பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி யிறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின்ற எம்மிறை நல்வீணை வாசிக்குமே!..(4/112)
-: திருநாவுக்கரசு ஸ்வாமிகள் :-
சங்கார தாண்டவம் |
அமைதி... எங்கும் அமைதி... எங்கெங்கும் அமைதி...
உலகில் இருந்த சகல உயிர்களும் முடிவினை எய்தி ஈசனுடன் கலந்தன...
சகல தேவர்களும் பிரமனும் நாரணனும் ஈசனுடன் ஒடுங்கினர்..
அம்பிகையும் சிவ தியானத்துடன் பரம் பொருளுள் ஒன்றினாள்...
அறம் எனும் நந்தி மட்டும் ஈசனுடன் இருந்தது...
சிறு பொழுதில் அறமும் ஈசனுடன் ஐக்கியமானது..
அந்த மகாலிங்கத் திருமேனியின் உள்ளிருந்து
அறமாகிய தர்மம் வெளிப்பட்டது..
அறத்தினைத் தொடர்ந்து அதனைப் பேணி வளர்ப்பதற்காக
அம்பிகை தோற்றங்கொண்டருளினாள்..
இதனாலேயே அம்பிகைக்கு அறம் வளர்த்த நாயகி எனும் திருப்பெயர்...
அறங்காப்பதற்கு எனத் தோன்றிய அம்பிகை
அறத்தின் நாயகனைக் காணாது பரிதவித்தாள்...
அவ்வேளையில் தான் -
நல் வீணையுடன் கங்காள மூர்த்தியாக எம்பெருமான் தோன்றியருளினான்...
இப்படியாக -
ஈசன் வெளிப்பட்ட திருக்கோலத்தைத் தான்
வருங்கடல் மீளநின்ற எம்மிறை நல்வீணை வாசிக்குமே!..
- என்று அப்பர் பெருமான் நனக்கு வழங்குகின்றார்...
கங்காளர் வெளிப்பட்ட நேரம் லிங்கோத்பவ காலம்...
லிங்கோத்பவ காலம் என்பது நள்ளிரவு ஒன்றரை மணி...
சிவராத்திரியின் நான்கு காலங்களும் சிறப்புக்குரியன..
அவற்றுள்ளும் மூன்றாம் காலத்தின் மத்திய பொழுது வெகு சிறப்புக்குரியது..
இவ்வேளை தான் -
அம்பிகையின் வழிபாட்டுக்கு இணங்கி ஈசன் வெளிப்பட்ட நேரம்..
இது மஹா பைரவ காலம் எனவும் சொல்லப்படும்..
ஐயன் பைரவ மூர்த்தியாக எழுந்தருளும் போது
அம்பிகை பைரவியாக உடன் வருகின்றாள் என்பது திருக்குறிப்பு..
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது!.. - என,
அம்பிகைக்கு உகந்த பொழுதாக
அபிராம பட்டரும் குறித்தருள்கின்றார்...
ஆண்டுக்கு ஒரே ஒரு நாளாக சிவாலயங்கள்
இரவில் திறக்கப்பட்டிருப்பது இந்த பொழுதிற்காகத் தான்...
பரிமளப் பூங்கொடியாகிய அம்பிகை
சொல்லும் பொருளும் - எனத் துணைவருடன்
நடமாடிக் களிக்கும் பொழுது இந்தப் பொழுது தான்!...
ஈசன் எம்பெருமான் -
லிங்கத் திருமேனியில் இருந்து வெளிப்பட்டு
நான்முகப் பிரம்மனுக்கும் ஸ்ரீமந் நாராயண மூர்த்திக்கும்
திருக்காட்சி அருளியதும் - இந்தப் பொழுது தான்!..
செங்க ணானும் பிரமனும் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார்
இங்குற் றேனென்று லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே..(5/95)
புண்ணிய மூர்த்தியாகிய - ஈசன் தோன்றியருளிய திருக்கோலத்தை
நமக்கு வழங்குபவர் அப்பர் பெருமான்...
சிவராத்திரியின் மற்ற காலங்களைத் தரிசிக்க இயலாமற் போனாலும்
மூன்றாங்காலத்தை அவசியம் தரிசிக்க வேண்டும் என்பர் ஆன்றோர்..
சிவராத்திரியின் நான்கு காலங்களுக்கும் உரிய தலங்கள்
திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரன், திருநாகை - என்பன..
ஆயினும், அருகிலுள்ள சிவாலயத்தில் வழிபடுதல் சாலச் சிறந்தது...
சதுர தாண்டவம் |
சிவராத்திரியின் முதற்காலம்
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
திருத்தலம்
திருக்குடந்தை
இறைவன் - ஸ்ரீ நாகேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரகந்நாயகி
தீர்த்தம் - மகாமகத் தீர்த்தம்
தல விருட்சம் - வில்வம்
***
சிவராத்திரியின் இரண்டாம் காலம்
இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
திருத்தலம்
திருநாகேஸ்வரம்
இறைவன் - ஸ்ரீ நாகேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ கிரிகுஜாம்பிகை
தீர்த்தம் - சூரிய தீர்த்தம்
தல விருட்சம் - சண்பகம்
***
சிவராத்திரியின் மூன்றாம் காலம்
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை
திருத்தலம்
திருப்பாம்புரம்
இறைவன் - ஸ்ரீ சேஷபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ வண்டார்குழலி
தீர்த்தம் - ஆதிசேஷ தீர்த்தம்
தல விருட்சம் - வன்னி
***
சிவராத்திரியின் நான்காம் காலம்
அதிகாலை 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை
திருத்தலம்
திருநாகைக்காரோணம்
இறைவன் - ஸ்ரீ காயாரோகணேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ நீலாயதாக்ஷி
தீர்த்தம் - புண்டரீக தீர்த்தம்
தல விருட்சம் - மா
***
எம்பிரான் எனக்கமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழலேந்து கையானும்
கம்பமா கரிஉரித்த காபாலி கறைக் கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே..(2/40)
-: ஸ்ரீ திருஞான சம்பந்தர் :-
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்து உந்தன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய்ப் பொலிய சிவாய நமஎன்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே!..(4/94)
-: ஸ்ரீ திருநாவுக்கரசு ஸ்வாமிகள் :-
செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயாஎம் பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே!..(7/27)
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ..
-: ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் :-
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போய் அகலப்
பொன்னின்செய் மண்டபத்து உள்ளே புகுந்து
புவனி எல்லாம் விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த
பித்தர்க்குப் பல்லாண்டு கூறுதுமே!..
-: சேந்தனார் :-
அனைவருக்கும்
சிவனருள் சித்திப்பதாக..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***
பதிவு அருமை. அனைத்துப் பாடல்களையும் படித்துப் புரிந்துகொள்ள முயன்றேன்.
பதிலளிநீக்கு'செய்யார் மேனியனே' என்ற பாடல், 'பொன்னார் மேனியனே' என்பதை நினைவுபடுத்தியது.
'செங்கணானும்' - பிரபந்தமும் நாராயணனை, 'சிவந்த கண்களை' உடையவன் என்றே வர்ணிக்கிறது. சைவத்துக்கும் வைணவத்துக்கும் மூலம் ஒன்று, ஆனால் பிரிவு இரண்டு.
இன்றைய இடுகையில் நான் ஓரிரண்டு சிவத்தலத்தின் மூர்த்திகளை எதிர்பார்த்தேன். எப்படி சிவலிங்க தரிசனத்தை விட்டுவிட்டீர்கள்?
அரிய விடயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜி.
பதிலளிநீக்குவாழ்க நலம்.
மூன்றாம் காலத்தின் சிறப்பை அறிந்தோம்...பைரவமூர்த்தியாய்...
பதிலளிநீக்குபடங்கள் அழகு...முதல் காலம் தரிசிக்கச் சென்றேன்..வீட்டின் சற்று தூரத்தில் இருக்கும் கோயிலுக்கு..9 வரை இருக்க இயலவில்லை...இன்னும் பூசைகள் நடக்கின்றன. வீட்டின் மிக அருகில் இருக்கும் கோயிலில் பூசைகள் மணி ஒலி... ஒலிபெருக்கி வழியாகத் கேட்கிறது....பதிவு அருமை அண்ணா
கீதா
மூன்றாங்காலத்தைத் தரிசிக்கத்தான் கண் விழித்தல் அவசியமாகிறது. மாலை என் பாஸ் சிவன் கோவில் சென்று தரிசித்து வந்தார்.
பதிலளிநீக்குதரிசனம் கிடைத்தது...எனக்கு சிவராத்திரி முழிப்பிருக்க ஆசை.. ஆனா 3 மணிக்கு மேல் முழிப்பிருந்ததில்லை:) எனக்குத்தெரியாமலே நித்திரையாகி விடுவேன்:)..
பதிலளிநீக்குசிவ தரிசனம் மிக சிறப்பு ...
பதிலளிநீக்குசிவதரிசனம் மிக அருமை.
பதிலளிநீக்குபாடல்கள் பகிர்வு சிறப்பு.