நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 25, 2018

நெல்லையில்.. 1

விடியற்காலையில் உவரியிலிருந்து
நெல்லைக்குச் செல்லும் பேருந்து
எங்களுடன் புறப்பட்டு விரைந்தது...

ஆறரை மணிக்கெல்லாம்
நெல்லை புதிய பேருந்து நிலையம்...

நெல்லை புதிய பேருந்து நிலையம்
எப்போதுமே எனக்குப் பிடித்த இடம்...

நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கும்...

நெல்லைக்கு முன்னது -
தஞ்சை புதிய பேருந்து நிலையம் என்றாலும்,

மகா மட்டரகமான அதை விட
நெல்லை பேருந்து நிலையம் சுத்தம்.. ஒழுங்கு.. அழகு...

அந்த நேரத்திலும் அங்கிருந்த கடைகளில்
மணக்க மணக்க பாரம்பர்யப் பலகார வகைகள்...

தேநீர் மட்டும் அருந்தி விட்டு ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்குச்
செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்...

அடுத்த பதினைந்து நிமிடத்தில் பழைய பேருந்து நிலையம்...

அங்கிருந்து
நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்லும் பேருந்தைப் பிடிக்கும் முன் -
அருகில் இருந்த கோயிலில் மணியோசை..

பேருந்து நிலையத்திலிருந்த கல்யாண விநாயகர் கோயிலில்
காலை பூசை நடந்து கொண்டிருந்தது... பெருமானை வணங்கிக் கொண்டோம்..


12 ஆண்டுகளுக்கு முன்னால் 
ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில் 
ஒரு மாலைப் பொழுதில் இங்கே தரிசித்த கோயில்
ஸ்ரீ கொடிமாடசாமி கோயில்..

ஆண்டுகள் பலவாக ஏகப்பட்ட மாற்றங்கள்...
இந்தப் பேருந்து நிலையத்துக்கு அருகில் தான்.. 
ஆனாலும், இருப்பிடம் சரியாகத் தெரியவில்லை

எனவே -
பிள்ளையார் கோயில் குருக்களை நெருங்கி அவரைக் கேட்டேன்...

கொடி மாடசாமி கோயில்....ன்னு இங்கே இருக்கே..
எந்த சாலை..ன்னு மறந்து போச்சு...
எங்கே இருக்கு...ன்னு சொல்ல முடியுமா!...

நம்ம கோயிலுக்குப் பின்னால இருக்கே... அதான்!..
போய்க் கும்பிடுங்க!...

ஆகா!... ரொம்ப மகிழ்ச்சி!...

பிள்ளையாரிடம் விடை பெற்றுக் கொண்டு
வடக்குப் பக்கமாக இருந்த சாலையில் நடந்து எதிரே நோக்கினால் -
அந்த சாலையின் எதிர்ப்புறம் - ஸ்ரீ கொடி மாடசாமி திருக்கோயில்...

பன்னிரு ஆண்டுகளுக்குப் பின் கொடி மாடசாமி தரிசனம்..

மிக மிக நெருக்கடியான சூழ்நிலை..

என்ன ஆகும்?.. ஏது ஆகும்?.. - என, மனம் தவித்துக் கிடந்த நேரம்...

ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில்
நெல்லை பேருந்து நிலயத்தின் அருகில்
எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது
அல்வா சாப்பிடுவதற்குத் தான்...

அந்த மாலைப் பொழுதில் -
சந்தன சாம்பிராணி வாசனையுடன் கோயில் மணி ஒலித்தது...

சரி.. ஏதோ ஒரு கோயில் - என்று சென்றால்
மண்டபத்தில் வரிசையாக தெய்வத் திருவடிவங்கள்...

கோயில் என்றால் முன்மண்டபம்.. மூலஸ்தானம் என்றெல்லாம் இல்லை..
இருபதடி நீள மண்டபத்தில் வரிசையாக தெய்வத் திருமேனிகள்..

அவ்வளவு தான்....

அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த சிறுவனிடம் கேட்டேன்..

என்ன சாமியப்பா?...

கொடி மாடசாமி.. பேச்சியம்மா!.. - என்றான்...

கை கூப்பி நின்றேன்.. கண்கள் கசிந்தன...

விஸ்தாரமாக பூசை.. தீபாராதனை நடந்தது...

எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்!.. - என, இரந்து நின்றேன்..

ரெண்டு பூவு வைக்கிறேன்... நெனைச்சது வந்தா காரியம் ஜயம்!... - என்றார்
பூசாரியார்...

இரண்டு நிறப் பூக்கள் மடிக்கப்பட்டு சாமி பாதத்தில் வைக்கப்பட்டன...

ஏழை மனுசங்களுக்கு இரங்கியருள வேண்டும் சாமி!..
- என்று,  மங்கல வார்த்தைகளைச் சொல்லி
காத்து நிற்கும் தெய்வங்களுக்குக் கற்பூரம் காட்டினார் - பூசாரியார்...

ரெண்டு மடிப்புகளையும் கொடுத்து ஒன்றை எடுக்கச் சொன்னார்..

ஒன்றை எடுத்துக் கொடுத்தேன்..
மறுபடியும் அந்த மடிப்பு சாமி பாதத்துக்குச் சென்றது...

அதை அவரே திறந்து காட்ட உள்ளிருந்தது - மல்லிகை...

மனம் பரவசமானது.. கண்ணீர் பெருகியது...

மற்றொன்றைப் பிரிக்க அதனுள் சிவப்பாக வேறொன்று...

கவலைப் படவேண்டா... நெனைச்சது நெனைச்சபடி நடக்கும்!...

சில வருடங்களுக்குப் பிறகு,
எண்ணிய எண்ணம் இனிதே நிறைவேறிய வேளையில்
என் மனம் கொடிமாடசாமியின் காலடியில் தான் கிடந்தது...

அந்த கொடி மாடசாமியைத் தான்
இதோ சில விநாடிகளில் தரிசிக்க இருக்கின்றேன்...

இருந்தாலும்
அப்படிப்பட்ட சாமி தரிசனத்துக்கு இத்தனை வருடம் தாமதமா!...

அதுவும் அவர் அறிந்த ரகசியமே!.. அவர் கொடுத்த வரமே!..


ஆவலுடன் சாலையைக் கடந்து
கொடிமாட சாமி எழுந்தருளியிருக்கும்
மண்டபத்தை நெருங்கினேன்..

விடியலிலேயே பூசைகள் முடிந்து
மாலை அலங்காரங்களுடன் மங்கல மூர்த்தி!...




வா.. மகனே.. வா!.. - என்பதாகத் திருத்தோற்றம்...

என் அப்பனே!.. - என்று மனம் இளகிப் போனது...



நீ தகப்பன்.. நீயே தகப்பன்!.. என்றான பிறகு
என்ன செய்வேன்.. ஏது சொல்வேன்..  ஐயா!..
நின் பிள்ளை என்னை நீயே ஆண்டு கொள்..
பிரிவில்லாத இந்த உறவு
பின்னும் தொடரவேண்டும்!..

கற்பூர ஆரத்தி நிகழ்ந்தது.. 
மனம் கவலையற்று இருந்தது...

ஐயனின் அருளுடன்
நெல்லையப்பர் திருக்கோயிலை நோக்கி
எங்கள் பயணமும் தொடர்ந்தது...

கொடி மாடசாமி திருவடிகள் 
போற்றி.. போற்றி!... 
*** 

13 கருத்துகள்:

  1. வந்துவிட்டேன் இங்கும்!!! ஹே ஹேஹே!!! வணக்கம் துரை செல்வராஜு அண்ணா!!! பதிவு வாசிக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. புதியதாய் ஒரு கோயில் கொடிமாட சாமி!!! அறியமுடிந்தது அண்ணா. அதன் பின்புலமான உங்கள் அனுபவம் நெகிழவும் வைத்தது!

    நானும் பல முறை திருநெல்வேலி சென்றுள்ளேன். நெல்லையப்பர், ஜங்க்ஷன், காரைக்குறிச்சி என்று...ஆனால் இக்கோயிலைக் கண்டதில்லை..

    நல்லதொரு அனுபவம். அவருக்கு நன்றியும் சொல்லியாச்சு!! இப்படித்தான் நான் வேண்டுவதை விட நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன் எந்த இறைவனைப் பார்த்தாலும்! படங்கள் அருமை! நெல்லையப்பரை தரிசிக்கத் தொடர்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நெல்லைக்குச் செல்லும் பேருந்து எங்களுடன் புறப்பட்டு விரைந்தது என்பதை விட எங்களை ஏற்றிக்கொண்டு என்று வந்தால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அந்த வரியைப் படிக்கும்போது என் மனக்கற்பனையில் நீங்கள் ஒரு காரில் செல்வது போலவும் கூடவே அந்த பேருந்தும் விரைவதும் போல!

    பதிலளிநீக்கு
  4. நெல்லை பேருந்து நிலையம் அருகே கடை வைத்திருக்கிறான் என்னுடன் படித்த நண்பன் ஒருவன். கூடப்படித்த நண்பன் திருமணத்துக்கு 80 களில் நெல்லை சென்றிருக்கிறேன். நெல்லையப்பர் கோவில் இதுவரை சென்றிருக்கவில்லை என்பது வருத்தம்.

    பதிலளிநீக்கு
  5. இரண்டு பூ வைத்து அருள் பார்க்கும் வேலையில் இறங்க என் மனம் எப்போதும் துணியாது. மாற்றி வந்துவிட்டால் மனம் ஏற்காது என்பதால்... நல்லருள் கிடைத்ததில் மகிழ்ச்சி. உங்கள் குலதெய்வமே? நான் எங்கள் குலதெய்வத்தைப் பார்த்தது 1997 இல். போகவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. நெல்லை ஜங்ஷனில் பிள்ளையாரைப் பார்த்திருக்கேன். இந்தக் கொடிமாடசாமி பத்தி இப்போத் தான் தெரிந்து கொண்டேன். நல்ல தரிசனம், காலை வேளையில். வேதனையுடன் இருந்த மனதுக்கு ஆறுதல் அளித்தது. நன்றி. படங்களைப் பெரிது பண்ணியும் பார்த்து தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான தரிசனம். கொடிமாடசாமியை உங்களுடன் நானும் வந்து தரிசனம் செய்த உணர்வு.
    கொடிமாடசாமி அனைவருக்கும் ஆறுதல் தரவேண்டும் எப்போதும்.
    கொடிமாடசாமி திருவடிகள் சரணம் சரணம்.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் பயணம் தொடரட்டும் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா!
    நெல்லையப்பர் தரிசனமும் அவரைத் தேடிச் சென்ற உங்கள் பயணம், ஊர்ச் சிறப்பினைக் கண்டு மனம் குளிர்ந்தேன்.

    உங்கள் தயவால் ஐயனை நானும் தரிசித்தேன். நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும்,... நெல்லையில் கொடிமாடசாமியரின் தரிசனம் என்று எழுதுவதைத் தவறாக நெல்லையப்பர் என எழுதிவிட்டேன்!

      நீக்கு
  10. நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றதுண்டு. உங்கள் மூலமாக கொடிமாடசாமி ஐயனின் தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் ஜி அழகிய தரிசனத்துக்கு நானும் தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  12. கொடிமாடசுவாமி தரிசனம் கண்டேன்....நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..