளமுடியாமல் போகவே தேவர்கள் ஆற்று மணல் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபட்டனர் என்பர்..

இத்தலத்திற்கு வந்தவர்களை யமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்பதும் திருக்கோடிக்கா எனும் ஒலியைக் காதால் கேட்டவர்களைக்  கண்டிக்கவோ தண்டிக்கவோ  யமனுக்கு உரிமை இல்லை என்பதும், இவ்வூரின் மண்ணை மிதித்தவர்களைக் கூட யமன் நெருங்கக் கூடாது என்பதும் யம தர்ம ராஜனுக்கு இடப்பட்டிருக்கின்ற
கட்டளைகள்...

இக்கோயிலில் வழிபாடுகளை முடித்து விட்டு வைகுந்தம் செல்ல வேண்டும் என்று முனைந்த துர்வாச முனிவருக்கு  அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வைபவமும் உள்ளது..


இன்றும் புரட்டாசி இரண்டாம் சனிக் கிழமையில் ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாளாகத் திருக்கோலம் கொள்கின்றாள் அன்னை திரிபுர சுந்தரி..

இத்தலத்தில் நவக்கிரக பிரதிஷ்டை  கிடையாது..

மூன்று கோடி முனிவர் தவம் செய்த தலம் ஆதலால் இத்தலத்தில் ஒருதரம் சொல்லப்படுகின்ற பஞ்சாட்சரம் ஒரு கோடியாக உருப் பெறுவதாக ஐதீகம்..

ஜென்ம ஜென்மமாய் திரண்டிருக்கும் பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே திருத்தலம்  - 
ஸ்ரீ திரிபுரசுந்தரியுடன்  ஸ்ரீ கோடீஸ்வரர் உறைகின்ற திருக்கோடிகா..

இன்றுநன்று நாளைநன்று
  என்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப்
  போகவிட்டுப் போதுமின்
மின்தயங்கு சோதியான்
  வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான்
  கோடிகாவு சேர்மினே.. 2/99/1
-: திருஞானசம்பந்தர் :-

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திரு ஆரூர்த் திருமூலத் தானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.. 6/81/2
-: திருநாவுக்கரசர் :-
**
 பதிகப் பாடல்கள் நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான விவரங்கள். வணங்கிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில தினங்களாகவே மனதுக்குள் திருக்கோடிகா பற்றிய நினைவு...

      அதனால் தான் இந்தப் பதிவு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அந்த ஊருக்குள் மண்ணை மிதித்தாலே யமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது....   

    அதெல்லாம் அந்தக் காலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் அற்புத வரப் பிரசாதங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. சிறப்பான தலம் குறித்து அறிந்தேன். காவிரியின் கரையில் தான் எத்தனை எத்தனை திருத்தலங்கள்... அத்தனையும் தரிசிக்க ஒரு ஜென்மம் போதாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க ஒரு ஜென்மம் போதாது.///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. திருக்கோடிக்கா அற்புதமான பெயர். வரலாறுகள் அறிந்தோம்.

    ஸ்ரீகோடீஸ்வரர் ஸ்ரீ திரிபுரசுந்தரியை வணங்கி நிற்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி மாதேவி..

      நீக்கு
  5. எவ்வளவு காலமாயிற்று இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டு. திருஞானசம்பந்தரின் சந்த விருத்தம் மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை
      அருமை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி நெல்லை..

      நீக்கு
  6. திருக்கோடிக்கா கோவில் தல வரலாறு அருமை.
    ஸ்ரீ கோடீஸ்வரர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அனைவருக்கும் நலங்களை அருள வேண்டும். பாடலை பாடி வணங்கி கொண்டேன். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஸ்ரீ கோடீஸ்வரர்
      ஸ்ரீ திரிபுரசுந்தரி அனைவருக்கும் நலங்களை அருள வேண்டும்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..