நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 12, 2016

நான் சொல்லலை!...

மச்சான்...

என்னாடி என் தங்கம்?...

ஊரெல்லாம் ஒரே களேபரமா கெடக்கு... நீ எந்தக் கட்சிக்குப் போடப் போறே?..

நீ எந்தக் கட்சிக்குப் போடப் போறியாம்?...

ம்ம்.. அது ரகசியம்!...



அப்ப.. இங்க மட்டும் என்ன வாழுதாம்!..

அது கிடக்கட்டும்.. கெரகம்.. இதென்ன ஓயாம பல்லு குத்திக்கிட்டு?..

இல்லே.. சாப்புட்டது.. இடுக்குல சிக்கியிருக்கு.. அதான்!..

அதுக்காவ... கண்டதையும் எடுத்து பல்லைக் குத்துனா... சீக்கிரமே சின்ன இடுக்கு பெரிய இடுக்காவும்.. ஈறு கேடாவும்.. பல்லு தன்னால கழன்டு விழும்.. அப்பாலே.. பொக்கை வாய் தான்....

ஏ!... நீ.. என்னா.. ஒரேயடியா.. அளக்குற!..

நா.. ஒன்னும் அளக்கலை.. நெசத்தைத் தான் சொன்னேன்!.. இப்பவே பேசுறது புரிய மாட்டேங்குது!.. இன்னும் பொக்கை வாய் ஆகிப் போனா வெளங்கிடும்!... 

வாய் நெறைய தண்ணி எடுத்து நல்லா கொப்புளிச்சு - த்தூ!..ன்னு துப்புவியா?... அதை உட்டுட்டு.. குச்சிய எடுத்து குத்திக்கிட்டு இருக்குற!..

என்ன செய்யிறது.. உன்னைய உங்கப்பாரு படிக்க வெச்சுட்டாரு.. நீயும் நல்ல வெவரமா பேசுற!..

எதுக்கெடுத்தாலும் அப்பாரு.. அப்பாரு..ன்னு சொல்லிக்கிட்டு இருக்கே.. ஏன் நீயும் படிக்க வேண்டியது தானே!.. பள்ளிக் கூடம் போ..ன்னு அனுப்பி வெச்சா... நீ.. சினிமா கொட்டாயில போயி நின்னே!...

அதனால என்னா.... உன்னைய கண்ணு கலங்காம வெச்சிக்கிறேனா.. இல்லையா?..

அதுக்கு ஒன்னும் கொறச்சலில்லே!.. நேத்து ஆயிரம் ரூவா கொடுத்தாங்க.. ன்னுட்டு ஆட்டுத் தலை சின்னத்துக்கு போடுங்கம்மா.. ஓட்டுன்னு கத்திக்கிட்டு வேகாத வெயில்ல நாயி மாதிரி போனே?..

ஏய்!.. என்னாது?.. என்னைய நாயி மாதிரி..ங்கிறே!..

ஏன்னா.. நாய்க்குத் தான் ஒரு லச்சியமும் கெடையாது... ரெண்டு நாளைக்கு முன்னால வௌவாலுக்கு ஓட்டு கேட்டுக்கிட்டு ஊரைச் சுத்துனே!... நாளைக்கு ஊரு சுத்துறதுக்கு எந்த கோஷ்டி சொல்லி வெச்சிருக்கு?...

தேர்தல்...ன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்..டி தங்கம்!..

ம்க்கும்!.. தங்கம்.. பித்தாளை..ன்னு கிட்டு!... ஏழை பாழை....ங்களுக்கு யாரால என்னா புண்ணியம்?.. அததுங்க தன்னால இருக்கிறதுக்கும் உழைக்கிறதுக்கும் எவ்வளோ கஷ்டப்படுதுங்க... 

இவனுங்க என்னான்னா.. குளுகுளுப்பா கார்ல வந்து எறங்குறானுங்க!.. எங்கால்...ல விழுந்து ஓட்டு கேக்குறானுங்க...

அதானே தேர்தல்!...

ஆமா.. அதான் தேர்தல்!... அந்த ஆளுங்க ஜெயிச்சாலும் தோத்தாலும் மறுபடி இங்கே வந்து நிப்பானுவளா?.. 

ஏதாச்சும் ஒன்னு...ன்னா.. நாம தான் தேடிப் போயி கால்... ல விழணும்!... ஐயா... பாலத்தைக் கட்டிக் கொடுங்க... ஐயா.. கரண்டு கம்பி இழுத்துக் கொடுங்க.. அப்படின்னு!...

நீ.. நல்லாவுல பேசுற!.. உன்னைய கொண்டு போயி மேடையில ஏத்தியிருக்கலாம்!...

ஏங்.. நாம நல்லா இருக்கிறது புடிக்கலையா.. உனக்கு!... 

இவங்கள்ளாம்.. நாம நல்லா இருக்கோணும்.. ங்க்கறதுக்காகவா ஓட்டு கேக்குறாங்க.. அவங்க .. புள்ள குட்டி, எடுப்பு தொடுப்பு, மாமன் மச்சான் பேரன் பேத்தி - இதுங்க எல்லாம் நல்லா இருக்கறதுக்காகத்தான் ஓட்டு கேட்டு அலையிறாங்க!...

..... ..... ..... ..... .....?..

காவேரி ஆறு கஞ்சி ஓடுனாலும் நாய் பாடு நக்கித் தான் தீரும்!.. கோழி பாடு கொத்தித் தான் தீரும்!... அந்த மாதிரி - யாரு மந்திரியானாலும் நம்ம பாடு உழைச்சாத்தான் ஒரு வேளை சோறு!...

நம்ம கஷ்டம் எல்லாம் தீர்க்கத் தானே... என்னென்னவோ சாமான் எல்லாம் சும்மாவே தர்றாங்களாம்!...

அட.. வெவரங் கெட்ட மச்சான்.. ஒனக்கு மூளையே இல்லையா!...

ஏன்.. தங்கம்.. இப்படி கேக்கிற!...


இதெல்லாம் பழசு.. கண்ணா.. பழசு..
யாரு வூட்டுக் காசை எடுத்து யாருக்கு கொடுக்கிறது?.. வேல வெட்டி இல்லாம மூனு வேளையும் தின்னுட்டு சும்மாவே கிடந்தா என்னத்துக்கு ஆவும் இந்த ஒடம்பு!..

அதான் ஆஸ்பத்திரி செலவுக்கும் காசு தர்றாங்களே!..

ஆமா... அப்படியே.. மயானக் கொள்ளையும் சும்மாவே கொடுத்திடலாம்!.. ஊரைக் கொள்ளையடிச்சி உலையில போட்ட மாதிரி - நாட்டைக் கொள்ளை அடிச்சி தேசம் விட்டு தேசம் மூட்டை கட்டிப் போட்டுருக்கானுங்களாம்!..

..... ..... ..... ..... .....?..

நாடு இன்னும் யார் யாரு கையில போய்ச் சேருமோ!.... பயமா.. இருக்கு!..

அதெல்லாம்.. விடு.. ராசாத்தி... யாரு வந்தாலும் முன்ன மாதிரி இல்லே.. இப்போ எல்லாம் ஜனங்க ரொம்ப வெவரமா ஆகிட்டாங்களாம்.. ஏன்.. எதுக்கு.. ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.... அப்படி... இப்படி..ன்னு சொல்லிக்கிட்டு யாரும் ஏமாத்த முடியாது..ன்னு... கல்லு வீட்டு சுந்தரி அக்கா சொன்னாங்க!..

நல்லாத் தான் சொல்லியிருக்காங்க!... ஆனாலும், நரி ஒரு நாளும் ஆட்டுக் குட்டிக்காக வருத்தப்படாது!...

சரி.. சரி.. வெயிலு எறங்கிடுச்சி.. வா.. கடலைக் கொல்லைக்குப் போவோம்.. சூல் இறங்கிற நேரம் தினசரி சுத்தி வரலே...ன்னா.. நாய் நரி பூந்து அழிச்சிடும்!.. பட்ட பாடு வீணா போய்டும்!... கடலைக் காடு தான் நம்ம சொத்து... அப்பன் பாட்டன் தேடி வெச்சது... அதைக் காப்பாத்த வேணும்...

அந்த மாதிரிதான் இந்த நாட்டையும் பார்க்க வேணும்.. கண்ட நரியும் உள்ளே நுழைஞ்சிடாம காப்பாத்த வேணும்!..



தங்கம்.. ஓட்டு போடற அன்னைக்கு காலைலயே போயிடனும்... போன தடவை மாதிரி முதல் ஓட்டு நம்மளோடதா இருக்கணும்!...

அது சரிதான்.. கோழி கூப்புட எழுந்தா சரியா இருக்கும்!.. நீ பாட்டுக்கு எங்கேயும் போயி ஊரு வம்பை வாங்கிக்கிட்டு வந்திடாதே.. சொல்லிட்டேன்..

நீ சொன்ன வார்த்தையை.. நான் மீற மாட்டேன் தங்கம்!..

அங்கே தேவகோட்டை அண்ணாச்சி - ஓட்டைப் பிரிக்கிறான்.. ஓட்டைப் பிரிக்கிறான்..ன்னு ராத்திரியில கனா கண்டுட்டு கலாட்டா ஆயிடிச்சாம்!..

அவுங்க சொன்னா... சரியாத்தான் இருக்கும்.. அப்படியே தடிக் கம்பை எடுத்து தலைல போட வேண்டியது தானே!..

அப்படி போட்டதுலதான்.. நாலு பேரு ஆஸ்பத்திரியில கெடக்காங்கலாம்!...

நான் சொல்லலை!... அங்க பாரு ஒரு நரிய.. வேலியப் பிரிச்சிக்கிட்டு.. எட்றா கல்லை... ஓஹோய்!..


ஒரு நரியல்ல!.. 
ஒன்றன் பின் ஒன்றாகப் பல நரிகள்!.. 
கடலைக் காட்டின் வேலி இடுக்கிலிருந்து 
பிய்த்துக் கொண்டு தலை தெறிக்க ஓடி மறைந்தன..
* * *
மே 16
தவறாமல் வாக்களித்து
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்..


-: காணொளிக்கு நன்றி :-

வாழ்க நலம்!..
***

7 கருத்துகள்:

  1. ஹாஹாஹா ஆட்டுத்தலை, வௌவால் சின்னம் எந்தக்கட்சி ஜி ?

    தொடக்கம் முதல் முடிவுவரை நல்ல கலாட்டா அருமை ஜி நகைச்சுவை போட்டோ அருமை காணொளி எனது கண்ணில் இப்பொழுதுதான் தென்படுகிறது ஸூப்பர் ஜி
    எப்படியோ தேர்தல் அன்றைக்கு எத்தனை பேர் மண்டையை உடைக்கிறானோ... பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  2. வாக்களிப்போம் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. சிந்தித்து வாக்களிப்பீர். காணொளி பழைய நிலவரமா.?

    பதிலளிநீக்கு
  4. சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது.

    சிறப்பாக பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. சரியான நேரத்தில் சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு. மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். காணொளியும் சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..