நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 20, 2023

கார்த்திகை 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 4
திங்கட்கிழமை
முதல் சோம வாரம்

சிவாலயங்களில்
சங்காபிஷேகம்

இன்றைய 
திருத்தலம்

திரு ஐயாறு


இறைவன்
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
ஐயாறப்பர்


அம்பிகை
ஸ்ரீ தர்மசம்வர்த்தனி
அறம் வளர்த்த நாயகி

தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
காவிரி, சூர்ய தீர்த்தம்

காசிக்கு நிகரான தலம்..
பித்ரு தோஷம் நீக்குகின்ற தலம்..

தெற்குக் கோபுர வாசல் துவார பாலகர் ஏழைச் சிறுவனுக்கு இரங்கி யமனை விரட்டியடித்ததால் சிவ அம்சம் கொண்டு திகழ்கின்றார்.. இதனால் இவருக்கு முன் நந்தி விளங்குகின்றது..

அப்பர் ஸ்வாமிகள் திருக் கயிலாய தரிசனம் கண்டது இங்கு தான்..

மாதந்தோறும் அமாவாசை அன்று ஸ்வாமியும் 
அம்பிகையும் காவிரி புஷ்ய மண்டபம் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

சித்திரை - விசாகத்தில் சப்த ஸ்தானத் திருவிழா சிறப்பு..

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 38


கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே..1 

பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 2

உடைதரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர வருளும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 3


தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்றும் இன்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்க ளேத்தும் ஐயன் ஐயாற னாரே.. 4

வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையி னுரிவை வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 5

சங்கணி குழையும் வைத்தார் சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 6


பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியி னுரிவை வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 7

ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமு மரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 8


பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 9

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே.. 10
-: திருநாவுக்கரசர் :-


திருநாவுக்கரசர் 
திருவடிகள் போற்றி
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. இந்தத் தலம் செல்லும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. ரொம்பவே ஆர்வம் எனக்கு இங்கு செல்லவேண்டும் என்று. அடுத்த முறை பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஒருமுறை...
      வாழ்த்தட்டும் தலைமுறை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  2. அப்பர் தேவாரம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
    படங்களும் செய்திகளும் அருமை.திருவெண்காடு, திருவிடை மருதூர் , மாயவரம் , மதுரையில் ஒவ்வொரு சோமவாரமும்
    சங்காபிஷேகம் பார்த்தது நினைவுகளில் வந்து போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தேவாரம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்..///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. சங்காபிஷேஹம், அன்னாபிஷேஹம் எல்லாம் மதுரையோடு போயாச்சு. இந்தத் திருவையாறு கோயிலுக்குச் சில முறை வந்திருக்கேன். ஆனாலும் மனதில் என்னமோ தரிசனம் முற்றுப் பெறாமல் இருப்பது போன்ற உணர்வு. இப்போவும் ஒவ்வொரு முறை பரவாக்கரை செல்லும்போதெல்லாம் திருவையாறு வழியாகவே செல்கிறோம். ஆனால் இறங்கிப் பார்த்தது இல்லை. சில வருடங்கள் ஆகிவிட்டன இந்தக் கோயிலுக்குப் போய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      மேலதிக தகவல்களும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா ..

      நீக்கு
  4. நேற்றைய என் கருத்து போகவே இல்லை போல!

    இன்று என்று போட்டிருந்த கருத்தை நேற்று என்று மாற்றுகிறேன்.

    நேற்று சிவன் கோயிலில் சிறப்பான அலங்காரம், கொடிமரத்தைச் சுற்றி மேசைகள் போடப்பட்டு பெண்கள் நெய் விளக்கு எல்லாம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். என்ன விசேஷமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். கோமதிக்கா சொன்னாங்க இங்கு பதிவிலும் பார்க்கிறேன். (பார்த்தேன்) - தேவாரம், படங்கள் எல்லாமே சிறப்பு.

    எனக்கு இப்படியான விஷயங்கள் பூஜ்ஜியம். பழக்கமும் இல்லை. இப்பவும் ஏறாது! பிரார்த்தனை மட்டுமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ ..

      நீக்கு
  5. சோமவார நாளில் ஐயாரப்பர் தரிசனம் விசேடம். தரிசித்து மகிழ்ந்தோம்.

    எனது தாயார் இருந்தபோது சோமவாரவிரதம் இருந்தவர் சிவன் கோவில் சென்று வணங்கி இரவுதான் சாப்பிடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோம வார தரிசனம் சிறப்பு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..