நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருவேதிகுடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவேதிகுடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 19, 2014

திருவேதிகுடி குடமுழுக்கு

திருமணத் தடைகளை நீக்கி மணமாலை அருளும் திருத்தலம். திருவேதிகுடி.

ஸ்ரீ மங்கையர்க்கரசி உடனாகிய ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலுக்கு 
ஸ்ரீ விஜய வருடம் பங்குனி மாதம் ஐந்தாம் நாள் புதன் கிழமையாகிய 
இன்று காலை  {9.00 -10.30}  மஹா கும்பாபிஷேகப் பெருவிழா!..


திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகம். 
மூன்றாம் திருமுறை . திருப்பதிக எண் - 78.

நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்த இடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறஇணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே!..

சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே!..

போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே!.. 

காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே!.. 

சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே!..

செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே!..


உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே!..

உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே!..

பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே!..

வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே!..

கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே!.. 

ஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகத்தின் பலன் கூறி அருளும் போது - ஆணையிட்டு அருளிய திருப்பதிகங்கள் ஐந்து.
 
அந்த,  ஐந்தினுள்  ஒன்று - திருவேதிகுடிக்கு உரியது!..


அப்பர் சுவாமிகள் அருளிய திருப்பதிகம். 
நான்காம் திருமுறை . திருப்பதிக எண் - 90 .

கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே. 

கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.

முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர் புரம்பொடி யானசெய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை உடையனை நாமடைந் தாடுதுமே.

பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.

ஆனணைந் தேறுங் குறிகுணம் ஆரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும் புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு பயில்திரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை நாமடைந் தாடுதுமே.

எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாமடைந் தாடுதுமே.

 
ஊர்ந்தவிடை யுகந் தேறிய செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப் பிரான்திரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமுதை அடைந் தாடுதுமே.

எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொரு வன்தலையுள்
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க ளோடடைந்து ஆடுதுமே.

மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆராஅமுதினை நாமடைந் தாடுதுமே.

வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர்பி ரான்திரு வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.
 
 
 
     

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அருளிய திருப்பதிகங்கள் இரண்டிலும் - ஏழாவது திருப்பாடலில் - மங்கல மணவினைகளும் மங்கலத் திருக்கோலமாகிய மங்கையோர் திருப்பாகம் எனும் அர்த்தநாரீஸ்வரத் திருக்கோலமும் பயின்று வருவதைக் காணலாம்.

கும்பாபிஷேக தினத்தன்று மாலை - ஸ்ரீ மங்கையர்க்கரசி அம்பிகைக்கும் ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமிக்கும் மஹா அபிஷேகம். திருக்கல்யாண வைபவமும் ஸ்வாமி திருவீதி உலாவும் நிகழ்வுறும்.

சோழ வளநாட்டில், காவிரிக்குத் தென்கரைத் தலங்களுள் - பதிநான்காவது திருத்தலம்  - திருவேதிகுடி.

தஞ்சாவூர் - திருவையாறு  வழித்தடத்தில்  உள்ளது  கண்டியூர்.

கண்டியூரில் ஸ்ரீபிரம்மசிரக்கண்டேஸ்வரர் திருக்கோயிலை ஒட்டினாற்போல வீரசிங்கன்பேட்டை செல்லும் சாலையில் மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது - திருவேதிகுடி..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாற்றுக்கு அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன.

திருவையாற்றிலிருந்து கண்டியூர் வழியாக - திருவேதிக்குடிக்கு சிறு பேருந்துகள் இயங்குகின்றன. திருக்கோயிலின் அருகிலேயே பேருந்து நிறுத்தம்.
ஸ்ரீ மங்கையர்க்கரசி சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் 
திருவடிகள் போற்றி!.. போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

செவ்வாய், மார்ச் 18, 2014

திருவேதிகுடி - 2

திருமணத் தடையினை  நீக்கி அருளும்  திருத்தலம்!.
மணமாலைக்கு வரம் அருளும் திருத்தலம்!. 
என்றே - திருவேதிகுடி  - அறியப்படுகின்றது.

ஆரவாரமான, ஆடம்பரமான எந்தவொரு பெரிய விளம்பரங்களும் இல்லை.

இந்த தலத்தில் - அம்பிகை தவம் இருந்தாள். ஐயன் திருமணம் கொண்டார் - என்றெல்லாம் ஐதீகம் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஆனாலும் ,


அன்றாடம் - ஐயன் வேதபுரீஸ்வரரையும் அன்னை மங்கையர்க்கரசியையும் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்  - அன்பின் வழிப்பட்ட மக்கள்!..

அதற்குக் காரணம் -

தனக்கென வாழாத் தகைமையாளர்களாகிய அப்பர் சுவாமிகளும், ஞான சம்பந்த மூர்த்தியும் தான்!..

அருளாளர்களாகிய அவர்களின் திருவாக்கினின்றும் உதித்த - தமிழமுதத் திருப்பதிகங்கள் தான் - திருவேதிக்குடியின் பெருமைகளுக்குக் காரணம்!..


சோழ வளநாட்டில்  - காவிரிக்குத் தென்கரைத் தலம் என குறிக்கப்பட்டிருக்கும் திருத்தலங்களுள் பதிநான்காவது திருத்தலம் திருவேதிக்குடி.

ஞானசம்பந்தர் அருளிய ஒரு திருப்பதிகமும் {3/78}, திருநாவுக்கரசர் அருளிய ஒரு திருப்பதிகமும் {4/90} என  - இரண்டு திருப்பதிகங்கள் - திருவேதிக்குடிக்கு.

ஞானசம்பந்தப்பெருமான் அருளிய  திருப்பதிகத்தின் முதல் பாடல் - இது.

நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தஇடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறஇணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே. 


சர்வ காரணன் ஆகி - அண்டபகிரண்டமும் பணிந்து வணங்கும் ஆதி நாதன் ஆகிய சிவபெருமான் -

திருநீறு விளங்க , படம் விரித்தாடும் பாம்பையும், ஆமை ஓடு , ருத்ராட்சம், என்பு முதலான மாலைகளையும் அணிந்தது இடப வாகனத்தில்  வீற்றிருந்து அருளும் தலமாகிய  - திருவேதிகுடி,

விரிந்த பாளைகளை உடைய பாக்கு மரங்களில் ருந்தும், கனிந்த பழங்களை உடைய  வாழைத் தோட்டங்களில் இருந்தும் பரவும் நறுமணத்தால்  நிறைந்தும்,

வாளை மீன்கள் இணை பிரியாமல் விளையாடும்படிக்கு நீர் நிறைந்த  மடுக்களால் வயல்வளம் மிகுந்தும் விளங்குகின்றது - என வர்ணிக்கின்றார்.

திருப்பதிகத்தின் - இரண்டாம் திருப்பாடலில் - 

வெற்பரையன் மங்கையொருபங்கர் நகர் என்பர் திருவேதிகுடியே!..

மலையரசனின் திருமகளாகிய உமாதேவியை - தன்னுடன் இணைத்து, மங்கையொரு பங்கனாக விளங்கும் சிவபெருமானின் தலம் திருவேதிகுடியே!.. - என்று புகழ்கின்றார்.

திருப்பதிகத்தின் - ஏழாம் திருப்பாடல்.

உன்னிஇருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன்இடமாம்
கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே. 


காலையிலும் , மாலையிலும்  திருவடிகளைச் சிந்தித்துப் போற்றும் தன் அடியார்களுடைய துன்பங்களை நீக்கி அருள் செய்பவனும்

தன்னையடைந்த - சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற்குமாரர் எனும் முனிவர்களுக்கு  தக்ஷிணாமூர்த்தி என திருக்கோலம் கொண்டு, ஆலமரத்தின் கீழிருந்து அறம் உரைத்தவனும் ஆகிய - சிவபெருமான் விளங்கும் இடம் - 

கன்னியருடன் ஆடவர் சிறப்புற திருமணம் செய்து கொள்ளும் மங்கல நாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகள் மிகச் சிறப்புற நிகழவேண்டும்!.. என மின்னியல் நுண்ணிடை நன்மங்கையர் தொழுது வணங்கும்  திருவேதிகுடி!.. 

திருப்பதிகத்தின் - எட்டாம் திருப்பாடல்.

உரக்கரநெ ருப்பெழநெ ருக்கிவரை பற்றிய ஒருத்தன்முடிதோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணன் இடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்ணிசை உலாவு திருவேதிகுடியே.


இப்படி வேண்டி நின்று, அன்பின் வழி மணமங்கலம் எய்தியபின் - காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பத்தில் -

முருக்கம்பூ போல சிவந்த இதழ்களையுடைய இளங்கன்னியரும் ஆடவரும்  - ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு பூசி மகிழும் நறுமணம் விண்ணுலகம் எங்கும்  கமழ்கின்றது.

- என்று புகழ்கின்றார்.  


இவ்வாறே - அப்பர் சுவாமிகள் - தாம்  அருளிய திருப்பதிகத்தின் ஆறாவது திருப்பாடலில் -

எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான் திருவேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாமடைந் தாடுதுமே. 
 


அன்பினால் அடைந்து அடிதொழும் அடியவர் தம்மை -  பற்றித் தொடரும் தீவினகளைத் தீர்த்தருளும் பிரான் என்று போற்றுகின்றார். 

திருப்பதிகத்தின் - ஏழாவது திருப்பாடலில்

ஊர்ந்த விடையுகந் தேறிய செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையோர் பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப் பிரான்திரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்அமுதை அடைந் தாடுதுமே.

விருப்பமுடன் விடை வாகனத்தில் பவனி வரும் செல்வனாகிய பெருமானை நாம் முழுமையாக அறியோம் .  இன்மொழி கூறும் அம்பிகையுடன் மகிழ்ந்து என்றும் பிரியாதவன்.   அவளைத் தன்மேனியில் ஒரு பாகமாக  உடையவன்.  

சடையிற் கங்கையைச் சூடி விளங்கும் செல்வப்பிரான். வயல்கள் சூழ்ந்த திருவேதிகுடியில் குளிர்ந்த அமுதம் போல வீற்றிருக்கின்றனன். பெருமானை  அடைந்து  அவன் அன்பினில் திளைத்து ஆடுவோம்!.. 

- என்று நமக்கு நல்வழி காட்டுகின்றார்.

ஒரு ஜாதகத்தில் - இரண்டாம் வீடு - குடும்ப ஸ்தானம். தனம், கல்வி, வாக்கு இவற்றைக் குறிப்பிடும் ஸ்தானம் ஆகிறது.

ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம்.  மனைவி அல்லது கணவன் அமையும் ஸ்தானம். இல்லறத்தைக் குறிப்பிடும் ஸ்தானம்.

இந்த ஏழாம் வீட்டில் நல்ல கிரகம் தங்கி இருக்க ஜாதகரின் வாழக்கை மிகவும் இன்பமாக இருக்கும். அவர் மனதில் உதிக்கும் எண்ணங்கள் ஏழாம் வீட்டின் அதிபர் நிலையைப் பொருத்தே இருக்கும். ஜாதகத்தில் இரண்டாம் இடம், ஏழாம் இடம் நன்றாக இருந்துவிட்டால் கவலையே இல்லை.

இந்த ஏழாம் இடம் நன்றாக அமையும்படிக்கு, மேலைத் தொல்வினைகள் தொலையவும்,  நல்வினைகள் சேரவும்   - 

ஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு சுவாமிகளும், ஒரு சேர - தமது திருப்பதிகங்களில் நல்வாக்கு அருள்கின்றனர்.

அப்படி அருளிய நல்வாக்கு, திருப்பதிகங்களின் ஏழாவது திருப்பாடலாக அமைந்ததே -  பெருஞ்சிறப்பு  என்று ஆன்றோர் அறிவிக்கின்றனர்.

அதிலும், ஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகத்தின் பலன் கூறி அருளும் போது - ஆணையிட்டு அருளிய திருப்பதிகங்கள் ஐந்து.

அந்த,  ஐந்தினுள்  ஒன்று - திருவேதிகுடிக்கு உரியது!..

கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்களென்ன நிகழ்வெய்து இமையோர்
அந்தவுல எய்திஅரசாளும் அதுவே சரதம் ஆணைநமதே!..


- என்று ஞானசம்பந்தர் திருப்பதிகத்தினை நிறைவு செய்கின்றார்.

மகளுக்கு நல்லபடியாக வரன் அமைய வேண்டுமே.. என்ற  - கலக்கம். சென்ற வருடம் முழுதும். ஏனெனில், அங்கு இங்கு என்று - வரும் ஜாதகங்கள் எல்லாமே - சொல்லி வைத்தாற் போல - ஒன்று போலவே வந்தன.

இயன்றவரை - வெள்ளிக் கிழமைகளில் செல்லும் தலம் - தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்!..   

அப்படி - ஒரு வெள்ளியன்று மாரியம்மன் கோயிலுக்குச் சென்றபோது, 

மங்கலம் கொண்டு விளங்கிய மாதரசி ஒருவர், அவர்களாகவே அருகிலுள்ள கத்தரிநத்தம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும்படி கூறினார். 

முன் எப்போதும் அறிந்திராதவர் - அந்த மாதரசி. ஆயினும் அவர்களுடைய முகத்தில் விளங்கிய தேஜஸ் - அந்த சுமங்கலி யாரென்று உணர்த்திற்று. 

அதன்பின், கத்தரி நத்தம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில்  - ஒரு பிரதோஷ நாளில் வழிபட -  கிடைத்த  விடை - திருவேதிக்குடி.

அதன்படி - திருவேதிகுடியில் ஸ்ரீ மங்கையர்க்கரசியையும் ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமியையும் வழிபட்டு நிற்க - அடுத்த முப்பது நாட்களுக்குள் திருமணம் கூடி வந்தது. 

திருமாங்கல்யதாரணம்
ஒருவருக்கு ஒருவர் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது இணையத்தின் வழியே!..

இடையில், ஒருநாள் திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் செய்து கொண்டிருந்த போது - தொலைபேசியில்  செய்தி வந்தது - பெண் பார்க்க வருகின்றோம் - என்று!.. 

அதன்பின்,  பெண் பார்க்கும் படலம் - தஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதியில்!.. 

நிச்சயதார்த்தத்திற்கு முன் - பூவைத்தல் எனும் சம்பிரதாயம் ஒன்று எங்களில் உண்டு.   அந்த நாளில்  - அம்பாளின் உத்தரவுப்படி, மாலை மாற்றிக் கொண்டது - தஞ்சை ஸ்ரீ கோடியம்மன் சந்நிதியில்!.. 

உவரி - ஸ்ரீமாடஸ்வாமி சந்நிதியில்
குதுகலத்துடன் - குலுமனாலியில்
அனைத்தும் மங்கலகரமாக கைகூடி மாங்கல்யதாரணம் ஆகி - இப்போது மகளும் மருமகனும் அபுதாபியில்!..

தஞ்சாவூர் - திருவையாறு  வழித்தடத்தில்  உள்ளது  கண்டியூர்.

கண்டியூரில் ஸ்ரீபிரம்மசிரக்கண்டேஸ்வரர் திருக்கோயிலை ஒட்டினாற்போல வீரசிங்கன்பேட்டை செல்லும் சாலையில் மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது - திருவேதிகுடி..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாற்றுக்கு அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால் உள்புறம் திருவேதிகுடிக்கு இயங்கும் பேருந்துகள் குறைவு.

ஆயினும், திருவையாற்றில் இருந்து கண்டியூர் வழியாக திருவேதிக்குடிக்கு சிறு பேருந்துகள் இயங்குகின்றன. திருக்கோயிலின் அருகிலேயே பேருந்து நிறுத்தம்.

திருவேதிக்குடி சிறிய கிராமம். திருக்கோயிலுக்கு அருகில் அர்ச்சனைப் பொருட்களுக்கு என கடைகள் ஏதும் இல்லை. எனவே - திருவையாற்றில் அனைத்தும் கிடைக்கும். தேவையானவற்றை வாங்கிக் கொள்ளவும்.

திருமணம் அருளும் திருவேதிகுடி திருப்பதிகங்கள் - அடுத்து வரும் பதிவுகளில்!.. 

சீரும் சிறப்பும் மிக்க திருவேதிகுடி திருக்கோயிலுக்கு 
நாளை (மார்ச் 19) காலை 9.00 - 10.30 மணிக்குள் 
திருக்குடமுழுக்கு நடைபெறுகின்றது.

அனைவரும் வருக!.. இறையருள் பெறுக!..

நான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும்!. 
ஸ்ரீமங்கையர்க்கரசி உடனாகிய ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்வாமி 
நல்லருள் புரிவாராக!..

சிவாய திருச்சிற்றம்பலம்.

ஞாயிறு, மார்ச் 16, 2014

திருவேதிகுடி - 1

திருமண வரம் அருளும் திருத்தலம்.

இறைவன்  - ஸ்ரீவேதபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மங்கையர்க்கரசி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் -  வேத தீர்த்தம்

வேதி - பிரம்மன். பிரம்மன் பூசித்த தலம். ஆதலின் வேதிகுடி என்ற திருப்பெயர். பின்னும் வேதங்கள் ஒருங்கு கூடி வழிபட்டதனாலும் வேதிகுடி கூறுவர்.

பலகாலமாக உள்ளன்புடன் தன்னை வழிபட்ட அன்பர் ஒருவரின் பொருட்டு வாழை மடுவில் ஸ்வாமி  சுயம்புவாக வெளிப்பட்டருளினார்.

அத்தன்மையால் - வாழைமடு நாதர்  என்றும் திருப்பெயர்.

ராஜகோபுரத்திற்கு வெளியே தனியானதொரு திருமண்டபத்தில் கம்பீரமாக ஸ்ரீநந்தியம்பெருமான் விளங்குகின்றனர்.

அம்பிகை ஸ்ரீமங்கையர்க்கரசியின் திருச்சந்நிதி, திருக்கோயிலுக்கு முன்பாக - வெளியில் வலப்புறம் அமைந்துள்ளது. 

சர்வ மங்கலங்களுக்கும் காரணியாகிய அம்பிகைக்கு - ஆடி, தை மாத வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழும்.  சந்தனக் காப்பு அலங்காரத்தில்  விளங்குவாள்.

மகாமண்டபத்தில் உள்ள வலம்புரி விநாயகர் - வேதவிநாயகர் எனப்படுகிறார்.

இறைவன் அருளிச் செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில் அற்புதமாகக் காட்சித் தருகிறார்.


இருபுறமும் சிவலிங்கங்களுடன் விளங்கும் - மூலஸ்தானத்தின் உள்ளே -

நானிருக்கக் கவலை ஏன்!.. 

- என்பது போல,  தேஜோமயமாகத் திகழ்கின்றார் - ஸ்ரீ வேதபுரீஸ்வரர்.

வருடந்தோறும் பங்குனி மாதம்  13,14,15 - ஆகிய மூன்று நாட்களில் சூரிய பூஜை நிகழும் திருத்தலம் - திருவேதிகுடி.

காலைக் கதிரவன் - தன் இளங்கதிர்களால் மூலஸ்தானத்தில் அருட்பெருஞ் சோதியாக விளங்கும் ஐயனின் திருப்பாதக் கமலங்களை வணங்கி மகிழ்கின்றான். 

ஞானசம்பந்தப் பெருமானும் , திருநாவுக்கரசரும் தரிசித்த திருத்தலம்.

ஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருப்பதிகத்தின் ஏழாவது  திருப்பாடல் -   மகத்தான பாடலாகும்.

உன்னிஇரு போதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழல்  இருந்த துணைவன் தன்இடமாம்
கன்னியரொடு  ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையர்இயற்றுபதி வேதிகுடியே.  (3/78/7)

இந்தத் திருப்பாடலை - திருமண வயதினர் -  நாளும் பாராயணம் செய்ய, திருமணம் விரைவில் கைகூடி வரும் என்பது நிதர்சனமான உண்மை.

திருப்பதிகத்தின் பயன் கூறும் போது -

திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவபெருமானின் திருவடித் தாமரைகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்ந்து எல்லா மங்கலங்களையும் எய்தி - மறுமையில் இந்திரலோகத்தில் இருந்து அரசாள்வர். ஆணை நமதே!..

- என்று அருள்கின்றனர். 

ஞானசம்பந்தப்பெருமான் ஆணையிட்டு அருளிய திருப்பதிகங்களுள் இதுவும் ஒன்று.

நான்முகன் இத்திருத்தலத்தில் பெருமானைப் போற்றி வணங்கியதை,

செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி {4/90/3} 

- என்று குறிப்பிட்டு அருள்கின்றார் - திருநாவுக்கரசர்.  

திருச்சுற்றில் ஸ்ரீலட்சுமி நாராயணர் சந்நிதி உள்ளது. அருகிலேயே வணங்கிய கோலத்தில் ஸ்ரீஆஞ்சநேயர். 

மேலும், நூற்றெட்டு லிங்கங்களுடன் சப்தஸ்தான லிங்கங்களும்  தக்ஷிணா மூர்த்தி, சுப்ரமணியர், துர்க்கை, மகாலக்ஷ்மி, நடராஜர் - திருமேனிகளும் திகழ்கின்றன. 

திருக்கோஷ்டத்தில்  - 

வலப்புறம் அம்பிகை. இடப்புறம் ஈசன். 

பின்புலத்தில் ரிஷபம்!.. அபூர்வத் திருக்கோலம். 

 அழகான அர்த்தநாரீஸ்வர திருமேனி!.. 

அந்த சிற்பத்தின் அழகைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் - 

அதைச் சிதைத்த கொடூரம் தான் என்னே!..

குறிப்பதற்கு மனம் வரவில்லை. 
மிகவும் வலிக்கின்றது.

புராதனமான திருக்கோயில். 

கவனிப்பாரற்ற நிலையில் இருக்கின்றது. 

சோழ மன்னர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்ட வேலிக் கணக்கான விளைநிலங்கள் இருந்தும் -

பலன்கள்  சென்றடைந்த இடம் எது?..  தெரிய வில்லை.

கலைக் கோயிலான இத்திருக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. அவை  முதலாம் ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்தவை என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

கல்வெட்டுச் செய்திகள் மூலம் - ''வேதிகுடி மகாதேவர்''  என்றும், ''பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர்'' என்றும் குறிக்கப்படுவதை அறிய முடிகின்றது.

சோழ நாட்டின் மகோன்னதமான சிற்பிகளின் கை வண்ணத்தில் - உன்னத கலைப் படைப்புக்களாக விளங்கும் அரிய சிற்பங்கள் பல ஜீரணமான நிலையில் இருக்கின்றன.



 ஆயினும், அருட்கடலாகத் திகழும் ஐயனும் அம்பிகையும் அல்லலுற்று வருவார் தமக்கு அனைத்து நலங்களையும் வாரி வழங்கி அருள்கின்றனர்.

அன்பர்களின் பெருமுயற்சியால் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடந்து - மார்ச் பத்தொன்பதாம் நாள் திருக்குடமுழுக்கு நிகழ இருக்கின்றது.

சித்திரை மாதத்தில் திருஐயாற்றிலிருந்து, ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் - அறம்வளர்த்த நாயகியுடனும், ஸ்ரீ நந்திகேஸ்வரர்  சுயசாம்பிகை தேவியுடனும் எழுந்தருளும் சப்தஸ்தான திருத்தலங்களுள் இது மூன்றாவது திருத்தலம் ஆகும்.

தஞ்சாவூர் - திருவையாறு  வழித்தடத்தில்  உள்ளது  கண்டியூர்.

கண்டியூரில் ஸ்ரீபிரம்மசிரக்கண்டேஸ்வரர் திருக்கோயிலை ஒட்டினாற்போல வீரசிங்கன்பேட்டை செல்லும் சாலையில் மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது - திருவேதிகுடி.

ஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருப்பதிகத்தின் ஏழாவது  திருப்பாடல் -   மகத்தான பாடலாகும்.

இந்தத் திருப்பாடலை - திருமண வயதினர் -  நாளும் பாராயணம் செய்ய, திருமணம் விரைவில் கைகூடி வரும் என்பது நிதர்சனமான உண்மை.

அதற்கு - நாங்களே சாட்சி!.. 
பிப்ரவரி ஒன்பதாம் நாள் நிகழ்ந்த திருமணமே காட்சி!..

என் மகளுக்கு - நல்ல வரன் தேடி - பொருத்தமாக ஏதும் அமையாமல் - மனம் வருந்திய போது - நடந்தது என்ன!..

அந்த இனிய நிகழ்வுகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்!..

அன்று நிகழ்ந்தவை அனைத்தையும் 
எம்பெருமானும் மங்கையர்க்கரசியும் நிகழ்த்தினர்.

சிவாய திருச்சிற்றம்பலம்!..