நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2024

திருக்கொட்டையூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 28
செவ்வாய்க்கிழமை

திருக்கொட்டையூர்
(கொட்டையூர்)


இறைவன்
ஸ்ரீ கோடீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ பந்தாடுநாயகி

தலவிருட்சம் ஆமணக்குச் செடி, வில்வம்..
தீர்த்தம் காவிரி, அமிர்த கூபம்


தேவாரப் பதிகம் பெற்ற தலங்களில் சோழ நாட்டின் காவிரி வடகரையில் நாற்பத்து நான்காவது தலம்..

இத்தலத்தில்
ஆமணக்குச் செடியின் கீழ் சிவலிங்கம் வெளிப்பட்டதென்பது ஐதீகம்..

திருநாவுக்கரசர் திருப்பதிகம் அருளிச் செய்துள்ளார்..

பத்ரயோகி என்ற முனிவர், தான் இழந்த தவ பலத்தை திரும்பப் பெறுவதற்காக, கோடி சிவலிங்க தரிசனத்தைக் காண்பதற்குத் தவம் இருந்து விரும்பியபடி கோடி தரிசனம் பெற்றார்..

ஸ்ரீ ஆத்ரேய மகரிஷி (ஹேரண்டர்) தவம் செய்த தலம்.. 

ஆதிசேஷன் ஒருமுறை பாதாளத்தில் இருந்து பூமியைத் துளைத்துக் கொண்டு திருவலஞ்சுழியில் மேலே வந்தான்..  அப்போது ஏற்பட்ட பள்ளத்தினுள் காவிரி விழுந்து மறைந்தாள்..

காவிரியாளை மீட்டெடுக்க ஒருவர் தம்மைத் தியாகம் செய்ய வேண்டும் என்று அசரீரி எழுந்த போது ஹேரண்ட மகரிஷி சற்றும் தாமதிக்காமல் பிலத்துவாரத்தினுள் (ஆழம் அறிய முடியாத பள்ளம்) குதித்து பிலத்தினுள் மறைந்த காவிரியாளை திருவலம்புரத்தில் மீட்டுக் கொணர்ந்தார்..

திருவலஞ்சுழி கொட்டையூர் திருவலம்புரம் கோயில்களில் ஹேரண்ட மகரிஷிக்கு திருமேனிகள் உள்ளன..

சுயம்புமூர்த்தியாகிய சிவலிங்கத்தின் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்புகின்றது.

இத்தலத்தின்
திருசசுற்றில் கோடி விநாயகர் எனவும்
வள்ளி தெய்வானையுடன் கூடிய கோடி சுப்ரமணியர் எனவும்  கோடி சண்டிகேஸ்வரர் எனவும் சிறப்புப் பெயர்களுடன் திகழ்கின்றனர்..

கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே 
கும்பகோணம் மேலக் காவிரி எனும் பகுதியை அடுத்து கொட்டையூர்  அமைந்துள்ளது..


கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.. 6/73/1

செந்தா மரைப்போது அணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய் தயிர்தேன் ஆடி கண்டாய்
மந்தாரம்  உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.. 3


பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்
எண்திசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்
கோடீச்சரத் துறையுங் கோமான் தானே..4
-: திருநாவுக்கரசர் :-
 
நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. பந்தாடுநாயகி...   பெயரே வித்தியாசமாக இருக்கிறது.  அதுபற்றி ஏதாவது சொல்லி இருப்பீர்கள் என்று பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயிலில் தரிசனம் செய்த பின் எழுதுகின்றேன்...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கொட்டையூர் கேள்விப்பட்டிருக்கிறேன்.  தாண்டிச் சென்றிருக்கிறேன். பார்த்ததில்லை.   ஹேரண்ட மகரிஷி பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வருடங்களுக்கு முன்பாக எழுதியுள்ளேன்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. அங்குள்ள சிவனின் சிரஸில் (கங்கை) நீர் இன்றளவும் அரும்புவது காண ஆவல். வியப்பான தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை முத்துமாரி அம்மனுக்கு வியர்ப்பது போல அங்கேயும் அதிசயம் போல...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. திருக்கொட்டையூர் கோடீஸ்வரர் தரிசனம் பெற்றோம். இப்பொழுதுதான் கேள்விப் படுகிறேன் .

    கங்கைநீர் கசிவது அற்புதம்.

    பதிலளிநீக்கு
  6. கொட்டையூர் தல வரலாறு அருமை.
    ஹேரண்ட முனிவர் வரலாறு காவிரி மீண்டு வந்த கதை அருமை.

    தேவார பதிகத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..