நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 05, 2017

சில்.. எனும் காற்று

அக்கா.. அக்கா!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா.. வெகு நாளாச்சு இல்லே!..

என்னக்கா.. நீங்க?.. போன வாரந்தானே.. கோயில்..ல பார்த்து பேசிக்கிட்டு இருந்தோம்!..

ஆமா..மா!.. ஆனாலும் பல நாளான மாதிரி இருக்கு!...


எங்கே பசங்களைக் காணோம்?...

நாட்டுக் கோழி வளர்க்கிறது எப்படின்னு.. பயிற்சி பட்டறை நடத்துறாங்களாம்!.. அங்கே போயிருக்காங்க!..

தெரிஞ்சுக்கிட்டுமே.. நல்லது தானே அக்கா!..

அப்போதெல்லாம் வீட்டுக்கு பத்து கோழி நிக்கும்.. அதுங்களுக்கு தீனி போடறதும் முட்டை எடுக்கிறதும் அடை வெக்கிறதும்.. காக்கா கிட்டேயிருந்து காப்பாத்துறதும் - அதெல்லாம் பழைய கனவாப் போச்சு!.. இப்போ உள்ள பிள்ளைங்களுக்கு நாட்டுக் கோழி எப்படி இருக்கும்...ன்னே தெரியாது!...

அதான் காலம் மாறிப் போச்சே!..

அது கிடக்கட்டும்.. துபாய் ..ல உன்னோட டார்லிங் எப்படி.. சௌக்கியமா!..

ம்ம்.. நேத்து கூட பேசினேன்.. கில்லர் ஜி அங்கிள் வேலையத் தூக்கிப் போட்டுட்டு போடா... சரிதான் ..ன்னு வந்துட்டாராம்!.. குமார் அண்ணனும் லீவுல போய் இருக்காராம்!... கலகலப்பா பேசறதுக்கு ஆள் இல்லாம அலுப்பா இருக்குதாம்!...

அடக் கடவுளே!.. அதான் கம்ப்யூட்டர் இருக்குது..ல்ல!.. அதைத் திறக்க வேண்டியது தானே.. நமக்கு வேண்டியப்பட்டவங்க எத்தனை பேரு நல்ல விஷயங்களை வலைப் பதிவு..ல எழுதிக்கிட்டு இருக்காங்க... அதை எல்லாம் படிக்க வேண்டியது தானே!.. அதுக்கு அப்புறம் அலுப்பு எப்படி வரும்..ன்னேன்!..

அதெல்லாம் படிக்கிறது தான்.. என்கிட்டேயும் அதைப் பத்தி பேசுவாங்க!.. உங்க அண்ணாச்சி ஆப்பிள் பழத்தைப் பத்தி ஏதோ எழுதியிருந்தாங்களாம்.. அதைப் படிச்சுட்டு அட்வைஸ் ஆறுமுகம் மாதிரி ஏகப்பட்ட சேதி... நான் கொய்யாப் பழத்துக்கு மாறிட்டேன்.. நெல்லிக்காய்க்கு மாறிட்டேன்..ன்னு ஒரே களேபரம்!..

மாறிட்டேன்..ன்னு சொன்னதும் என் ஞாபகம் அந்தக் கதைக்குப் போயிடுச்சு!..

எந்தக் கதைக்கு அக்கா!...

அந்த ராஜாமணியோட வறட்டுக் கோபத்தால.. அந்த அப்பாவிப் பொண்ணுக்கு என்ன ஆனதோ?.. அவ எப்படி இருக்காளோ?.. ந்னு நினைச்சு அடி வயிறு வலிக்குது...

என்னக்கா.. இது... இப்படிச் சொல்றீங்க?...

ஆமாம்.. தாமரை.. எதிர்த்த வீட்டுல நடக்கிறதைப் பார்த்த மாதிரி இருக்கு!... கதை தான்.. ஆனாலும் படிச்சு முடிக்கிறப்போ.. அந்தப் பொண்ணோட சாந்தமான குணத்துக்கு அவ நல்லா இருக்கணும் கடவுளே... ந்னு கும்பிடத் தோணுது..

அக்கா.. அக்கா.. சொல்லுங்க அக்கா!.. அந்தக் கதைய!...

வலங்கைமான்..ல இருந்து ஒருத்தர்.. ராஜாமணி..ன்னு பேரு.. சென்னைக்குப் போய் அங்கே அம்பத்தூர்ல.. ஒரு ஹோட்டல்ல வேலைக்கு இருக்கார்.. அங்கே சாப்பிட வர்ற மதுசூதனன்..ங்கறவரோட பழக்கமாகுது.. இவரு திருவிடைமருதூர்...

இந்த ஹோட்டல்...ல வேலை செய்ற ராஜாமணி - தானே புதுசா ஹோட்டல் ஆரம்பிக்க இருக்கிறதாவும் அங்கே தனக்கு ஆதரவு தரணும்...ன்னு, வேண்டுகோள் வைக்கிறார்...

ம்ம்.. நல்லா இருக்கே!...

மறுநாள் ராஜாமணியோட சாப்பாட்டுக் கடைக்குப் போறார் மது... ஒரு வீட்டோட பெரிய திண்ணைதான் சாப்பாட்டுக் கடையா மாறி இருக்கு.. ஏதோ ஓரளவுக்கு சாப்பாடும் இருக்கு... மதுவும் ராஜாமணிக்காக தொடர்ந்து அங்கே சாப்பிடுகின்றார்...

ஹோட்டல் மாதிரி இந்தத் திண்ணையை மாத்திக் கொடுத்த ஆசாரியார் காசு ஏதும் கொடுக்காம சாப்பிடுவதைப் பார்த்து ராஜாமணியோட நிலைமையைப் புரிஞ்சுக்கிறார் மது...

ம்!..

ஒரு நாள் மது சாப்பிடும்போது எதிரே ஆசாரியார் .. அவர் சாப்பிட்ட வடையில நீளமான தலைமுடி.. என்ன ராஜாமணி.. வடைக்கு சவுரி வெச்சிருக்கே!.. ந்னு அவர் சொன்னதைத் தாங்கமுடியாத ராஜாமணி - கடை மத்தியில வெச்சி பத்மாவை - அது தான் ராஜாமணியோட மனைவி பேர் - சட்டுவத்தால கன்னத்தில அடிச்சிடுறார்!...

அடப்பாவி!..

பத்மா அடி வாங்கறப்போ அவ இடுப்பில கைக்குழந்தை வேற!.. ஒன்னுமே சொல்லாம அந்தப் பொண்ணு பரிதாபமா அங்கேயிருந்து உள்ளே போயிடுறா...

இந்தக் கொடுமையப் பார்க்க சகிக்காத மது -
நீயும் ஒரு மனுசனா.. ங்கற மாதிரி சாப்பிடாம வெளியே போய்டுறார்...

அக்கா.. நானா இருந்தா அந்த இடத்திலேயே -
ராஜாமணிக்கு ஓங்கி ஒரு அறை - பளார்..ன்னு கொடுத்திப்பேன்!..

நான் மட்டும் என்ன சும்மா வருவேன்...னா நினைக்கிறே!..

பாவி.. படுபாவி!.. கட்டுன பொண்டாட்டிய அடிக்கிறவனெல்லாம் ஒரு மனுசனா?.. அவங்கையால சமைச்சது சாப்பாடா ?.. அதைத் தின்னவனும் உருப்பட மாட்டானே!... அந்தக் கடையும் வெளங்காதே!..

அப்படித் தானே ஆகிப் போச்சு!..

..... ..... ..... ..... .....!..

அன்னைக்கு ராத்திரி மது தங்கியிருக்கிற இடத்துக்கே போயி -
இல்லாமையும் இயலாமையும் தான் என்னைய இந்த மாதிரி ஆக்கிடுச்சு..
இனிமே இந்த மாதிரி அடிக்க மாட்டேன்...ன்னு ராஜாமணி கெஞ்சறார்...

மது சமாதானமாகிற மாதிரி இல்லை.. ஆனாலும் ராஜாமணி கெஞ்சறார்.. ரெண்டு நாளாத் தான் கையில காசு பார்க்கிறேன்.. என் கடையப் புறக்கணிச்சிடாதீங்க... ந்னு கலங்குறார்..

சரி.. நாளைக்கு வர்றேன்.. போங்க..ன்னு ராஜாமணிய அனுப்பிடுறார்...

ஆனா - அன்னைக்கு இரவே ஊர்ல...யிருந்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லை..ன்னு தந்தி வருது... மது பதறி அடிச்சுக்கிட்டு ஓடுறார்..
அங்கே எல்லாம் முடிஞ்சு சென்னைக்கு திரும்பி வர்றதுக்கு ஒரு மாதம் ஆகிடுது...

ம்!...

ஞாபகம் வந்து ராஜாமணியோட ஹோட்டலுக்குப் போனால் -

போனால்!?...

அந்தத் திண்ணை காலியாக் கிடக்குது...

அட!...

அந்த வீட்டுக்கார மாமியை விசாரிக்கிறார்... அவங்க சொல்றாங்க..
மறுபடியும் புருஷன் பொண்டாட்டி தகராறு.. கொடுமையப் பார்க்க சகிக்காம
குடக்கூலியக் கொடுத்துட்டு இடத்தை விட்டுக் கிளம்பு ... ந்னு சொல்லிட்டேன்!... அவங்கிட்ட பணம் இல்லை.. பண்ட பாத்திரமெல்லாம் திண்ணையிலயே போட்டுட்டுப் போய்ட்டான்!... - அப்படின்னு சொல்றாங்க!..

அக்கா.. குடக்கூலி..ன்னா என்னாக்கா?..

குடக்கூலி..ன்னா வாடகை.. ந்னு அர்த்தம்!..

மாறிட்டேன்...ன்னு சொன்ன ராஜாமணி மாறவே இல்லை...
மறுபடியும் கை நீட்டல்.. தகராறு.. ஆற்றாமை.. ஆத்திரம்.. அராஜகம்!..

மதுவுக்கு மனசு நொந்து போகுது.. அந்தத் திண்ணைய பார்க்கிறார்..

அங்கே அந்த சட்டுவம்.. அதே சட்டுவம்!.. அதுமட்டும் நிமிர்ந்து நிக்குது..
நிமிர்ந்து நிற்கிற சட்டுவம் நூறு கண்களோட மதுவைப் பார்த்து விழித்தது..
அப்படின்னு கதையை முடிக்கிறப்போ...

சொல்லாதீங்க.. அக்கா... சொல்லாதீங்க!...
கைப்புள்ளைக்காரி.. அந்த பத்மா.. பாவம்!.. மனசு கிடந்து அடிச்சுக்குது!...

கண்ணீரோட கண்ணீரா கஷ்டத்தையும் மறைச்சுக்கிட்டு... பத்மாவைப் போல எத்தனை எத்தனையோ பேர்... கதை தான்...ன்னாலும் கடந்து போகமுடியலை.. தாமரை!..

உண்மைதான் அக்கா!.. ஆனாலும், எனக்கொரு சந்தேகம்!..

என்ன தாமரை?..

சட்டுவம்...ன்னா என்ன அக்கா?..

சட்டுவம்...ன்னா அரிகரண்டி.. சாரணி..ன்னு சொல்லுவமே.. அது!..

அப்போ சரி!.. சட்டுவம் மாதிரி ஜடமாத் தான் இருந்திருக்கார்.. ராஜாமணி...
அரிகரண்டி சட்டுவத்துக்குத் தெரியுமா சமையல் ருசி?...
அந்த மாதிரி வாழ்க்கையோட ருசி தெரியாம போச்சு - ராஜாமணிக்கு!...

வாய்க்கு ருசியா சமைக்கத் தெரிஞ்ச ராஜாமணி -
வாழ்க்கையோட ருசியை தெரிஞ்சிக்க மறந்துட்டார்!..

அக்கா.. இந்தக் கதைய எழுதுனவங்க யாரு?..

பச்ச மொழகா!.. - ங்கற இந்தக் கதைய எழுதினவங்க திரு மோகன் ஜி.. 
கதை, கவிதை, நாடகம்..ன்னு நிறைய எழுதியிருக்காங்க...
புகழ் பெற்ற சாகித்ய அகாதமியின் மொழி பெயர்ப்பாளர்..ங்கறது சிறப்பு..


இவங்களோட ஆக்கங்களைப் பற்றி,

திரு. வை.கோ அண்ணா அவர்களும்

திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களும்

தங்களுடைய தளத்தில் சிறப்பு செய்திருக்கிறாங்க...

திரு மோகன் ஜி அவர்களுடைய கதைகள் - நிறைய!...
ஒன்னு தான் உனக்கு சொல்லியிருக்கேன்...

பச்சை மிளகாய் காரத்தினால கண் கலங்கும்..

ஆனா - இங்கே,
பத்மா மேல ஏற்படற கருணையால கண் கலங்குது!..

அக்கா!.. அது தான் எழுத்தின் வெற்றி.. எழுத்தாளனுடைய வெற்றி!.. 
இங்கே இருக்கிற ராஜாமணிகள் - இந்த எழுத்தினால திருந்தணும்!.. 

உண்மை தான் தாமரை!.. அது தான் நோக்கம்!...

சரி.. அக்கா.. நான் புறப்படுறேன்!.. அத்தை காத்துக்கிட்டு இருப்பாங்க!..

இரும்மா... மழை வரும் போல இருக்கு.. சிலுசிலு..ன்னு காற்று வேற வீசுது..
கதகதப்பா ஒரு காபி குடிக்கலாம்!..

ஓ.. கதைக்கு கதையும் சொல்லி குடிக்கிறதுக்கு காபியும் தர்றீங்களா!..
அக்கா..ன்னா அக்கா தான்!...

தாமரை சிரித்தாள்.. 
தமிழ்ச்செல்வியும் சிரித்தாள்..

வாழ்க நலம்!..
***

16 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    திரு. மோகன்ஜி அவர்களின் மனம் நிச்சயம் குளிரும்.

    தாமரை, தமிழ்ச்செல்வியைக் கண்டு வெகு நாட்களாகி விட்டதே....
    அவர்களின் பொறணியில் என் தலையும் உருள்கிறது...நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா அருமை
    தங்களின் பாணியில் அருமை

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பாணியில் அசர வைத்து விட்டீர்கள் ஐயா...

    திரு.மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. மோகன்ஜி அவர்களுடைய நூல் மதிப்புரையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். தங்கள் தளத்தில் தங்கள் பாணியில் அருமை. அவருக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா, ’சில்....எனும் காற்று’ தலைப்பே சூப்பரா ஜில்லுன்னு இருக்குது !

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. ’ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல இந்த நூலிலிருந்து ஒரேயொரு இழையை (கதையை) மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு, அழகாக தங்கள் தனிப் பாணியில் இரண்டு பெண்கள் பேசிக் கொள்வதுபோல, பிரிச்சு மேய்ந்துள்ளது மிகவும் பிடித்துள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. குடக்கூலி, சட்டுவம் போன்ற நம்கால வட்டார வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லியுள்ளவிதம் மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது.

    இந்த தலைமுறையினருக்கு புரியாதவற்றை புரிய வைத்துள்ளது அழகு !

    பதிலளிநீக்கு
  8. ’சட்டுவம் மட்டும் அங்கு நிமிர்ந்து நின்றுகொண்டு, அது தன் நூறு கண்களால் மதுவைப் பார்த்து விழித்தது’ என்ற முத்திரை வரிகளுடன் முடித்துள்ளதும், அந்த சமையல் கரண்டிக்கு தெரியுமா சமையலின் ருசி .... அதுபோலவே ராஜாமணிக்கு வாழ்க்கையின் + வாழ்க்கைத்துணையின் ருசி தெரியாமல் போய் விட்டது எனச் சொல்லியுள்ளதை நான் வெகுவாக ரஸித்.....தேன்.

    சபாஷ் ..... பிரதர் !

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. இதே ‘பொன் வீதி’ நூலினைப்பற்றி, எக்கி எக்கி கஷ்டப்பட்டு .... முக்கி முக்கி, சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து நான் எழுதிவரும், என் வலைத்தளத்தின் இணைப்பினையும் கொடுத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், பிரதர்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  10. அருமை. வளவளவென்று இழுக்காமல் பட்டு கத்தரித்தாற்போல ஒரு பகிர்வு. மிகவும் ரசித்தேன் ஸார். மோகன்ஜி வரிகளின் வழியே இதயத்தில் நுழைந்து இடம் பிடித்து அமரும் ஆக்கங்களை படைப்பதில் வல்லவர். பொன்வீதி பகிர்வின் தொடக்கம் எங்கள் பிளாக் என்பதிலும் எங்களுக்கொரு பெருமை!

    http://engalblog.blogspot.com/2017/05/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  11. அருமையான விமர்சனம்.
    ஒரு கதை பிடித்து விட்டால் இப்படித்தான் அக்கம் பக்கத்து பென்ணிடம் பகிர்ந்து கொள்வோம்.
    இந்த பாணி அருமை,
    வாழ்த்துக்கள் உங்களுக்கும், மோகன்ஜிக்கும்

    பதிலளிநீக்கு
  12. பச்ச மொழகா - எனக்கும் மிகவும் பிடித்த கதை. ஒரு சிறு கதை மூலம் இத்தனை விஷயங்களைச் சொல்ல முடியும் என்பதை உணர்த்தியவர் மோகன்ஜி அண்ணா....

    உங்கள் பாணியில் சிறப்பாய் சொல்லி இருக்கிறீர்கள் - நன்று!

    பதிலளிநீக்கு
  13. வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா! மிகவும் ரசித்தோம்.உரையாடல் மூலம் நறுக்கென்று. மோகன் ஜி அவர்களின் கதைகள் வெகு சிறப்பு என்பதை விமர்சனங்கள் சொல்லுகின்றன. ஸ்ரீராம் அவர்களும் பொன்வீதி பற்றி எங்கள் ப்ளாகில் எழுதியிருந்தார்.

    ---துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  14. அன்பின் துரை சார்! முதலில் என்னை மன்னியுங்கள். ஒரு மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதால், முகநூலில் நானும் இருக்கிறேன் என்று சில பதிவுகள் இட்டு மட்டும் வருவதால், வலைப்பக்கம் வர இயலவில்லை. கீதா மேடம் பதிவில் நீங்கள் குறிப்பிடாதிருந்தால் தவற விட்டிருப்பேன். மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன்.

    உங்கள் விமரிசன பாணி புதுமையானது. பட்டு கத்தரித்தாற்போல் கச்சிதம். பழைய வார்த்தைகளுக்கு சிறு விளக்கமும் அருமை. புண்ணியம் செய்திருந்தாலன்றி எனக்கு இத்தகு நண்பர்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆகஸ்டு இரண்டாம் வாரம் முதல் வாசிக்கநேரம் இருக்கும். வருவேன். நன்றி உங்களுக்கும்,கருத்திட்ட வலை சொந்தங்கள் அத்தனை பேருக்கும்....

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அருமையான விமரிசனம். ஒரே ஒரு கதையை மட்டும் எடுத்துக் கொண்டு விமரிசித்த பாங்கும் அழகு! புரியாத வார்த்தைகளுக்கு (தற்காலத்தவர்களுக்கு) விளக்கம் கொடுத்திருக்கும் பாங்கும் அருமை. தென்றல் வந்து வருடி விட்டுப் போவது போன்ற விமரிசனம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..