நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 17, 2015

கரிக்குருவி - 3

தேவகுருவாகிய பிரகஸ்பதியின் புத்திரர் - பரத்வாஜ மகரிஷி. மகாஞானி

அவருக்கும் ஒருமுறை பிரம்ம சாபம் விளைந்தது.

அதை அனுபவித்துத் தீர்க்க வேண்டிய சூழ்நிலை.

பிரம்மனிடமே சாப விமோசனம் கேட்டார்.

ஏதேனும் ஒரு பறவையாகப் பிறந்து - வினையைத் தீர்த்துக் கொள்க!..

நான்முகனிடமிருந்து விடை கிடைத்தது.

பறவையாகப் பிறந்து - அங்குமிங்கும் பறந்து திரிந்தாலும் -

தனக்கும் ஒரு கடமை உண்டு. பொழுதெல்லாம் பயனுள்ளதாகக் கழிய வேண்டும்!.. -  என சிந்தித்தார் - பரத்வாஜ மகரிஷி.


அதன்படி, பரத்வாஜ மகரிஷி - தான் கொண்ட கோலம் தான் - கருங்குருவி!..

தனது கடும் வினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய - பரத்வாஜ மகரிஷி , 
ஏன் கருங்குருவியாகப் பிறக்க வேண்டும்!..

வலியன் ஆன கருங்குருவி - ஒன்று தானே - 
தானும் வாழ்ந்து மற்ற பறவைகளையும் வாழ வைக்கின்றது!.. 

மகாஞானியாகிய பரத்வாஜ மகரிஷி - இதனை உணர்ந்திருந்ததால் தான் கருங்குருவியாக உருக்கொண்டார்.


கருங்குருவியாக உருமாறிய பரத்வாஜ மகரிஷி -  கருங்குருவியின் இயல்புகளுடன் - நாளும் நல்லறம் புரிந்தார்.

ஊரும் உயிர்களும் வாழ தீர்த்தக் குளம் அமைத்தார்.

பாதிரி மரத்தின் நிழலில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.

கருங்குருவியின் வடிவிலேயே - நாளும் சிவ பூஜை செய்து சிவ தியானம் மேற்கொண்டார்.

தன் மகனின் தவநிலையைக் கண்ட - தேவகுரு பிரகஸ்பதி தாமும் அவரோடு இருந்து சிவ பூஜை செய்தார்.

காலச் சக்கரங்கள் உருண்டோடின. நேரம் கனிந்து வந்தது.


பறவைக்கு இரங்கிய பரமதயாளன் - பரத்வாஜ மகரிஷிக்கு இரங்காமல் இருப்பானா!..

வேத வேதாந்தங்களைக் கடந்த விமலன் - விடை வாகனனாக அம்பிகையுடன் தரிசனம் தந்தருளினான்.

கருங்குருவியின் வடிவிலிருந்து நீங்கிய பரத்வாஜ மகரிஷி - பரம்பொருளை வலம் வந்து வணங்கினார்.

தன்னலமில்லாத கருங்குருவியாகப் பிறந்து தொண்டு செய்த பரத்வாஜ மகரிஷியை மனதார வாழ்த்திய எம்பெருமான் -

விரும்பும் போதெல்லாம் - தம் ஆயுளைத் தாமே நீட்டித்துக் கொள்ளும் வல்லமையை - பரத்வாஜ மகரிஷிக்குத் தந்தருளினன்.

இப்படி ஒரு தல வரலாறு உண்டு!..

அது எந்த தலத்திற்கு!.. அந்தத் தலம் எங்கிருக்கின்றது!?..

பரத்வாஜ மகரிஷி கருங்குருவியாகி - சிவபூஜை செய்த திருத்தலம் தான் -

திருவலிதாயம்!..



அருட்பிரகாச வள்ளலார் ஸ்வாமிகளின் திருவாக்கில் தரும மிகு சென்னை என்று புகழப்பட்ட சென்னை மாநகரில் -

அம்பத்தூரின் அருகில் - தற்காலத்தில் - பாடி என வழங்கப்படுகின்றதே -

அதுதான் திருவலிதாயம்!..

மிகச் சிறந்த திருத்தலம்..

இந்த வரிகளைப் பதிவிடும்போது நெஞ்சக் கன கல் நெகிழ்ந்து உருகுகின்றது.

ஏனென்று புரியவில்லை!.. புரிந்தாலும் வெளியே சொல்லத் தெரியவில்லை!..

இத்தலத்தில் வேண்டிக் கொள்பவர்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு!..

நியாயம் தானே!..

அண்டி நிற்போருக்கு ஆயுள் நீட்டிப்பு!..

இது - கருங்குருவியின் வடிவிலிருந்த பரத்வாஜ மகரிஷி பெற்ற வரம்!..

பரம்பொருள் அன்றைக்கு பரத்வாஜ மகரிஷிக்கு நல்கிய வரத்தின் பயன்!..

பலவீனமான இதயம் - பரமன் தொண்டினால் - பலப்படுகின்றது!..

பரமன் தொண்டு எனப்படுவது பிற உயிர்களுக்கான தொண்டு!..

மக்கள் பணியே மகேசன் பணி!..

இதயம் பலமானால் - எண்ணங்களும் நலமாகும் தானே!..

எண்ணங்கள் நலமானால் - ஏது மரணம்!..

மரணமில்லாப் பெரு வாழ்வு!..

இதைத் தானே ஞானியரும் சித்தர்களும் உபதேசிக்கின்றனர்.

காலவெள்ளத்தில் - நம்முடைய வண்ணங்கள் மறையலாம். மறைந்தே தீரும்!..

ஆனால் -

நம்முடைய எண்ணங்கள் மறைவதே இல்லை.. 
ஏழேழு பிறப்பிலும் அவை தொடர்ந்து வந்து நம்மையே சேர்கின்றன..

நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தால் - 
அவை ஒவ்வொரு பிறப்பிலும் மெருகேறி  
முத்தாக, மணியாக, ரத்தினமாக உருமாறி 
நம்மையே வந்து சேரும் என்பதே நீதி!..

உயிரற்ற கரித் துண்டு கால ஓட்டத்தில் வைரமாகும் போது -
உயிருள்ள எண்ணங்கள் அடையும் மேன்மையைச் சொல்லவும் வேண்டுமோ!..

எண்ணங்கள் உயிருள்ளவைகளாகத் திகழ்வதற்கு அடிப்படை -

தன்னலமற்ற தொண்டு!..

அதற்கு -

நம் முன்னே காணப்படும் அடையாளங்களுள் மிகச்சிறந்தது - கரிக்குருவி!..

திருவலிதாயத்தின் தல வரலாற்றினுள் பொதிந்திருக்கும் உண்மை இதுவே!..


இறைவன் - ஸ்ரீ வலிதாய நாதர், ஸ்ரீ வாலீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ தாயம்மை, ஸ்ரீ ஜகதாம்பிகை
தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்
தல விருட்சம் - பாதிரி, சரக்கொன்றை

திருமூலஸ்தானம் கஜபிருஷ்டம் போல விளங்குகின்றது.


பரத்வாஜ மகரிஷி வணங்கி வழிபட்ட திருவலிதாயத்தில் ஸ்ரீராமன் - இளைய பெருமாளுடன் வணங்கியதாக ஐதீகம்

பின்னும் ஆஞ்சநேயரும் சூரியனும் சந்திரனும் இந்திரனும் வழிபட்டு நலம் எய்தினர்.

பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் தான் -

இராவணனை வென்று வீழ்த்திய ஸ்ரீராமன் - தம்பியுடனும் சீதையுடனும் ஆஞ்சநேயருடனும் - அயோத்திக்குத் திரும்பும் வழியில் விருந்து உண்டு மகிழ்ந்தனன். 

கஜபிருஷ்ட மூலஸ்தானம்
திருஞானசம்பந்தப் பெருமான் - தரிசித்து - பாடிப் பரவி வழிபட்ட திருத்தலம்.

தேவாரத் திருப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் - 32.

அவற்றுள் இருபத்தொன்றாவது திருத்தலம்.

அருணகிரிநாதரும் திருப்புகழ் பாடி வழிபட்டிருக்கின்றனர்.


தமிழகத்தில் - தேவகுரு பிரகஸ்பதி வழிபட்ட - குரு ஸ்தலம் எனப்படும் திருத்தலங்கள் மூன்றனுள் ஒன்று - திருவலிதாயம்.

மற்றவை - திருச்செந்தூர், தென்குடித் திட்டை (தஞ்சை).

கடலில்நஞ்சம் அமுதுண்டு இமையோர் தொழுதேத்த நடமாடி
அடலிலங்கை அரையன்வலிசெற்றருள் அம்மான் அமர்கோயில்
மடலிலங்கு கமுகின் பலவின் மதுவிம்மும் வலிதாயம்
உடலிலங்கும் உயிருள்ள அளவுந்தொழ உள்ளத் துயர்போமே!.. (1/3/8)  
திருஞானசம்பந்தர்.
* * *

அடுத்த பதிவில் 
வலியன் வலம் வந்து வணங்கிய திருத்தலம்.

ஐயன் அருள் உண்டு என்றும் பயமில்லை!..

சிவாய திருச்சிற்றம்பலம்.. 
* * *

25 கருத்துகள்:

  1. அருமையான நீதி... உங்களின் பரவசத்தை எழுத்துகளில் உணர்ந்தேன்... திருவலிதாயம் பற்றிய சிறப்பை இப்பதிவின் மூலம் தான் அறிந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. தங்கள் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. திருவலிதாயம் அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. வலியனைப் பற்றி எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

    திருவலிதாயம் கோவில் அழகாக இருக்கிறது. தாங்கள் எவ்வளவு மனதார எழுதுகிறீர்கள் ஐயா. அந்தப் பரவசம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது.

    வாழ்க வளமுடன்
    சாய் ராம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  4. என்னுடைய கருமைச் சூரியனைக் காண வருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பதிவு வெளியான அப்போதே கவனித்தேன்.. இணைய வேகம் குறைந்ததால் கருத்திட இயலவில்லை.. இதோ வருகின்றேன்!..

      நீக்கு
  5. திருவலிதாயம் பற்றி தாங்கள் பதிவிடும் போது தாங்கள் அடைந்த பரவச நிலைப்புரிகிறது. தங்கள் நடையில் அழகு மிளிர்கிறது. வேத வேதாந்தங்களை கடந்த விமலன் விடைவாகனனாக இப்படி நிறைய சொல்லலாம். கருங்குருவி வரலாறு, இறையுடன் தொடர்பு அறிந்தேன்.இதயம் பலமானால் எண்ணங்களும் நலமாகும். அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய எண்ணங்களால் தானே நாம் வாழ்கின்றோம்!..
      தங்கள் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. கருங் குருவிக்கு இத்தனை கதைகளா. திருவலிதாயம் இதுவரைப் போனதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இன்னும் இருக்கின்றது..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நீக்கு
  7. அம்பத்தூர் ஔகே பாடி சென்றிருக்கிறேன் இந்தக் கோவில் சென்றிருக்கிறேனா நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      அவசியம் திருவலிதாயம் தரிசிக்கவும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  8. ஒரு குருவிக்கு பின்னால் இத்தனை சரித்திரங்களா ? தங்களின் தேடுதல் ஆச்சர்யமாக இருக்கிறது நண்பரே,,,, புகைப்படங்கள் அருமை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்காக - இன்னும் இருக்கின்றன..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.

      நீக்கு
  9. கருங்குருவிக்கு பின்னால் இத்தனை கதைகளா ? அருமையான பதிவு. இன்று முதல் உங்கள் தளத்தின் உறுப்பினராகி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கருங்குருவி மதி நுட்பமுடைய பறவை!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.

      நீக்கு
  10. இக்கோயிலைப் பற்றி தங்களது பதிவுமூலமாகத்தான் அறிந்தேன். வாய்ப்பு உண்டாக்கி செல்வேன். நன்றி. குருவித் தொடர்பு மனதில் நின்றுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அவசியம் - திருவலிதாயம் தரிசனம் செய்யவும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.

      நீக்கு
  11. கருங்குருவியின் வரலாறு, திருவலிதாயம் வரலாறு அறிந்து மகிழ்ச்சி, படங்கள் எல்லாம் நேரே தரிசனம் செய்த உணர்வை கொடுத்தன.
    இதயம் பலம் பெறவேண்டும். நல்ல எண்ணங்களே தோன்ற வேண்டும் அனைவரும் மகிழ்ச்சியாக நல்மாக வாழ ஸ்ரீவலிதாய நாதர், ஸ்ரீ தாயம்மை அருள்புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நல்ல எண்ணங்கள் மலிந்து - நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. ஆஹா! குருவிக்குப் பின் தான் எத்தனைக் கதைகள்! எத்தனை நல்ல கருத்துக்கள் இறை உணர்வுடன். நம் புராணங்கள், மனிதனுக்கும், விலங்குகள், பறவைகள் இவர்களுடனானத் தொடர்பை எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கின்றன. ஆனால் மனிதன்?!! ம்ம் என்னத்த சொல்ல....

    மிக்க மிக்க நன்றி! திருவலிதாயம் குறித்து அறியத் தந்தமைக்கு. குறித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      அழகான கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  13. பரத்வாஜ மகரிஷி கருங்குருவியின் உருவில் சிவபூஜை செய்தது, தன்னலமில்லாத கருங்குருவியாய்ப் பிறந்து தொண்டு செய்த மகரிஷிக்கு ஈசன் அவர் விரும்பும் போதெல்லாம் ஆயுளை நீட்டித்துக்கொள்ளும் வரமளித்தது எனத் தலப்புராணத்தை எழுதும் போது அதனுடன் ஒன்றிய உங்கள் பரவசத்தை என்னால் உணரமுடிகிறது. பாடி தான் திருவலிதாயம் என்பது எனக்குப் புது செய்தி.
    நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தால் அவை ஒவ்வொரு பிறப்பிலும் மெருகேறி முத்தாக ரத்தினமாக நம்மையே வந்து சேரும் என்பது மிகவும் உண்மை. எண்ணம் போல் தான் வாழ்வு. அதைத்தான் வள்ளுவரும் உள்ளத்தனையது உயர்வு என்றார்.
    தன்னலமற்ற கருங்குருவியைப் பற்றி எத்தனை செய்திகள் உங்களிடமிருக்கின்றன? வியப்பாயிருக்கிறது. அடுத்து வலம் வந்து வணங்கிய திருத்தலத்தை அறிய ஆவலாயிருக்கின்றேன். அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள் சார்!

    பதிலளிநீக்கு
  14. அன்புடையீர்..

    இந்த மூன்றாவது பதிவினைத் தாங்கள் படிக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..

    ஏனெனில் - கரிக்குருவியைப் பற்றிய இந்த பதிவுகளுக்கு - தங்களுடைய பதிவு தான் காரணம்..

    விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி..

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..