அனைவருக்கும்
அன்பின் வணக்கம்..
இந்தப் பதிவு
தஞ்சையம்பதியின்
ஆயிரமாவது பதிவு..
ஆயிரமாவது பதிவு..
இதற்கெல்லாம் தாங்கள் அளித்த
ஊக்கமும் உற்சாகமுமே காரணம்..
இனிவரும் நாட்களில்
அவ்வண்ணமே வேண்டுகின்றேன்..
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
***
திருவெண்காடு திருத்தலத்தைப் பற்றிய தொடர் பதிவில்
இன்று நான்காவது பதிவு..
முந்தைய பதிவுகளுக்கான
இணைப்புகள்..
***
ஈசன் எம்பெருமானால் வீழ்த்தப்பட்டவன் சலந்தராசுரன்...
சலந்தராசுரனின் வீழ்ச்சிக்குப் பின்
அவனது மகன் மருத்துவன் என்பவன் வீறு கொண்டு எழுந்தான்...
அப்போது அசுர குலத்தில் இருந்த நல்லோர் சிலர் சொன்னார்கள்..
ஈசனை எதிர்ப்பதென்பது ஆகாது...
இறைவனை வணங்கி வரங்களைப் பெற்று வாழ்ந்து கொள்வாயாக!..
அதன்படி - இறைவனை எண்ணித் தவமிருந்தான்..
அதன் பயனாக -
ஈசனிடமிருந்து பலவித வரங்களையும்
பலவித ஆயுங்களையும் பெற்றுக் கொண்டான்..
ஆயுதங்களைப் பெற்றக் கொண்ட அவனால்
அவற்றை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை..
வழக்கம் போல இந்திரனைத் துரத்திக் கொண்டு ஓடினான்...
இந்திரனும் வழக்கம் போல இறைவனிடம் முறையிட்டு நின்றான்..
நந்தியம்பெருமானை அழைத்த இறைவன் -
மருத்துவாசுரனுக்கு அறிவுரைகளைக் கூறி வருமாறு அனுப்பினார்...
ஆனால் விதியின் விளையாட்டு வேறுவிதமாக இருந்தது..
மருத்துவாசுரனின் மூளைக்கு மருத்துவம் தேவைப்பட்டது..
அறிவுரை கூற வந்த நந்தியம்பெருமானை அவமதித்தான்...
ஈசனிடமிருந்து வரமாகப் பெற்ற ஆயுதங்களால் தாக்கினான்..
நந்தியம்பெருமானின் திருமேனி முழுதும் காயங்கள் ஏற்பட்டன..
நந்தியம்பெருமான் நினைத்திருந்தால் -
தெள்ளுப் பூச்சியைப் போல அசுரனை நசுக்கி அழித்திருக்கலாம்...
அவர் அங்கு வந்தது - அசுரனுக்கு அறிவுரை புகல்வதற்காக...
ஆயுதங்கொண்டு அசுரனுடன் போரிடுவதற்கு அல்ல!..
அத்துடன் -
அசுரன் எய்த ஆயுதங்கள் அனைத்தும் சிவபெருமானால் வழங்கப்பட்டவை..
ஆகையால் அந்த ஆயுதங்களுக்கு மதிப்பளித்து
அவற்றையெல்லாம் தன்மீது தாங்கிக் கொண்டார்...
நந்தியம்பெருமான் தாக்கப்படுவதைக் கண்ட
இறைவன் பெருங்கோபமுற்றார்..
அந்த அளவில்
இறைவனின் கோபம் ஈசான்ய திருமுகத்திலிருந்து
அகோர மூர்த்தி - என்ற திருக்கோலத்தில் வெளிப்பட்டது...
எட்டுத் திருக்கரங்களுடன் விளங்கிய
அகோர மூர்த்தி வலது திருவடியை முன்னெடுத்தார்..
அந்தப் பேருருவைக் கண்ட மாத்திரத்தில் மருத்துவாசுரன்
அஞ்சி நடுங்கி அங்கேயே வீழ்ந்து மாண்டு போனான்...
அகோரமூர்த்தியைப் பணிந்து வணங்கிய மகாமுனிவர்களும் தேவர்களும்
பெருமானை திருவெண்காட்டிலேயே விளங்கியிருக்க வேண்டிக் கொண்டனர்...
இத்தகு சிறப்புடைய திருக்கோயில்
மூன்று தீர்த்தங்களையும் மூன்று தலமரங்களையும் உடையது...
இருந்தும் -
இத்திருக்கோயில் விளம்பரத்தனமான ஊடகங்களால் -
புதன் பகவான் கோயில் என்று பிழையாகவே சொல்லப்படுகின்றது...
திருத்தலம் - திருவெண்காடு
ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் |
இறைவன் - ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி..
தீர்த்தங்கள்
அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
தலவிருட்சம்
வட ஆல், வில்வம், கொன்றை..
***
கிழக்கு நோக்கிய திருக்கோயில்..
ஐந்து நிலைகளுடன் நெடிதுயர்ந்த ராஜகோபுரம்..
ராஜகோபுரத்தைக் கடந்ததும் விசாலமான பெருவெளி...
கொடி மரத்து விநாயகர்.. கொடிமரம் பலிபீடம்..
அவற்றின் தென் புறமாக அக்னி தீர்த்தம்...
குளக்கரையில் அக்னி வழிபட்ட சிவலிங்க சந்நிதி..
படித்துறையுடன் கூடிய குளம்.. குளத்தில் தண்ணீர் இல்லை..
ஆயினும், அதனை விட்டு அகலாமல் தாமரை படர்ந்திருக்கின்றது...
ஆழ்துளைக் குழாய் மூலமாக குளத்தில் தண்ணீர் நிறைக்கின்றார்கள்...
குளத்தினுள் இறங்கி தீர்த்த தரிசனம் செய்து கொண்டு கரையேறினோம்...
கொடிமரத்து விநாயகப் பெருமானை வணங்கி
முன்மண்டபத்தினைக் கடந்தால் இரண்டாவது ராஜகோபுரம்..
இதோ திருவெண்காட்டு நாதனின் திருச்சந்நிதி வாசல்....
சகல அதிகாரங்களையும் உடைய நந்தியம்பெருமான் -
மருத்துவாசுரனால் தாக்கப்பட்ட திருக்கோலத்தில்
சாந்த ஸ்வரூபனாக சேவை சாதிக்கின்றார்...
அவரைப் பணிந்து கொண்டோம்..
மகா மண்டபம் அழகழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றது..
எழிலார்ந்த திருக்கோலத்தில் திருமூலத்தானத்தில்
எம்பெருமான் ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்..
பச்சைப் பட்டுடன் திருக்கோலம்...
ஐராவதத்திற்கு அருள் புரிந்த பரம்பொருளே..
எம்மையும் காத்தருள்க இறைவனே!..
- என்று, பணிந்து நிற்கின்றோம்...
தீப ஆரத்தியில் கருணை வெள்ளம்...
மனதில் அமைதியும் ஆனந்தமும் பொங்கிப் பெருகுகின்றன..
மூலஸ்தானத்திலிருந்து தெற்குத் திருச்சுற்று...
மேல் தளத்துடன் கூடிய திருமாளிகைப் பத்தி..
அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் அணி செய்கின்றன...
ஸ்ரீ பத்ரகாளி |
வடக்கு நோக்கியதாக பத்ரகாளியம்மன் சந்நிதி...
அமர்ந்த திருக்கோலத்தினள்.. எட்டுத் திருக்கரங்கள்..
உடுக்கை, வாள், சக்கரம், பாசக்கயிறு, மணி, கபாலம் இவற்றுடன்
திருக்குறிப்பு காட்டியவளாக பீடத்தில் அமர்ந்திருக்கின்றாள்..
இவளது சந்நிதிக்கு நேர் எதிராக -
வாயு மூலையில் தெற்கு நோக்கிய சந்நிதியில்
ஸ்ரீ அகோர மூர்த்தி..
ஸ்ரீ அகோரமூர்த்தி |
அக்னி ஜ்வாலைகளுடன் எட்டுத் திருக்கரங்கள்..
கம்பீரமாக முன்வைத்து நடந்த வண்ணமாக திருக்கோலம்..
ஏனைய திருக்கரங்களில் குறுங்கத்தி, வாள், டமருகம்,
இருதலைச் சூலம், கேடயம், கபாலம் ஆகியனவும் அணி செய்கின்றன..
அகோரமூர்த்தியின் அருகில் நந்தி விளங்குகின்றார்..
திருவடியில் வீழந்துபட்ட மருத்துவாசுரன்..
அகோரமூர்த்தி ஆகிய திருவடிவம் இறைவனின் அறுபத்து நான்கு திருக்கோலங்களுள் நாற்பத்து மூன்றாவது திருக்கோலம் ஆகும்..
பூர நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தான்
அகோர மூர்த்தி திருக்கோலம் காட்டிய பொழுது..
எனவே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்
நள்ளிரவுக்கு முன்பாக விசேஷ பூஜைகள் நிகழ்கின்றன..
அகோரமூர்த்தியின் சந்நிதியில் வணங்கி நிற்பவர் தமக்கு
சகல விதமான வினைகளும் தீர்ந்து அழிகின்றன என்பது ஐதீகம்...
திருச்சுற்றில் தனித்துவமாக விளங்குவது நடராஜ சபை..
இங்கே அம்பிகைக்காக -
ஆனந்தத் தாண்டவம், காளிகா தாண்டவம்,
கௌரி தாண்டவம், முனி தாண்டவம்,
சந்தியா தாண்டவம், திரிபுட தாண்டவம்,
புஜங்க தாண்டவம், பைசாச தாண்டவம்
சங்கார தாண்டவம்
- என, ஒன்பது தாண்டவங்களை நிகழ்த்தியதாக ஐதீகம்..
அதனால் ஆதி சிதம்பரம் என்ற சிறப்பும் உண்டு..
ஸ்ரீ துர்காம்பிகை |
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வடிவழகுடன் திகழ்கின்றனள்..
முன்னிரு திருக்கரங்களால் அபயமளித்து அரவணைப்பவளாக திருக்குறிப்பு அருளும் அம்பிகை -
ஏனைய திருக்கரங்களில் வாள், அம்பு, சக்கரம், சங்கு, தனுசு மற்றும் கேடயம் ஆகியவற்றை ஏந்தியவளாகப் பொலிகின்றாள்...
இத்திருத்தலத்தில் நவக்கிரக தோஷங்கள் விலகுகின்றன..
புதனுக்கு தனி சந்நிதி இருந்தாலும்
நவக்கிரக மண்டலம் என்று தனியாக இல்லை..
இறைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அடக்க ஒடுக்கமாக ஒரே வரிசையில் விளங்குகின்றனர்...
இந்த அளவில் உள் திருச்சுற்றில் தரிசனம் நிறைவடைகின்றது..
கருவறையை நோக்கி மீண்டும் வணங்கியபடி வெளித் திருச்சுற்றுக்கு வருகின்றோம்...
முன்பே தரிசித்த அக்னி தீர்த்த குளத்தைக் கடந்தால் -
அதற்கு நேராக சூரிய தீர்த்தம்..
குளக்கரையில் சூரியன் வணங்கிய சிவலிங்க சந்நிதி..
அக்னி தீர்த்தத்தைப் போலவே இக்குளமும் தண்ணீரின்றி இருக்கின்றது...
தொடர்ந்து நடந்தால் ஆங்கொரு விசாலமான மண்டபம்.. அதில் விநாயகர் சந்நிதி..
மேலைத் திருச்சுற்று.. மேற்குத் திருவாசல் - ராஜகோபுரத்துடன் திகழ்கின்றது..
இங்கும் ஒரு பெரிய மண்டபம்.. அழகான முருகன் சந்நிதி..
ஆறு திருமுகங்களுடன் திருக்கோலம்..
மேலைத் திருச்சுற்றில் இருந்து வடக்கு திருச்சுற்றுக்குத் திரும்பியதும்
ஸ்ரீ பிரம்மவித்யாநாயகியின் திருக்கோயில் -
கிழக்கு முகமாக கொடி மரத்துடன் திகழ்கின்றது..
ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி |
அம்பிகையும் அழகான பச்சைப் பட்டு உடுத்தித் திகழ்கின்றாள்...
பரிதவிக்கும் உள்ளங்களைப் பாசத்துடன் அணைத்துக் காப்பவளாக அவள்!..
என்ன ஒரு அமைதி மனதில்..
இதற்காகவே அன்னையின் சந்நிதி வாசலில் வீழ்ந்து கிடக்கலாம்...
அஞ்சேல்!.. - அபயம் அருளி திருவடிகளைக் காட்டும் அம்பிகையின்
மேல் திருக்கரங்களில் ஜபமாலையும் தாமரையும் திகழ்கின்றன..
வாழ்வருள்வாய் அம்பிகையே!.. - என்று, வலம் வந்து வணங்குகின்றோம்..
அம்பிகையின் கோயிலுக்கு வடபுறமாக தனிக் கோயிலில் புதன்...
அடிதடி, தள்ளுமுள்ளு.. - என, ஏதும் இல்லை..
புதனின் சந்நிதி சற்று உயரமாக விளங்குவதால் அழகான தரிசனம்..
அபயமும் சின்முத்திரையும் காட்டும் புதன்
வஜ்ரமும் சக்தி ஆயுதமும் தாங்கியருள்கின்றான்..
பூம்பட்டுப் பச்சை வண்ணம்..
புதனின் திருவழகை எடுப்பாகக் காட்டுகின்றது..
கண்களில் சற்றே நீர்..
கன்னி ராசி.. ஹஸ்த நட்சத்திரம்... துலா லக்னம்..
எனது ஜாதகத்திற்கு அவனே அதிபதி...
என் மகனுக்கும் கன்னி ராசி.. ஹஸ்த நட்சத்திரம் தான்..
ஸ்ரீ புதன் |
ஆயினும் - என்னை வழி நடத்தும் ராசி நாதனே!..
உன்னை நான் தேடி வருவதற்கு இத்தனை காலம் ஆகியிருக்கின்றது...
என் பிழை எல்லாம் பொறுத்தருள்க ஐயனே!..
நல்ல புத்தியையும் நல்ல செயல்களையும் தந்து
நோய் நொடியில்லாத வாழ்வினை அருள்க ஸ்வாமி!..
மனதார வேண்டிக் கொண்டு வலம் வந்தோம்...
புதன் சந்நிதிக்கு அருகில் வில்வமரம்...
இன்னொரு தல விருட்சமான கொன்றை மேற்காக இருக்கின்றது..
அம்பிகையின் சந்நிதிக்கு நேரெதிரே சந்திர தீர்த்தம்...
நிறைந்த நீருடன் சலசலத்துக் கொண்டிருக்கின்றது..
குளக்கரையின் கீழ் கரையில் சந்திரன் வழிபட்ட சிவலிங்க சந்நிதி..
இந்த சந்நிதிக்குப் பின்னால் தான் ருத்ரபாதம்..
தலவிருட்சமாகிய ஆலமரம்!.. வட ஆல் என சிறப்பிக்கப்படுவது..
காசிக்கு நிகரான திருத்தலம் என்று சிறப்பிக்கப்படும் மையப்புள்ளி - இதுவே!..
ஆலமரம் விழுதுகளுடன் பிரம்மாண்டமாக விரிந்து பரந்திருக்கின்றது..
ஆலமரத்தின் நிழலில் அழகான சிவலிங்கம்..
பக்தர்கள் தாமாகவே ஆராதித்து மகிழ்கின்றனர்..
ஆல மரத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான நாக வடிவங்கள்..
புதிய மனை - வீடு அமைவதற்கென பக்தர்கள் கற்களை அடுக்கி வைக்கின்றனர்..
வட ஆலினை வலம் வந்து வணங்கியபடி மீண்டும் தலைவாசல் கொடிமரம்..
எல்லாப் பிறவிகளிலும் உன்னைத் தொடர்ந்திருக்கும் வரத்தினை அருள்க!..
- என்று வேண்டியபடி எம்பெருமானையும் அம்பிகையையும் சரணடைகின்றோம்..
எண்ணங்கள் யாவும் ஈடேறுதற்கு வீழ்ந்து வணங்குகின்றோம்...
சஞ்சிதமாகிய தொல் வினையை
பிராரப்தமாக அனுபவித்துத் தான் கழிக்க வேண்டும்.. இதுவே நீதி...
இதற்கிடையில் பரிகார சடங்குகள் என்று எவையும் கிடையாது...
அறச் செயல்களைப் புரிவதனால் -
பாவச் சுமையின் கனத்தைக் குறைத்துக் கொள்ளலாம்...அந்த மாதிரியான பக்குவத்தை அருள்பவன் புதன்...
செவ்வாய், குரு, சனைச்சரன், ராகு கேது!.. - ஆகிய கிரகங்களுக்கு
பரிகாரத் தலங்களாகச் சொல்லப்படும் கோயில்கள்
புள்ளிருக்கு வேளூர், ஆலங்குடி, திருநள்ளாறு, திருக்காளத்தி - என்பன..
இந்தத் திருக்கோயில்களில் காணப்படும் நெருக்கடி, தள்ளு முள்ளு,
கூச்சல் குழப்பம் - என, எதுவும் திருவெண்காட்டில் இல்லை..
நாங்கள் திருவெண்காட்டிற்குச் சென்றது புதன்கிழமையில் தான்...
பக்தர்களை அதட்டுவதும் விரட்டுவதும் சர்வ சாதாரணமாக நடப்பது திருநாகேஸ்வரத்தில்..
திருநாகேஸ்வரம் நாகராஜன் வழிபட்ட தலம்..
இங்கே நாககன்னி நாகவல்லியுடன் திகழ்பவன் - ஸ்ரீ நாகராஜன்...
நான் தரிசித்த வகையில் -
சந்திரன் வழிபட்ட திங்களூர் இதோ இந்த திருவெண்காடு
- இவை இரண்டு மட்டுமே பரிகாரக் கோயில்களில் அமைதியாக விளங்குபவை...
ஏனைய திருக்கோயில்களும் இப்படி இருந்தால் எப்படியிருக்கும்!..
மனம் நிறைவான தரிசனம்..
அமைதி.. ஆனந்தம்.. இவை தவிர வேறெதுவும் இல்லை மனதில்..
திருக்கோயிலில் இருந்து வெளியே வந்தோம்..
ராஜகோபுர வாசலில் கிராமிய மணத்துடன் சிற்றுண்டிக் கடைகள்...
சூடாக பஜ்ஜி வடை - என, அருமையான பலகாரங்கள்...
நல்ல பாலில் தேநீர் மற்றும் காபி...
அடுத்த சில நிமிடங்களில் மயிலாடுதுறைக்குச் செல்லும் பேருந்து..
தஞ்சையை நோக்கி எங்களது பயணம் தொடர்ந்தது...
***
இன்றைய பதிவில் இடம் பெற்றுள்ள -
ஸ்ரீ சிவலிங்கம், அம்பிகை, அகோரமூர்த்தி,
பத்ரகாளி மற்றும் துர்காம்பிகை ஆகிய
திருக்கோலங்களை வழங்கியோர்
பத்ரகாளி மற்றும் துர்காம்பிகை ஆகிய
திருக்கோலங்களை வழங்கியோர்
- சிவனடியார் திருக்கூட்டத்தினர்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
ஏனைய படங்கள் எனது கைவண்ணம்..
எடுக்கப்பட்ட படங்களுள் சில படங்கள் மட்டுமே - பதிவில்..
மற்றவைகளை அடுத்தொரு பதிவில் தருகின்றேன்..
***
திருவெண்காடு அழகான சிற்றூர்..
தங்கும் விடுதிகள் ஒருசில உள்ளன..
தமிழகத்தின் எப்பகுதியில் இருந்தும் எளிதாக
மயிலாடுதுறை மற்றும் சீர்காழிக்கு வந்து சேரலாம்..
மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ..
சீர்காழியில் இருந்து 15 கி.மீ..
சீர்காழியில் இருந்து 15 கி.மீ..
மயிலாடுதுறை சீர்காழியில் இருந்து திருவெண்காட்டிற்கு
அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன..
***
அன்பின் ஜி
பதிலளிநீக்குஆயிரமாவது பதிவு மனம் நிறைந்த வாழ்த்துகள் இது சாதாரண விடயம் இல்லை.
மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக...
வாழ்க! நலம்.
திருவெண்காடு தொடர்கிறேன்...
அன்பின் ஜி..
நீக்குஇதெல்லாம் தங்களுடைய அன்பான ஆதரவினால் ஆயிற்று..
தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நவகிரகக் கோவில்களில் ஒன்றாக புதனை வழிபடும் தலமானால் அங்கு சென்றிருக்கிறோம் ஆனால் இறைக்கதைகள் எல்லாமேபுதிது ஆயிரமாவதுபதிவுக்கு வாழ்த்துக்கள் ஆங்காங்கே உங்களை கோபமூட்டும் விதமாக என் பின்னூட்டங்களிருந்திருக்கலாம் அதில் காணும் செய்திக்கு முக்கியத்துவம்கொடுத்து கோபப்படாமல் பாருங்கள் வாழ்க நலம்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஇதெல்லாம் அளித்த உற்சாகத்தினால் ஆயிற்று..
தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நல்ல கோவில் தரிசனம். நல்ல இடுகை. ஆயிரமாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிருவெண் காடடைந்து உய் மட நெஞ்சமே - உங்கள் பதிவில் 'ம்' அதிகமாக வந்துள்ளது.
அன்பின் நெல்லைத்தமிழன்..
நீக்குஆதீனத்தின் பதிப்பில் உய்ம்மட நெஞ்சமே - என்று தான் உள்ளது..
ஆயிரம் பதிவுகளை வழங்கியதெல்லாம் தாங்கள் அளித்த உற்சாகத்தினால் ஆயிற்று..
தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
படங்கள் மூலம் தரிசனம்.
பதிலளிநீக்குஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குஇத்தனையும் தங்களுடைய அன்பான ஆதரவினால் ஆயிற்று..
தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துகள். ஆன்மீகம், சமூகம், கலை, பண்பாடு என்ற பல நிலைகளில் தங்களின் பதிவுகள் மூலமாக அரிய கருத்துகளைத் தெரிந்துகொள்கிறோம். தாங்கள் மென்மேலும் தொடர்ந்து எழுத எல்லாம் வல்ல இறையருளைப் பரவுகின்றேன்...திருவெண்காடு உலா நிறைவாக இருந்தது. நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குஇன்னும் எழுத வேண்டும்..
பலரையும் சென்று சேர்ந்திட வேண்டும் என்பதே எனது ஆவல்..
அதற்கு தங்கள் பிரார்த்தனையும் துணை சேரட்டும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நிறைய தகவல்க கதைகள் அறிந்தோம். அதுவும் நந்தி எம்பெருமானின் காயங்களின் கதையும் அறிந்தோம்.
பதிலளிநீக்குஆயிரமாவது பதிவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் பல படைப்புகளைப் படைத்திடவும் எங்கள் வாழ்த்துகள்!
துளசிதரன், கீதா
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கணினிப் பிரச்சனையால் வேர்டில் அடித்து அதைக் காப்பி செய்து இங்கு போடுவாதால் மீண்டும் நந்தி எம்பெருமானைப் பற்றி இங்கு வந்துவிட்டது. வருந்துகிறோம்.
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்..
நீக்குஇதெல்லாம் இயல்புதான்.. வருந்தற்க..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
விநாயகர் மற்றும் இறைவன் படங்கள் அழகு! தள்ளு முள்ளு இல்லாமல் தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது!!!
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்..
நீக்குநேரில் தரிசனம் செய்யும் போது தான் அங்கே உள்ள மகோன்னதம் புரியும்..
தங்களது மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான பதிவு, படங்கள் பார்க்க நேரில் போய்ப்பாக்கும் ஆவலைத்தூண்டுது..
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குஒருமுறை வந்து தான் பாருங்களேன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மிகப் பெரிய கோவில். நாங்களும் சென்றுவந்தோம். மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் சகோ.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களுக்கு அன்பின் நல்வரவு..
தங்களது முதல் வருகை.. இனிதே வரவேற்கின்றேன்..
தொடர்ந்து அன்பின் வருகையை வேண்டுகிறேன்..
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிருவெண்காடு தலத்தை அழகாய் படபிடித்து காட்டியதற்கு மகிழ்ச்சி, நன்றி.
ஒவ்வொரு ஞாயிரும் கோவில் தரிசனம், அங்கிருந்த காலங்கள் மறக்க முடியாத காலம், அமைதியும் ஆனந்தமும் கோவில்தரிசனத்தில் கிடைக்கும்.
நாங்கள் குடியிருந்த மாடி வீட்டிலிருந்து இரண்டு குளங்கள் தெரியும். ஆடி, தை அமாவாசைக்கு பக்தர்கள் கூட்டம் வரும்.
மீண்டும் திருவெண்காடு தரிசனம் செய்ய வைத்தீர்கள் நன்றி.
அன்புடையீர்..
நீக்குதங்களுடைய வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி..
>>> அமைதியும் ஆனந்தமும் கோயில் தரிசனத்தில் கிடைக்கும்.. <<<
மிகச் சரியாகச் சொன்னீர்கள்..
குறிப்பாக திருவெண்காடு எனது ராசியுடன் தொடர்புடையது..
கோயில் வாசலில் நுழைந்ததில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னும் என் மனம் மிக மிக அமைதியில் ஆழ்ந்திருந்தது..
முந்தைய பதிவுகளுக்குத் தாங்கள் அளித்திருந்த கருத்துரைகள் அடுத்த பதிவுக்காக முன்னரே தொகுத்து வைத்திருக்கின்றேன்..
அந்தப் பதிவு இன்று வெளியாகி இருக்க வேண்டியது..
இங்கே சூழ்நிலை சரியில்லை.. அடுத்து வெளியாகும்..
தங்களுடைய வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஆயிரமாவது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குஉண்மையில் உங்கள் பதிவுகளை படிக்கும் போது பிரமிப்பாக இருக்கும் ....
நீங்கள் சொல்லும் செய்திகளையும் ...படங்களையும் காணும் போது நாமும் இது போல் செய்ய வேண்டும் என்ற ஆவலையும் தூண்டும்...
மிக பெரிய வழிகாட்டி தங்கள் தளம் ....
இது போல் மேலும் மேலும் பலபல தகவல்களை பதிவிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்...
அன்புடையீர்..
நீக்குநீங்களும் உங்களது தளத்தில் அருமையாக எழுதி வருகின்றீர்கள்..
ஸ்ரீ பரிமளரங்கனைப் பற்றிய பதிவு கூட படங்களுடன் அழகாக இருந்தது..
தங்களது வருகையும் வாழ்த்துரையும்
இறையருள் வேண்டிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..