நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 07, 2018

அருள்நிறை ஐப்பசி

அருள்நிறை ஐப்பசி...

மகத்தான புண்ணிய சரிதங்கள் நிறைந்த மாதம்..

தர்மம் எழுந்திடவும் அதர்மம் விழுந்திடவும்
தீப மங்கலம் எங்கும் பொலிந்து நின்றது!...

என்று - ஐப்பசி மாதத்தில் நிகழும் 
தீபாவளியைப் பற்றி சொல்லப்பட்டாலும்
உளம் நிறைந்ததாக விளங்கும் சிலவற்றைக் காண்போம்!...

ஜகத்ஜனனியாகிய அம்பிகை - தன்னை அலட்சியம் செய்த 
பிருங்கி முனிவனின் ஆணவம் அழிவதற்காக 
கெளதம மகரிஷியைக் குருவாகக் கொண்டு, 
அவர் உபதேசித்தபடி கடுந்தவம் மேற்கொண்டு - 
ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றது - இந்த மாதத்தில் தான்!..


ஒருசமயம் -

திருக்கயிலாய மாமலையில்
அம்மையும் அப்பனும்  திருக்காட்சி நல்கிய போது
ஸ்ரீநான்முகனும் ஸ்ரீஹரிபரந்தாமனும் 
முப்பத்து முக்கோடித் தேவர்களும்
சேர்ந்து வலம் செய்து சேவித்து மகிழ்கையில் -
பிருங்கி முனிவர் மட்டும் அம்பிகையை விடுத்து
சிவபெருமானை வலம் வந்து வணங்கினார்...


அம்பிகைக்கு என்னவோ போலிருந்தது...

மறுநாள் பெருமானுடன் நெருங்கி அமர்ந்திருக்க -
அப்போதும் பிருங்கி முனிவர் மனம் தளராமல் -
ஒரு வண்டாக மாறி ஈசனுக்கும் அம்பிகைக்கும்
இடையே புகுந்து வலஞ்செய்து ஈசனை மட்டும் வணங்கினார்.

பிருங்கியின் இச்செயலால் அம்பிகை மிகவும் வருந்தினாள்.


அது - அம்பிகையை வலம் செய்து வணங்காததற்கானது
என்று உலகிற்கு வெளிப்படையாகத் தோன்றினாலும்
பிரபஞ்சத்தில் சிவசக்தி ஐக்கியத்தை அறியாத
பிருங்கியின் மடமையைக் குறித்ததே!.

உண்மையை உணராத பிருங்கியின் மீது கோபமுற்றாள் அம்பிகை...

அந்த அளவில் -
பிருங்கியின் உடலில் இருந்த சக்தியினை அகற்றி விட்டாள்...
வலுவிழந்த பிருங்கி தள்ளாடித் தவித்து வீழ்ந்தார்...

அதை கண்டு இரக்கம் கொண்ட பெருமான்
பிருங்கிக்கு மூன்றாவது கால்  வழங்கினார்.

தன்னை அலட்சியம் செய்த பிருங்கிக்கு
ஐயன் உதவியதைப் பார்த்துப் பரிதவித்தாள் அம்பிகை...

மனம் வருந்தியவளாக - திருக்கயிலையை விட்டு நீங்கி
கடும் வறட்சியால் பன்னிரு ஆண்டுகள் பாழ்பட்டுக் கிடந்த -
வனத்தினுள் நுழைந்து அங்கே அமர்ந்து விட்டாள். -

அம்பிகையின் திருப்பாதம் பட்டதும் -
அந்த வனம் தழைத்துப் பூத்துக் குலுங்கியது!..

மலர்ந்த பூக்களின் வாசம் காற்றில் பரவியது...

விஷயம் அறிந்து விரைந்து வந்த கெளதம மகரிஷி
அம்பிகையை வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்...

அவருடைய உபசரிப்பினால் மகிழ்ந்த அம்பிகை
தனது மனக்குமுறலை அவரிடம் சொன்னாள்.

அம்பிகையைத் தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்ற கௌதமர் -
அங்கே அம்பிகைக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்தபின்
புதியதாக ஒரு விரத முறையை உபதேசித்தார்...

புரட்டாசியின் அஷ்டமி திதியிலிருந்து
ஐப்பசி அமாவாசை வரையிலான இருபத்தோரு நாட்கள்
நோன்பு நோற்கும்படி கூறினார்...

கடுமையான விரதமாகிய அதை -
அம்பிகை மனமுவந்து ஏற்று சிவபூஜை செய்தாள்.

கடுமையான ஆசார அனுஷ்டானங்களுடன்
அம்பிகை நோற்ற விரதத்தின் பயனாக
சிவபெருமான் ரிஷபவாகனராக ஆங்கே எழுந்தருளினார்..

அம்பிகை கோரியபடி தனது திருமேனியில்
இடப்பாகத்தை மகிழ்வுடன் வழங்கினார்...



அதன்பின்
அனைத்தையும் உணர்ந்து தெளிந்த பிருங்கி முனிவர், 
மனம் வருந்தி அம்பிகையைத் தொழுது வணங்க  -
அம்பிகை அவரை மன்னித்தருளி மீண்டும் முன்போலவே
பலமும் நலமும் தந்தருளினாள் என்பர் ஆன்றோர்...

அம்பிகையும் தான் விரும்பியதை அடைய
கடும் விரதங்களை உவகையுடன் நோற்று மகிழ்கின்றாள்.
அவளும் குருமுகமாக உபதேசம் பெற்று
சிவபூஜை செய்கின்றனள் - என்பதை உணரும்போது
நாம் சர்வ சாதாரணம் என்பது புரியவரும்...

கௌரியாகிய அம்பிகை இந்த விரதத்தை நோற்றதால் 
கேதார கெளரி விரதம் எனப் பெயரானது...

இப்படி - ஈசனின் திருமேனியில் 
அம்பிகை செம்பாதியாக இடம் பெற்ற நாள் தான் - தீபாவளி...


துலா மாதம் எனப்படும் ஐப்பசியில் தான்
கங்கை ஆகாயத்திலிருந்து பூமிக்கு வந்தனள்...

தனது முன்னோர்களான சகர புத்திரர்கள்
மோட்சம் அடைய வேண்டித் தவமிருந்தான் மன்னன் பகீரதன்..

அவனது கடுந்தவத்துக்கு இரங்கி 
ஆகாய கங்கை ஆயிர மாமுகங்கள் கொண்டு
எனைத் தாங்குவார் யார் - இவ்வையகத்தில்!..
- என்று, ஆணவத்துடன் வெளிப்பட்டாள்.

அவளது வேகம் பூவுலகைச் சிதைத்து விடும் 
என்பதை உணர்ந்திருந்த நான்முகன் - 
சிவபெருமானை வேண்டி நின்றார்...

கருணை கொண்ட ஈசன்
கங்கையைத் தாங்கியருள சித்தம் கொண்டார். 

ஆணவத்துடன் பூமியை நோக்கிப் பாய்ந்த கங்கை
சிவபெருமானின் விரிசடைக் கற்றைகளுக்குள் சிறைப்பட்டாள்...

இந்நிகழ்வினை
திருநாவுக்கரசு ஸ்வாமிகள் குறித்தருள்கின்றார்...


மயலாகுந் தன்னடியார்க்கு அருளுந் தோன்றூம்
மாசிலாப் புன்சடைமேல் மதியந்தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல் நஞ்சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும் 
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம்புனித னார்க்கே!.. (6/18)
-: திருநாவுக்கரசர் :-

கங்கையைப் பொறுத்தருளுமாறு
ஈசனைப் பணிந்து நின்றான் - பகீரதன்...

பரமேஸ்வரன் தனது ஜடா மகுடத்திலிருந்து
மிகச்சிறிய அளவாக கங்கையை விடுத்த வேளை -

துலாமாத தேய்பிறைச் சதுர்த்தசியின் ப்ரம்ஹ முகூர்த்தம்!..

தூயவளான கங்கை பூமிக்கு வந்த வேளை - தீபாவளி!..

அதனால் தான் தீபாவளி அன்று - ப்ரம்ஹ முகூர்த்த நேரத்தில்
நீராடுதல் கங்கா ஸ்நானம் எனப்பட்டது!..

தேய்பிறைச் சதுர்த்தசி - தீபாவளியும் அமாவாசையும்
இந்த ஆண்டு சற்று இடைவெளியில் நடைமுறையாகி இருக்கின்றன.. 


கங்கையில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
அதிலும் குறிப்பாக தீபாவளி அன்று கங்கையில் நீராடுவது மகத்துவம் என்றால் அது எத்தனை பேருக்கு இயலும்?..

அதனால் தான் தீபாவளி கொண்டாடப்படும்
ஐப்பசியில் காவிரி முதற்கொண்டு சகல நீர் நிலைகளிலும்
கங்கை கலந்து நிற்கின்றாள் என்று குறித்தனர் ஆன்றோர்...

காவிரியில் நீராடுவதாகக் கொண்டாலும்
கங்கையில் நீராடுவதாகக் கொண்டாலும்
நம் பாவங்கள் தீர்ந்து விடுமா!?..

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஒங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே.. (5/99)

- என்று, திருநாவுக்கரசு சுவாமிகள் உய்யும் வழியினைக் காட்டுகின்றார். 

அவ்வழியினில் -
எங்கும் ஈசன் என்பதை உணர்ந்து 
சிற்றுயிர்களை வாழ வைப்பதுடன்,
ஏழை எளியோர்க்கு இயன்றவற்றைச் 
செய்வதைக் குறிக்கோளாகக் கொள்வோம்.


நலங்கள் பெருக வேண்டும்..
நன்மைகள் மலர வேண்டும்!..
அதர்மம் அகல வேண்டும்..
தர்மம் தழைக்க வேண்டும்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *

15 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா...

    ஆமாம் அமாவாசை இன்று.....இங்கும் பணிகள் பாதி முடித்துவிட்டேன் அதான் வலை உலா...கொஞ்சம்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஈசனின் இட பாகத்தில் அம்மை இடம் பெற்ற, கதையை இப்போதுதான் அறிகிறேன் அண்ணா. கங்கையின் கதை அறிந்திருந்தாலும்...தீபாவளியில் கங்கா ஸ்னானம் பற்றியும் இப்பத்தான் அறிகிறேன்.

    பல சிறப்பான தகவல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இறுதியில் நாவுக்கரசரின் பாடலும் உங்கள் முடிவான வரிகளும் அருமை..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்னை இடபாகம் பெற்ற கதையும், கங்கை ஆகாயத்திலிருந்து வந்த கதையும், படங்களும் மிக அற்புதம்.

    மயிலாடுதூறையில் இந்த துலாமாதம் முழுவதும் நீராடி மகிழ்வர் மக்கள்.
    எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். அன்னதானங்கள் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும்.
    மாயவரம் ஸ்ரீகெளரி மாயூர நாதருக்கு திருவிழா நடக்கும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. காவிரியும் துலாமாசத்தால் பெருமை பெற்றாளா? அல்லது துலா மாசம் காவிரியால் பெருமை பெற்றதா என்னும் வண்ணம் இங்கேயும் துலா மாசம் விசேஷம் தான்! அரங்கனுக்கு இந்த மாசம் முழுவதும் காவிரி நீர் திருமஞ்சனத்துக்கெனத் தங்கக்குடத்தில் "ஆண்டாள்"(ஆனை) எடுத்துச் செல்வாள். இந்த வருடம் இன்னமும் ஆண்டாளைப் போய்ப் பார்க்க முடியாமல் ஏதேதோ தடங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான விளக்கமான பதிவு. கேதார கௌரி விரதம் குறித்து அறிந்திருந்தாலும் மீண்டும் படிக்கக் கிடைத்தது. எல்லாப் படங்களும் அருமை எனில் முதல் படம் அதி அற்புதம்!

    பதிலளிநீக்கு
  7. இது வரை அறியாத தகவல்கள். அர்த்த நாரீஸ்வரர் பெருமையும், அம்பிகையின் தவமும் அறியக் கொடுத்தத்ற்கு மிகவும் நன்றி. துலா ஸ்னான்ம் சிறக்கட்டும். ஐப்பசி பெருமைகள் எல்லோரும் அறியவேண்டும். இனிய தீபத் திருனாள் வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  8. நல்ல விஷயங்களோடு கூடிய இடுகை... படங்கள் எப்போதும்போல் அருமை...

    பதிலளிநீக்கு
  9. அன்பின் ஜி
    அருமையாக சொல்லிச்சென்ற விதம் அழகு

    பதிலளிநீக்கு
  10. தீபாவளிப் பண்டிகைக்கான காரணங்கள் பல இடங்களில் பலவிதம் அவற்றில் சில பலரும் அறிய முற்படாதது திரு நாவுக்கரசர் பாடல் ரசித்தேன் ஆனால் அவை யெல்லாம் வெறுமே ரசிக்கத்தானா

    பதிலளிநீக்கு
  11. உமையவள் இடப்பாகம் பெற்ற கதை உங்கள் வார்த்தைகளில் சிறப்பு.

    தீபாவளியின் சிறப்பு குறித்த பகிர்வு சிறப்பு....

    தொடரட்டும் உங்களின் சிறந்த பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  12. அமாவாசை ஐப்பசி மாதம் ..விவரமான ஆன்மீகப் பதிவு ,படித்தபின் மன நிறைவு

    பதிலளிநீக்கு
  13. விளக்கமாக மீண்டும் படித்து நினைவு படுத்திக்க கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  14. எதில் மூழ்கினாலும் நம் பாவம் ஒழியாது ஏனெனில் அது முற்பிறப்பின் பலன் எனச் சொல்லி மிரட்டீனம் சிலர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..