சோறுடைத்த சோழ நாட்டின் சுந்தரத் திருநகர் தஞ்சையம்பதி!..
நீர் வளமும் நிலவளமும் நிறையப் பெற்ற திருத்தலம்.
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட
நெஞ்சை அள்ளும் தஞ்சை..
என்பதும்,
கலைகளின் தாய்வீடு தஞ்சைத் தரணி
- என்பதும் - இந்நகரின் சிறப்பு அடைமொழிகள்..
நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரிய விழாவான முத்துப் பல்லக்குத் திருவிழா, நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது.
சமய குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமான் முக்தி பெற்ற நாள் வைகாசி மூலம்...
அலங்கார பல்லக்கில் ஞானசம்பந்தர் |
வைகாசி மூல நட்சத்திரத்தினை அனுசரித்து முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் - வைகாசி மாதத்தில் ,
ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜையின் போது குறிச்சித் தெரு முருகன் கோவிலில் இருந்து - முதன்முதலாக முத்துப் பல்லக்கு புறப்பட்டது.
இடையில் சிலகாலம் - பல காரணங்களினால் சற்றே எழில் குன்றியிருந்தது.
ஸ்ரீ வல்லபை விநாயகர் - கீழவாசல் |
தற்போது - தஞ்சை மாநகரில் உள்ள பெரும்பாலான கோயில்களில் இருந்தும் முத்துப் பல்லக்கு புறப்படுவதற்கு,
அந்தந்த பகுதிகளில் உள்ள நல்ல மனம் கொண்ட இறையன்பர்கள் இயன்றவரை பணி செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழாவினை முன்னிட்டு தஞ்சை மாநகரின்-
கீழவாசல், ஆட்டுமந்தைத் தெரு, குறிச்சித் தெரு, அரிசிக்காரத் தெரு,
வார்காரத் தெரு, பட்டு நூல்காரத் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, புல்லுகாரத் தெரு, வண்டிகாரத் தெரு, மகர்நோன்புச் சாவடி,
கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு வாசல்
- என, பல்வேறு பகுதிகளிலிருக்கும் விநாயகர், முருகன் திருக்கோயில்களில் இருந்து மங்கள இசை முழங்க -
முத்துப் பல்லக்குகள் புறப்பட்டு கீழ ராஜவீதி மாமா சாகேப் மூலைக்கு வந்து சேர்ந்தன.
மாமா சாகேப் மூலை என்பது - கீழராஜ வீதியும் தெற்கு ராஜவீதியும் சந்திக்கும் இடம். பழைய பேருந்து நிலையத்திற்கு சற்று அருகில்..
பல்லக்குகளில் விநாயகர், முருகன் உற்சவ திருமேனிகள் மற்றும் திருஞான சம்பந்தரின் திருஉருவப்படங்கள் ஆபரணங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பல்லக்குகள் பூக்களாலும் பலவண்ண காகிதங்களாலும் மணிச்சரங்களாலும் வண்ண மயமான குஞ்சங்களாலும் மின் விளக்குகளாலும் தஞ்சைக்கே உரிய கலை நயத்துடன் எழிலாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
பழைமையான கோயில்களான -
கரந்தை - கருணாசாமி திருக்கோயில்
கீழவாசல் - வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயில்
பாம்பாட்டித்தெரு - சிந்தாமணி பிள்ளையார் திருக்கோயில்
கொள்ளுபேட்டைத் தெரு - ஆனந்த விநாயகர் திருக்கோயில்
குறிச்சித் தெரு - சுப்ரமணியசாமி திருக்கோயில்
ஆட்டுமந்தைத் தெரு - தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
சின்ன அரிசிக்காரத் தெரு - சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
மகர்நோன்புச் சாவடி - ஜோதி விநாயகர் திருக்கோயில்
பூக்காரத்தெரு - சுப்ரமணியசுவாமி திருக்கோயில்.
ரயிலடி - வரசித்தி விநாயகர் திருக்கோயில்
மாமா சாகேப் மூலை - சித்தி விநாயகர் திருக்கோயில்
இவற்றுடன் இன்னும் சில திருக்கோயில்கள் என -
திருவிழாவில் பதினெட்டிற்கும் மேற்பட்ட பல்லக்குகள் தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று காலை எட்டு மணி அளவில் பல்லக்குகள் - அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் சென்று சிறப்பு பூஜைகளுடன் நிலை நிறுத்தப்பட்டன.
புகைப்படங்கள்:
Fb Thanjavur City , திரு., ஹரி மற்றும் திரு.. ஆறுமுகம் நடராஜன் -
ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றி
ராஜவீதிகளின் பல இடங்களிலும் சித்ரான்னங்கள் வழங்கலும் அன்ன தானமும் நடைபெற்றதாக அறியமுடிகின்றது..
முத்துப் பல்லக்கு விழாவினை முன்னிட்டு, தஞ்சை மாநகரம் முன்தினம் இரவு விழாக்கோலம் பூண்டிருந்தது.
ராஜ வீதிகளில் தலையாட்டி பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், இனிப்பு, பலகார வகைகள் - என, வியாபாரம் விடியும் வரை - களை கட்டியது.
நூறாண்டுகளையும் கடந்து நடைபெறும் இவ்விழா -
தஞ்சை மாநகருக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக அமைகின்றது.
இவ்விழா - தஞ்சை மாநகரை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சூழலுக்கு அழைத்து சென்றதில் மக்களின் மனங்களில் மகிழ்ச்சி ததும்பியது..
சென்ற ஆண்டுகளைப் போலவே - இந்த ஆண்டும் முத்துப் பல்லக்கு
வைபவத்தினைப் பதிவிடுவதில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்...
நிகழ்வுகளைப் படங்களாக வழங்கிய இறையன்பர்களுக்கு மீண்டும் நன்றி..
நேற்று முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெற்றதைத் தொடர்ந்து -
அடுத்த சில தினங்களில் - வைகாசி திருவோண நட்சத்திரத்தை அனுசரித்து
மாபெரும் 23 கருட சேவையும் - தஞ்சை மாநகரில் நிகழ இருக்கின்றது..
மகிழ்ச்சி, மனநிறைவு
இவைகளே நல்வாழ்விற்கு அடித்தளம்!..
வாழ்க நலமுடன்..
வாழ்க வளமுடன்!..
***
அன்பின் ஜி
பதிலளிநீக்குதஞ்சை முத்துப் பல்லக்கு விழா பற்றிய அழகிய படங்களும், விபரங்களும் நன்று வாழ்க நலம்
நேற்று நேரில். இன்று உங்கள் பதிவில். நன்றி.
பதிலளிநீக்குதஞ்சையின் புகழ்பரப்பும் பதிவு,, அருமை அருமை தொடருங்கள்,,,,
பதிலளிநீக்குநம் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் இந்த விழாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன
பதிலளிநீக்குதஞ்சையில் இருந்தும்நாங்கள் காணாத காட்சிகளை
பதிலளிநீக்குகுவைத்தில் இருந்து தவறாமல் கண்டு கொண்டிருக்கிறீர்கள் ஐயா
அருமையான பகிர்வு ஐயா...!!
பதிலளிநீக்குஇதுவரை காணாத காட்சிகள் முத்துப்பல்லக்கு...படங்கள் அருமை நன்றி ஐயா
பதிலளிநீக்கு