நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 06, 2017

திருவெண்காடு 3

திருவெண்காடு திருத்தலத்தைப் பற்றிய தொடர் பதிவில்
இன்று மூன்றாவது பதிவு..

கீழுள்ள இணைப்புகள் -

திருவெண்காடு 1

திருவெண்காடு 2

மதிப்புக்குரிய நெல்லைத் தமிழன் அவர்கள் -
கடந்த பதிவினில் ஐயம் ஒன்றினை எழுப்பியிருந்தார்கள்...

பூ நாளும் தலை சுமப்ப ...
இது பெண்களுக்கு உண்டானது போல் தெரிகிறதே!.. - என்று..

திரு. நெல்லைத் தமிழன் கேட்டிருந்தது -

பூநாளுந் தலைசுமப்பப் புகழ் நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

- என்னும் வரிகளை..

இந்தத் திருவாக்கு ஞானசம்பந்தப்பெருமான் அருளியவை..
திருச்சாய்க்காடு எனும் திருத்தலத்திற்குரிய திருப்பதிகத்தில் உள்ளவை..

தஞ்சையம்பதி தளத்தின் முகப்பில் - இயங்கும் எழுத்துக்களாகத் திகழ்பவை..

பூநாளும் தலை சுமப்ப - எனில் என்ன பொருள்!?..

இன்றைக்கும் பல ஊர்களில் பூசைப் பொருட்களைத் தாம்பாளத்தில் வைத்து தலையில் சுமந்தபடி கோயிலுக்கு வருவது வழக்கமாக இருக்கின்றது..

எங்களது வீரமாகாளியம்மன் திருக்கோயில் சித்திரைப் பாற்குட விழாவில் அர்ச்சனைப் பொருட்களைத் தலையில் சுமந்து வருவார்கள் பெண்கள்..

திருச்செந்தூரை அடுத்துள்ளது -
உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில்..

இது எங்களது குலதெய்வக் கோயிலாகும்..

இத்திருக்கோயிலில் விளங்கும் -
பிரம்ம சக்தியம்மன் கொடை விழாவின் போது பூசைப் பெட்டியை (அர்ச்சனைத் தட்டு - மஞ்சள் மற்றும் மங்கலப் பொருட்களுடன்)
நள்ளிரவுப் போதில் தலையில் சுமந்து வருவர்...

சமயபுரம் மற்றும் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்களின்
பூச்சொரிதல் விழாவின் போது மூங்கில் கூடை மற்றும் தட்டுகளில்
பூக்களைச் சுமந்து வருவர் மக்கள்..

இது ஆயிரங்காலமாக இருந்து வரும் வழக்கம்...

அதைத்தான் ஞானசம்பந்தப் பெருமான் தனது திருப்பதிகத்தில் குறித்தருள்கின்றார்..

திருக்கோயில்களுக்கு பூக்களைத் தலையில் சுமந்து செல்க!..
- என்று அறிவுறுத்துகின்றார்...

இந்த திருவாக்கினுள் இன்னும் நிறைய செய்திகள் இருக்கின்றன..
அவற்றை வரும் நாட்களில் காண்பதற்கு ஈசன் அருள்வானாக..

ஞானசம்பந்தப் பெருமான் அருளிய 
சாய்க்காட்டுத் திருப்பதிகத்தின் திருப்பாடல் இதோ!..

திருத்தலம் - திருச்சாய்க்காடு, சாயாவனம்..

ஸ்ரீ சாயாவனேஸ்வரர்
இறைவன் - சாயாவனேஸ்வரர், சாய்க்காட்டு நாதன்..
அம்பிகை - குயிலினும் நன்மொழியாள்
தீர்த்தம் - காவிரி, ஐராவத தீர்த்தம்..
தலமரம் - கோரைப்புல் 
***

நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ் நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..(2/41/3)

நன்னெஞ்சாகிய என் நெஞ்சே!..
நாம் வாழும் நாளையும் வீழும் நாளையும் யாரறியக் கூடும்?..
வாழும் நாட்களுக்குள் நல்வினைகளைப் பெறுதல் வேண்டாமா!..

ஆகையால் -
நீ நாள்தோறும் ஈசன் எம்பெருமானை நினைவாயாக!..
பெருமானின் பூசனைக்காக நாளும் பூக்களைத் தலையில் சுமப்பாயாக..
புண்ணியனின் பெரும் புகழ்தனைச் செவியாரக் கேட்பாயாக..
நாயகனின் திருப்பேர்தனை வாயார நாளும் நவின்றுரைப்பாயாக..

இதனால் பெறுதற்கரிய 
நல்வினைகளைப் பெற்று உய்தல் ஆகுமே!.. 

வில்லேந்திய வேலவன் - சாய்க்காடு
திருச்சாய்க்காடு எனும் இத்திருத்தலம் சாயாவனம் என்றும் சொல்லப்படும்..

இத்தலம் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் பூம்புகாருக்கு 2 கி.மீ முன்பாக உள்ளது..

சீர்காழி - பூம்புகார் பேருந்துகள் (திருவெண்காடு வழி) மேலையூர் முக்கூட்டைக் கடந்து சாயாவனம் வழியாகவே பூம்புகாருக்குச் செல்கின்றன..

நெடுஞ்சாலையின் அருகிலேயே திருக்கோயில் அமைந்துள்ளது..

சாய்க்காடு திருக்கோயிலுக்கு அருகருகாக உள்ள திருத்தலங்கள் -
தலைச்சங்காடு, மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், பல்லவனேஸ்வரம் எனப்படும் பூம்புகார் ஆகியன...

இனி, அடுத்த பதிவில் -
திருவெண்காடு அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலைத் தரிசிக்கும் முன்பாக சில தகவல்கள்...

காசிக்கு நிகராகச் சொல்லப்படும் திருத்தலங்கள் ஆறனுள் ஒன்று..

ஆயினும் இன்றைய நாட்களில் -
நவக்கிரகக் கோயில்கள் - என்ற தொகுப்பில்
புதன் பகவான் திருக்கோயில் என்று ஊடகங்களால் சொல்லப்படுகின்றது..

திருக்கோயிலின் உள்ளுறை மூர்த்தி ஈசன் ஸ்வேதாரண்யேஸ்வரர்..

அம்பிகை ஸ்ரீ பிரம்ம வித்யா நாயகி..

நான்முகப் பிரம்மனுக்கு வேதங்களை எடுத்துரைத்தவள்..

தேவலோகத்தின் யானையாகிய ஐராவதம் - 
சிவவழிபாடு செய்து தன்னுடைய அழகினை மீண்டும் பெற்ற திருத்தலம்.. 

இந்திரனும் மற்றுமுள்ள தேவர்களும் வணங்கி நின்ற திருத்தலம்..

அந்த வகையில்
நவக்ரகங்களுள் ஒருவராகிய புதன் - தன் துயர் தீரப் பெற்ற திருத்தலம்..

மூன்று திருக்குளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது - திருக்கோயில்..

அதிகார நந்தி - இத்தலத்தில் தன் மேல் துளைகளைக் கொண்டு திகழ்கின்றார்..

அவை காயங்கள் என்று சொல்லப்படுகின்றன..

ஏன்?.. அவருக்குக் காயம் உண்டாயிற்று?..

நந்தியம்பெருமான் மீது 
காயங்களை உண்டாக்க வல்லவன் யார்!?.
***

அடுத்த பதிவில் மேல் விவரங்களுடன் 
திருக்கோயில் தரிசனம்..

திருவெண்காடு கோயிலின் 
விதானத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்
பதிவினை அழகு செய்கின்றன..

இவற்றை வழங்கியோர் 
சிவனடியார் திருக்கூட்டத்தினர்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
***


கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புனலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே..(2/48/1)

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே..(2/48/2)


சக்கரமாற் கீந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்குடையானும் முக்கணுடை இறையவனே..(2/48/7)

கள்ளார்செங் கமலத்தான் கடல் கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளாஇனை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டானென்
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே..(2/48/9)


உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
வெண்டா மரைமேற் கருவண்டு யாழ்செய் வெண்காடே..(2/61/1)

தண்முத்து அரும்பத் தடமூன்று டையான் தனையுன்னிக்
கண்முத்து அரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்
உண்முத்து அரும்ப உவகை தருவான் ஊர்போலும்
வெண்முத்து அருவிப் புனல்வந்து அலைக்கும் வெண்காடே..(2/61/3)

பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச் சுரிசங்கு உலவித் திரியும் வெண்காடே..(2/61/5)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***  

21 கருத்துகள்:

  1. இன்னும் சாயாவனம்,பூம்புகார் போனதில்லை. அந்த வழியாகப் போனப்போ எல்லாம் வேறே ஏதோ வேலைகள்! பூம்புகாரைப் பார்க்கும் ஆவல் இன்னமும் தீரவில்லை. சாயாவனம் நாவல் படிச்சிருக்கேன். பதின்ம வயதில்! அதிலிருந்து சாயாவனமும் பார்க்க ஆவல்! எப்போக் கிடைக்கும்னு தெரியலை! நெ.த.வுக்கு உங்க அழைப்பைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன். நல்ல விளக்கம். பொதுவாகவே பூஜைப் பொருட்களைத் தலையில் சுமந்தே எடுத்து வருவார்கள். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பூஜைப் பொருட்களைத் தலையில் சுமந்து எடுத்து வருவது பாரம்பர்யம்.

      சில அஆண்டுகளுக்கு முன்பாக வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்றிருந்தோம்..

      மூலஸ்தானத்து அர்ச்சகரிடம் - பித்தளைத் தாம்பாளத்தில் வைத்து அர்ச்சனைப் பொருட்களைக் கொடுத்தபோது விடாப்பிடியாக வாங்க மறுத்து விட்டார்...

      வேறு வழியின்றி நாங்கள் கொண்டு சென்றிருந்த பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொடுத்தோம்..

      பத்து விரல்களிலும் 20 - 30 பைகளைத் தொங்க விட்டுக் கொண்டு செல்வதற்கும் வருவதற்கும் வசதியாக இருக்கிறது என்று நினைக்கிறார்களே அன்றி -

      எது முறையானதோ அதை அனுசரிப்பதில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. படித்தேன், தெரிந்து கொண்டேன்.


    திருவெண்காடு ஜெயராமன் என்றொரு பாடகர் இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      சிதம்பரம் ஜெயராமன் என்று தான் கேள்விப்பட்டிருக்கின்றேன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. Where is this Place ? how can we reach this place say from Chennai ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு Sarav..

      தங்களுக்கு நல்வரவு..

      சென்னையில் இருந்து எளிதாக சீர்காழி மற்றும் மயிலாடுதுறைக்கு வந்து சேரலாம்..

      சீர்காழியில் இருந்து 15 கி.மீ.. மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ..
      சீர்காழி - மயிலாடுதுறையில் இருந்து திருவெண்காட்டிற்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான தொடர். ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை ஆயிரம் கோயில்கள்தான் உள்ளன. இப்போ வெளிநாட்டிலும் ஊருக்கு ஒரு கோயில் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பூம்புகார் சென்றுள்ளேன். சாயாவனம் செல்லும் நாளை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      விரைவில் தங்கள் ஆவல் நிறைவேறும்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பல இடங்களைப் பற்றியும் வரலாறு பற்றியும் இப்போது தெரிய வருகிறது ஆனால் அங்கெல்லா ம் செல்லக் கூடிய வாய்ப்பு பற்றி சந்தேகமே வருகிறது உடல் ஒத்துழைக்க வேண்டுமே

    பதிலளிநீக்கு
  8. "பூ நாளும் தலை சுமப்ப" - ஆஹா.. அருமையான விளக்கம்.

    சாயாவனேசுவரரையும், அபூர்வமான வில்லேந்திய வேலவனையும் தரிசனம் செய்துகொண்டேன்.

    இரண்டுமுறை போட்டிருந்தாலும் ஊர்த்துவ தாண்டவ ஓவியம் அருமை.

    திருவெண்காட்டில், முக்குள நீரும், வெண்தாமரையின் மேல், வண்டு வந்து ரீங்காரமிடுமளவு நீர் நிலைகளும் இப்போதும் இருக்கிறதா?

    ஆண்டாள் சொன்ன 'உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழு'நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்' என்று இருந்த ஸ்ரீவில்லிபுத்தூரில், தண்ணீரே இல்லையே.

    பதிலளிநீக்கு
  9. இன்னொன்று துரை செல்வராஜு சார்...

    பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புனலானும் - இது சிவனைக் குறிக்கிறது. மற்றவற்றை அர்த்தப்படுத்திக்கொள்ள முடிகிறது. இது இரண்டும் எதனைச் சொல்ல வருகிறது?

    பேயடையா பிரிவெய்தும் - இந்தப் பாடலின் சில வார்த்தைகளையும் பொருள் புரிந்துகொள்ள முடியவில்லை.

    கூகிளாண்டவரிடம் கேட்பதற்குப் பதில், நீங்கள் இந்த இடுகையிலேயே, பாடலைக் குறைத்துக்கொண்டு, போடுகின்ற பாடலின் கஷ்டமான வார்த்தைகளுக்கோ, அல்லது அது சொல்லும் சேதிகளுக்கோ முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்டால், படிக்கும்போது இன்பம் அளிக்கும்.

    பதிலளிநீக்கு
  10. பயிர் காட்டும் புனலானும் - அதாவது பயிரை விளைவிக்கும் தண்ணீரும் அவன்'தான். பண்ணை நம்மை அறிந்துகொள்ள வைக்கும் இசையும் அவனே என்பதையா?

    பதிலளிநீக்கு
  11. பூம்புகார் இதுவரை சென்றதில்லை ஆவல் உள்ளது. தொடர்கிறேன்... ஜி

    பதிலளிநீக்கு
  12. பூம்புகார் செல்லும் ஆசை உண்டு இதுவரை சென்றதில்லை. நிறைய தகவல்கள், பாடல்கள் அறிந்து கொண்டோம். அருமையான பாடல்கள். நந்தியின் மீது காயங்களா? அறிய ஆவலுடன் தொடர்கிறோம்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  13. சாயாவனத்தில் வில்லேந்திய முருகன் விசேடம். பட்டினத்தார்

    திருவிழா நடக்கும், பல்லவனேஸ்வரத்தில் பட்டினத்தார் திருவிழா பத்து நாட்கள் நடக்கும் நகரத்தார் எல்லா ஊர்களிலிருந்து வந்து பார்ப்பார்கள். கூட்டமாய் இருக்கும். காவிரிபூம்பட்டினத்தில் பட்டினத்தார் தாயார் தகனம் செய்வது வரை நடக்கும்.

    அருமையான தேவார பாடல்களுடன் பதிவு அற்புதம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. பட்டினத்தாரை அவர் தாய் சாயவனம் பார்த்து முக்குளம் நீராடி பெற்றதாய் பாடல் உண்டு.
    பட்டினத்தாருக்கு திருவெண்காடு கோவிலில் கல்யாணம் பேசுவார்கள். இரண்டு பக்கம் வீட்டாரும் கல்யாண சீர் வரிசை பேசுவது கேட்க மகிழ்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. ஆவணி ஞாயிறு, கார்த்திகை ஞாயிறு மிகவும் விஷேசம். 1008 சங்காபிஷேகம் நடைபெறும். மாசி மாசம் திருவிழா. ஆனி மாதம் அம்மனுக்கு திருவிழா என்று சிறப்பாய் நடைபெறும் கோவில்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..