நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 19, 2022

அன்பின் நன்றி..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை ஆனவனே தரணி தலமுழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.. 65 (3) 
-: பெரியாழ்வார் :-


அருமறைகள் தாலாட்ட 
ஆலிலையின் கருமணியே
ஆழ்வாரின் தமிழ் கேட்டு
அருளாமல் அருளுதற்கு

அன்றொருநாள் ஆங்கு
ஆடாமல் ஆடிவந்தாய்
ஆழ்வாரின் குடில்தேடி
ஓடோடிநீயும் வந்தாய்..

அவ்வண்ணம் காணுதற்கு
அடியேனும் விழைகின்றேன்
அன்பருக்கு அன்பனே
ஆனந்தங் கொண்டு வருக..

யாதவக் கண்ணன்
கார்முகில் வண்ணன்
கருணையின் விழிகள்
செவ்வண்ணம் அருள்

கரதலம் கமலத்
திருவண்ணம் எழில்
பதமலர் இரண்டும்
அவ்வண்ணம்..

செந்தமிழ்ச் செங்கீரை 
செவிகேட்ட செங்கணா
கொடியுடன் வருக கோவிந்தனே 
தேர்கொண்டு வருக கோபாலனே..

புல்லர்கள் பொடிபட
நல்லவர் கொடி கொள
வலம்புரியும் முழங்கிடுக
வல்வில்லும் அதிர்ந்திடுக

தலைமகன் ஆகியே 
தர்மத்திற்காய்  நின்று
மங்கலம் வார்த்திடுக
சத்தியம் நாட்டிடுக சக்ரதாரி!..
***
நன்றி - ஸ்ரீ கேசவ் ஜி

அழகின் ஓவியங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
**

அன்பின் நெல்லை அவர்களது விருப்பத்தின்படி பெருங்குன்றிற்கு அருகில் சிறு செடி போல கவிதை ஒன்றுடன் இந்தப் பதிவு..

ஆடி மாதத்தின் முதல் நாள் ஞாயிற்று கிழமையன்று தஞ்சை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தரிசனம்.. மதியத்தில் வீடு திரும்பிய போது விருந்தினர் - என்னிடம் நலம் விசாரிக்க - என்று.. 

இந்நிலையில் கீரைப் புராணம் பதிவுக்கு வந்த கருத்துகளின் பேரில் விளக்கம் கூறுவதற்கு  இயலவில்லை.. 

முதற்கண் அந்தக் கவிதை திட்டமிட்டு எழுதப்பட்டதல்ல.. பதினைந்து நிமிட இடைவெளிக்குள் மலர்ந்தது அது..

நெல்லைத் தமிழன் அவர்கள் சொல்லியிருப்பது போல பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவம் இருப்பது தெரியும்.. ஆயினும் அந்தக் கோணத்தில் இணைத்து எழுதுதற்கு சிந்தை செல்லவில்லை..

கீரைகளை மட்டுமே சொல்லியபோது அவற்றுக்குத் துணையாக மங்கலமாகவும் மருத்துவமாகவும் 
இருக்கின்றவைகளும் கவிதைக்குள் வந்து சேர்ந்து கொண்டன.. விலக்குவதற்கு மனம் இல்லை..

அடுத்து,
கற்பூரவல்லியை கீரையாகக் கொண்டு ஏதும் செய்கின்றோமா?. .. என்று ஒரு சந்தேகக் கணை..

கற்பூரவல்லியை சஞ்சீவி என்கின்றனர் ஆன்றோர்..  இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்..

இப்போது இருக்கும் வீட்டின் பால்கனிப் பகுதியில்  - துளசி, அறுகம்புல், கற்பூரவல்லி, சோற்றுக் கற்றாழை, பிரண்டை ஆகியன இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் இருவேளை இந்த மூலிகைகளுக்கு தூபஆராதனை உண்டு.. துளசிக்கும் அறுகம் புல்லுக்கும்
அவ்வப்போது நிவேதனமும் உண்டு..

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று..
- திருக்குறள் (941)

நமது சரீரத்தைச் சுற்றிக் கொண்டு வாதம், பித்தம், கபம் எனும் மூன்று வளையங்கள் இருக்கின்றன.. இவ்வுடம்பில் பிணிகள் ஏற்படுவதற்கு இந்த மூன்றுமே காரணம்.. 

முறையான சித்த மருத்துவர்கள் இம்மூன்றையும் ஆராய்ந்தே மருந்துகள் கொடுப்பர்..

இந்த மூன்றிடத்தும் நட்பு பாராட்டுவது கற்பூரவல்லி..

சளி மற்றும் இருமலைப் போக்கி (கபம்) நல்ல சுவாசத்துக்கு உதவுகிறது..
வயிற்றில் செரிமானத்துக்குத் (பித்தம்) துணை நிற்பதால் கெட்ட வாயுக்கள் (வாதம்) உற்பத்தியாகி எலும்பு தசை இவற்றை சேதப்படுத்துவது இல்லை.. அஜீரணம், மலச்சிக்கல் இல்லையெனில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது.. 

நாம் வாழும் காலத்துக்கு இதற்கு மேல் வேறென்ன வேண்டும்!..

எனவே தான் கற்பூரவல்லி சஞ்சீவி என்று பதிவிற்குள் வந்தது .. 

திரு ஜெயக்குமார் சந்திரசேகரன் அவர்கள் சொல்வது போல இரு பகுதிகளாகச்  செய்திருக்கலாம்.. ஆனால், சில நடைமுறை சிக்கல்கள்..
உடல் நலக் குறைவால் கையில் வலி அவ்வப்போது ஏற்படுவதால் அதிக நேரம் கைத் தொலைபேசிக்குள் இருக்க முடியவில்லை.. அனுமதியும் இல்லை.. இரவு 9:30 மணி கண்டிப்பாக உறங்கியாக வேண்டும் .. 

இருந்தாலும்,
வீட்டுக்குள் அப்படி இப்படி ஏய்த்துக் கொண்டிருக்கின்றேன்..

கைத் தொலைபேசி Blogger ல் பதிவின் அளவு தெரிவதில்லை .. எல்லாம் உத்தேசமாகத் தான் செய்து கொண்டிருக்கின்றேன்..

தவிரவும்,
இதனை மரபுக்கவிதை என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.. எனக்கு கவிதையின் இலக்கணம் எதுவும் தெரியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்..

அன்பின் நெல்லையும் கீதாக்கா அவர்களும் பெரியாழ்வார் அருளிச்செய்த செங்கீரைப் பருவ திருப்பாசுரத்தின் அழகைப் பகிர்ந்து கொண்ட விதம் அழகு.. அருமை..

சகோதரி கீதா அவர்களுக்கு -  தக்காளி என்று பழந்தமிழ்  குறிப்புகளில் எதுவும் கிடையாது..  மணித் தக்காளி என்கின்றது விக்கிபீடியா.. 

எனவே தான், வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாகிய மணத் தக்காளியை கருமணிக் கீரை என்று குறிப்பிட்டேன்..

முன்பெல்லாம் கீரை விற்பவர்கள் அவற்றின் பயன்களைச் சொல்லியே விற்பார்கள்... அந்தக் காலத்துக் குடும்பங்கள் பலவற்றில் கணவன் மனைவி உறவினை பலப்படுத்தியவர்களே கீரை விற்கும் ஆத்தாக்கள் தான்.. இதற்குமேல் தாங்களே  யூகித்து உணர்ந்து கொள்ளவும்..

மற்றபடி,
மதிப்புக்குரிய கமலா ஹரிஹரன் அவர்கள் என்னிடம் சரஸ்வதி குடி கொண்டிருக்கின்றாள் என்று சொல்லியிருக்கின்றார்..

இங்கு வலைத்தளங்களில் எழுதும் ஒவ்வொருவரும் தனித் தன்மையான  திறமைகளுடன் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.. கீதாக்கா, ஜெயக்குமார் சந்திரசேகரன் ஆகியவர்கள் பன்மொழி வித்தகர்கள்.. இவர்களுக்கிடையே நானெல்லாம் சர்வ சாதாரணம் என்பதையும் உணர்ந்திருக்கின்றேன்..

நேரடியாக சமையலுக்கு ஆகும் கீரைகளைத் தவிர்த்து குப்பைமேனி போன்றவைகளை மருந்தாகச் செய்யும்போது தீர்க்கமாக விசாரித்துக் கொண்டு பதம் மாறாதபடிக்குச் செய்தல் வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்..

பதிவினில் கருத்துரைத்த அனைவருக்கும் குறிப்பாக அன்பின் ஸ்ரீராம், கில்லர் ஜி, கோமதிஅரசு, தனபாலன், துளசிதரன், மாதேவி ஆகியோருக்கும்  நன்றியுடன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. வணக்கம்..

அனைவருக்கும்
அன்னை கலைவாணியும் 
அகத்தியர்பெருமானும் நல்லருள் புரிவார்களாக!..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
***

24 கருத்துகள்:

  1. முந்தைய பதிவின் சந்தேகங்களுக்கு பதில்களை பதிவாகவே ஆக்கி விட்டீர்கள்.  நன்று. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. கற்பூரவல்லியின் பயன்களை அழகுற எடுத்து உரைத்திருக்கிறீர்கள்.  நெல்லை, நீங்கள் கீதா அக்கா ஆகியோர் படித்திருக்கும் பழந்தமிழ்களின் விவரம் பிரமிக்க வைக்கிறது.  அவற்றை நினைவில் கொண்டிருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சமீபத்தில் பிரம்மோற்சவத்தில் சேவித்ததால் நினைவில் இருந்தது. இதோ..இன்னும் இரண்டு நாட்களில் திருமலையில் ஓரிடத்தில் நாலாயிரம் சேவிக்க மூன்று நாலு நாட்கள் செல்கிறேன் (பெரிய குழுவில் முதல் முறை இணைகிறேன்). பெருமாளைச் சேவிக்கும் வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. 300ரூ னிக்கெட் செப்டம்பர் வரை இல்லை

      நீக்கு
    2. அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    3. அன்பின் நெல்லை அவர்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      தங்கள் பயணம் சிறப்பாக அமைவதற்கு வேண்டுகிறேன்..

      நீக்கு
  3. கரதலம் கமலத் திருவண்ணம் எழில் பதமலர் இரண்டும் அவ்வண்ணம் - மிகவும் ரசித்தேன். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எழுதப்பட்டவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. சிறப்பான பதிவு எம்மையும் குறிப்பிட்டமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ஜி..

      நீக்கு
  5. இங்கு கீரை விற்கும் அம்மா விற்பதில்லை... அன்புடன் தருகிறார்கள் என்பதே சரியாக இருக்கும்...

    கற்பூரவல்லி இரண்டு தொட்டிகளில் உண்டு... அப்படியே சாப்பிடலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  6. பாராட்டிய பதிவர்களை பாராட்டிய பதிவு! நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. பாராட்டுக்குப் பாராட்டு வந்திருக்கு. கவிதை மிக நன்று. உங்களைப் போல் நினைத்த மாத்திரத்தில் கவிதை எழுத வரவில்லை என்பது எனக்குக் குறை தான். மற்றபடி சிவப்புக் கீரையைப் பார்க்கும்போதெல்லாம் செங்கீரைப்பருவமும் பெரியாழ்வாரும் நினைவில் வருவார்கள். போதாக்குறைக்குத் தோழி ஒருவர் அவர் பெயர்த்தியின் தவழ் பருவத்தைக் குறித்துக் கவிதை எழுதி இருந்தார். அதிலும் செங்கீரைப்பருவம் வந்தது. நல்ல ரசனையுடன் யோசித்து வார்த்தைகளைக் கோர்த்து இருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றியக்கா..

      நீக்கு
  8. பதிவு அருமை. பாசுரம் பகிர்வு அருமை. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது
    இப்போது என் வீட்டுத் பால்கனி தோட்டத்தில் துளசி, கற்பூரவல்லி, அறுகம்புல் , கற்றாழை மட்டுமே இருக்கிறது.
    என்னை குறிப்பிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் நன்றி.. மேலும் பல மூலிகைகள் வளரட்டும்..

      வாழ்க நலமுடன்..

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இறைவனின் படங்கள் கண்களுக்கும், மனதுக்கும் நிறைவை தருகிறது. இன்றைய பதிவிலும் கீரைகள் பற்றிய தங்களது அற்புதமான விளக்கங்களுக்கு நன்றி.

    பதிலுக்கு நன்றி கூறும் பதிவிலும் தங்களின் அருமையான இறையருள் பெற்ற கவிதை மனதை உருக வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

    /அன்றொருநாள் ஆங்கு
    ஆடாமல் ஆடிவந்தாய்
    ஆழ்வாரின் குடில்தேடி
    ஓடோடிநீயும் வந்தாய்..

    அவ்வண்ணம் காணுதற்கு
    அடியேனும் விழைகின்றேன்
    அன்பருக்கு அன்பனே
    ஆனந்தங் கொண்டு வருக/

    அழகான ஆழமான வரிகள். மனமுருகச் செய்யும் வரிகள். கவிதைகள் கணநேரத்தில் தங்களுக்குள் உருவாகும் செய்தி படித்தவுடன் மனம் மகிழ்கிறது. தங்களுக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதமாக இதனை கருதுகிறேன். தங்களுக்கு இயல்பாகவே மடை திறந்த வெள்ளம் போல் ஊற்றெடுக்கும் கவித்திறனை தந்த அந்த கருணாமூர்த்திக்கு பல்லாயிரம் முறை நன்றி கூறிக் கொள்கிறேன்.

    என்னையும் தங்கள் பதிவில் குறிப்பிட்டிருப்பதற்கு என் மனமார்ந்த நன்றி. காலையில் வர இயலவில்லை தாமதமாக வந்து படித்து கருத்திட்டிருப்பதற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

    இத்தனைக்கும் காரணம் தங்களது பதிவு தானே..

    அன்பின் கருத்துரைக்கு நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  11. முந்தைய பதிவு கீரைப்புராணத்தில் வந்திருந்த கருத்துகளுக்குப் பதிலாகப் பதிவு அருமை. பாடல் மிகச் சிறப்பு

    15 நிமிடத்தில் முந்தைய பதிவின் பாடலை எழுதியது பிரமிப்பாக இருக்கிறது. அழகு தமிழுக்கு நீங்கள் மேலும் அழகூட்டுகிறீர்கள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி துளசிதரன்..

      நீக்கு
  12. பாசுரம் அருமை. கீரைகள் பதிவு தொடர்விரிவு. பயனுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..