நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 01, 2017

திருவெண்காடு 1

அன்றைய பொழுது மிகவும் நல்லதாக இருந்தது - அவளுக்கு!..

அவள் தேவகன்னியருள் ஒருத்தி.. பெயர் வித்யாவதி..

திருக்கயிலாயத்தில் அம்பிகையின் திருமுன்பாக
தனது தோழியருடன் நாட்டியம் பயின்றாள்..

அம்பிகையின் திருப்பேர் பாடித் துதித்தாள்..


அவளது பணிவையும் பக்தியையும் மெச்சிய அம்பிகை -
தனது திருக்கழுத்தில் அணி செய்த செண்பகப் பூமாலையைக் கழற்றி
ஆடலரசி வித்யாவதிக்குப் பரிசளித்தாள்..

எல்லாம் வல்ல அம்பிகையே!..
நின் கடைவிழிப் பார்வை ஒன்று போதுமே..
ஏதும் அறியா ஏந்திழை எனக்கு
நின் திருமேனி தழுவி நின்ற
வாடாமலர் மாலையை அளித்தனையே..
என்னே நினது திருவுளம்!.. வண்டார்குழலீ!..

- என்று, போற்றிப் புகழ்ந்தவளாக அந்த மாலையைப் பெற்றுக் கொண்டாள்..

ஆனாலும் அவளது மனம் ஆறவில்லை..

கிடைத்தற்கரிய இம்மாலையைப் பேணிக் காத்தல் என்னால் ஆகுமோ?..
- எனத் தவித்தாள்..

திருக்கயிலாய மாமலையில் இருந்து திரும்பி வரும் வழியில்
மகா முனிவராகிய துர்வாசரைக் கண்டாள்..

அவரைப் பணிந்து வணங்கிய வித்யாவதி
தனது மனக்குழப்பத்தைச் சொல்லிய வண்ணம்
அம்பிகை அளித்த மாலையை அவரிடம் ஒப்படைத்தாள்..

இந்த மாலையினால் பற்பல சம்பவங்கள் நிகழ இருப்பதை
அப்போது அவள் அறிந்தாளில்லை..!..

அக மகிழ்ந்த துர்வாசர் வித்யாவதியை வாழ்த்தினார்..
அந்த மாலையைப் பெற்றுக் கொண்டார்...

இதை யாரிடம் கொடுப்பது.. ஒரு கணம் சிந்தித்தார்...

முக்காலத்தையும் உணர்ந்த துர்வாசரின்
மனதில் அம்பிகையின் திருவுளம் புரிந்தது..

நேராக தேவலோகத்தை நோக்கி நடந்தார்...

ஆனால்,
அவருக்கு முன்பாக நடந்து கொண்டிருந்தவன் - ஸ்ரீ சனைச்சரன்..


இந்த இருவரது வருகையையும் உணராத தேவேந்திரன்
ஐராவதத்தின் மீது அலங்காரமாக வந்து கொண்டிருந்தான்...

ஆகா.. வந்த வேலை இவ்வளவு எளிதாக நிறைவேறுகின்றதே!..
- என, மகிழ்ச்சி துர்வாசருக்கும் சனைச்சரனுக்கும்...

சனைச்சரன் மறைபொருளாக நிற்க -
தன்னெதிரே மாலையும் கையுமாக நின்ற துர்வாச முனிவரைக் கண்டான் - தேவேந்திரன்..

இவர் எதற்கு இங்கே வந்தார்?.. - ஆயிரமாயிரம் குழப்பங்கள்..

முனிவரை வரவேற்று முகமன் கூட உரைக்கவில்லை..

அவனுக்கு என்னென்ன பிரச்னைகளோ!.. - என்று,
துர்வாச மகரிஷியும் அதைக் கண்டு கொள்ளவில்லை..

தேவேந்திரா!.. வாழ்க வளமுடன்!..
ஆதிபராசக்தி சூடியருளிய இந்த மாலை எனக்குக் கிடைத்தது..
நான் அதை உனக்களிக்கின்றேன்.. பெற்றுக் கொள்!.. மங்களம் உண்டாகட்டும்!..

கள்ளச் சிரிப்புடன் கவனித்துக் கொண்டிருந்த சனைச்சரன் இடை புகுந்தான்..

அந்த அளவில் தேவேந்திரனின் தலைவிதி திசை மாறிப் போயிற்று...

இருக்கின்ற மாலைகளுக்கே இடத்தைக் காணோம்.. இவர் வேறு!..

மிக்க அலுப்புடன் ஐராவதத்தின் மீதிருந்தபடியே அங்குசத்தை நீட்டி மாலையை வாங்கினான்..

துர்வாசர் அதிர்ந்தார்... அவருக்குள் அனல் மூண்டது..

அங்குசத்தின் நுனியில் இருந்த மாலையை எடுத்து
ஐராவதத்தின் மத்தகத்தின் மீது வைத்தான்..

வண்டார் குழலி அவள் சூடியிருந்த செண்பகப் பூமாலை...
அதனுள்ளே தேனுண்ட மயக்கத்தில் திளைத்திருந்தன தேனீக்கள்...

அப்படியும் இப்படியுமான அசைவுகளினால் அதிர்ந்த தேனீக்கள்
மயக்கம் கலைந்து எழுந்தன..

ரீங்.. - என்ற ஓசையுடன் ஐராவதத்தின் மத்தகத்தைச் சுற்றின..

இந்த ரீங்காரத்தை எதிர்பார்க்காத ஐராவதம் கடுப்பாகி மிரண்டது...

பெருங்குரலெடுத்துப் பிளிறியவாறே தன் தலை மீதிருந்த மாலையை
துதிக்கையால் இழுத்து கீழே போட்டு காலால் மிதித்தது..

அவ்வளவு தான்!.. அக்னி மலையானார் துர்வாசர்..

தேவேந்திரா.. தவறிழைத்து விட்டாய்!..
அம்பிகை வழங்கிய அருட்பிரசாதத்தை
உன்னையும் ஒருவனாக மதித்து உன்னிடம் கொடுத்தேன்!..
அறிவிலியாய் அதனை அங்குசம் கொண்டு ஏந்தினாய்..
அடாத செயலாக அதனை ஆனையின் தலை மேல் வைத்தாய்..
உன்னைப் போலவே உனது ஆனை - ஐராவதம்!..
அம்பிகையின் மாலையைக் கீழே இழுத்துப் போட்டு மிதித்தது!..

ஆக்ரோஷத்துடன் கர்ஜித்தார்..

அப்போது தான் திடுக்கிட்டு விழித்தான் - தேவேந்திரன்..
நடந்ததெல்லாம் விளங்கிற்று..

மோசம் போனேனே!.. - ஐராவத்தின் மீதிருந்து குதித்தான் தேவேந்திரன்..

என்னை மன்னித்தருளுங்கள் ஸ்வாமி!..

ஆணவமும் அகம்பாவமும் உன்னிரு கண்கள்.. 
மேனி முழுதும் புண்கள் இருந்தும் புத்தியில்லை உனக்கு.. 
அடாத செயல் புரிந்தாய்.. உனக்கு எதற்கு அமரலோகம்?..

அந்த அளவில் அமரலோகம் புகைந்து போயிற்று..

உனக்கு எதற்கு இளமையும் அழகும்!?.. நரையும் திரையும் சூழட்டும்!..
மானுடர்களைப் போல முதுமையும் முடிவும் நேரட்டும்!..

அதிர்ந்து போனான் அமரேந்திரன்..

எனக்கு நரையும் திரையும் என்றால்?..
- சிந்தித்த அளவில் தேவலோகத்துக் கன்னியர் கடுங்கிழவிகளாகிப் போயினர்..

அறிவிழந்த ஐராவதம் தன் அழகையெல்லாம் இழக்கட்டும்!..


வெள்ளிப் பனிமலை போலத் திகழ்ந்த ஐராவதம் -
அந்த நொடியில் கன்னங்கரேலென்று காட்டானையாகி நின்றது...

தன் நிலையைக் கண்டு கலங்கிய யானைக்கு என்ன செய்வது என்று புரியவில்லை....

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த
தேவலோகத்துக் குதிரை உச்சைசிரவம் ஊரை விட்டே ஓடிப் போனது...

கண்ணீரும் கம்பலையுமாக நின்றான் - தேவேந்திரன்..

ஐயனே.. என் பிழை பொறுத்து சாப விமோசனம் அருளல் வேண்டும்!..

அம்மையப்பனை சென்று கேள்!..

துர்வாசர் புறப்பட்டார் - வந்த வேலை முடிந்தது!.. - என்று...

ஆங்கு நிகழ்ந்தவற்றைக் களிப்புடன் கண்டு கொண்டிருந்த
கரியவன் சனைச்சரனும் அங்கிருந்து நடையைக் கட்டினான்...

ஏற்கனவே எனக்கு அம்மையப்பனிடத்தில் நல்ல பெயர்..
இப்போது இதுவும் சேர்ந்து கொண்டதா!.. வேண்டியது தான்!..

தன்னைத் தானே நொந்து கொண்டான் இந்திரன்...

இத்தனைக்கும் காரணம் இந்த யானை.. பிடரியைப் பிடித்து ரெண்டு சாத்த வேண்டும்!.. - என்று சினத்துடன் திரும்பிப் பார்த்தான்..

ஐராவதம் அவ்விடத்தை விட்டு ஓடிப் போய் வெகுநேரமாகி இருந்தது..

ஆனையும் கை விட்டுப் போனதா!?.. தேவையா இதெல்லாம்!?..

திருக்கயிலைக்குச் செல்வதற்கு வெட்கப்பட்ட இந்திரன்
சத்யலோகம் நோக்கி நடந்தான்..

இங்கிருந்தே -
பற்பல சம்பவங்களும் அதனூடாக அரிய தத்துவங்களும் ஆரம்பமாகின்றன..

சரி.. அந்த ஐராவதம் எங்கே போயிற்று?..

பூச்சிகளையும் வண்டுகளையும் தன்னை நெருங்க விடாத
தனது இயல்பினால் நேர்ந்த பிழையை எண்ணி வருந்திய ஐராவதம்
கஜேந்திரனைக் காத்தருளிய கரிவரதா!.. - என, வைகுந்தத்திற்குச் சென்றது..

ஸ்ரீ ஹரி பரந்தாமனோ - திருக்கயிலையின் திசையைக் காட்டியருளினான்..

எட்டுத் திக்கிலும் யானைகள் நின்று காக்கும் திருக்கயிலாய மாமலையை நோக்கி நடந்தது ஐராவதம்...


அம்மையே.. அப்பா!.. ஒப்பிலா மணியே!..

திருக்கயிலையின் வாசலில் நின்று - பிளிறியது..
கதறியது... கண்ணீர் சிந்தியது..

 நந்தியம்பெருமான் அன்பு கொண்டு உள்ளே செல்லுமாறு பணித்தார்..

மெல்ல மெல்ல மலையின் மீதேறிய ஐராவதம் -
திருவோலக்க மாமண்டபத்தில் அம்மையப்பனைத் தரிசித்தது..

வலம் வந்து வணங்கி திருவடிகளில் வீழ்ந்தது...

ஐராவதத்தின் நிலை கண்டு இரங்கிய எம்பெருமான் திருவாய் மலர்ந்தான்..

முக்குளத்தில் நீராடி அங்கே எம்மை வணங்குவாயாக!..

அல்லல் அகன்ற மாத்திரத்தில் ஐராவதத்தின் முகத்தில் ஆனந்தம்...

ஆயினும், முக்குளம் விளங்கும் அந்தத் தலம் எது என்று தெரியவில்லை..

அம்பிகையை நோக்கிற்று - ஐராவதம்..

யாழைப் பழித்த மொழியாள் முத்து நகையுடன் மொழிந்தாள்..

திருவெண்காடு!..

இனி வரும் சில பதிவுகளில்
திருவெண்காடு தரிசனம்..
***
ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்
இறைவன் - ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரம்ம வித்யா நாயகி

குடமெடுத்து நீரும்பூவும் கொண்டு தொண்டர் ஏவல்செய்ய
நடமெடுத்தொன் றாடிப்பாடி நல்குவீர்நீர் புல்கும்வண்ணம்
வடமெடுத்த கொங்கைமாதோர் பாகமாக வார்கடல்வாய்
விடமிடற்றில் வைத்ததென்னே வேலைசூழ் வெண்காடனீரே!..(7/06) 
-: சுந்தரர் :-

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்
காணார் பொறியழலாய் நின்றான் தன்னை
உள்ளானை ஒன்றலா உருவி னானை
உலகுக்கு ஒருவிளக்காய் நின்றான் தன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலைமூன்றும்
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே!..(6/35) 
- : திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
*** 

24 கருத்துகள்:

  1. திருவெண்காடு செல்ல தயாராக இருக்கிறோம் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகை இனிது..
      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வெண்காட்டு ஈசரைத் தரிசனம் செய்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மிக அழகாக திருவெண்காடு தரிசனம் ....தொடர்கிறேன்...

    ஆனாலும் ஐராவதம் பாவம் என்ன செய்யும்....வண்டு புகும் போது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மிக உயர்ந்த இடத்தில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும்
      சில சமயங்களில் அடிப்படையான பிறவிக் குணம் போகாது..

      அதற்கு எடுத்துக்காட்டு தான் ஐராவதம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின் ஜி படிக்க விறுவிறுப்பாக இருந்தது புராணம்.

    திருவெண்காடு காண ஆவலுடன் நானும்...

    யானைக்கு ஐராவதம் என்ற பொருளும் உண்டா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இந்திரனுடைய யானையின் பெயர் தான் ஐராவதம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அறிமுகக்காதை அபாரம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருவெண்காடு அறிமுகம் மிகவும் அருமை! அறியாத புராணக் கதை! அடுத்த தரிசனத்திற்குச் செல்லத் தயாராகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நாங்கள் ஏழு வருடங்கள் இருந்த ஊர்.
    மாயவரம் வந்த பின்னும் அடிக்கடி தரிசனம் செய்த ஊர்.
    அங்குள்ள இறைவனை, இறைவியை பற்றி வரப் போவது அறிந்து மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.
    பாடல் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. உங்க ஊர் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தேன். நேற்றைக்கு முந்தைய நாள் திரும்பினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையின் நோக்கம் நல்லபடியாக நடந்திருக்கும் என நினைக்கின்றேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பூ நாளும் தலை சுமப்ப---- இது பெண்களுக்கு உண்டானது போல் தெரிகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இந்த வரிகள் ஞானசம்பந்தப் பெருமான் அருளியவை..
      அடுத்த பதிவுகளில் விவரம் தருகின்றேன்..

      தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் இறைக்கதைகள் நீங்களும் அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள் நானும்தெரியாதவையும் கேட்காத வற்றையும் ரசிக்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  11. அன்புடையீர்..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  12. இது நான் கேள்விப்படாதது... படிக்க படிக்க சுவாரஸ்யம் அதிலும் இடைக்கிடை நகைச்சுவயும் கலந்து விட்டிருக்கிறீங்க... நல்ல தொடக்கம்... தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. மிக எளிய நடை..! புராணமும் உங்கள் நடையில் எளிதாக விளங்கும்.
      பெரிய புராணத்தில் நிறைய சிறு சிறு கதைகள் உண்டு. தொடர்ந்து இறைபணியில் ஈடுபட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

      நீக்கு
    3. அன்பின் திரு ஜீவன்சிவம்..

      தங்களுக்கு நல்வரவு..

      தங்களது முதல் வருகையும் அன்பான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..