நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 26, 2015

தார் வேந்தன் போற்றி!..

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே!..


தாய்க்கு இணையான தண்ணீர் என்றால் - காவிரி ஆறு தான்!..

வெற்றி மாலையணிந்த மன்னர்கள் என்றால் - சோழர்கள் தான்!..

புகழ் கொண்ட மண் என்றால் - சோழ மண்டலம் தான்!..


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நீர் மேலாண்மை கொண்டு -
விரிந்து பரந்து ஓடிக் கொண்டிருந்த காவிரிக்கு அணைகட்டி ஒழுங்கு செய்து -

நீர் வளத்துடன் நிலவளமும் பெருக்கி - நாடும் வீடும் வாழ்க என்று நற்செயல் செய்து -

நானிலத்தோர் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவன் மாமன்னன் கரிகாற்சோழன்!..

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு (734)

என வள்ளுவப்பெருந்தகை வகுத்ததற்கு இணங்கி -

கரிகால் சோழரும் அவர்தம் முன்னோர்களும் - மக்கள் பணி செய்ததனால் புலிக்கொடி வானுயரப் பறந்தது.

இத்தகைய மாமன்னர்களுக்குப் பின் ஆயிரம் ஆண்டுகள்!..

ஸ்ரீ பெருவுடையார்
காலங்கள் மாறினும் கருத்துக்கள் மாறாத காரணத்தால் - 
மீண்டும் வானப் பெருவெளியில் புலிக்கொடி!..

விஜயாலய சோழன் உயர்த்திய புலிக்கொடி கங்கையைக் கடந்தும் பறந்தது.  

கடற்பெருவெளியில் - தனி வழி கண்டு கீழ்த் திசை நாடுகளிலும் பறந்தது.

அந்தப் பெரும்புகழுக்கு உரியவன் - 

விண்ணுயர் பெரியகோயில் கண்ட ஸ்ரீ வீர ராஜராஜ சோழ மாமன்னனின் அருந்தவப் புதல்வனாகிய -

ராஜேந்திர சோழன் - பரவை நங்கை
ஸ்ரீ ராஜேந்திர சோழ திரிபுவன சக்ரவர்த்தி!..

அலைகடல் நடுவே கலங்களைச் செலுத்தி கடாரம் வரை சோழப் பெருந் தேசத்தை விரிவாக்கிய மாமன்னன் ராஜேந்திர சோழன்.


தந்தையைப் போலவே - தானும் ஒரு பெருங்கோயிலை எடுப்பித்தது சோழ கங்கை எனும் பெரிய ஏரியினையும் நிர்மாணித்து மகிழ்ந்தவன்.

தற்காலத்திய கடல் போக்குவரத்தினைக் குறித்த ஒரு காணொளி!..


இதைச் சிந்தனையில் நிறுத்தி - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் வழியே படைக்கலங்களுடன் சென்ற அசாத்திய துணிச்சலை எண்ணிப் பாருங்கள்!..

நம் மனம் தானாகவே -
கடலோடிச் சென்றவர்களுக்கு தலை தாழ்ந்து வணக்கம் கூறும்!..



ராஜேந்திர சோழனின் நினைவினைப் போற்றி -

நமது அரசு அஞ்சல் தலை வெளியிட்டு தன்னை சிறப்பித்துக் கொண்டுள்ளது.

செய்தியறிந்து பெருங்கடலைப் போல ஆர்ப்பரித்து நெஞ்சம் மகிழ்கின்றது.

இத்தனையும் - 

திரு. ராஜாராம் கோமகன் அவர்களின் பெருமுயற்சியினால் நடந்துள்ளது.

தமிழ் கலாச்சாரத்தில் மிகுந்த ஆர்வமும் அன்பும் கொண்டுள்ள - 
திரு. தருண் விஜய் MP அவர்களால் சாத்தியமாகியுள்ளது.

அஞ்சல் தலை வெளியிடப்பட்ட நிகழ்வு குறித்து - 

மகவைக் கையில் ஏந்தும்போது சிலிர்க்கும் பரவசத்தில் மறந்து போகும் பிரசவ வலி!..

- என்று திரு. ராஜாராம் கோமகன் அவர்கள் குறிப்பிட்டு மகிழ்கின்றார்.

முதல்நாள் அஞ்சல் உறை எல்லாம் விற்றுத் தீர்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.

ராஜேந்திர சோழன்
இந்த மாதத்தின் முதல் பதிவு - இராஜேந்திர சோழனைப் பற்றியது தான்!..

அது - திரு. தருண் விஜய் அவர்கள் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்தது பற்றிய செய்திகள் தொகுப்பு!..

மாமன்னனின் நினைவினைப் போற்றி அஞ்சல் தலை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையின் குறிப்பும் அதில் இடம் பெற்றிருக்கும்.

ஒரு மாதத்திற்குள்ளாகவே -

நல்லோர் மனங்கள் மகிழும் வண்ணம் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.


திரு. ராஜாராம் கோமகன் அவர்களுக்கும்
திரு. தருண்விஜய் MP அவர்களுக்கும்
மத்திய அரசுக்கும் மனமார்ந்த நன்றி!..

மாமன்னனின் நினைவில் 
அவனது திருப்பெயருக்கு சிறப்பு செய்தவர்கள் 
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

வாழ்க பாரதம்.. வளர்க தமிழகம்!..
திக்கெட்டும் ஓங்குக தமிழின் புகழ்!..
* * *

12 கருத்துகள்:

  1. காணொளி அசர வைக்கிறது ஐயா... தகவல்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தாங்கள் வருகை தந்து மகிழ்ச்சியில் பங்கேற்றமைக்கு நன்றி..

      நீக்கு
  2. பொன்னியின் செல்வன் கதையில் அவர் இந்த கடல் வழி பயணம் எழுதியிருப்பார் அதனை கதை என்று மட்டும் நான் நினைத்தது இல்லை. இன்று தங்களின் பதிவு அதனை உறுதிசெய்கிணுது, நம் முன்னோர் செய்த அத்துனையும் நம்மை தலைநிமிர செய்பவை. தண்ணீர் மேலாண்மை வாரம், பொருத்தமான பதிவு.மகிழ்ச்சியில் பெருங்கடலைப்போல் ஆர்பரிக்கும் மனதிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பொன்னியின் செல்வன்.. நினைக்கவே பிரமிப்பு!....
      தாங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான தகவல்கள்! காணொளி அசத்தல்! ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. அப்பப்பபா..... காணொளி மலைக்க வைக்கிறது. கடலையும், கடந்தும் ஆண்டான் தமிழன். அருமையான தகவல் பதிவு ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கடலையும் அடக்கி ஆட்சி செய்தவன் தமிழன்!..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பிரமாண்டமான காணொளி நண்பரே தகவல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ராஜேந்திர சோழனின் பெருமைகளை நினைவு கூறும் விதமாக இந்திய அஞ்சல் தலை வெளியிட்டிருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. காணொளியும் அருமை. நல்லதொரு பதிவுக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..