நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 17, 2020

கோலாட்டம்

பொன்னளந்த மாரியம்மன் கோயிலின் எதிரிலிருந்த பெருந்திடல் வண்ண வண்ண கொடிகளாலும் தோரணங்களாலும் களைகட்டியிருந்தது..

இன்று கன்னிப் பொங்கல் என்று கிராமம் முழுதும்
அங்கே கூடியிருக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..


பட்டுப் பாவாடை தாவணி மல்லிகைக் கூந்தலுடன்
தேன்சிட்டுக்களாக இளம்பெண்கள் ஒருபக்கம்...

நாங்க மட்டும் எளைச்சவங்களா!..
என்று விடலைப் பசங்களின் அலம்பல்கள் மறுபக்கம்...

அந்த மேடையில் விழா அமைப்பாளர்கள் மார்கழி மாத கோலப் போட்டிகளின் திறமையாளர்களை அறிவித்துக் கொண்டிருந்தார்கள்...

திரண்டிருந்த கூட்டத்தில் நமக்குப் பழக்கமான முகங்கள்...

அதோ தமிழ்ச்செல்வி அக்காவும் தாமரைச் செல்வியும்!...

அவர்களது தோழி செண்பகம் இந்த ஊரில் தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள்...

அவளது அன்பு அழைப்பின் பேரிலேயே - இங்கு வருகை...

செண்பகமும் அவர்களுடன் தான் நின்று கொண்டிருக்கின்றார்கள்...

அந்த சின்ன கிராமத்தின் எல்லாத் தெருப் பெண்களுக்கும்
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்......

எவருடைய மனமும் நோகக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர் மக்கள்..

நன்றி - ஓவியர் திரு மாரியப்பன்  
மார்கழி முழுதும் விடியற்காலையில் எழுந்து
குளித்து முழுகி மாடத்தில் திருவிளக்கை ஏற்றி வைத்து
பனித் தலை வீழத் தத்தமது வாசலில் மங்கலக் கோலமிட்டு
அலங்கரித்த அனைவருக்கும் பரிசுகள் கிடைத்துக் கொண்டிருந்தன..

அக்கா... இது முடிஞ்சதும் எங்க கலைக்குழுவோட கோலாட்டம்!... - என்றாள் செண்பகம்....

போன வருசத்துக்கு முன்னால அக்கா கும்மிப் பாட்டு பாடுனாங்க... இல்லையா!.. - என்றாள் தாமரை...

ஆமாம்... நல்லா நினைவு இருக்கு... ஆனா இன்றைக்கு பதினாறு பேர்... ஒரே வயசுப் புள்ளைங்களா சேர்ந்து கோலாட்டம்... அதனால தான் அக்காவை சேர்த்துக்க முடியலை... அடுத்த வருசம் பார்க்கலாம்!.. - என்று சிரித்தாள் செண்பகம்...

யம்மாடி அன்னைக்கு ஏதோ கும்மிப் பாட்டு.. இது கோலாட்டம் கஷ்டம்ப்பா!... நம்ம உடம்பும் கனத்துப் போச்சு!.. - தமிழ்ச்செல்வியும் சிரித்தாள்...

திடீரென ஆரவாரம்...

இதோ!.. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோலாட்ட நிகழ்ச்சி!.
மல்லிகைக் கலைக்குழுவினர் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்!...

அக்கா... கூப்புட்டுட்டாங்க!.. நான் போய்ட்டு வர்றேன்... - செண்பகம் மேடையை நோக்கி விரைந்தாள்...

விடலைகளின் கூச்சல் விண்ணைப் பிளந்தது...

இளம் வயதுப் பெண்கள் வளைக்கரங்களில்
வண்ண வண்ணக் கோல்களுடன் மேடையில் கூடிக் குழுமினார்கள்...

சுற்றிச் சுழன்று ஆடி வருவதற்கு ஏதுவாக மேடை ஒழுங்கு செய்யப்பட்டு
அங்கிருந்த வில்லங்க விடலைகள் கீழிறக்கி விடப்பட்டனர்...

கோலாட்டப் பாட்டைப் பாடுவதற்காக ஒரு மூதாட்டி மேடையேற
பாட்டுக்கு இடையில் அழகூட்டுவதற்காக இரட்டை நாயனங்களும் தவில்களும் மேடையேறின...

அந்த மூதாட்டியார் கோயிலைப் பார்த்து
வணங்கி விட்டு பாடத் தொடங்கினார்


கோலாட்டம் வண்ணக் கோலாட்டம்
வருந்தமிழ் அழகே ஒளியாட்டம்
பொன்னளந்த மாரி அருளாட்டம்
பூத்து வரவேணும் புகழாட்டம்...

தந்த தனந் தானா தன நானா...
தந்த தனந் தானா தன நானா...

இளம்பெண்களின் கைவளையோடு
சடக்..சடக்!.. என, ஒருமித்த ஒலி எழுந்து பரவியது///

கோல்களின் ஒலியோடு நாயனமும் தவிலும் சேர்ந்திசைக்க
ஓ!... வென ஆரவாரம் எங்கெங்கும்!...

குங்குமத்துக் குலமகள் கோலாட்டம்
தங்கத் தமிழ்ப் பாட்டு அமுதாட்டம்...
பொங்கு நதிப் பொன்னி நீராட்டம்
சந்தம் தரும் மங்கலக் கோலாட்டம்!...

சிங்கமகள் எழில் தங்கத் தமிழாட்டம்
சின்னஞ்சிறு நெற்றி பிறையாட்டம்..
சின்ன இதழ் குங்குமச் சிமிழாட்டம்
துள்ளி வரும்நடை புள்ளி மானாட்டம்!...


தந்தந் தன வளையும் இசையாட்டம்
தங்க விரல் அழகும் தளிராட்டம்...
தந்தந் தன தனங்கள் மலராட்டம்
தனந் தந்திடும் தாமரை மகளாட்டம்!...

சீறி வரும் நேரம் புலியாட்டம்
பேசி வரும் நேரம் கிளியாட்டம்...
அள்ளித் தரும் நேரம் முகிலாட்டம்
அவள் ஆடி வரும் நேரம் மயிலாட்டம்!....

கன்னங் கருவிழிகள் வண்டாட்டம்
கன்னி இவள் அழகு செண்டாட்டம்...
சிற்றிடையும் பட்டு வண்ண நூலாட்டம்
பொன்மகளைப் பாடுவதில் கொண்டாட்டம்!..

செல்ல மகள் சீற்றம் கனலாட்டம்
செல்வ மகள் நடந்தால் புனலாட்டம்...
புல்லர்களை அழிப்பாள் அனலாட்டம்
புன்னகைத்து நடப்பாள் நிழலாட்டம்!...

பெண்களின் கோலாட்டத்துடன் பாடலும் இசையும் ஒன்றி நிற்க
தேன் சுவைத்த வண்டாட்டம் கூட்டம் கிறங்கி இருந்தது...

அடுத்த அரை மணிநேரத்தில் பொன்னளந்த மாரி பூப்பல்லக்கில் திருவீதி எழுந்தருளினாள்...

அம்பாளின் முன்பாக குலவையுடன் கோலாட்டம் ஆடினர் குமரிகள்...

ஊர் கூடி அம்பாளை வணங்கி நிற்க
திருச்சாம்பலும் குங்குமமும் சித்ரான்னங்களும் விநியோகம் ஆயின...

செண்பகம் ஓடி வந்தாள்...

அக்கா!.. எப்படி இருந்தது அக்கா?.. - ஆவலுடன் விரிந்தன செண்பகத்தின் விழிகள்...

ஒரு பேச்சும் இன்றி செண்பகத்தை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள் தமிழ்ச்செல்வி...

நாங்களும் உங்க கூட ஆடலையே..ன்னு இருக்கு!.. - என்றாள் தாமரைச்
 செல்வி...

மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது...

தஞ்சாவூர்க்காரங்க வாங்க!.. - என்றழைத்த பூசாரியார் -
அம்பாள் அணிந்திருந்த மாலையை தாம்பாளத்தில் வைத்து
தாம்பூலம் சந்தனத்துடன் இருவருக்கும் வழங்கினார்...

இரவு முன்னெடுத்து நடந்த வேளையில்
அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்ட
அக்கா தமிழ்ச்செல்வியும் தாமரைச்செல்வியும்
இல்லம் நோக்கி விரைந்த வேளையில் -

கன்னிப் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக
வாண வேடிக்கை தொடங்கியிருந்தது...


அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்
எங்கெங்கும் மங்கலம் தங்கட்டும்..

வாழ்க நலம்.. 
ஃஃஃ

22 கருத்துகள்:

  1. வில்லங்க விடலைகள்...

    ஹா...   ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  2. கோலாட்டம் பாடல் நன்று.   அது எனக்கு நூல்வேலி படப்பாடலான "தேரோட்டம்"  பாடலை நினைவூட்டுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா..ல்லே!....

      ஆனா இதை எழுதுறப்போ அது நினைவுக்கு வரலை....

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருவிழா ஒன்று கண்முன்னே வந்து சென்றது.

    பதிலளிநீக்கு
  4. பதிவும், பாட்டும் ரசிக்க வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மதுரையில் மீனாக்ஷிக்குக் கோலாட்டத்திருநாள் என்றே உண்டு. எல்லோரும் கோலாட்டக் குச்சிகளுடன் அம்மனுக்கு முன்னால் குழுக்குழுவாக ஆடிக்கொண்டே வருவோம். அதில் சேருவதும் எளிதல்ல. கோலாட்டமிட்டுக்கொண்டே தெருவில் போகவும் தெரியணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கோலாட்டம் சற்றே சிரமமானது... அதனால் தான் தமிழ்ச்செல்வியை ஆடவைக்கவில்லை...

      மீனாக்ஷியம்மனின் கோலாட்டத் திருவிழாவைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு.. தவிர தரிசனம் செய்ததில்லை..

      அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  6. துரையின் கை வண்ணத்தில் அழகான அருமையான கோலட்டப் பாடல். படங்களும் பொருத்தமாக அமைந்துள்ளன. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் கருத்துரை வழங்கிய அன்பினுக்கு மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. .அழகுக் கன்னிகளும் , தமிழும் கலந்தாடிய பதிவு.
    பாடலே தாளம் போட வைக்கிறது.
    எங்கள் ஊரிலும் கோலாட்டம் உண்டு. உடலுக்கு நல்ல பயிற்சி.
    வீதியில் ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும்
    ஆடிக் கொண்டாடுவோம்.
    ஒரு அரிய கலை விழாவை எழுதிக்
    கண்முன்னே நடத்தி விட்டீர்கள்.
    பெண்களின் உற்சாகமும் பண்பும், இளைஞர்களின் உற்சாகமும்
    குறும்பும்
    மனதைக் கலகலப்பாக்குகிறது.
    இதுதான் விழா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா..

      வீட்டுக்கு வீடு விளையாடி மகிழ்ந்த கோலாட்டம்
      இன்றைக்கு நாகரிக மாறுதல்களால் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சியாக மாறிப் போனது வருத்தத்துக்குரியது..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  9. நான் 9 வது படிக்கும் போது மீனாட்சிக்கு எந்த எந்த மாதங்களில் கோலாட்டம் நடக்கும் என்று சொல்லி பாடி கோலாட்டம் ஆடி இருக்கிறோம்.

    மதினி வீட்டில் ஐப்பசி மாதம் காவேரி அம்மன் வழி பாடு நடக்கும் அதில் கடைசி நாள் கோலாட்டம் கும்மி உண்டு அதிலும் குழந்தைகளுடன் கலந்து கொண்டேன்.
    மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தரும் கும்மியும் கோலாட்டமும்.
    காணும் பொங்கல் அன்று நீர் நிலைக்கு போய் சித்தாரனங்களை கொண்டு போய் சாப்பிட்டு, மரங்களில் ஊஞ்சல், கோலாட்டம் எல்லாம் ஆடும் வழக்கும் இருக்கிறது இன்னும்.

    அதை கதை வடிவில் அழகாய் சொன்னது அருமை.
    கோலாட்ட படல் நீங்கள் எழுதியது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      கன்னிப் பொங்கல் என்று கிராம தேவதை வழிபாடு பெரும்பாலான ஊர்களில்...

      தமிழ்ச் செல்வியும் தாமரைச் செல்வியும் நமது தளத்தின் கதை மாந்தர்கள்...

      கன்னிப் பொங்கல் என்பது ஊர்த் திருவிழாக்களில் ஒன்று...

      இன்று காணும் பொங்கல் என்று விடுமுறை தின நிகழ்ச்சி ஆகிவிட்டது...

      பதிவின் ஊடாக எழுதிய பாடல் அது..
      இன்னும் சொல்லிதிருக்கலாம் என்று தோன்றுகிறது...

      இன்னொரு சமயத்தில் பார்க்கலாம்...

      தங்களது விரிவான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. பாடல் ரொம்பவே நன்று.

    திருவிழாக் கோலம் கண் முன்னே - உங்கள் எழுத்து வழி.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. பொன்னளந்த மாரி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..