நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ காமாட்சி பாமாலை
(பகுதி - 3)
ஓம் சக்தி ஓம்
சண்பக வல்லி நீ ஸ்ரீஸ்நேக வல்லி நீ
தென்கடல் குமரி நீயே
சிவசக்தி பார்வதி கயிலாய ஈஸ்வரி
வளந்தரும் ப்ரம்ம சக்தி..
பாகம் பிரியாதவள் பர்வத வர்த்தனி
படைவென்ற பர மேஸ்வரி
பாரதி நீ வாழ்க பார்கவி பதம் வாழ்க
பைரவி போற்றி போற்றி..
மாமலை பொதிகையில் தமிழாகி
நின்றவள் தாமரைப் பாதம் போற்றி..
சிவநகர் நெல்லையில் வேணுவன
நாதனின் தேவியே செல்லக்கிளியே..
சங்கரன் கோயிலில் ஆவுடைக்
கோலமாய் தவமான சிவநாயகி
நன்புனல் காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 9
பொங்கிடும் பொன்னியாய் பூத்திடும்
வைகையாய் தங்கிடும் பரணி நீயே
சங்குடன் சக்கரம் தாங்கிடும் துர்கையே துன்பங்கள் தீர்க்கும் சிவையே..
ஊனார் உடம்பினில் உயிர் என்னும்
ஓங்காரி ஒளிமதி போற்றி போற்றி
வானோர் பிழை தீர்த்த திருமகனை
ஈன்றவள் ஞானாம்பிகை சக்தி போற்றி..
தேனார் மொழி என்று ஊராரும்
உனைப்பேச திருவடி போற்றுகின்றேன்.
மானார் விழி என்னும் மங்கை
மாகேஸ்வரி மலரடி வாழ்த்துகின்றேன்..
வானார் பிறைநெற்றி வளர்குங்குமம்
கொண்டு வாழ்த்திடு வையகத்தை
பூம்புனல் காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!..10
வாஞ்சியச் செல்வி நீ ஸ்ரீ சக்ர
லலிதையே ஆரூரில் அரசாட்சியே
தேரூரும் தியாகேசன் திருமேனி
அகலாத தேவியே கமலாட்சியே..
அலையாடும் திருநாகைக் கலையான
காரோணம் குளிர்விழி நீலாட்சியே
யாழ்தனை வென்றமொழி மங்கையாய்
மறைக்காட்டில் மங்கலம் தந்த தாயே..
கயிலாய மாமலைக் காபாலி
தன்னருகில் கற்பக வல்லி நீயே
கம்பை நதி நீரினில் கயிலாய
ஈசனின் கரம் பற்றி நின்ற தாயே..
காளத்திப் பேரொளி காரிருள்
நீமாற்று பதமலர் சூடினேனே
தண்புனல் காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 11
அத்தி முகன் அன்னையே அகிலாண்ட ஈஸ்வரி நலமெலாம் கூட்டுவாயே
குமரவேள் அன்பிலே குழைகின்ற
பூங்குழலி வல்வினை மாற்றுவாயே..
செல்வனின் குரல்கேட்டு குறைதனை
தீர்த்து நீ குளிர்நிழல் காட்டுவாயே
தொல்வினை எல்லாமும் தொடர்ந்தோடி
வந்தாலும் துன்பத்தை மாற்றுவாயே..
கங்கையின் அலைபொங்கும் காசி நகர்
பூரணி பதம் பாடிப் பரவினேனே
பாரா முகம் இன்றி என்னையும்
காப்பாற்று தமிழ்மாலை சூட்டினேனே..
முத்தமிழ் மாலையுடன் முன்நடந்து
வரவேணும் வாழ்கவே வாழ்க வாழ்க
அப்பனும் அம்மையும் விடைமீது
வரவேணும் வாழ்கவே வாழ்க வாழ்க!.. 12
பொங்குநல் காவிரி
வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி
போற்றி!..
மங்கலம்
சுப மங்கலம்
ஓம்
சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***
கிட்டத்தட்ட எல்லா ஊர்களையும் சொல்லிப் பாடி விட்டீர்கள். அம்மா உங்கள் மனதில், எழுத்தில், கையில் இருக்கிறாள். சிறப்பு.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..
ஓம் சக்தி ஓம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.
தங்கள் எண்ணங்களில் உருவான காமாக்ஷி அம்மன் பாமாலை மிக மிக அருமை. எல்லா ஊர்களையும் இதில் இணைத்து மிக அற்புதமான பாமாலையை அன்னைக்கு சூட்டி விட்டீர்கள். நான் சொன்னதைப் போல இதை ஒரு புத்தகமாக பிரிண்ட் செய்து வெளியிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். நானும் இதை தினம் சொல்லி அன்னையின் அருள் பெற ஆசைப்படுகிறேன். தங்களுக்கு அன்னை கலைவாணியின் அருள் நிரம்ப உள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களின் இந்த அற்புதமான திறமைக்கு என் பணிவான வணக்கங்களுடன் கூடிய நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குபுத்தகமாகவெளியிடுவதற்கு முயற்சிக்கின்றேன்..
எல்லாம் அவளது கருணை..
அன்பின் கருத்துரைக்கு
நன்றி..
ஓம் சக்தி ஓம்
அனைத்து சக்தி பீடங்களும் இணைக்கப்பட்டு உருவான அருமையான பாமாலை. அம்பிகை அருள் உங்களுக்குப் பூரணமாய் நிறைந்திருப்பதாலேயே இதைப் பாட முடிந்திருக்கிறது. அவள் அருள் என்றென்றும் உங்களில் நிறைந்திருக்கட்டும். _/\_
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு
நீக்குநன்றியக்கா..
தங்களுக்கும் எனது வணக்கம்..
ஓம் சக்தி ஓம்
பாமாலை நன்று ஜி வாழ்க வையகம்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஜி..
நீக்குஓம் சக்தி ஓம்
பாமாலை அருமை, துரை அண்ணா. எங்கள் ஊர் குமரி முதல் கைலாயம் வரை எல்லா சக்திகளும்!! அருமை.
பதிலளிநீக்குகீதா
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு
நீக்குநன்றி சகோ..
ஓம் சக்தி ஓம்
பாமலை மிகவும் அருமை. அப்பனும், அம்மையும் விடை மீது வந்து அனைவருக்கும் நலங்கள் அருளட்டும்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..
நீக்குஓம் சக்தி ஓம்
அம்மைக்கான பாமாலை மிக மிக அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி துளசிதரன்..
நீக்குஓம் சக்தி ஓம்
அகிலாண்ட அன்னையை போற்றி பாடும் பாமாலை அருமை. அனைவரையும் காக்கட்டும் அவளருள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..
நீக்குஓம் சக்தி ஓம்..