நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 27
வெள்ளிக்கிழமை
குறளமுதம்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.. 124
**
ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை
இன்று கூடாரவல்லி
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்று அனைய பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. 27
**
பகைவர்களை வெற்றி கொள்கின்ற கோவிந்தனே!..
உனது புகழைப் பாடி பறை பெற்ற பின்னும் நாங்கள் இன்னும் உன்னிடத்தில் பெற விரும்புகின்ற பரிசுகள் எவை எனில்,
இவைகளைப் பெற்று
அணிந்து கொண்டு முழங்கைவரை வழியும்படி நிறைந்த நெய்யுடன் பால் சோறு பரிமாறி கூடியிருந்து உண்டு மகிழ்ந்து
உன்னுடன்
இன்புற்றிருந்து, உள்ளங்குளிர வேண்டும்..
இவ்வண்ணம் ஆவதற்கு அருள் புரிவாயாக!..
**
சிவதரிசனம்
தேவாரம்
திருப்பாட்டு
செய்யார் மேனியனே திரு
நீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மத
யானை உரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சல் என்னே.. 7/27/4
-: சுந்தரர் :-
**
தரிசனத்
திருத்தாண்டகம்
(திருமறைக்காடு - வேதாரண்யம்)
ஆடல்மால் யானை உரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்
நன்மையோடு இம்மை மற்று அம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 6
-: திருநாவுக்கரசர் :-
**
திருவாசகம்
அருட்பத்து
துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
துதைந்தெழு துளங்கொளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
உறுசுவை அளிக்கும் ஆரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே..6
-: மாணிக்கவாசகர் :-
**
தொகுப்பிற்குத் துணை
நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
ஹரியோ சிவனோ.. முழங்கை வழிய உணவு தரும் முன் மனம் முழுக்க அமைதியையும், நிம்மதியையும் தர பிரார்தித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. கூடாரவல்லி வாழ்த்துகள். கேட்கத் திகட்டாத திருப்பாவை பாடல்களையும், விளங்கங்களையும் இறையருளால், இதுவரை இனிதே தந்தமைக்கு மிக்க நன்றி.
தேவார திருவாசக பாசுரங்களும், இறைவனின் அழகான படங்களுமாக இன்றைய பதிவை அலங்கரித்த விதம் சிறப்பு. அழகான இறைவனார்களின் படங்களைப் பார்க்கும் போது மனம் பக்தியில் சிலிர்த்துப் போயிற்று. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பசுரங்கள், பன்னிருதிருமுறை பாடல்களை பாடை இறைவனை தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் அருமை.
பதிலளிநீக்குஎல்லா அமுதமும் அமுதாய். 27 நாட்கள் ஓடிவிட்டன. கூடாரை என்றாலே எங்கள் ஊர்க் கோயிலில் எங்கள் வீட்டு பிரசாதமாக அரவணைக்குக் கொடுத்து ஊருக்குக் கொடுப்பதுண்டு. எல்லா வருடமும் நாங்கள் அங்கிருந்து வந்த பிறகும் என் மாமா அனுப்பி வைப்பார். இந்த வருடம் அவரும் இல்லை. இந்தவருடம் இல்லை அடுத்த வருடம் நடக்கும்.
பதிலளிநீக்குகீதா
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வளத்துடன்
அழகிய படங்கள் மனதைக் கவர்கின்றன.
பதிலளிநீக்குஅவன் பாதம் பணிவோம்.