நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவ சிவ பெருமாள் கோவிலில் கடந்த புதன் கிழமை (6/7) அன்று அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..
அதிகாலை 3:30 மணியளவில்
கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை தக்ஷிண நமஸ்காரம், உபதேவன்மார் பிரதிஷ்டை நடைபெற்று ஜீவகலச அபிஷேகம் என
சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.. அதன்
பின்னர் காலை 6.26 மணியளவில்
மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்புடன் நிகழ்ந்தது..
418 (1604) ஆண்டுகளுக்குப் பிறகு இத்திருமுழுக்கு நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது..
ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து மகிழ்ந்தனர்..
மாலை ஆறு மணிக்கு லட்ச தீப வழிபாடும் நடைபெற்றது..
திவ்ய தேசத் திருக் கோயில்களில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் 22 அடி நீளமுடைய பெருமாள் மேற்கு நோக்கிக் காட்சி தரும் ஒரே திருத்தலம்.
சாகாவரம் பெற்ற கேசி எனும் அரக்கனை அடக்கியதால் ஆதிகேசவன் எனத் திருப்பெயர்.. ஸ்ரீரங்கத்திற்கு முந்தைய கோயில் என்று சொல்லப்படுகின்றது..
கும்பாபிசேகத்தை முன்னிட்டு தினமலர் இணையத்தில் வெளியாகியிருந்த கட்டுரையின் சுருக்கம்..
மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. ராஜா மார்த்தாண்ட வர்மா தனது தலைநகரை திருவனந்தபுரத்துக்கு மாற்றும் வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்று இருந்தது..
காலப்போக்கில் அந்த கோயில் படிப்படியாக பாழடைந்தது. நீண்ட காலமாக மூடி வைத்ததாலும், எவ்வித பூஜைகளும் சடங்குகளும் இல்லாததாலும்,மெல்ல மெல்ல சிதிலமடைய தொடங்கியது. அந்த காலகட்டத்தில் மூன்று வாசல்களுடன் அமைந்த கர்ப்பகிரகத்தின் நடுக்கதவை மட்டும் சிறிது நேரம் திறந்து வைத்து, விளக்கேற்றி, சிறிய அளவில் துளசி சார்த்தி அர்ச்சனை செய்து, வாழைப்பழ நைவேத்தியத்தை படைத்து விட்டு அந்த நடுக்கதவைப் பூட்டி வந்தார் ஒரு நம்பி..
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் அஷ்ட மங்கள தேவ பிரஸ்னம் 2011ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், 16 ஆயிரத்து 8 சாளக்கிராமங்களை கொண்டு கடுசர்க்கரை எனும் கூட்டுப் பொருளால் உருவாக்கப்பட்ட திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் மூல விக்ரகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், தந்திரி மனலிக்கர மதுர் சுப்பிரமணியரு, எட்டக்காடு மது என்பவருடன் இணைந்து இந்த கோயிலின் வரலாற்றை தொகுக்கத் தொடங்கினார். கிருஷ்ணன் நம்பூதிரியும் இணைந்து, இந்த கோயிலை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்ற திட்டம் உருவானது..
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலை சீரமைப்பதற்காக 2005 ல் தொடங்கப்பட்ட முயற்சிகள்
பெரிதாகப் பலனளிக்காத நிலையில், சரித்திர ஆர்வலரான சுகுமாரன் நாயர், தனது ஆயுட்காலத்தில் ஆதிகேசவப் பெருமாளை அந்த கோயிலின் முந்தைய புகழுடனும் சீருடனும் காண வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்து வந்தார். அதனால், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர், இந்த கோயிலை சீரமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதற்கிடையே, திருவட்டாரில் பிறந்து இப்போது பெங்களூரு ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் தலைவராக உள்ள மது பண்டிட் தாஸ், கோயில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் சன்னிதியை மரபார்ந்த முறையில் புதுப்பித்துக் கட்டினார்..
கேரளாவின் வனப்பகுதியில் இருந்து 70 அடி உயரமுள்ள தேக்கு மரத்தை, தரையைத் தொடாதவாறு திருவட்டாருக்கு எடுத்து வந்து மூன்று கிரேன்கள் மற்றும் எக்கச்சக்கமான ஆட்களைக் கொண்டு 50 அடி உயரமுள்ள மதில் சுவரைக் கடந்து எண்ணெய்க் கேணி என்ற மரபு வழியில் அந்த தேக்கு மரத்தை எண்ணெயில் ஊற வைத்து கொடி மரத்தை உருவாக்கினார் மது பண்டிட் தாஸ்..
அனந்தபுரி விக்ரகங்களின் மூலபாகம் கருங்காலி மரத்தால் செய்யப்பட்டவை. இந்த விக்ரகத்தின் ஏழாயிரத்து இருநூறு நரம்புகள் கையால் பண்படுத்தப்பட்ட தேங்காய் நார்களால் உருவாக்கப் பட்டவைகளாகும். அதனைத் தொடர்ந்து கடுசர்க்கரை என்னும் மூலப்பொருளால் மெழுகப்பட்டு இந்த மூல விக்ரகம் தயாராகும். கடுசர்க்கரை பதமாகக் காய்ந்ததும் கருங்கல்லைப் போல உறுதியாக இருக்கும். அனந்தபுரி கடுசர்க்கரை திருப்பணியை நிகழ்த்தியவர் பிரம்ம மங்கலத்தைச் சேர்ந்த கைலாசன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் திருவட்டார் கோயிலுக்கு சிற்பியாக கைலாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
வேழப்பரம்பு பிரம்மதத்தன் திருமேனி என்ற வாஸ்து நிபுணர் இந்தப் பணியைத் தொடங்கினார். அவருக்குப்பின், அவருடைய சகோதரர் வேழப்பரம்பு சித்திரபானு திருமேனி இந்தப் பணியை முடித்து வைக்கிறார். இளம் வயதில் ஆழ்ந்த ஞானம் பெற்ற எழுந்தொளில் சதீஷ் பட்டத்திரி என்ற இளைஞர் இந்தத் திருப்பணியில் ஆன்மிக ரீதியாக வழிகாட்டி வருகிறார்..
கேசி என்ற அரக்கன் ஆனந்தா என்னும் ஆதிசேஷனால் மூன்று முறை சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறான்.
ஆதிகேசவன், ஆனந்தாவின் மேல்துயில் கொண்டிருக்கிறார். ஆனந்தாவின் இடுக்குகளில் இருந்து கேசியின் 12 கரங்கள் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. கேசியின் கரங்கள் தெரியும் பன்னிரண்டு இடங்களில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிவராத்திரியின் போது சிவ பக்தர்கள் 12 சிவ க்ஷேத்திரங்களில் தரிசனம் செய்து விட்டு இறுதியாக ஆதிசேஷன் தரிசனத்துடன் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்கின்றனர்..
திருவட்டார் கோயிலில் மூன்று விக்ரகங்கள் உள்ளன. ஒன்று கடுசர்க்கரையால் பதப்படுத்தப்பட்ட (16008) பதினாறாயிரத்து எட்டு சாளக்கிராமங்கள் கொண்ட மூல விக்ரகம். 22 அடி நீளம் கொண்டது. இந்த மூல விக்ரகத்தின் மீது தண்ணீர் படக்கூடாது. அதனால் இதற்கு அபிஷேகம் கிடையாது. அபிஷேகம், அர்ச்சனை செய்வதற்கு என்று தனியாக அர்ச்சனா மூர்த்தி உள்ளது. உற்சவங்களுக்காக தனியாக உற்சவ மூர்த்தி உள்ளது..
கடுசர்க்கரை நிபுணர் கைலாசனால் முழுமையாக புனருத்தாரணம் செய்யப்பட்ட மூல விக்ரகம், வேழப்பரம்பு சித்திரபானு திருமேனி, தந்திரிகள் வசம் ஜூலை 29ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. மறுநாள் அந்த விக்ரகம் கர்ப்பக்கிரகத்தில் அஷ்டபந்தனம் செய்யப்பட்டு கிரமப்படி பூஜை தொடங்கியது..
" ஆண்டவன் வைகுண்டத்தில் இருக்கிறான் -
பூமியில் எல்லாமே நியாயமாக நடக்கின்றன… " என்று பிரசித்தி பெற்ற கவிதை ஒன்று உண்டு.
இத்திருக்கோயிலுக்கு 6 /7 புதன் அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.. ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், மீண்டும் தனது கர்ப்பக் கிரகத்தில் அருளாட்சியைத் தொடங்கியுள்ளார்..
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மூல விக்ரகம் - தவறான புரிதல்கள், அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கோயில் மரபில் இருந்து எந்த வகையிலும் வழுவாது அனைத்து திருப்பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளை பெரும் பூரிப்பில் நிச்சயம் ஆழ்த்தியிருக்கும்..
பூவுலகிலுள்ள அனைவருக்கும் தன் பெருங்கருணையைப் பொழியும் வகையில்,
ஆரோகணிக்க வேண்டும் என்று
ஸ்ரீஆதிகேசவப் பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்..
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***
418 ஆண்டுகளுக்குப் பிறகு திருமுழுக்கு என்பது வியப்பு, சந்தோஷம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
நீக்கு2015 ஆம் ஆண்டில் நாங்க போனப்போக் கோயிலின் நிலைமை கவலைக்கிடமாகவே இருந்தது. ஆனாலும் திருப்பணி நடைபெற்று வருவதாகச் சொன்னார்கள். இப்போது குமாபிஷேஹம் நடைபெற்றிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..
நீக்குதமிழகத்தில் இப்படி எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து இருப்பது வருத்தமான விடயம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதமிழகத்துக் கோயில்களின் பழைமை மாறாமல் திருப்பணி செய்வதற்கு வெளியில் இருந்து நல்லவர்கள் வரவேண்டும்
அன்பின் கருத்துரைக்கு நன்றி ஜி..
தகவல்கள் அருமை...
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஆதிகெசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குகோயில் வரலாறு அருமை.
நன்றி.
ஆதிகேசவ பெருமாள் அனைவரையும் காத்து அருள வேண்டும்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..
நீக்குசாரின் அண்ணா இன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் முழு மலர் அலங்காரம் காணொளி அனுப்பினார்கள்.
பதிலளிநீக்குஒம் நமோ நாராயணா!
மகிழ்ச்சி.. அந்தக் காணொளியை தங்களுடைய தளத்தில் பதிவேற்றுங்கள்.. நாங்களும் பார்க்கின்றோம்..
நீக்குநன்றி..
விரிவான பதிவு பல தகவல்களும் அறிந்தோம். நீண்ட வருடங்களின் பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..
நீக்கு