மனதுதுய ராற்றில் - உழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ - ரமதாலே
இகபரசெள பாக்ய - மருள்வாயே
பசுபதிசி வாக்யம் - உணர்வோனே
பழநிமலை வீற்று - அளும்வேலா
அசுரர்கிளை வாட்டி - மிகவாழ
அமரர்சிறை மீட்ட - பெருமாளே!...
எம்பெருமானே!...
அடங்காமல் அங்குமிங்கும் திரியும் என் மனதில்
நினது திருப்பெயர்களை நிலை நிறுத்தியுள்ளேன்...
அவற்றை
என் மனம் மறந்து விடாமல்
எப்போதும் நினைவிலேயே
கொண்டிருக்குமாறு அருளவேணும்!...
அப்படி -
உனது திருநாமங்கள் பதிந்திருந்தாலும்
தான் யாரென்பதை உணராத - மனமானது
ஏதாவதொரு துயரில் துன்பத்தில்
தன்னைத் தானே ஆழ்த்திக் கொள்கிறது...
அன்புடன் அதனை மீட்டெடுத்துக்
காத்தருள வேண்டும் என்னப்பனே!...
அண்டபகிரண்டங்களைக் காத்தருளிய
பெரும் புகழுக்குரியவனாகிய சடாட்சரனே!..
ஷண்முகனே!.. சரவண பவனே!...
எது நல்லது எது கெட்டது என்று
பகுத்தறியும் திறனில்லாத எனக்கு
நீயே முன்னின்று
இகத்திற்கும் பரத்திற்குமான
சகல சௌபாக்யங்களையும்
தந்து காத்தருள வேணும் ஸ்வாமி!...
பசு என்றும் பதி என்றும்
இயங்கிக் கொண்டிருக்கும்
சிவானந்தத் தத்துவத்தை
அறிந்தவனே... ஆனந்த மூர்த்தீ!...
பரந்து விரிந்த இந்தப் பூவுலகைப்
பழனி எனும் திருமலையில் வீற்றிருந்து
பரிபாலிக்கும் பரம குருவே!...
அசுரர் குலத்தை வாட்டி வதைத்தவனே!...
அவரிடமிருந்து வானோர்களை மீட்டெடுத்தவனே!...
வானும் மண்ணும் வளங்குன்றாது
நல்லபடியாய் வாழும்படிக்குச் செய்தவனே...
செந்தில் நாதனே... சரணம்.. சரணம்!...
சிங்கார வேலனே.. சரணம்.. சரணம்!...
ஏ.. மனமே...
இப்போதாவது உணர்ந்து கொண்டாயா!...
இனி என்றென்றைக்கும் எம்பெருமானின்
திருநாமங்களையே போற்றித் துதித்து
பாருலகில் நலங்கொண்டு வாழ்வாயாக!...
உணர்ந்து கொண்டேன்... ஆயினும்,
முருகப் பெருமானின் திருநாமங்களைப்
போற்றித் துதிப்பதாவது எப்படி!?...
எப்படியா!..
இதோ.. இப்படித்தான்!...
நாதம் விந்து - எனும் தத்துவங்களின்
கலைகளாக இருப்பவனே போற்றி!.. போற்றி!..
வேத மந்த்ரங்களின்
வடிவாகத் திகழ்பவனே போற்றி!.. போற்றி!..
ஞான பண்டித ஸ்வாமிநாதனே போற்றி!.. போற்றி!..
பலகோடித் திருப்பெயர்களை உடைய
பரமனின் திருமகனே போற்றி!.. போற்றி!..
சகல உயிர்களுக்கும் சந்தோஷத்தை அள்ளித்தரும்
சங்கரி உமையாளின் திருக்குமரனே போற்றி!.. போற்றி!..
நாகம் எனும் குண்டலியினை பந்தித்திருக்கும்
மயில் வாகனனே போற்றி!.. போற்றி!..
அசுரப் பெரும்படையை சேதித்து அழித்த
செல்வ முத்துக் குமரனே போற்றி!.. போற்றி!..
ஏழிசை தவழும் கிண்கிணிகள் திகழும்
கமல மலர்ப் பாத - கந்தனே போற்றி!.. போற்றி!..
ஈடிணையில்லா வீரத் திருமகனே போற்றி!.. போற்றி!..
குன்றெல்லாம் ஆடி விளையாடி
அவற்றுக்கெல்லாம் அரசனான ஐயனே போற்றி!.. போற்றி!..
மங்கல தீபங்களின் சுடரானவனே போற்றி!.. போற்றி!..
தந்தையைப் போல அம்பலங்களில்
ஆடி மகிழும் அறுமுகனே போற்றி!.. போற்றி!..
தேவகுஞ்சரியாகிய தெய்வானையின் மணாளனே..
போற்றி!.. போற்றி!.. போற்றி!.. போற்றி!..
நாத விந்துக லாதீ நமோ நம
வேத மந்த்ரசொ ரூபா நமோ நம
ஞான பண்டித ஸாமீ நமோ நம - வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்தம யூரா நமோ நம - பரசூரர்
சேத தண்டவி நோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம - கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம - அருள்தாராய்..
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையும் - மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பிர நாடா ளுநாயக - வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி - லையிலேகி
ஆதி யந்தவு லாஆ சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் - பெருமாளே!...
நெல்லும் சொல்லும் ஈரமும் வீரமும்
விளைந்து இலங்கும் சோழ மண்டலத்தின் மனோகரனே!..
ராஜ கம்பீரனே.. நாடாளும் நாயகனே..
வயலூரில் வாழும் வள்ளல் பெருமானே!.. போற்றி!.. போற்றி!..
ஆதி நாளில் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுடன் நட்பு கொண்டு
அவரோடு திருக்கயிலாய மலைக்கு ஏகிய
சேரமான் பெருமானின் கொங்கு வைகாவூர் நாட்டில்
ஆவினன் குடியில் திருக்கோயில் கொண்டு விளங்கும்
வெற்றி வடிவேலனே.. தேவர்களின் வாழ்வானவனே போற்றி!.. போற்றி!..
ஆன்றோர்கள் அருளிய உரை வழி நின்று
எனது சிற்றறிவுக்கு எட்டியபடி
பழனியம்பதியின் திருப்புகழ்ப் பாடலை
இப்பதிவில் சொல்லியிருக்கின்றேன்...
குற்றங்குறைகளைப் பொறுத்தருள்க..
முருகா சரணம்... முதல்வா சரணம்...
முத்துக் குமரா... சரணம் சரணம்...
வெற்றி வேல்.. வீரவேல்..
ஃஃஃ
பதிவு வழக்கம் போல் அருமை அண்ணா...
பதிலளிநீக்குநாத விந்து பாடல் ராகத்துடன் பஜனைகளில் பாடிய நினைவு வந்தது...
முருகா சரணம், முதல்வா சரணம், முத்துக்குமரா சரணம்! வேறொன்றும் அறியோம் யாம்.
கீதா
இரண்டு பாடல்களும் அடுக்கடி பாடும் பாடல்.
பதிலளிநீக்குபாடல் பகிர்வும், விளக்கமும் அருமை.
உங்கள் ஊரில் நீங்கள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
முருகா சரணம், முதல்வா சரணம்
முத்துக்குமரா சரணம் சரணம்.
என் தாத்தா (தாய் வழி ) வீட்டில் சிறார்கள் விளக்கு வைக்கும் நேரம்கட்டாயம் பாடவேண்டிய பாடல் நாதவிந்துகலாதி நமோ நமோ
பதிலளிநீக்குகந்தனின் கருணை வழக்கம்போல் அழகு.
பதிலளிநீக்குஅருமை அருமை... சிறப்பான பதிவு ஐயா...
பதிலளிநீக்குமனதிற்கு நிறைவினைத் தந்த பதிவு.
பதிலளிநீக்குவயலூரில் வாழும் வள்ளல் பெருமானே போற்றி போற்றி...
பதிலளிநீக்குசெல்வ முத்துக்குமரா போற்றி போற்றி ..
கந்தனின் கருணை நம் மீது மழை போல வர்ஷிக்கட்டும்.
பதிலளிநீக்குஷண்முகநாதன், சரவணன் எல்லோரையும் காத்து அருளட்டும்.
குட்மார்னிங்.
நாதபிந்து கலாதி நமோநம! அந்தக்காலங்களில் திருப்புகழ் சபையில் மதுரை ஆடி வீதி பஜனைகளில் பாடிப்பாடி மகிழ்ந்த பாடல். அருமையான விளக்கம். கந்தனைப் பற்றிச் சொல்லச் சொல்லப் போய்க் கொண்டே இருக்கும். சரவணபவ வுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் அதிலேயே மூழ்கி மீண்டு வர மனம் வராது! மிக நன்றாக விளக்கி இருப்பதற்கும் தொடர்ந்து கந்தன் கருணையைச் சொல்லி வருவதற்கும் நன்றி.
பதிலளிநீக்குகந்தனின் கருணை மழையில் அனைவரும் நனைவோம்.
பதிலளிநீக்குநாதவிந்து பாடல் எனக்கும் பிடிக்கும். பெரியப்பா கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் பாடுவார்.