நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 21, 2019

நமோ நாராயணாய 1

நவகோள்களில் ஒன்றான - புதனுக்கு அதிபதி ஸ்ரீமன்நாராயணன்!..

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருமேனி வண்ணம் - பச்சை..

பெருமானின் திருமேனி நீல நிறம் - எனக் குறிக்கப்பட்டாலும் ,
ஆழ்வார்கள் கண்டு ஆராதித்தது - பச்சை வண்ணமாகவும் .. என்பது திருக்குறிப்பு..

பச்சை மாமலைபோல் மேனி!.. - என்று ஆழ்வார் அகமகிழ்ன்றார்..

தூரத்துப் பச்சையும் நீலமும் கருப்பும் - ஒரே நிலையில் பொலிபவை.. 

புதனுக்கு உகந்த நிறமும் - பச்சை..

புதனின் வீடு - கன்னி!..

இந்த கன்னி ராசியில் சூரியன் பிரவேசிப்பது புரட்டாசி மாதத்தில்...

அதனாலேயே - புரட்டாசி மாதம் தனியானதொரு மகத்துவம் பெறுகின்றது.

புரட்டாசியின் - புதன் கிழமைகளும் சனிக் கிழமைகளும் -
ஸ்ரீமந்நாராயணனை - ஏக மூர்த்தியாகக் கொண்டு தொழுவோர்க்கு உகந்தவை..


குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும்நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்றதாயினுமாயினசெய்யும்
நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்..
(956) 
-: திருமங்கையாழ்வார் :-

இத்தகைய புண்ணிய புரட்டாசி
இவ்வருடம் கடந்த புதன்கிழமை பிறந்திருக்கின்றது..

பாரம்பர்யமான பழக்கவழக்கமுடையோர் -
புரட்டாசி முழுதும் திருவேங்கடமுடையவனை நினைந்து விரதங்களை ஏற்பர்..

அதிலும் மாதத்தின் சனிக்கிழமைகளில் விசேஷமாக இருக்கும்..

பெரும்பாலும் மூன்றாவது அல்லது கடைசி சனிக்கிழமைகளில் பக்திப் பரவசத்துடன் நாம பாராயணம் செய்து பெரிய அளவில் தளிகையிட்டு பெருமாளைச் சரணடைந்து நிற்பர்...

ஸ்ரீபத்மாவதித் தாயார்
புரட்டாசி விரதமேற்கும் அனைவருமே -
பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தங்களது தகுதிக்கு ஏற்ப
தளிகையிட்டு வேங்கடேசப் பெருமாளைத் துதிப்பர்..

இந்த மாதம் முழுதுமே -
இல்லார்க்கும் எளியார்க்கும் உதவுதலே நோக்கம்...
யாரும் பசித்திருக்கப் பார்த்திருக்க மாட்டார்கள்...

அன்னமிடல் - எனும் அறச்செயலைக் கைவிடாது காப்பர்..

நாம் கைவிடாத அறச்செயலானது நம்மையும் கைவிடாது!.. - என்பது ஆன்றோர் வாக்கு..

புரட்டாசி மாதம் முழுதுமே திருவேங்கடத்தில் விசேஷம் தான்..


குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன்
நிலந்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே..(1031)
-: திருமங்கையாழ்வார் :-



கண்ணார்க் கடல்சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்
விண்ணோர்த் தொழும் வேங்கடமாமலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே.. (1038)
-: திருமங்கையாழ்வார் :-


நீரார்க்கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர்மேல் துயிலெந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே.. (1040)
-: திருமங்கையாழ்வார் :-


மஹாளய புண்ய காலத்தில் புரட்டாசி மாத அமாவாசை வரையிலும்
இயன்ற அளவுக்கு தான தர்மங்கள் செய்வது ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஐதீகம்...

நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும் -

வாழும் நாளிலேயே -
நோய்நொடியின்றி நல்லபடியாக வாழ்வதை - நாம் உணரமுடியும்..

இன்றைய கால கட்டத்தில்
நோய்நொடியின்றி வாழ்வதே மிகப்பெரிய வரம்..

உண்ணும் போது ஒரு கைப்பிடி!.. - என்றார் திருமூலர்...

அற்றார் அழிபசி காண்பான் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.. (0226)

வாய்ப்பும் வசதியும் இருப்பின்
அற்றார் அழிபசி தீர்த்தல் நல்லது..

வளமும் நலமும் நம்மைத் தேடி வரும்..
வாழ்க வளம் வளர்க நலம்!..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

21 கருத்துகள்:

  1. இந்த வருஷம் மஹாளயம், மற்றும் புரட்டாசி விசேஷங்கள், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் எல்லாம் இங்கே! இந்தியா அளவுக்குக் கொண்டாட முடியாது! எனினும் வீட்டளவில் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு வருஷமும் புரட்டாசி சனிக்கிழமை சமாராதனை சிறிய அளவில் செய்வது உண்டு. இந்த வருடம் இங்கே அதற்குத் தோதுப்படாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. அருமையான பதிவு. எனக்கும் புதன் தான் ராசிப்படி முக்கியக் கோள் என்பதால் மஹாவிஷ்ணு, குறிப்பாக அரங்கன் தான் வணங்கவேண்டிய தெய்வம். அதனால் தான் போல! அரங்கத்திற்கே குடி வந்து விட்டோம். பதிவில் விளக்கங்கள் அனைத்தும் அருமை. படங்கள் மூலம் ஸ்ரீமந்நாராயணன் தரிசனமும் ஆச்சு!

    பதிலளிநீக்கு
  3. புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாள் தரிசனம், விவரங்கள் நன்று.

    Good morning.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின் ஜி
    புரட்டாசியின் மகிமை குறித்த விடயங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான பதிவு.
    புராட்டாசியின் சிறப்புகள் அருமை.
    மாயவரத்தில் கோவிந்தா கோவிந்தா என்று குழந்தைகள், பெரியவர்கள் வந்து காசு, அரிசி வாங்கி செல்வார்கள். வசதியானவர்களும் வேண்டிக் கொண்டு அரிசியை யாசகம் பெற்று வாங்கி உணவு சமைத்து பிறருக்கு கொடுப்பார்கள், வேண்டிக் கொண்டு.

    இங்கு அப்படி வருவார் இல்லை.
    வேலை செய்யும் அம்மாவுக்கு புரட்டாசி சனிக்கிழமை அரிசி கொடுப்பேன்.
    பெருமாள் எல்லோருக்கும் படி அளக்கட்டும். நோய் நொடி இல்லாமல் பார்த்துக் கொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      தாங்கள் சொல்வது போல் சின்னஞ்சிறு பிள்ளைகள் எல்லாம்

      வெங்கட ரமணா கோவிந்தா.. என்று பாடிக்கொண்டு வருவதை தஞ்சையில் இருந்தவரைக்கும் கண்டிருக்கிறேன்..

      ஆனாலும் இதெல்லாம் மிகவும் குறைந்து விட்டது...

      பெருமாள் பெயரைச் சொல்லி இரந்து நிற்பதும்
      ப்ர்டுமாள் பெயரைக் கேட்டு அள்ளி இடுவதும்
      ஆணவத்தைக் குறைக்கக் கூடியவை...

      பெருமாள் எல்லாருக்கும் நல்ல படி அளக்கட்டும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
      ஹரி ஓம்..

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. புரட்டாசி சனிக்கிழமைக்கு ஏற்ற பதிவு.

    ப்ரபந்தப் பாடல்கள் அருமை.

    இன்று அப்பா ச்ராத்தம். நாளை மஹாளய தர்ப்பணம்

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அன்பு துரை,
    இனிய காலை வணக்கம்.
    புரட்டாசிப் பெருமை பதிவு முழுவதும் விளங்குகிறது.
    மாலவன் படங்களும், ஆழ்வார் பாசுரங்களும் அமுதம்.

    இடர் களையவே திரு வேங்கடத்தான் அவதரித்தான்.

    புதன் ஸ்தலமாக திருவெண்காட்டையும் சொல்வார்கள்.

    பச்சை மா மலைபோல் மேனியன், பசுமை வெள்ளத்தை அள்ளிக் கொடுக்க
    நாமும் மகிழ்ந்து உலகையும் மகிழ்விப்போம்.
    மிக நன்றி அன்பு துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

      எல்லாருடைய இடர்களையும் களைந்து
      எம்பெருமான் நன்மைகளை அருள்வானாக..

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. திருமங்கையாழ்வாரின் பாடல்களை படிக்கப் படிக்க மனம் மகிழ்ந்தது. மற்றவர் பசி தீர்க்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டுமென்ற உத்வேகம் கொடுக்கும் அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. புரட்டாசி மாதத்தில் சிறப்பான தகவல்கள்.... தில்லியில் ஒவ்வொரு புரட்டாசி மாதத்திலும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடக்கும். இந்த முறை அக்டோபரில் 12-13 தேதிகளில்....


    அனைவருக்கும் அரங்கன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..