நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 03, 2015

கரிக்குருவி - 1

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய்!..


மார்கழி மாதத்தின் - இளங்காலைப் பொழுது!..

தன் தோழியரை எழுப்புவதில் முனைப்பாக இருக்கின்றாள் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்!..

அடிப் பெண்ணே!..

இளங்காலைப் பொழுதில் இன்னும் என்ன தூக்கம்?..

இளங்காளை!.. இனியவன்!..
இனி அவன் ஆன - இனியவனைத் தொழப் போக வேண்டாமா!..

பறவைகள் எல்லாம் சிலம்பின் ஒலி போல இனிமையாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனவே!..

அந்த ஒலி - கோவிந்தா.. கோவிந்தா!.. - என்று உனக்குக் கேட்கவில்லையோ!..

பறவைகளுக்கெல்லாம் ராஜன் - கருடன்!..
அந்த கருடனுக்கும் ராஜன் - ரங்கன்.. ஸ்ரீரங்கன் - ஸ்ரீரங்கராஜன்!..

அவனுடைய திருக்கோயிலின் வெண்சங்கிலிருந்து - நாதம் பெருஞ்சத்தமாக
எங்களுக்குக் கேட்கின்றது!..

வெண்சங்கின் பெருஞ்சத்தமும் உன் காதுகளைத் துளைக்கவில்லையோ!?..

இன்னும் என்ன தூக்கம்?.. எழுந்து வெளியே வா!..

என்ன ஒரு விசித்திரம்!..

திருப்பாவையின் ஒவ்வொரு எழுத்தும் தித்திக்கின்றது!..

சின்னஞ்சிறு பறவைகளின் குரலை சிலம்பின் ஒலிக்கு இணையாகக் கூறிய - கோதை நாச்சியார் - வெண்சங்கின் நாதத்தைப் பேரரவம் என்கின்றாள்!..

என்ன ஒரு நயம்!..

இப்படி இருந்தும் - அந்தத் தோழி உறக்கத்திலிருந்து எழுந்தாளா!?..

இல்லை.. இல்லை..

ஆண்டாளின் அமுதத் தமிழ் கேட்க வேண்டுமென அவள் உறங்குவது போலவே கிடக்கின்றாள்!..

மீண்டும் - கோதை நாச்சியார் அழைக்கின்றாள்!..

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!..

ஆறாவது திருப்பாடலில் பொதுவாக புள்ளினங்கள் என்று குறித்த ஆண்டாள் - ஏழாவது திருப்பாடலில் நேரிடையாக ஆனைச்சாத்தன் என்கின்றாள்..

ஆனைச்சாத்தன், தன் துணையுடன் கூடிக் கலந்து - கீசு கீசு எனப் பேசும் பேச்சரவம் கூட உனக்குக் கேட்கவில்லையா?..

பேய்ப் பெண்ணோ நீ!?..

நள்ளிருளில் விழித்தெழுந்து, கூத்தடித்து மகிழும் பேய் பிசாசுகள் எல்லாம் விடியற் காலையில் -

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டதும் வெருண்டு ஓடிப் போகுமே!..

அப்படி ஓடித் தொலையாத பேய் எதுவும் உன்னைப் பிடித்திருக்கின்றதோ?..

எழுந்திராய்.. தோழீ.. எழுந்திராய்!..


தன் துணையுடன் கூடிக் கலந்து - கீசு கீசு எனப் பேசும் ஆனைச்சாத்தன்!..

ஆனைச்சாத்தன்!.. 
இதுதான் கரிச்சான் எனப்படும் கரிக்குருவி!..

காலையில் கீச்சிடுபவை எத்தனையோ பறவைகள்!..

அவற்றுள் ஆனைச்சாத்தன் எனப்பட்ட கரிக்குருவியை - ஏன் குறித்தாள் ஆண்டாள்?..

அது சமூகத்துடன் ஒட்டி உறவாடுவதால்!..

தொழுவம் மாடுகளைக் கட்டிப்போடுமிடம். இதுவே கொட்டில் எனப்படுவதும்.

மாட்டுத் தொழுவத்தை - அதிலும் குறிப்பாக எருமைக் கொட்டிலை ,

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் குறிக்கும் அழகே - அழகு!..

எருமைச் சிறுவீடு!..

திருப்பாவையின் எட்டாவது திருப்பாடலில் இந்த வார்த்தையைக் காணலாம்!..

இன்றைக்கு -
இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுள் - மீதமுள்ள அருங்காட்சியாக -
கரிச்சான் - எருமையின் முதுகில் அமர்ந்து கொண்டு ஆனந்தமாக வலம் வருவதைக் காண்கின்றோம்..


அன்றைக்கு -
ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் -
எல்லா வளங்களும் நிறைந்திருந்த - அந்தக் காலத்தில் -

கனைத்த இளங் கற்றெருமை முதுகில் அமர்ந்திருக்கும் கரிக்குருவியை -

ஆண்டாள் கண்டிருக்க மாட்டாளா!..

கண்டு இன்புற்றிருக்க மாட்டாளா!..

அந்த இன்பத்தின் பயனையே - ஆண்டாள் நமக்கு வாரிக் கொடுத்தாள்!..

பறவைகளையும் விலங்குகளையும் - உற்று நோக்கி உளம் மகிழ்ந்த - கோதை
அவற்றைச் சிறப்பித்து திருப்பாவையில் பதிவு செய்திருக்கின்றாள்.

ஆண்டாள் திருவடிகள் போற்றி.. போற்றி!.. 
* * * 


எருமையின் முதுகில் சும்மா வேடிக்கைக்காக அமர்வதில்லை - கரிச்சான்!..

அதன் - முதுகிலும் முரட்டுக் கொம்புகளுக்கு இடையே உச்சந்தலையிலும் அடர்ந்திருக்கும் முடிகளுக்கிடையே பதுங்கிக் கொண்டு தலைவலியை உண்டு பண்ணும் சிறு சிறு பூச்சிகளைப் பிடித்துத் தின்று ஒழிப்பதே -

இரட்டைவால் குருவியின் தலையாய வேலை!..

சமயத்தில் - இந்தக் கரிச்சான் என்ன செய்யும் தெரியுமா!..

எருமையின் கண்ணோரத்தில் - உலர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளையும் -

ஒரு தாயின் பாசத்துடன், ஒரு தாதியின் பரிவுடன் -
தன் கூரிய அலகால் மெதுவாக - உதிர்த்து விடும்!..

இந்தப் பாசத்தையும் பரிவையும் அதற்குச் சொல்லிக் கொடுத்தது யார்?..

சிந்திக்க சிந்திக்க ஆச்சர்யம் தான் விரிகின்றது!..


எருமை மட்டும் என்றில்லை..
ஆடு, மாடு இவைகளுக்கும் கரிச்சான் உற்ற தோழனே!..

ஆற்றங்கரைகளிலும் குளத்தின் ஓரத்திலும் கால்நடைகள் மேயும் போது -

அவற்றின் தோழர்களாக கரிக்குருவி, கொக்கு மற்றும் மடையான்களையும் கண்டு மகிழலாம்.

இந்தக் கரிச்சான் வீட்டுக்கு அருகிலேயே சுற்றித் திரிந்தாலும் -
சக மனிதர்களுக்கு எவ்விதத் தொல்லையும் கொடுப்பதில்லை.

மொட்டை மாடியில் - வற்றல் என எதையாவதைக் காய வைத்தால் அதைக் காக்கைகளிடம் இருந்து காப்பதற்கே -

ஒரு ஆளைத் தனியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்..


ஆனால் - அந்த இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக கம்பியும் -
ஒரு கரிக்குருவியும் இருந்து விட்டால் போதும்!..

நாம் நிம்மதியாக - அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடலாம்..

கூலியில்லா வேலையாளாக - வெகு சிரத்தையுடன் ஒற்றை ஆளாக -
காக்கைகளை அடித்து விரட்டி விட்டு -

வற்றலைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொடுத்து விடும்.

காக்கை என்ன காக்கை!..



கழுகையே விரட்டி அடிக்கும் வல்லமை பெற்றது கரிக்குருவி.

அதனால் தான்,  கரிச்சானுக்கு வலியன் என்றொரு பெயரும் அமைந்தது.

கரிக்குருவிக்கு ஏன் வலியன் என்ற பெயர் அமைந்தது!?..

அதை அடுத்த பதிவினில் தருகின்றேன்..

சக பதிவரான - கலையரசி.G அவர்களின்

ஊஞ்சல் வலைத்தளத்தில்

'' பறவை கூர் நோக்கல் '' - எனும் பதிவைப் படித்ததுமே -

கரிக்குருவியைப் பற்றி ஒரு பதிவினைத் தர வேண்டும் என விரும்பினேன்.

காரணம் -

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையில் கரிக்குருவியை ரசித்த தருணங்கள் மீண்டும் கிடைக்காதவை.

குறுஞ்செடிகளின் மெல்லிய கிளைகளிலும் வீடுகளின் அருகிலுள்ள கம்பிகளிலும் யதேச்சையாக அமர்ந்தபடி -

ஒய்யாரமாக தன் பாட்டுக்கு தானே ஆடிக் கொண்டிருக்கும் சுகவாசி - கரிக்குருவி.


முன்பெல்லாம் - இருப்புப் பாதையில் மருங்கில் அமைந்திருந்த தந்திக் கம்பங்களின் கம்பிகளில் கூட்டங்கூட்டமாக கரிக்குருவிகளைக் காணலாம்.

ஆனால், தற்போது - இருப்புப் பாதையின் ஓரத்தில் தந்திக் கம்பங்களையும் காண முடிவதில்லை.

கரிக்குருவிகளையும் காண முடிவதில்லை..

தானும் வாழ்ந்து - தன்னைச் சேர்ந்த சக பறவையினங்களையும் வாழ வைக்கும் குணமுடையது - கரிக்குருவி..

கலையரசி.G அவர்களின் பதிவுக்குக் கருத்துரை வழங்கியதும் -

இந்தப் பதிவுக்கான களம் அமைந்து விட்டது.

கலையரசி.G அவர்கள் -
கரிச்சானைப் பற்றித் தாங்களும் ஒரு பதிவு எழுதுக!.. - என உற்சாகப்படுத்திய வகையில் - மகிழ்ச்சி கொண்டு இப்பதிவினை வழங்குகின்றேன்.

அடுத்த பதிவினில் -

கரிக்குருவிக்கு வலியன் என்ற பெயர் அமைந்த காரணத்துடன் சந்திப்போம்..
* * *


ரெட்டை வால் கரிச்சான் - நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை!..

ஆனால் - நாம் தான் ரெட்டை வாலின் வாழ்விடங்களை மூர்க்கத் தனமாக அழித்தொழித்தோம்.

இனியேனும் திருந்தி 
இவ்வுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொது 
என்பதைப் புரிந்து கொண்டு 
சக உயிரினங்களையும் வாழ விடுவோமாக!..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!.. 
* * *

23 கருத்துகள்:


  1. கரிச்சான் குருவி தங்கள் தொகுப்பில் அருமையாக அமைந்துள்ளது, நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நமக்கு உதவி மட்டும் செய்யும் ஓர் உயர்ந்த உயிர் கரிச்சான் என்பதைத் தங்கள் பதிவின் முலம் தெரிந்துக்கொண்டேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  2. அப்பப்பா எவ்வளவு விசயங்கள்... நன்றி கணினி இல்லை ஆகையால் ...முடித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. அடடா அருமை துரை சார்! கரிச்சானைப் பற்றி வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்! வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு பதிவு!
    மார்கழித் திங்கள் இளங்காலைப் பொழுதில் தோழியைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் திருப்பாவை வரிகளைச் சிலாகித்து, பின் கீச்சு கீச்சு என்று பேசும் ஆனைசாத்தனைப் பற்றி அவர் கூறும் வரிகளைச் சொல்லி அருமையான ஒரு பதிவைத் துவங்கியிருக்கிறீர்கள்.
    ஆனைசாத்தன் கரிச்சானுக்கு இன்னொரு பெயர் என்று அறிந்து கொண்டேன். தேவாரத்தில் மட்டுமின்றி திருப்பாவையிலும் கரிச்சானைப்பற்றி இருக்கும் விபரங்களைத் தெரியப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி.
    மாடுகளுக்கு மட்டுமின்றி வற்றல் காய வைக்க மனிதருக்கும் உற்ற தோழனாக விளங்கும் கரிச்சான் வாழ்க! அதன் சிறப்புக்களை யறியாமல் நாம் தான் அதன் வாழ்விடங்களைப் பாழ்படுத்திவிட்டோம் என்றறியும் போது வருத்தமாக இருக்கிறது!
    கழுகை விரட்டும் படம் அபாரம்!
    சிறப்பான இந்தப் பதிவு துவங்க நான் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது. தொடர்ந்து தாருங்கள். இன்னும் விபரங்களை அறியக் காத்திருக்கிறேன்.
    பதிவில் என்னைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி. பாராட்டுக்கள் துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இந்தப் பதிவினைத் தருவதற்கு முழுமுதற்காரணம் தாங்களே!..

      கருத்துரைக்கும் ஊக்கமளித்த தங்கள் பெருந்தன்மை - மனதிற்கு நிறைவு..

      அனைவரும் பாராட்டுகின்றனர் எனில் அதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதே நிதர்சனம்!..

      தங்கள் வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கரிச்சான் குருவி – என்றதும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது, நான் சிறுவனாக இருந்தபோது படித்த கரிச்சான் குருவி என்ற ருஷ்ய சிறுவர் படக் கதைப் புத்தகம்தான். அதன் அட்டைப் படம் கரிச்சான் குருவி.
    கரிச்சான் குருவியை ஆண்டாளின் அழகு தமிழோடு அழகாகச் சொன்னீர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தங்கச் சுரங்கமாகத் தமிழ் - திகழ்கின்றது!.. இந்தப் பதிவில் ஏற்பட்ட மகிழ்ச்சி மனம் நிறைகின்றது.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. மாசியிலும் மார்கழி குளீர் இனிமை அய்யா!
    திருப்பாவையின் சின்னஞ்சிறு பறவைகளின் சிலம்பு ஓலி
    சிலாகித்துத்தான் போனேன் . வெகு சிறப்பு!
    வாடும் வற்றலைக் காக்க கூடும் கரிச்சான் பறவைகளின்
    சேவையை என்றும் ஏற்றி பறைக் கொள்வோம்!
    நலந்தரும் நற்படைப்பு!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பதிவுகள் தோறும் கவிமழையாகக் கருத்துரை வழங்கும் தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நண்பரே ஆச்சர்யமாக இருக்கிறது ஒவ்வொரு விரிவுரையும். அப்பப்பா இறைவன் படைப்பில் ஒன்றுக்கொன்று பந்தம் உண்டு 80 இதிலேயே புலப்படுகிறதே அருமை நண்பரே அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றேன், இன்று விஞ்ஞான வளர்ச்சியால் இவையனைத்தும் அழிந்து விட்டன உபயம் செல்போண் டவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இயற்கை அளித்த மாபெரும் சங்கிலி இது தான்.

      தாவரங்களோ பறவைகளோ விலங்குகளோ -
      எதுவும் நம்மைச் சார்ந்திருப்பவை அல்ல.. ஆனால்

      நாம் தான் இந்தச் சங்கிலியை உடைத்தோம்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திருப்பாவை படிக்கும் போது கரிச்சான் குஞ்சு நினைவா. கரிச்சான் குஞ்சினைப் பார்க்கும்போது திருப்பாவை நினைவா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இயற்கையும் இறையும் - ஒன்றுதானே!..

      தங்களின் வருகையும் கருத்தும் - மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

  8. கரிச்சான் குருவிகளைப் பற்றிய விவரங்கள் மிக அருமை துரை சார். கரிச்சான் குருவிகள் , சிட்டுக் குருவிகள் என்று பலவற்றை நாம் அழித்துக் கொண்டே வருகிறோம். இது எங்கு போய் முடியும் என்றுத் தெரியவில்லை.
    நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.
    பாராட்டுக்கள் சார்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      //இயற்கை வளங்கள் பலவற்றை அழித்துக்கொண்டே வருகின்றோம். இது எங்கு போய்முடியும் என்று தெரியவில்லை..//

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. கரிச்சான் குருவிகள் அஹகு. அதிலும் அவை எருமை மாட்டின் மீது பயணிக்கும்?!?! அழகு அழகோ அழகு! இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறாய்ய இருக்கின்றது....அருமையான புகைப்படங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மைதான். பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன..

      அழகான படங்கள் இணையத்தில் பெற்றவை.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. கரிச்சான் குருவி பற்றி திருப்பாவையில் ஆண்டாள் சொன்னதை சொல்லிய விதம் அழகிய கவிதை....

    கரிச்சான் குருவி... மாட்டின் மீது அமர்ந்து ஊர்வலம் போவதை ரசித்திருக்கிறேன்....

    படங்கள் எல்லாம் அழகாய்....

    தொடருங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      நமக்கெல்லாம் கிடைத்த இயற்கைக் காட்சிகள் வரும் சந்ததியர்க்குக் கிடைக்குமா?..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  11. ஆகா...! சொன்ன விதம் தான் எத்தனை ரசனை...!

    படங்கள் அனைத்தும் அழகோ அழகு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அழகிய கருத்துக்கு நன்றி..

      நீக்கு
  12. ஐயா வலியன் குருவியும் ஆனைச்சாத்தன் இரண்டும் ஒன்றா? அல்லது வேறு பறவையா..?

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..