நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 31
புதன் கிழமை
இன்று
ஆடி அமாவாசை..
அப்பர் பெருமானுக்கு கயிலாயத் திருக்காட்சி அருளப் பெற்ற நாள்..
காசியம்பதிக்கு சமமானதாகச்
சொல்லப்படும் ஆறு தலங்களுள்
இரண்டாவது திருத்தலம்
விண்கொண்ட வெண்காடும் ஐயாறும் இரு
கண்கொண்ட மயிலாடு துறையோடு இடைமருது
மண்கொண்ட சாய்க்காடும் வாஞ்சியமும் தமிழ்ப்
பண்கொண்ட காசிக்கு இணையென்றே பாடு..
திரு ஐயாறு
இறைவன்
ஸ்ரீ ஐயாறப்பர்
அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தீர்த்தம்
காவிரி, சூரிய தீர்த்தம்
தல விருட்சம் வில்வம்
பஞ்சநதீஸ்வரம்..
காவிரியின் வடகரையில் உள்ள இக்கோயிலில் தெற்கு வாசலே பிரதானம்..
ஸ்ரீ ஆட்கொண்டார் ஸ்வாமி |
ஏழைச் சிறுவனை விரட்டி வந்த யமனை துவாரபாலகர் சிவாம்சம் பெற்று விரட்டியடித்து ஆட்கொண்டார் என சந்நிதி கொள்ள நந்தி வீற்றிருக்கின்றார்..
இந்த சந்நிதிக்கு எதிரே தான் கலிய நாயனார் அமைத்த குங்கிலியக் குண்டம்.. இங்கு குங்கிலிய தூபம் இடுவது சிறப்பு..
ஐயாறப்பர் அருகில்
அன்னை அறம் வளர்த்த நாயகி.. முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றுவதாக ஐதீகம்..
இத்தலத்தில் ஸ்வாமி, அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியவை..
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங் களிறு
வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்.. 4/3/1
படாத பாடுபட்டு திருக் கயிலைக்கு சென்ற அப்பர் பெருமானுக்குத் திருக்காட்சி அருளப் பெற்ற தலம்..
காவிரியின் தென் கரையை வந்தடைந்த சுந்தரர் காவிரியில் வெள்ளப் பெருக்கினைக் கண்டு திடுக்கிட்டு அடிகளோ என்று ஓலமிட, அவருடன் சேர்ந்து பிள்ளையாரும் சேர்ந்து ஓலமிட்டு அருளியதாக மரபுச் செய்தி..
கும்பகோணம் கல்லணை மற்றும் அரியலூர் வழியாக திரு ஐயாற்றுக்கு வரலாம் என்றாலும் தஞ்சையைக் கடந்து வருவதே சிறப்பு..
ஏனெனில் இந்த வழியில் தான் - வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி எனும் ஐந்து ஆறுகளும்..
ஐந்து ஆறுகளைக் கடப்பதே புண்ணியம்..
மூவரும் கடந்த வழி இதுவே..
ஆயினும்,
ஆறு என்பதற்கு வழி என்ற பொருள் கொண்டு ஐம்புலன்கள் என்று தெளிவு பெறுவதும் சிறப்பு..
இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஐந்தும்
நாவுக்கரசர் திருப்பதிகம் பன்னிரண்டும் சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன..
நந்தீசன் திருமணம் |
நந்தீசர் பிறப்பும் திருமணமும் தொடர்ந்து
ஏழூர் பல்லக்கு எனும் திருவிழாவும் இத்தலத்தின் சிறப்புகள்..
தஞ்சையில் இருந்து திரு ஐயாற்றுக்கு பேருந்துகள் இயங்குகின்றன..
பலமுறை இத்தலத்தை தரிசித்திருக்கின்றேன்..
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திரு ஐயாறே.. 1/130/3
-: திருஞானசம்பந்தர் :-
கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :-
பரவும் பரிசொன் றறியேன்நான்
பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக் கோட்டத் தையா றுடைய அடிகேளோ!..
7/77/1
-: சுந்தரர் :-
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திரு ஐயாறா போற்றி..
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
சுவாரஸ்யமான விவரங்கள். நமச்சிவாய என்று சொல்லி நன்மைகள் யாவையும் பெறுவோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
அருமை ஐயா...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
திரு ஐயாறு - நல்ல விவரங்கள் துரைஅண்ணா.
பதிலளிநீக்குசேவல்கள், ஆனைகள் படம் அழகு
கீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
பதிகங்களை பாடி கயிலையை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குதிரு ஐயாறு கோவில் விவரங்கள், பதிகங்கள் , படங்கள் எல்லாம் அருமை. அறம் வளர்த்த நாயகி அனைவரையும் காக்க வேண்டும்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கோவிலைப்பற்றி பல ஸ்வாரஸ்யமான விபரங்களை தந்துள்ளீர்கள். திருவையாறு ஐயாரப்பரையும், அன்னை அறம் வளர்த்த நாயகியையும் இன்று மனங்குளிர தரிசித்து கொண்டேன் . பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருவையாறு ஐயாரப்பரையும், அன்னை அறம் வளர்த்த நாயகியையும் இன்று மனங்குளிர தரிசித்து கொண்டேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நல்ல கூட்டமாக இருந்திருக்கும். இங்கே அம்மாமண்டபத்தில் தாங்கலை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி அக்கா..