நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 14, 2022

உலகநீதி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உலக நீதி 
(பகுதி - 2)


கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.. 7

விளக்கம்:

யோசித்துத் திட்டமிடாமல் எந்தச் செயலையும் செய்யக் கூடாது. நமது நஷ்டங்களை பிறரிடம் சொல்லக்கூடாது. போர்க்களத்திற்கு வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது. ஊர்ப் பொது நிலத்தில் வசிக்கக் கூடாது. முதல் மனையாள் இருக்கும் போது இரண்டாவதாக மணம் புரியக் கூடாது. எளியவர் எவருடனும் பகை கொள்ளக் கூடாது. 

பறவைகள் சூழ்கின்ற தினைப் புனத்தைக் காவல் செய்யும் ஏழைப் பங்காளன் குமரவேள் பாதத்தைப் போற்றுவாய்  நெஞ்சே!..

சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.. 8

விளக்கம்:

தகாத இடங்களுக்குப் போகக் கூடாது. ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது. எல்லாரையும் பற்றி கோள் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. நமக்கு வேண்டியவர்களிடம் அலட்சியமாகப் பேசக்கூடாது. பெருமை தரும் காரியங்களைத் தவிர்க்கக் கூடாது. கெட்ட செயல்களுக்குத் துணை போகக் கூடாது.  

பெருமையுடைய குறவள்ளி மணவாளன் மயில் வாகனனாகிய முருகப் பெருமானைப் போற்றுவாய் நெஞ்சே!..

மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்அளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே..9

விளக்கம்:

மண்ணிலே வாழ்ந்து கொண்டு - மனம் போனபடி ஒரு சார்பாக எந்தத் தீர்ப்பும் சொல்லக் கூடாது. மனம் சலித்து எவரோடும் சண்டை செய்யக் கூடாது. நமது துயரத்தை எவரிடமும் சொல்லி அழக் கூடாது. பார்க்காத ஒன்றைப் பார்த்ததாகக் கற்பனை செய்து பொய் சொல்லக் கூடாது. பிறர் மனம் புண்படப் பேசக் கூடாது. கோள் சொல்லி அலைபவரோடு சேரக்கூடாது. 

உலகளந்த திருமாலின் தங்கையான உமையவளின் மைந்தன் மயிலேறும் தலைவனாகிய நமது முருகப் பெருமானைப் போற்றுவாய் 
நெஞ்சே!..


மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே.. 10

விளக்கம்:

வீண்பேச்சு பேசி வலுச் சண்டை தேடுபவரோடு சேரக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. தந்திரமாய்ப் பேசிக் கலகம் செய்யக் கூடாது. தெய்வத்தை மறக்கக் கூடாது. இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது. நம்மை ஏசிய உற்றாரிடம் உதவி கேட்கக் கூடாது.

குறி சொல்லும் குறவர் மகள் வள்ளி மணவாளனாகிய முருகப் பெருமானின் நாமத்தைக் கூறுவாய் நெஞ்சே!..

கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டை மேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.. 11

விளக்கம்:

ஒரு குடும்பம் பிளவுபடுமாறு  கெடுக்கக் கூடாது. 
அகங்காரத்துடன் உச்சிக் கொண்டையில் பூவை சூட்டிக் கொள்ளக் கூடாது. அவதூறு சொல்வதையே வேலையாகக் கொள்ளக் கூடாது. தீயவர் நட்பு கூடாது. தெய்வத்தை இகழக் கூடாது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெரியோரை வெறுக்கக் கூடாது. 

குறவள்ளி மணவாளனை மயில் வாகனனாகிய முருகப் பெருமானைப் போற்றுவாய் நெஞ்சே!..

ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந்தேடி
பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே..12

விளக்கம்:

பலரையும் பலவகையில் போற்றி செய்து பொருள் தேடி வாழ்ந்த உலகநாதன் ஆகிய நான் கற்ற கல்வியால், அருந்தமிழில் முருகப்  பெருமானைப் பாட வேண்டி, அவன் திருவருளால் உலக நீதியை மெய்யாய்ப் பாடிவைத்தேன்..

இதனை விரும்பிப்
பொருள் உணர்ந்து, நாள்தோறும்  கற்போரும் கேட்போரும் பூவுலகம் உள்ளளவும் களிப்போடும் புகழோடும் வாழ்வார்களாக..
**
கந்தா போற்றி
டம்பா போற்றி
கார்த்திகை மைந்தா
போற்றி போற்றி..
***

28 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உலகநீதி பாடல் விருத்தங்களும், அதன் விளக்கங்களும் அருமையாக உள்ளது. மனதில் ஆழப் பதியும் வண்ணம் இது போன்ற பாடல்களையும் விளக்கங்களையும் தருவதற்கு தங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் உள்ள அறங்கள் மனதில் பதிந்து விட்டால் போதும்.. மறந்தும் பிழை செய்ய முடியாது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மிக அருமையான பதிவு. பலருக்கும் முழுப்பாடலும் தெரியாது. அதனைப் பதிவாக்கியமைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி
      நெல்லை..

      நீக்கு
  3. அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
    அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
    தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
    சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
    வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
    மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
    இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
    ஏதேது செய்வானோ ஏமன் றானே.

    இந்தப் பாடலை விட்டுவிட்டீர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      ஆகஸ்ட் 27 ல் உலகநீதி எனும் பதிவில் இந்தப் பாடலைப் பற்றி சொல்லி இருக்கின்றேன்.. இது இடைச் செருகலாக இருக்கலாம் என்பது கருத்து..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கொண்டைமேல் பூவு - இதன் காரணம் என்னவாக இருக்கும்? ஒருவேளை அரசமகளிர் மாத்திரம்தான் இவ்வாறு பூ வைத்துக்கொள்ளவேண்டுமா? இல்லை தெய்வங்கள் மாத்திரம்தானா? புரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உச்சிக் குடுமியில் பூ முடிப்பது ஒருவகை.. சிவலிங்கத்தின் சிரசில் சூட்டுவார்கள். பூக்களைத் தொடுத்து வட்டமாக முடிப்பார்கள்.. அதற்குப் பெயர் இண்டை என்பதாகும்..

      அது மாதிரி மனிதன் சூட்டிக் கொண்டால் அகங்காரம் மமதையைக் குறிக்கும்.. அதற்காக அப்படிச் சொல்லியிருக்கின்றார்கள்.,

      தங்கள் வினாவிற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமை துரை அண்ணா., இதுவரை முழு பாடல்களும் படித்ததில்லை. ஒவ்வொன்றிலும் சில வரிகள் மட்டுமே தெரிந்திருந்தது அதுவும் உலக நீதி என்பதன் கீழ் என்பது கூட டக்கென்று நினைவில் வராமல் இருந்தவை. நீங்கள் இங்கு பகிர்ந்தது நல்ல விஷயம். இனி மறக்காது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைக்கு தங்களது கருத்தின்படியே இரண்டு பகுதிகளாக உலகநீதி..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  6. விளக்கத்தோடு பதிவிட்டது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  7. மிக அருமை. விளக்கத்தோடு பதிவிட்டதுக்கு மிக்க நன்றி. சேமிக்கும் விருப்பம் இருந்தாலும் சேமிக்க முடியாமல் இருக்கு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேமிக்க முடியாத அளவுக்கு என்ன பிரச்னை?..

      என்னால் ஆனதைச் செய்வேன்..

      நீக்கு
    2. உங்கள் பதிவுகளையோ/கில்லர்ஜியின் பதிவுகளையோ காப்பி/பேஸ்ட் பண்ணி எடுக்க முடியாது அல்லவா? என்னுடையதையும் இப்போ அப்படித்தான் காப்பி/பேஸ்ட் டிசேபிள் பண்ணி வைச்சிருக்கேன். அதனால் சொன்னேன். நீங்களாக எனக்கு அனுப்பினால் சேமிச்சுக்கலாம். :) sivamgss@gmail.com

      நீக்கு
    3. ஹாஹாஹா, கூகிள் அக்கவுன்ட் சைன் இன் பண்ணினேன். ஆனாலும் என்னை அநானியாக்கிவிட்டது இந்த ப்ளாகர். மேலே உள்ள கருத்துரை நான் கொடுத்தது தான். கீதா சாம்பசிவம்.

      நீக்கு
    4. இன்று மாலைப் பொழுதில் மின்னஞ்சலைக் கவனிக்கவும்..

      நீக்கு
    5. நன்றி தம்பி.

      நீக்கு
    6. ஹாஹாஹா! மீண்டும் அநானி ஆக்கி விட்டதே!

      நீக்கு
  8. நல்ல பதிவு.
    உலகநீதி அருமை. இந்த பாடலில் உள்ளபடி நடந்தால் உலகமக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
    பாடலும், விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்தப் பாடலில் உள்ளபடி நடந்தால் உலகமக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நீதியை எடுத்துக் கூறும் அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. ஏற்கெனவே சொல்லி இருப்பதுபோல முதல் ஓரிரு பாடல்கள் தவிர இத்தனை பாடல்கள் தெரியாது.  மொத்த பாடல்களையும் கோர்த்துத் தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படித் தான்... நானும் இப்போது நினைவு படுத்திக் கொண்டேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..