நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
திருநெய்த்தானம் கோயிலில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைப் பதிவு செய்வதில் மகிழ்ச்சி..
திருவிழா நாளில் அம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம்.. ஆயினும் படம் எடுக்க அனுமதியில்லை..
திருத்தலம்
திருநெய்த்தானம்
இறைவன்
ஸ்ரீ நெய்யாடியப்பர்
அம்பிகை
ஸ்ரீ பாலாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
காவிரி
பருத்தி சேலையாய்க் காய்த்தது என்றொரு சொல்வழக்கு எங்கள் பகுதியில்..
அதுபோல,
காமதேனு பால் சுரந்து வழிபட்டபோது அந்தப் பால் - நெய்யாகவே ஸ்வாமியின் மீது வழிந்ததாக ஐதீகம்..
நெய் என்பது மிக உயர்ந்த நிலை.. அதற்கு மேல் ஒரு மாற்று இல்லை.. நேரிடையான சரணாகதி தத்துவம்..
பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்!..
- என்பது அப்பர் ஸ்வாமிகளின் திருவாக்கு..
அப்படியான உண்மையை உணர்த்துகின்ற தலம்..
ஸ்வாமிக்கு நெய் அபிஷேகத்தைத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரில் அபிஷேகம் செய்யப்படும் என்பது குறிப்பு..
***
அங்கே
திருமழபாடியில்
நந்தீசன் திருக்கல்யாணமாகட்டும்..
இங்கே திரு ஐயாற்றில் தொடங்கி திரு ஐயாற்றில் நிறைவு பெறும் பல்லக்கு விழாவாகட்டும்..
வழியெல்லாம் குளிர்ந்த நீர், பானகம், மோர், சித்ரான்னங்கள், இலையிட்டு விருந்து என்றெல்லாம் முக மலர்ச்சியுடன் உபசரித்தார்களே - அவர்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்வது!?..
திருக்கண்டியூர் வீரட்டத்தில் சிவத்தொண்டர்கள் கூடி நின்று காலையில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் சுடச்சுட கலவை சாதமும் குழம்பும் வழங்கினார்கள்...
பொருளாதாரச் சிக்கல் நிறைந்திருக்கும் இந்நாளில் குறைந்த பட்சம் நூறு பேருக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுப்பதென்றாலே எவ்வளவு பிரயாசைப்பட வேண்டியதாய் இருக்கின்றது!..
ஐநூறு பேருக்கு ஆயிரம் பேருக்கு என்று சமைப்பதும் அதை முக மலர்ச்சியுடன் பரிமாறுவதும்..
அடடா!...
பல்லக்குகள் ஊரைக் கடந்து சென்ற பின்னும் பின்னால் மெதுவாக நடந்து வருவோர்க்கு நீரும் உணவும் அளித்த மக்களின் மாண்பினை என்னென்று சொல்வது!..
திருக்கண்டியூரில் சிவநேசச் செல்வங்களாகிய குடும்பத்தினர் கற்கண்டு பால் கொடுத்தார்கள்.. அது நமக்குக் கிடைத்ததே பெரும்பேறு..
இப்படித்தான் - கடந்த சிவராத்திரியன்று மூன்றாம் காலத்தில் தஞ்சை
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் காய்ச்சிய பாலும் நான்காம் காலத்தில்
ஸ்ரீ சிவாநந்தீஸ்வரர் கோயிலில் தேநீரும் கொடுத்தார்கள்..
மனிதர்கள் மட்டுமா!..
ஒன்றிரண்டு பட்டறை வண்டிகளைத் தவிர மற்றவை மாடுகளாலேயே இழுக்கப்பட்டன..
பல்லக்குகள் ஆறுகளைக் கடக்கும் இடங்களில் பாலங்கள் இன்னும் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்..
திருப்பழனத்தை அடுத்தும் திருப்பூந்துருத்தியை அடுத்தும் ஆறுகளைக் கடக்கும் போது காளைகளுக்குக் கஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக பட்டறை வண்டியை டிராக்டருடன் இணைத்து மெதுவாக இழுக்கவும் ஆட்கள் உந்தித் தள்ளி விடவுமாக கரையேறியிருக்கின்றன பல்லக்குகள்.. ஆற்று மணல் சுடாமல் இருப்பதற்காக வைக்கோலை நடை பாதையாக பரப்பியதும் பெரும் தர்மம்..
இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகின்றோம்!..
தெரியவில்லை..
ஆயினும்,
" இப்படியான அன்பின் கட்டமைப்புக்குள் எம்மையும வைத்தனையே.. இறைவா!.. "
- என்று தலைக்கு மேல் கை கூப்பி நெக்குருகி நிற்கின்றோம்..
" அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.. "
- எனும் திருக்குறளே காதினில் கேட்கின்றது..
இவ்வண்ணமாகிய
தொண்டர்களின் இல்லங்களில் திருமகள் முகம் மலர்ந்து உவந்து உறைய வேண்டும்!.. என்ற வேண்டுதலை -
தொண்டருக்கும் தொண்டரான அப்பர் பெருமான் திரு ஐயாற்றுத் திருப்பதிகத்தில் குறித்தருள்கின்றார்..
*
எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச் சேவடியென் மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/7..
-: திருநாவுக்கரசர் :-
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
இன்றைய பதிவில் சொல்லப்பட்டிருக்கும் நீர்மோர், பானகம், உணவு, நீர் தானங்கள் குறித்து படிக்கையில் பிரமிப்பு ஏற்படுவது உண்மை. மனமாச்சர்யங்கள் இன்றி வருவோர் எல்லோருக்கும் முகமலர்ச்சியுடன் தானம் செய்வது பெரிய புண்ணியம். மாடுகளுக்கு வண்டி இழுக்கவும், கால் சுடாமல் இருக்கவும் வழி செய்ததும் பெரிய செயல்கள். படங்கள் வழக்கம் போல சிறப்பு. நல்ல பதிவு.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகையும் அன்பான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி
அழகிய படங்களுடன் விவரங்கள் நன்று.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குஅருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் சிவாய நம..
நீக்குஅருமையான மனிதநேயம் மிக்க செயல்களை சொன்ன பதிவு. சிரப்பான பதிவு. படங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குவிழாக்கள் மக்கள் மன மகிழ்ச்சியோடு செய்வதும் பிரருக்கு உதவுவதும் தான் நல்ல சேவை. மகேசனுக்கு பிடித்த செயல். அனைவரும் நலமாக வாழ்க வளமுடன்
நான் எப்போதும் சொல்லும் தேவாரம். படித்து இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
நன்றி.
மக்கள் பணியே மகேசன் பணி..
நீக்குதங்கள் வருகையும் அன்பான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
சிறப்பான பதிவு. பிறருக்கு உதவுவதும் நல்ல விஷயம்.
பதிலளிநீக்குஅண்ணா, பதிவை ரசித்து வாசித்தேன். படங்கள் நன்று.
பதிலளிநீக்குஆற்றைக் கடப்பது பற்றி முன்பு கருத்தில் நான் கேட்டிருக்க.தெரிந்து கொண்டேன் இன்னும் பாலம் அமைக்கவில்லை என்று,
மாடுகள் கஷ்டப்படக் கூடாது என்று டிராக்டர், சூடு தெரியக் கூடாது என்று வைக்கோல் ஆஹா....நேயம்.
மக்கள் நீர் மோர், தண்ணீர் மற்றும் உணவு விநியோகம் அதுவும் மனம் உவந்து மகிழ்ந்து கொடுத்தது என்னே சிறப்பு! மக்களின் மனது இன்னும் பசுமையாகத்தான் இருக்கிறது சந்தோஷப்படுவோம் வாழ்த்துவோம்.
கீதா
மக்களின் மனம் இன்னும் பசுமையாகத் தான் இருக்கின்றது..
நீக்குதங்கள் வருகையும் அன்பான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நலம் வாழ்க..
ஏழூர் பல்லக்கு திருவிழா பற்றிய முந்தைய பதிவுகளையும் படங்களையும் கண்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குஇன்றைய நெய்த்தானம் கோயில் படங்களும் நன்றாக உள்ளன. மக்கள் சேவையே மகேசன் சேவை. இறைவன் ஐயாறப்பனும் அம்மையும் அவர்கள் எல்லோருடனும் துணை இருப்பார்கள்!
துளசிதரன்
மக்கள் சேவையே மகேசன் சேவை..
நீக்குதங்கள் வருகையும் அன்பான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..
நலம் வாழ்க..
மக்களுக்குச் சேவை செய்வோரின் பரந்த மனத்தைக் குறித்துக் குறிப்பிட்டதற்குப் பாராட்டுகள். இதை எல்லாம் பார்க்கையில் இன்னமும் மனித நேயம் மரிக்கவில்லை என்பது புலனாகிறது. படங்கள் எல்லாமும் எப்போதும் போல் சிறப்பு.
பதிலளிநீக்குசிறப்பான படங்கள். தொண்டர்களின் செயல் அனைத்தும் சிறப்பு. எல்லோருக்கும் உணவு, குடிநீர், நீர்மோர், பானகம் என வழங்குவது லேசான காரியம் அல்ல!
பதிலளிநீக்கு